மிளகு – நானூறு வயசு மூத்த மணப்பெண்ணும் நூற்றுப் பத்து வயது மணமகனும்

பற்றிப் படரும் மிளகு நாவலில் இருந்து –

கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவிலுக்கு வெகு அருகே மஹா கணபதி ஆலயத்தில் ரோகிணியை பரமன் திருமணம் செய்துகொண்டார். ரோகிணி இந்திய போர்த்துகீஸ் கலப்பினப் பெண். பரமனை விட நானூறு வயது மூத்தவள். ஊமத்தை யுத்தத்தில் முழு போர்த்துகீஸ் இனத்தவனான அண்டோனியோ சகாரியோவான தன் முதல் கணவனை இழந்தவள். அதற்கு அப்புறம் முழுக்க இந்திய வம்சாவளியினளாகத்தான் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறாள். லிஸ்பனில் வீடு, தோட்டம், உறவுக்காரர்கள் என்று இருந்தாலும் உத்தர கன்னடப் பிரதேசமான ஜெருஸப்பா, ஹொன்னாவர், பட்கல்,உள்ளால் இப்படி இங்கே வசிப்பதைத்தான் மரியாதைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாக உணர்கிறாள். முதல் கணவன் இறந்தபிறகு இந்திய மிட்டாய்க்கடை வைத்து செல்வம் கொழிக்கிறாள். ராஜகுமாரன் நேமிநாதனுடைய தொடுப்பு பெண் அவள். அவன் மூலம் பெற்றெடுத்த பிள்ளை மஞ்சுநாதனுக்கு மூணு வயது. மஞ்சுவுக்குத் தகப்பனாக பரமனைக் காட்டுகிறாள் ரோகிணி. எங்கப்பாவும் எங்கம்மாவும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க என்று மஞ்சுநாதன் ஒத்த வயதுக் குழந்தைகளோடு விளையாடும்போது சொல்லி வைத்து அந்த நாள் இன்றைக்கு வந்ததில் அவனுக்கு லட்டுருண்டை வடிவிலும் ரவைலாடு வடிவிலும் சந்தோஷம் வந்தது.

கோகர்ணம் ஹொன்னாவரிலிருந்து முப்பது கல் தொலைவில் என்பதால் ஹொன்னாவர் மிட்டாய்க்கடை ஊழியர்கள் தங்கள் கடை உடமையாளர் ரோகிணிக்கும் தலைமை மடையர் பரமனுக்கும் கல்யாணம் என்று ஒரு சாரட் வண்டியிலும். இன்னொரு வாகன் குதிரை வண்டியிலும் வந்து இறங்கிப் பத்து நிமிஷம் ஆகிறது. மொத்தம் பதினாலு பேர் மாப்பிள்ளை, மணப்பெண்ணைச் சேர்த்து.

மொணமொணவென்று முணுமுணுப்பாக தூறல் மழை காது மடலை நனைத்துக் கொண்டிருக்க பரமன் ஒரு சாரட்டில் இருந்து இறங்கினார். அவர் உதடுகள் இது சரியில்லே எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுத்து. இன்னொரு கல்யாணம் செய்துக்க மனம் இல்லை. என் பெண்டாட்டி ஷாலினிதாய் இறந்ததால் நான் விதவன். ரோகிணியின் கணவன் அண்டானியோ இறந்ததால் அவள் விதவை. ரெண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ராஜகுமாரரே ரோகிணியிடம் சிபாரிசு செய்திருக்கிறாராம். அதை ஏன் ரோகிணியிடம் சொல்ல வேண்டும்? என்னிடம் இல்லையா சொல்லணும் என்று பரமனுக்குத் தோன்றியது. அவரவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. ராஜகுமாரர் நேமிநாதனுக்கு ஜெருஸுப்பா அரசராக வேண்டும். போர்த்துகீசியர்களோடோ, ஒல்லாந்தியரோடோ சேர்ந்து காசு சேர்க்க வேண்டும். ரோகிணியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ரோகிணிக்கோ ஒன்று நேமிநாதனோடு முதல் ராணியாக அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜெருஸுப்பாவிலும் ஹொன்னாவரிலும் பக்கத்து கிராமங்களிலும் வீடும் மாளிகையும் நிலமும் தன் பெயரில் இருக்க வேண்டும். பரமனைக் கல்யாணம் செய்து கொண்டு நேமிநாதனின் புறம்பெண்ணாக இருப்பதில் அவளுக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை. பரமனுக்கு இங்கே நடப்பதெல்லாம் எந்த விதத்திலும் அவரைப் பாதிக்காது. ஒரே ஒரு லட்சியம் எப்படியாவது நாக்பூருக்கோ பம்பாய்க்கோ அவருடைய காலத்தில் திரும்பப் போக வேண்டும். அதற்காக என்ன வேணுமானாலும் செய்வார் அவர்.

ஒவ்வொருத்தரா வாங்கோ. எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்திலே உள்ளே வந்தா பின்னாலே இருந்து தரிசனம் பண்ணிண்டு இருக்கறவாளுக்கு ஒண்ணும் தெரியாது. கோவில் ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் கணீரென்ற குரலில் சொல்லித் தமிழில் பழம்பாடல் எதுவோ பாட்டும் இல்லாமல் வாசிப்பும் இல்லாமல் ராகம் இழுக்கிறார்.

தேவாரமா என்று கேட்கிறார் பரமன். அவர் முகம் தீபாராதனை வெளிச்சத்தில் தமிழ்ப் பாடல் கேட்ட பெருமகிழ்ச்சியில் மலந்திருக்கிறது. அவருடைய தேவாரமா என்ற கேள்வி எப்போதாவது சந்திக்கும் பட்டரும் சந்தோஷம் அடைகிறார்.

ஆமா, திருக்கோகர்ணம் தேவாரம். அப்பரும் பாடியிருக்கார். சம்பந்தரும் பாடியிருக்கார். இது அப்பர் தேவாரம் என்று பாட ஆரம்பிக்கிறார் –
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான்காண்
தாழ்சடையான் காண் சார்ந்தார்க்கு அமுதானான்

மொழி புரியாவிட்டாலும் உதவி மடையன் ரமணதிலகனும் சுற்றுப் பற்றுக் காரியம் நோக்கும் பெருந்தேவனும் பரமன் பின் நின்று பாடல் முடியும்வரை கண்மூடிக் கைகுவித்து நெக்குருகி இருக்கிறார்கள். கோவில் வாசலில் இன்னொரு சிறிய சாரட் வந்து நிற்கிறது. ரோகிணி காஞ்சிபுரம் பட்டுத் துணியில் நெய்த புதுப் பிடவை உடுத்து நிற்கிறாள். பக்கத்தில் புடவை அணிந்து மணப்பெண்ணின் தோழியாக கஸாண்ட்ரா. ரோகிணியின் கண்கள் உறக்கம் காணாமல் சற்றே களைத்திருக்கின்றன. அவள் கையைப் பிடித்தபடி மூன்று வயது மஞ்சுநாத், அவளுடைய மகன் நிற்கிறான்.

படம் திருக்கோகரணம் மஹாகணபதி கோவில்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன