பெரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து – An epistle to the Prudent Phillip, the Emperor of Portugal and Spain

எதுவும் எழுதாத மரப்பட்டை ஒன்றை எடுத்து விரித்து கடுக்காய் மசிப் போத்தலில் மயிலிறகை அமிழ்த்தி மரப்பட்டையில் எழுதலானார் இமானுவெல் பெத்ரோ.

பிலிப்பைன் பெருவம்சத்தில் சூரியன் போல நற்பிறப்பு எய்தியவரும், எத்திசையும் புகழ அரசாண்ட மானுவேல் சக்கரவர்த்திகளின் நற்பேரனும், போர்த்துகீஸ் பேரரசரும், ஸ்பெயின் சக்கரவர்த்தியும், நேபிள்ஸ் மாமன்னரும், சிசிலி மாநிலத்தின் மன்னர் பெருமானும் ஆன, எங்கள் போர்த்துகீசிய வம்சத்தைத் தாயினும் சாலப் பரிந்து பாதுகாத்து வளர்த்து பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, கலை, இலக்கியச் செழிப்பு, மேன்மையான உணவு, சிறப்பான உடை, நோயற்ற வாழ்வு என்பன எம் மக்கள் அனைவரும் பெற உத்தரவாதம் அளித்தவரும், என்றும் எமக்குப் பேரரசரும், வழிகாட்டியுமான ’விவேகன்’ என்ற நற்பெயர் பெற்ற பிலிப்பு மகா சக்கரவர்த்தி அவர்களுக்குத் தாள் பணிந்து அனுப்புவித்த லிகிதம் இது.

வேறு யாரும் இது தற்செயலாகக் கூடக் கிடைத்து இதைப் படிப்பது தடை செய்யப்பட்டதும் ராஜத்துரோகத்துக்கு ஒப்பான குற்றமுமாகும். தூசியிலும் தூசியான, சக்கரவர்த்திகளின் ஊழியருக்கு ஊழியரான இம்மானுவல் பெத்ரோவாகிய நான், பேரரசரின் முன் மண்டியிட்டு, மரியாதையோடு விடுக்கும் லிகிதம் இது.

பரத கண்டம் என வழங்கப்படும் இந்திய தேசத்தில் உயர்ஜாதி மிளகு விளைவித்துச் சிறந்த உத்தரகன்னடப் பகுதியின் மிளகு மகாராணி என்ற சென்னபைரதேவி அவர்களின் அரசவைக்கு போர்ச்சுகல் அரசப் பிரதிநிதியாகப் போயிருந்து பணியாற்றுகிறவனான நான் ஆயிரம் தெண்டனிட்டு இந்த லிகிதத்தை எழுதலானேன். எழுத்துப் பிழை, சொற்பிழை, தெளிவின்மை இவை இந்த லிகிதத்தில் தென்பட்டால் தயைகூர்ந்து அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்.

இந்தியாவில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு உட்பட்ட தென்னிந்திய சிற்றரசுகளில், வடக்கு கன்னட கொங்கணி பிரதேசத்து அரசுகள் வாசனை திரவியங்களும், வெல்லமும், சாயம் தோய்த்த துணியும், வெடியுப்பும் ஏற்றுமதி செய்து பெரும் வருமானம் சம்பாதித்து வருவது மன்னர் பெருந்தகை அறிந்ததே.

இந்தச் சிற்றரசர்களோடு நல்லிணக்கம் பூண்டு கடல் கடந்து ஏலமும், மிளகும், கிராம்பும் மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்து ஐரோப்பா கொண்டு போவது நமக்குச் சாதகமான, நல்ல வருமானம் விளைவிக்கும் செயல் என்பதும் பேரரசர் எங்களுக்குச் சொல்லி விளக்கியிருப்பது.

அதிலும் மிளகு ராணி என்று போர்த்துகீசியர்களான நாம் நேசத்தோடு அழைக்கும் ஜெருஸோப்பா நகர் சார்ந்த நிலப்பரப்பின் அரசி சென்னபைரதேவி நம்மோடு நல்ல உறவு வைத்திருப்பதோடு, நமக்கு ஜன்மப் பகைவர்களான ஒலாந்தியர்களை அவர்கள் இந்தியாவின் மேற்குக் கரையான கொங்கணத்துக்கு நாடு பிடிக்க வந்தபோது விரட்டியடித்தவர்.

அரசியவர்கள் திருமுகம் காண வாய்ப்பு வரும்போதெல்லாம் இந்த லிகிதத்தை எழுதும் உங்கள் ஊழியன் இம்மானுவல் பெத்ரோ சென்று மரியாதை செலுத்தத் தவறுவதில்லை. அரசியார் ஆணைப்படி மிளகும், ஏலமும் அவர்கள் தர, நாம் சபோலாவும் மிளகாயும் பண்டமாற்றாகத் தரவும் ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்பட இருக்கிறதும் தெரிந்ததே.

இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும் அண்மையில் அறுபது வயது பூர்த்தியான மகாராணி சென்னபைரதேவியை வாழ்த்தி பரிசு சமர்ப்பிக்கவுமாக அடியேன் இரு தடவை அரசியார் வசித்து அரசாளும் மிர்ஜான் கோட்டைக்குச் சென்றிருந்தேன்.

முதல் பயணம் வாழ்த்தி விருந்துண்டு வர. மிக அற்புதமான விருந்து அது. அதற்கு இரண்டு நாள் கழித்து தனியாக அரசவைக் காரியாலயத்தில் சந்தித்தபோது பேரரசர் இங்கிருந்து அனுப்பிவைத்த தொழில் நுட்பம் மிகச் சிறந்ததும் நேர்த்தியான வடிவம்சம் கொண்டதுமான ஹெல்வெட்டியா இடுப்புவார் கடியாரத்தை நான் பேரரசர் சார்பில் பரிசளித்தபோது அரசியார் மனமுவந்து அதைப் பிரியமாக ஏற்றுக்கொண்டார்.

Medieval letter written on paper
Ack University of York

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன