வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து : 1596-ம் ஆண்டில் ஒரு நாள் – சில பகுதிகள்

வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து : 1596-ம் ஆண்டில் ஒரு நாள் – சில பகுதிகள்

பதினேழரை நாழிகை காலை ஏழு மணி ஹொன்னாவர் நகரின் சந்தை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து கிராமங்களிலிருந்து வந்த காய்கறிகளும், ஷராவதி நதித்தடத்தில் தூண்டிலிட்டுப் பிடித்துப் புதியதாக அனுப்பி வைக்கப்பட்ட மீன்களும் பிரப்பங்கூடைகளில் வைத்து விற்கும் சந்தைக் கடைகளில் சத்தமாக உள்ளது. தினமும் வாங்கினாலும் பேரம் பேசி வாங்குவதில் உள்ள சந்தோஷத்துக்காக குடும்பப் பெண்கள் கூடைகளோடு அடுத்த பேரத்துக்காக ஆவலுடன் கண்கள் தேட சந்தையில் நடக்கிறார்கள்.

ஒடித்தும் வளைத்தும் மூக்குத் தண்டில் தேய்த்தும் கறிகாய்களை இம்சித்து பேரமும் பேசி வாங்க வந்தவர்கள் இளம் பெண்கள் என்றால் கடைக்காரர்கள் சும்மா சிரிக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் திட்டுகிறார்கள். அநியாயத்தை சரி செய்ய கோட்டைதான் குறுக்கிடணும் என்று கத்தரிக்காய் விற்பனையில் மிளகு ராணியை மத்தியஸ்தம் செய்ய அழைக்கிறார்கள்.

மீன் கடைகளை விலக்கி அவசரமாக நடக்கும் பிராமணப் பெண்ணை குறைந்த விலையில் மத்ஸ்யம் வாங்க வரச்சொல்லி மீன்கடைக்காரர்கள் அழைப்பதும் தினசரி நடப்பதுதான். நாங்க எல்லாம் மீன் தின்ன ஆரம்பிச்சா இந்தப் பொன்னாவரம் மட்டும் இல்லை, விஜயநகரத்திலேயும் மீன் கிடைக்கத் தட்டுப்பாடு வந்துடும் என்று சிரித்தபடி பதில் சொல்லும் பார்ப்பனியோடு சந்தையே சிரிக்கிறது. அவள் ஹொன்னாவர் என்ற ஊர்ப் பெயரை நல்ல தமிழில் பொன்னாவரம் என்று உச்சரிப்பதை அந்தக் கூட்டம் ரசிக்கிறது. வீடுகளில் பால் கறக்க ஏற்படுத்தப்பட்டவர்கள் மாடுகளைக் கறந்து கறந்து பால் வாசனையோடு நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எங்கேயோ கன்றுக்குட்டி தாய்ப் பசுவை அழைக்கும் குரல். இருடி வரச் சொல்றேன். பால் கறந்து விட்டு வந்தவர்கள் கன்றின் குரலை ஒத்தியெடுத்து ஒலிபரப்ப, எங்கிருந்தோ தாய்ப்பசுவின் இதோ வந்துட்டேன் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

இருபது நாழிகை. காலை எட்டு மணி. ஜெருஸுப்பா பிரதானி சந்திரப்பிரபு மாளிகையில் பிரதம மடையர் அடுப்பில் வெங்கலப் பாத்திரம் ஏற்றி ராகி களி கிண்டியபடி மெதுவான குரலில் ராகி தந்தீரோ என்று புரந்தரதாசர் தேவர்நாமா பாடிக் கொண்டிருக்கிறார். இசை நிகழ்ச்சி மாதிரி அவருடைய உதவியாளர்கள் கூடப்பாட, கிண்டப்படும் களியில் மிளகைக் காணோம். ஒரு மாறுதலுக்கு பச்சை மிளகாய் அரிந்து போடப்பட்டிருக்கிறது. விட்டலன் மிளகுக்கும் மிளகாய்க்கும் வித்தியாசம் பார்ப்பதில்லை என்கிறார் மடையர். எல்லோரும் மிளகு வேண்டாம்னு வச்சா நாளைக்கு எதை வித்து ராஜதானியிலே பணம் கிடைக்கும்? நம்ம ராஜாங்கம் வேணும்னா மிளகுப்பொடி, பரங்கி கொடி பறக்கணும்னா மிளகாய். எதுன்னு முடிவு செஞ்சுக்கங்க. அம்மியில் துவையல் அரைத்துக் கொண்டிருந்த உப மடையர் சொல்வதைப் பின்னால் நின்று பிரதானி சிரத்தையாகக் கவனிக்கிறார்.

”தாசாச்சார்யாரே, இனிமேல்கொண்டு நம்ம குசினியிலே மிளகாயும் வெங்காயமும் வரவேண்டாம். என்ன தெரிஞ்சுதா?” பிரதானி களி வாடையை முகர்ந்தபடி வெளியே போகிறார். பச்சை வெங்காயத்தோடு ராகிக் களி தின்ன என்ன ருசியாக இருக்கும்! அவர் நாக்கை சிரமப்பட்டு அடக்குகிறார்.

இருபத்திரண்டரை நாழிகை. காலை ஒன்பது மணி. வெதுவெதுப்பான வெந்நீரில் வாசனாதி திரவியங்கள் கலந்து அரபுப் பொடி தேய்த்து நீராட சென்னபத்மாவதிக்கு தாதி மிங்கு உதவ, ஸ்நானம் முடித்து மடிப் பிடவை உடுத்தி மிர்ஜான் கோட்டை பூஜை மண்டபத்துக்கு வருகிறாள் மகாராணி. தாதிகள் செலுவியும் மங்காவும் இன்னும் ஒருத்தியும் குளித்து மடி உடுத்து கூந்தலை வெண்பட்டுக் கட்டி மறைத்தபடி நானாவித புஷ்பங்களும் ரோஜா வாடையடிக்கும் மைசூர் மட்டிப்பால் ஊதுவத்திகளும், தமிழ் பேசும் கல்வராயன் மலைப் பிரதேசத்திலிருந்து வரவழைத்த கட்டி சாம்பிராணிப் புகையுமாக பூசை மண்டபம் கைலாசம் போல் மிளிர்கிறது. வயதான புரோகிதர்கள் நாலு பேர் பூசனை மந்திரங்களைச் சொல்கிறார்கள். பெரிய பிரம்புத் தட்டுகளில் வைத்த ரோஜாப்பூ இதழ்களையும் வில்வ இலைகளையும் மகாவீரர் பிரதிமைக்கும் அடுத்து சிவபிரானுக்கும் மெல்ல பூவிதழ் தூவி அர்ச்சனை செய்தபடி இருக்கிறார் மகாராணி. மிர்ஜான் கோட்டை சமையல் அறைகளில் சுத்தமாகப் பக்குவப்படுத்தப்பட்ட பொங்கலும் பாயசமும் நைவேத்தியமாகின்றன. ருசிபார்க்கும் உத்தியோகஸ்தன் கொஞ்சம் நைவேத்தியப் பொங்கலைத் தின்று பாயசம் ஒரு மடக்கு குடித்து சரிதான் என்று வணங்கிச் சைகை தர, அரசியார் நைவேத்திய பிரசாதம் உண்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன