ஒரு சிறு குறுமிளகு – எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நாவல் மிளகு-வில் இருந்து

”ராஜா, நாங்கள் யாரென்று உங்களுக்கு ரோகிணி சொன்னாளா?” அகஸ்டின்ஹோ நேமிநாதனைக் கேட்டார். இல்லை என்று தலையசைத்தான் அவன். ஊர் சுற்றிப் பார்க்க லிஸ்பனில் இருந்து வந்திருக்கும் வர்த்தகர்கள். அது மட்டும் தெரியும்.

கார்லோஸ் சிரித்தார்.

”வாயில் கட்டை விரலைப் போட்டுக்கொண்டு ஊர் உலகம் தெரியாமல் சுற்றும் முதிய சிறுவர்கள் என்றோ, ஆவிகளோடு இழைவதை உயிர்மூச்சாக உலகமெங்கும் பரப்ப முற்பட்ட மத்திய வயசுக் கிழவர்கள் என்றோ எங்களைப் பற்றி மாண்பு மிக்க மகாராஜா சமூகத்துக்குத் தோன்றினால், அடாடா, அடாடா, என்ன சொல்ல”. அவர் ரோகிணியைப் பார்க்க அவள் சொல்கிறாள் –

”ஜோஸ் கார்லோஸ். லிஸ்பனில் வைர வர்த்தகர். ஸ்பெயின் தேசத் தலைநகரமான மாட்ரிடில் மிகப் பெரிய தங்க, வைர, மாணிக்க நகைகள் விற்பனைக்கு வைக்கும் நான்கு தலைமுறை நவரத்தின வியாபாரக் குடும்பம் இவருடையது. லண்டனிலும் இவர் குடும்பம் நகை வணிகர்கள். உலகிலேயே சிறந்த நறுமண தைலங்களையும் பென்னாலிகன் என்ற பெயரில் கமகமவென்று மணக்க மணக்க விற்பனை செய்கிறது”.

அகஸ்டின்ஹோ. நான்கு தலைமுறையாகக் கப்பல் கட்டுவது குடும்பத் தொழில். கப்பலை உடைப்பதும் தான் என்கிறாள் ரோகிணி.

கப்பல் கட்டுவானேன், அப்புறம் உடைப்பானேன் என்று நேமிநாதன் நியாயமான சந்தேகத்தைக் கேட்கிறான். ரோகிணி சிரித்தபடியே அதை நேர்த்தியான உச்சரிப்பில் அகஸ்டின்ஹோவிடம் போர்ச்சுகீஸ் மொழியில் சொல்கிறாள்.

”கட்டுவது புத்தம்புதுக் கப்பலை. உடைப்பது இனி உபயோகமே இல்லை என்கிற அளவு முப்பது நாற்பது வருடங்கள் கடலில் போய் வந்த பழம்பெரும் கப்பல்களை. மலிவு விலைக்கு வாங்கி உடைத்து இரும்பையும் மரத்தையும் உதிரியாக விற்றுப் பணம் பார்ப்பது பெரிய அளவு வியாபாரம்”.

துரை சிரித்தபடி சொல்ல நேமிநாதனுக்கு ரோகிணி மூலம் கொங்கணியாக வருகிறது. கணிசமான பிரமிப்பு, நிறைய மதிப்பு, கொஞ்சம் குழப்பம் என்று நேமிநாதன் கலவையாக முகத்தில் உணர்ச்சி காட்டியபடி உட்கார்ந்திருக்கிறான்.

வாஸ்கோ ட காமா கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே? அகஸ்டின்ஹோ கேட்கிறார். நேமிநாதன் நினைத்துக் கொள்கிறான் – கேள்விப்படாமல் என்ன? போர்த்துகீசியர்கள் எல்லோரும் அனுதினம் பூஜித்துத் திருப்பாதங்களைக் காலுறை கழட்டாமலேயே சிரசில் தாங்கி வணங்க வேண்டிய மகாநுபாவர் அல்லவா?

“இந்தியாவுக்கு போர்ச்சுகல்லில் இருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை சுற்றி விரைவாக வந்து சேரப் பாதை கண்டவர் அவரன்றோ” என நேமிநாதன் கௌதம புத்தரைப் பற்றி வினவுவதுபோல் போலிப் பரவசத்துடன் கேட்டான்.

pic Portuguese traders 16th Century

ack en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன