“பெரியவர் மராட்டிகாரர். சின்னவர் குஜராத்தி. பெயர் நினைவு இல்லே. ஏதோ நரேந்தர்னு சொன்ன ஞாபகம்”.

நாதன்ஸ் கபேயில் ஜனதா சாப்பாட்டுக்காக டோக்கன் வாங்கும்போது உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷர்மா கண்ணில் பட்டார்.

”விசு, கொஞ்சம் இரு, ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கு”,

ஷர்மா விஸ்வநாதனிடம் சொல்ல, நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்று அபிநயித்து டோக்கனோடு உள்ளே நடந்தேன். கொம்பு உள்ளதற்கு ஐந்து முழம், குதிரைக்கு பத்து முழம், எமர்ஜென்சி எதிர்ப்பாளர் கண்ணில் பட்டால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வேகமாக ஓடி ரட்சைப் படுவதே சான்றோர் சொல்லும் வழிமுறையன்றோ.

சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது அதற்கு முன்பே அவசரமாக முடித்துக் காத்திருந்த விஸ்வநாதன், “போத்தி, நீ ஆயுர்வேத வைத்யன் தானே” என்று கேட்டான்.

குடும்பத் தொழிலாக சொல்லப்போனால், ஹோட்டல் நடத்துவது தான் குடும்பத் தொழில், உபதொழில் வைத்தியம். இது போன தலைமுறை வரை இருந்தது. போத்தி மருத்துவன் இல்லை. ஆனால் அடிப்படை தெரியும் என்று தெளிவு படுத்தினேன்.

”அது போதும், கொஞ்சம் கூட வா”.

உஷாராக வேண்டிய அடுத்த இடம். ஷர்மா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல விலகி அன்பழகன் பழச்சாறு நிலையம் வாசலில் நின்று அவர் வழக்கப்படி தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன விஷயம்? விஸ்வநாதனிடம் விசாரித்தேன். தெரிந்து கொள்வதை விட, கேட்டபடி தப்பித்துப் போக வழி கண்டுபிடிப்பதே என் குறிக்கோளாக இருந்தது.

”போத்தி, நான் லெப்ட்னு தெரியும் உனக்கு”.

”கட் பண்ணு, நேரே மெயின் ஃபிலிமுக்கு வா” என்றேன்.

முந்தாநாள் வடக்கே இருந்து இரண்டு சாமியார்கள் வந்திருக்கிறார்களாம். திருப்பதி போய் சிதம்பரமும் மதுரையும் தரிசித்து, ராமேஸ்வரம் யாத்திரையாகி காசி – ராமேஸ்வரம் புனிதப் பயணத்தை முடிக்க உத்தேசித்தவர்களாம்.

யாரிடம் இந்தக் கள்ளத்தனம்? சாமியார்களா வந்திருப்பது? அவன் என்னைக் கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னான் –

“சரி இப்போதைக்கு அப்படி வச்சுப்போம். அப்பத்தான் கதை மேலே போகும்”.

அவர்கள் துறவிகள். ரெண்டு பேரும் ஒரு அடியார் இல்லத்தில் இரண்டு நாளுக்குத் தங்கி இருக்கிறார்கள். குருநாதனின் மாடி அறை இருக்கும் அதே தெரு. கோடியில் உள்ளொடுங்கி ஒரு சந்து போகும். முடுக்குச் சந்து. அங்கே ஒரு ஷெட்டில் தான் இருக்கிறார்கள். சரி, பிறகு?

அதில் வயதான சாமியாருக்கு ஜன்னி வந்து புலம்பும் அளவு காய்ச்சல் கண்டிருக்கிறது. இடதுகை வீக்கம் வேறே. ஆண்டிபயாடிக்ஸ் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாராம். பழக்கமில்லையாம். அனால்ஜினும் நோவால்ஜினும் கேட்கவில்லை. ஹோமியோபதி போகலாம் என்று பார்த்தால் அந்த இடத்தில் யாரும் ஹோமியோ கிடையாது. அலோபத் கிட்டே போக முடியாது. ஊசி போட சம்மதிக்க மாட்டார். ஆயுர்வேதம் மருந்து எழுதிக் கொடுத்தால் நாளைக்கே கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலையில் வாங்கிக் கொடுத்து குணப்படுத்தி விடலாமாம். ஆயுர்வேத வைத்தியன் இப்போதைக்கு போத்தி.

”வந்து பத்து நிமிஷம் பார்த்து விட்டு கிளம்பி விடுவேன். இன்னொரு தடவை எல்லாம் அழைக்கக் கூடாது. ஆட்டோ கிடைத்தால் போய் உடனே வரலாம்”.

“ஆட்டோ அப்பவே சொல்லி வச்சாச்சு”.

இந்த உரையாடல் காதில் கேட்காத தூரத்தில் நின்றிருக்கும் ஷர்மா சொன்னார். மூன்று பேரும் பயணமானோம்.

குருநாதனின் மாடி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு இளைஞன் ராஜ மோகனம், ராணி தோரணம் என்று சினிமாப் பாட்டு எழுதிக் கொண்டிருக்க, பக்கத்திலேயே குருநாதன் எழுத்தில் அந்த அயோக்கியன் சேகர் அடுத்தவன் பெண்டாட்டி ரேணுகாவை விதவிதமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் காட்சி நினைவில் வந்து சிரித்தேன்.

விஸ்வநாதன் எதுக்கு என்று சைகை காட்டிக் கேட்டான். அப்புறம் சொல்கிறேன் என்றபடி அவனோடு ஆட்டோவை விட்டு இறங்கினேன். வேட்டகம் வாசல் படியிலேயே உட்கார்ந்து கொண்டார். ஏதோ ஒரு ஜாக்கிரதைத் தன்மை அவரிடம் தட்டுப்பட்டது. ரக்த தோஷாந்தக்கும் இன்னும் சில டப்பாகளும் விஸ்வநாதனிடம் கை மாறின.

கோடவுன் தான். நியூஸ் ப்ரிண்ட் வாடையும், அச்சு மை வாடையும் தூக்கலாக வந்த கிடங்கு அது.

சுவரில் வைத்த போர்ட் ஊர்ப் பேச்சு பத்திரிகையுடையது.

உள்ளே நடக்க, கோடவுன் முடிந்து, ஒரு கதவு. திறந்தால், ஒரு அறை. இரண்டு கயிற்றுக் கட்டில். பின்னால், சிறு உள்ளறையாக டாய்லெட்.

வயதான, ஈர்க்கு போல மெலிந்த ஒரு சாமியார் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தார். மண் பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் நனைத்த துணியை அவர் நெற்றியில் வைத்தபடி இளைய துறவி ஒருத்தர் கயிற்றுக் கட்டிலை ஒட்டி மண்டி போட்டு இருந்தார். மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ரெம்ப்ராண்ட் ஓவியம் போல இருவரும் தெரிந்தார்கள்.

விஸ்வநாதனைப் பார்த்து இளையவர் ஒரு முறை தலையசைத்தார். ஜாக்கிரதையான இங்க்லீஷில் அவர் சொன்னார் –

“இப்போ ரொம்ப பரவாயில்லே. கை வீக்கம் கொறஞ்சிருக்கு. மட் பாத் எடுக்க வேறே மண் கிடைக்கலே. பீச்சுக்கு போய் நேற்று ராத்திரி வெகு நேரம் சென்று எடுத்து வந்ததை வச்சு வறுத்து மணல் சிகிச்சை கொடுத்தேன். காய்ச்சலுக்கு நெற்றியிலே குங்குமப் பற்று போட்டேன். நல்ல முன்னேற்றம்.”.

விஸ்வநாதன் கொண்டு வந்திருந்த ரக்ததோஷாந்தக் மற்றும் பையிலிருந்து தசமூலாரிஷ்டம், சியவ்னப்ராஸ், திரிபலாதி சூரணம் என்று அரை ஆயுர்வேத வைத்தியனான நான் வந்தனை செய்யும் ஔடதங்களைப் பையில் இருந்து எடுத்து வைத்தான். இளைய சாமியார் முகத்தில் மகிழ்ச்சி மின்னி மறைந்தது

விஸ்வநாதன் பெரியவரின் அருகில் நின்று என்னைப் பார்த்தான். நான் குனிந்து இளைவருக்கு அருகே மண்டியிட்டு உட்கார்ந்து பெரியவரின் நாடியைப் பிடித்துப் பார்த்தேன். சாதாரணமாகத் தான் இருந்தது.

விஸ்வநாதன் கொடுத்த தர்மாமீட்டரை இளையவர் அவசரமாக பக்கத்தில் பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீரில் கழுவித் தர டெம்ப்ரேச்சர் பார்த்தேன்.

சொற்பமாகத்தான் ஏறி இருந்தது. நூறு டிகிரி பாரன்ஹீட். இளையவர் அருகில் வைத்திருந்த திரிபலாதி சூரணம், பாலாரிஷ்டம், ம்ருதசஞ்சீவினி இவற்றைக் காட்டினார். தொடர்ந்து தரலாம் என்றேன்.

முதியவர் புரண்டு படுத்தார். மல்லாந்து இருந்தார் அவர் இப்போது. கம்பீரமான முகம். எங்கோ பார்த்த நினைவு. எங்கே என்று தெரியவில்லை.

‘ராம் பாட்டு பாடு’ அவர் முனகினார். இளையவர் சட்டென்று கட்டில் அருகே உட்கார்ந்து மெல்லிய குரலில் பாடினார் –

”சூரஜ் கி கர்மி ஸே
ஜல்தெ ஹுவே தன் கோ
மில் ஜாயெ தருவர் கி சாயா”

வேனல் காலத்தில் வீதியில் நடப்பவன்
தான்படும் துன்பம் தருநிழல் மாற்றும்
வேதனை தான்மிகு வாழ்க்கையின் பாதையில்
வேறுயார் நிழல்மரம் கோசல ராமா!

வெய்யில் சூடு அனுபவித்தவனுக்குக் கிட்டிய மரநிழல் போல் எனக்கு ராமநாமம் என்று நாமஜபத்தின் பெருமை சொல்லும் கானம் அது.

பெரியவருக்கு மட்டுமில்லை, இளையவருக்கும், எனக்கும் கண்ணில் நீர் வழிந்தது. விஸ்வநாதன் கூட கைகுவித்து நின்றான்.

மீண்டு, என்னை இளையவரிடம் அறிமுகப்படுத்த அவர் கைகூப்பி வணங்கி ராம்ராம் என்றார்.

முதியவர் மறுபடி உறங்கி விட்டார். நாங்கள் கிளம்பினோம்.

இரண்டு நாள் கழித்து விஸ்வநாதனிடம் சாமியார்கள் பற்றிக் கேட்டேன்.

பெரியவர் யார் தெரியுமா?

சொன்னான். எதிர்பார்க்கவே இல்லை.

சரி, அவர் இருக்கட்டும், ராத்திரியில் கடற்கரை மண் எடுத்து வந்து பற்று போட்டு மகன் போல கவனித்துக் கொண்ட, சூரஜ் கி கர்மி சே பாடிய இளையவர்?

விஸ்வநாதன் சாப்பிடக் கிளம்பும் அவசரத்தில் சொன்னான் –

“பெரியவர் மராட்டிகாரர். சின்னவர் குஜராத்தி. பெயர் நினைவு இல்லே. ஏதோ நரேந்தர்னு சொன்ன ஞாபகம்”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன