லண்டனில் சுற்றித் திரிந்த போது – மெய்டன் லேன் (கோவண்ட் தோட்டப் பகுதி)

என் லண்டன் பயண நூல் ‘லண்டன் டயரி’யில் இருந்து –

மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து ‘திக்’கான டீக்காஷனை ·பில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக்கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கதி.

விக்டோரியா மகாராணி இங்கிலாந்தை ஆண்டபோது நாடு முச்சூடும் மும்முரமாக காப்பி குடித்துக் கொண்டிருந்தது. அல்லது மதுபானம் பருகிக் கொண்டிருந்தது. பல குடிமக்கள் பகல், இரவு என்று நேரத்தைப் பிரித்துக்கொண்டு இரண்டு கட்சியிலும் அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

கோவண்ட் தோட்டச் சுற்றுவட்டாரத்தில் அப்போது காப்பிக்கடை இல்லாத சந்து பொந்து ஒன்று கூடக் கிடையாது. பரபரப்பான போட்டிக்கு நடுவே காப்பிப் பிரியர்களைக் கடைக்கு வரவழைக்கப் புதுமையான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ‘எங்க கடையில் காப்பி குடித்தால், ஒரு சுருட்டு இலவசம்’ என்று விளம்பரம் செய்கிற கடைக்கு நேர் எதிரே, ‘காப்பி குடித்தபடியே இலவசமாக தினசரிப் பத்திரிகை படியுங்கள்’ போர்ட் வைத்த கடை. ‘பெரிய சைஸ் டம்ளர் காப்பி ரெண்டு சல்லி, சின்ன சைஸ் டம்ளர் ஒரே ஒரு சல்லி’ என்று மினி மார்க்கெட்டிங்கில் காசை அள்ளிய கடை இப்படிப்பல. பால் பவுடர் என்ற சமாசாரத்தைக் கண்டுபிடித்ததும் அந்த சமயத்தில்தான். “என்னத்துக்கு மெனக்கெடணும்? லண்டன் பால்காரங்களைக் கேட்டா சொல்லுவாங்களே, சுண்ணாம்புக் கட்டியைக் கரைச்சுத் தண்ணியை ஊத்திக் கொஞ்சம் பாலைச் சேர்த்தாப் போதுமே” என்று அந்தக்கால நகைச்சுவை பத்திரிகை ‘பஞ்ச்’ நையாண்டிக் கட்டுரை எழுதியதும் அப்போதுதான்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு வசமாகத் திரும்பி, ஒரு காலத்தில் காப்பிக் கடைகள் செழித்தோங்கிய மெய்டன் சந்தில் நடக்கிறேன். முட்டுச் சந்தாக முடிந்த இந்த மெய்டன் சந்து இரண்டு பக்கத்திலும் திறந்து, பக்கத்து சவுத்ஹாம்ப்டன் வீதியில் முடிய வழிவகுத்தவர் விக்டோரியா மகாராணி. நாடக ரசிகையான அவர், கோவண்ட் தோட்டப் பக்கத்து நாடகக் கொட்டகைக்கு சாரட் வண்டியில் வந்துவிட்டுத் திரும்பப் போக வசதியாக இப்படி மெய்டன் சந்துக்கு ராஜபாட்டை அந்தஸ்து ஏற்பட்டதோடு, அந்தத் தெரு கூடுதல் பரபரப்புக்கு இடமானது.

நான் இப்போது நிற்கும் மெய்டன் சந்து முழுக்க சாப்பாட்டுக் கடைகள், அங்கங்கே வக்கீல் ஆபீஸ்கள். மெக்சிகோ, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ் என்று எல்லா தேசத்து உணவுக்கும் இந்தத் தெருவுக்கு வந்தால் போதும். பழைய காலக் காப்பிக்கடை ஏதும் மிச்சமிருக்கிறதா என்று ஒவ்வொரு வாசலிலும் ஆர்வத்தோடு நோக்கினால் ஏமாற்றம்தான். காப்பிக்கடைகள் எல்லாம் நம்மூருக்குக் குடிபெயர்ந்து ஏழெட்டு மாமாங்கமாவது ஆகியிருக்கும்.

எதிர்வசத்து ரூல்ஸ் ஓட்டல் போர்ட் கவனத்தை ஈர்க்கிறது – ‘லண்டனிலேயே பழைய ஓட்டல்’. 1798-ல் தொடங்கியதாம். அப்போது தயாரித்த மைசூர்பாகு எதுவும் ஷோகேஸில் தட்டுப்படவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்குமென்று நம்பலாம். சார்லஸ் டிக்கன்ஸ், கிரகாம் கிரீன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் வந்து இருந்து சாப்பிட்டுவிட்டுப் போன கடை என்று எழுதி வைத்திருக்கிறது. டிக்கன்ஸ் நாவல் எழுதியதோடு நிற்கவில்லை. மேடை போட்டு, தான் எழுதிய கதைகளை அதன் பாத்திரங்களாக மாறி வாசித்துக்காட்டவும் செய்தார். வாசகர்கள் காசுகொடுத்து டிக்கட் எடுத்துக் குழுமி, அரங்கு நிறைந்து நடந்த இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கான பழைய நோட்டீசுகளை ரூல்ஸ் ஓட்டலில் காட்சியாக வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட ஏழாம் எட்வர்ட் மன்னன் தன் காதலியான நாடக நடிகை லில்லி லாங்ட்ரீயை பிரதிதினமும் அந்தி சாய்ந்த பின்னர் இந்த ஓட்டலில் வைத்துத்தான் சந்திப்பானாம்.

“நாலாவது டேபிள் தாடிக்காரப் பெரிசுக்கு மட்டன் சாப்ஸ், ரெண்டாவது டேபிள் இங்கிலாந்து ராஜாவுக்கும் அவரு ஜோடிக்கும் சிக்கன் ரோஸ்ட், எட்டாவது டேபிளுக்கு தக்காளி சூப்.” என்று அந்தக்கால ஓட்டல் வெயிட்டர்கள் மேற்படி ராஜரகசியத்தை சகஜமாக எடுத்துக்கொண்டு நடமாடியிருப்பார்கள் என்ற நினைவோடு நடையை எட்டிப் போடுகிறேன்.

மெய்டன் சந்து பத்தாம் எண் வீட்டு வாசலில் ஒரு வினாடி நிற்கிறேன். வால்ட்டேர் இருந்த வீடு என்று வெளியே பலகை அறிவிக்கிறது. பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்ட்டேர் அது வெடிப்பதற்கு முன்னால் அகதியாகத் தஞ்சம் புகுந்தது லண்டனில்தான். அதுவும் இந்த கோவண்ட் கார்ட்ன் பகுதியும், மெய்டன் சந்து சூழ்நிலையும் ரொம்பப் பிடித்துப் போகவே இந்த வீட்டில் ஒரு வருடம் குடக்கூலி கொடுத்து வசித்து லண்டன் வாழ்க்கையை அனுபவித்தபடி சொந்த நாட்டில் புரட்சிக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார். ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றப்போகிற மனுஷர் நம்மிடையே இருக்கிறார் என்று தெரியாத அந்தக்கால மெய்டன் சந்துவாசிகள் அவரை அடிக்க ஒருதடவை படைபட்டாளமாகக் கிளம்பியிருக்கிறார்கள். பிரஞ்சுக்காரர்கள் தொடங்கி அன்னிய தேசத்துக்காரர்கள் யாரையும் கூடியிருக்கச் சம்மதிக்காத மனநிலையே இதற்குக் காரணம். இந்தச் சகிப்பின்மை இப்போதும் அவ்வப்போது ஷில்பா ஷெட்டி விவகாரம் போல் தலைகாட்டிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

மெய்டன் சந்தில் மணக்க மணக்க செண்ட் விற்கிற பென்னலிஹன் கடை கண்ணில் படுகிறது. இதுவும் நூற்றுச் சில்லறை வருடம் முற்பட்டதுதான். உள்ளே வாக்கிங் ஸ்டிக்கை அப்படியும் இப்படியும் வீசியபடி அலமாரிகளில் அடைத்து வைத்திருந்த செண்ட் போத்தல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கனவான்கூடக் கடை திறந்த நாள் முதல் வாடிக்கையாளராக இருக்கப்பட்டவர் என்று தோன்றுகிறது. கடைக்குள்ளே நுழைந்து ஒரு சுற்று சுற்றி வருகிறேன். இரண்டாம் உலக மகாயுத்த காலத்துச் சூழல் கனமாகச் சூழ்ந்து நிற்கிற பிரமை.

தஞ்சாவூர் அத்தர்க்கடை, கோபுலு வரைந்த தில்லானா மோகனாம்பாள் ஓவியம், வாசனைப் புகையிலை, சர்ச்சிலின் சுருட்டு வாடை, ராத்திரி முழுக்க நடக்கிற நாதசுவரக் கச்சேரி என்று நான் பிறப்பதற்கு முந்திய 1940-கள் மாயமாகக் கிளர்ந்தெழுந்து புலன்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மெய்டன் சந்தில் காலம் உறைந்து கிடக்கிறது.

மெல்ல நடந்து சவுத்ஹாம்ப்டன் தெருவில் திரும்புகிறேன். எதிரே நிற்கிற பழைய கட்டிடம் ஒரு பத்திரிகை அலுவலகமாக இருந்தது. ஆமாம், நூறு வருடம் முன்னால்தான். ஆர்தர் கானன்டாயில் உருவாக்கிய பிரபலமான துப்பறியும் நிபுணரான ஷெர்லாக் ஹோம்ஸ் கதாநாயகனாக இடம்பெற்ற கதைகள் வெளியான ‘தி ஸ்ட்ராண்ட்’ பத்திரிகை இந்தக் கட்டிடத்திலிருந்துதான் பிரசுரமானது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதை வாசிக்க ஆர்வமான ரசிகர்கள் இங்கிலாந்திலும், கடல் கடந்து அமெரிக்காவிலும் அதிகம் என்பதால், கிட்டத்தட்ட லட்சக் கணக்கில் விற்ற பத்திரிகை அது.

ஸ்ட்ராண்ட் பத்திரிகை அடித்து ஓய்ந்த நேரத்தில் அச்சு யந்திரத்தைச் சும்மா வைத்திருக்க வேண்டாமே, இன்னும் நாலு காசு பார்க்கலாமே என்ற நல்லெண்ணத்தோடு அங்கேயிருந்து ஒரு கிசுகிசு பத்திரிகையும் வெளியாகிக் கொண்டிருந்ததாம். அதை ஆரம்பித்தபோது முதல்நாள் கிசுகிசுவாக, ‘ஏழாம் எட்வர்ட் மன்னருக்குப் பிரபல நடிகையோடு தொடர்பு’ தான் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

Maiden Lane – near Covent Garden, London
Photo : ERA

DIGITAL CAMERA

DIGITAL CAMERA

DIGITAL CAMERA

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன