ஹொன்னாவர் நகரில் ஒரு பிற்பகல், ஒரு முன்னிரவு: மிளகு – நாவலில் இருந்து ஒரு துளி

From the novel being written by me – MILAGU

நாற்பது நாழிகை. பிற்பகல் நான்கு மணி. ஹொன்னாவர் வெண்மாளிகை வீதியில் கணிகையர் வீடுகளில் அழகான பெண்கள் எழுந்து பசியாறுகிறார்கள்.

வாடிக்கையாளர்களோடு இரவு முழுக்கக் கூடியிருந்து விடிகாலையில் பசியாறி உறங்கப்போன அந்தப் பெண்கள் இன்றிரவு அணிய வேண்டிய, அணிந்து களைய வேண்டிய உடைகள் சீராக மடித்து நறுமணமூட்டி வைக்கப்படுகின்றன.

அவர்கள் கூட்டமாக நீராட மாளிகைக் குளங்களுக்குப் போகிறார்கள். நீராடித் தற்காலிகமாகப் புத்துணர்ச்சி பெற்று மாளிகையில் கிழக்கு பார்த்து ஏற்படுத்திய சிறு கோவிலுக்கு, ஈரம் காயத் துணி சுற்றிய கூந்தலோடு போகிறார்கள். வாடிக்கையாளர்கள் அதிகம் வரப் பிரார்த்தித்து அவர்களைச் சுற்றி சிறு மணிகள் முழங்க, தூபம் கமழ தீபாராதனை காட்டப்படுகிறது.

நாற்பத்தைந்து நாழிகை. மாலை ஆறு மணி. ஜெரஸோப்பா கடைவீதியிலும், ஹொன்னாவர் ரதவீதியிலும் துணி விற்கும் கடைகளும், பாத்திரம் விற்கும் கடைகளும், வளையலும், நகப்பூச்சும், உடம்பில் அள்ளிப்பூசி மணக்க வைக்கும் வாசனைத் தைலங்களும், அத்தரும், ஜவ்வாதும் விற்கும் கடைகளும் பரபரப்பாகின்றன.

கடைத்தெருவில் பொருள் வாங்க வந்தவர்கள் தெருக் கோடியில் குதிரை சாரட் வாகனங்களை நிறுத்தித் தெருவோடு நடந்து கடைகடையாக நின்று போகிறார்கள்.
ஜவுளிக்கடைகளில் பிடவை வாங்க வந்த பெண்கள் விற்பனையாளனிடம் பிடவைகளைப் பிரித்துக் காட்டச் சொல்கிறார்கள். அணிந்த மாதிரி துணியை தோளில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

மார்க்கச்சு தைக்கும் தையல்காரர்கள் கடைக்கு உள்ளே ஒற்றைத் திரியிட்ட நிலவிளக்கின் ஒளியில் விதவிதமான ஸ்தனங்களை உற்று நோக்கித் தேவையான புதுத்துணி கத்தரிக்கிறார்கள்.

கோவில்களில் சங்கீத வினிகை வழங்க (கச்சேரி செய்ய) வந்திருக்கும் கலைஞர்கள் இசைக்கருவிகளை மீண்டும் மீண்டும் மீட்டி சுநாதம் தர வழிவகை செய்கிறார்கள். பாடும் இசைஞர்கள் சற்றுப் பாடித் தொண்டையைச் சீர் செய்ய சீரகமும், சுக்குப்பொடியும் இட்ட சூடான நீர் பருகுகிறார்கள்.

ஐம்பது நாழிகை. இரவு எட்டு மணி. ஹொன்னாவர் மதுசாலையில் கூட்டம் பெருகி வழிகிறது. போர்ச்சுகீசிய ராணுவ வீரர்களும், அராபியர்களும், நகர தனவந்தர் வீட்டுப் பிள்ளைகளும், கணிகையரோடு கூடும் முன் நல்ல மதுவை ருசித்துப் போக வந்தவர்களுமாக கலகலப்பாக இருக்கும் மதுசாலை.

போர்த்துகீசிய நாணயம் நான்கு குருஸடோவுக்கு ஒரு வராகன் நாணய மாற்று செய்கிற மதுக்கடை ஊழியனோடு, கப்பலிறங்கி ஹொன்னாவர் வந்த போர்த்துகீசிய வீரனொருவன் அதிக வராகன் மாற்றாகக் கேட்டுத் தகராறு செய்ய, வெளியே கொண்டு போய் விடப்படுகிறான்.

ஐம்பத்தைந்து நாழிகை. இரவு பத்து மணி. மதுசாலையின் மறுபக்கம் கள் விற்பனை சுறுசுறுப்பாக நடக்கிறது. மண் பானைகளிலும் தாழிகளிலும் இரவில் பறக்கும் சிறு பூச்சிகள் இறந்து கிடக்கும், போதை மிகத்தரும் தேறல் பருகக் கிடைக்கிறது. அது வடிகட்டாமல் பருகப்படுகின்றது. வெல்லமும் தேனும், முந்திரிப் பழச்சாறும் புளிக்க வைத்து வடித்த மதுவும், அரிசி கொண்டு உண்டாக்கிய மதுவும், தென்னங்கள்ளும், பனங்கள்ளும் பருகி லகரி தலைக்கேறியவர்கள் தரையில் உருண்டும், பாடி ஆடி விழுந்தும் அடுத்த கோப்பைக்கு அரை வராகன் காசு தனியாக மடியில் முடிந்ததை எடுத்துக் கடைக்காரர்களிடம் நீட்டுகிறார்கள். இன்னிக்கு இதுதான் கடைசி கிண்ணி என்றபடி மடியில் இன்னொரு முடிச்சைத் தடவிக் கொள்கிறார்கள்.

Old city evening scene
pic ack unsplash.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன