மிளகு நாவலில் இருந்து பறந்து வந்த ஒரு பக்கம்

“சென்ஹோர் கார்லோஸ், மிளகு ராணி தீர்க்காயுசாக நூறு வயதும் கடந்து சௌக்கியமாக இருப்பார்கள். நான் எங்கே ராஜாவாவது? இருக்கும் ராஜகுமாரன் பதவியை இன்னும் ஆயுசு இருக்கும் நேரம் வரை வகித்து விட்டுப் போய்ச் சேர வேண்டியதுதான்” என்றான் நேமிநாதன் உதிர்த்த லட்டை மென்றுகொண்டு.

”அது ஒரு வழிதான். ஆனால் வயதானவங்களை சற்றே ஓய்வெடுக்கச் சொல்லிட்டு அவங்க சார்பிலே ஆட்சியை நடத்தலாம். எவ்வளவு வருஷமா மிளகு விற்றுக்கிட்டு இருக்காங்க. கையே மிளகு மாதிரி கரடுமுரடா ஆகியிருக்குமே. கண்ணுக்குள்ளே மிளகுப்பொடி நிரந்தரமாத் தங்கி பார்வையோடு நெடியடிச்சு வந்து போய்க்கிட்டிருக்குமே” அகஸ்டின்ஹொ சொன்னதன் கடைசி வாக்கியம் புரியவில்லை நேமிநாதனுக்கு. ரோகிணியை அப்புறம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆக இந்த அகஸ்டியானோ லிஸ்பனில் இருந்து புறப்பட்டு வந்தது கிழவிக்கு ஒரு அந்திம தினத்தை குறிக்க என்பதில் நேமிநாதனுக்கு ஒரு இனம் புரியாத ஆசுவாசம் தோன்றியது. அதெல்லாம் சரி சென்ஹோர், அவங்க அவங்களுக்கு ஆயுள் ரேகை கையிலே திடமா இருந்தா, நூறும் இருப்பாங்க, நூற்று ஐம்பதும் இருப்பாங்க. ஆண்களை விட பெண்கள் இதில் அதிக சாதனை செய்தவங்க என்றான் நேமிநாதன் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக.

“சொல்லுங்க. நாளைக்கே யாரையாவது அனுப்பி வைக்கணுமா? சாம்பா கவனிச்சுப்பான். அவன் தொடக்கூட மாட்டான். போன மாதம் கோழிக்கோட்டுலே சாமுத்ரிக்கு ரொம்ப வேண்டிய ஒரு தரவாட்டு நாயர் அதிக ஜுரத்திலே மரிச்சாரே. அது எப்படி ஆச்சு?”

எப்படி ஆச்சு என்று நேமிநாதன் சற்று ஆர்வம் அதிகமாகக் கண்ணில் தெரியக் கேட்டான். நாயர் கோவிலுக்குப் போய்விட்டு வந்துட்டிருந்தார். தெருவிலே சீனத்து சீலைக்குடையை கக்கத்திலே இடுக்கிட்டு சாம்பா எதிர்த்தாப்பலே போனான். நாயரை நிறுத்தி குளத்துக்கு எப்படி போறதுன்ன்னு கேட்கும்போது குடைக்கம்பி நுனி நாயர் கையிலே கொஞ்சம் அழுத்தமாகப் பட்டு ரொம்ப சின்னதாக ஒரு ரத்தக் கீற்று. அது வழியா நாயருக்கு ரோகம் உடம்புலே கொண்டு போயாச்சு

நேமிநாதனுக்கு மனதில் பயம் எட்டிப் பார்த்தது. வந்திருக்கிறவர்கள் என்ன மாதிரியான ஆட்கள்?

அகஸ்டின்ஹோ தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னார் – எவ்வளவு செலவானாலும் சரி கார்டெல் செலவு பண்ணும். ராஜகுமாரர் ராஜா ஆகணும். ஆன பிறகு உங்களுக்கும் எங்களுக்கும் மட்டும் மிளகு வர்த்தகம். ஒவ்வொரு கொள்முதலுக்கும் அரை சதவிகிதம் ராஜாவுக்கு அன்பளிப்புப் பணம். கூடவே லிஸ்பன்லே ஒரு மாளிகை. ராஜா ராஜ போகத்தோடு தான் இருக்கணும். இதைவிட இன்னும் பத்து மடங்கு அதிக போகம்.

நேமிநாதனைப் பார்த்து விஷமமாகக் கண்ணால் சிரித்தாள் ரோகிணி. இது எழுதிக் கையெழுத்தெல்லாம் போட முடியாது என்கிறான் நேமிநாதன்.

வேண்டவே வேண்டாம், கனவான்களுக்குள் ஏற்படும் ஒப்பந்தம். நாங்கள் பணம் கொண்டு வருவோம். நீங்கள் கிராம்பு கொண்டு வருவீர்கள். இரண்டு பேருக்கும் ஜெயம் ஜெயம்.

நான் கிராம்பு கொண்டு வராவிட்டாலோ? நேமிநாதன் அகஸ்டின்ஹோவை நோக்கி ஒரு பகுதி புன்சிரிப்போடு கேட்டான்.

”குடைக்கம்பி நுனி வேறு பக்கமும் திரும்புமே?” அதிகச் சிரிப்போடு அகஸ்டின்ஹோ சொல்ல ஒரு வினாடி மௌனம் தீர்க்கமாக நிலவியது.

Pic Portuguese family
Ack en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன