இடாகினிப் பேய்

என் கட்டுரைத் தொகுதி ‘ராயர் காப்பி கிளப்’ மின்நூல், அச்சு நூல் கட்டுரை இது

இடாகினிப் பேய்

இது பகுதியாக முன்னர் வெளியானது. அஃது படியா நின்றோர், கூறியது கூறற்றுயர் நீங்கவே தொடக்கத்தில் சில பத்திகள் கடந்து தொடர வேண்டுகிறேன்.

‘இடாகினிப் பேய்களும்..’ என்ற பெயரில் என் (அண்மையில் காலம் சென்ற) நண்பர் கோபிகிருஷ்ணன் எழுதிய கதைத்தொகுப்பு பற்றிப் படித்தபோது எனக்கு இந்த இடாகினிப் பேயை எங்கேயோ பார்த்த நினைவு.

சிலப்பதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அது வசமாகப் பிடிபட்டது.
மாலதி என்ற பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் தரும்போது பால் விக்கி, அந்தக் குழந்தை மரித்தது. அது கண்டு துயருற்ற அவள் எல்லாக் கடவுள் கோவில்களிலும் ஏறி இறங்கி, குழந்தையை உயிர்ப்பிக்கு படி வேண்டுகிறாள்.

அவள் பாசாண்டச் சாத்தன் கோவிலுக்கு வரும்போது அங்கே இருந்த இடாகினிப் பேய் – இது சக்ரவாளக் கோட்டத்து இடுகாட்டில் பிணங்களை உண்ணுவது – ஒரு பெண் வடிவில் அங்கே வருகிறது. அதுவும், பிறரை எப்போதும் குற்றம் சொல்லும் பெண்ணாக.

மாலதியிடம் ‘நீ தவம் செய்திருக்காவிட்டால் உனக்குத் தெய்வம் வரம் கொடுக்காது’ என்று சொல்லி, அவள் கையில் வைத்திருந்த மகவை எடுத்துப் போய் இருட்டில் வைத்து உண்டு விடுகிறது.

பாசாண்டச் சாத்தன் அந்த மகவாகப் பிறப்பதாகக் கதை நீளுகிறது.

சிலம்பின் ‘கனாத்திறம் உரைத்த காதை’யில் வரும் நிகழ்வு இது.

‘ஐம்பெருங்காப்பியங்களில் இயற்கையிறந்த கூறுகள்’ என்ற பெயரில் முனைவர் மகரிபா எழுதிய புத்தகத்தைப் படிக்க எடுத்ததும் இந்த இடாகினிப் பேய் தூண்டித்தான்.

சிலம்பிலும், மணிமேகலையிலும் காவியச் சுவைக்காகவும், முற்குறிப்பு, பின்னோக்கு உத்தி சார்ந்தும், இன்றைய மாந்திரீக யதார்த்தத்தின் பண்டைத் தமிழ் வெளிப்பாடாகவும் எத்தனையோ தெய்வங்களும், பூதங்களும், வானவர்களும் மனிதர்களோடு ஊடாடிப் போகிறார்கள் – கந்திற்பாவை, நாளங்காடிப் பூதம், சதுக்க பூதம், இடாகினிப் பேய், எரியங்கி வானவன், குரங்குக்கை வானவன், காயசண்டிகை போன்றவர்கள் இவர்கள்.

இந்திரன், பாசாண்டச் சாத்தன், மதுராபதி தெய்வம், மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சம்பாபதித் தெய்வம் போன்ற தெய்வங்கள் அங்கங்கே தட்டுப்படுகின்றன.

இந்திரனையும், பாசாண்டச் சாத்தனையும் தவிரக் காப்பியங்களில் வரும் தெய்வங்கள் எல்லாம் பெண்களே. இது ஏனென்று யாராவது ஆராயலாம்.

‘சம்பாபதித் தெய்வம் முதியோள், மூதாட்டி என்றெல்லாம் குறிப்பிடப் படுகிறது. தெய்வங்களுக்கு முதுமையுண்டா என்பது தெரியவில்லை’ என்பது போல், தன்னால் அறுதியிட்டு நிறுவ முடியாததை எல்லாம் தெரியவில்லை என்று அடக்கமாகச் சொல்லும் மகரிபா போன்ற முனைவர்கள் அரிதாகவே கண்ணில் படுகிறார்கள். (மகரிபா குறிப்பிட்ட சம்பாபதி, ‘மன்ற அராஅத்த பேஎம் முதிர் கடவுள்’ என்று சங்க இலக்கியத்தில் வருகிற வயசான கடவுளை எனக்கு நினைவுபடுத்துகிறது.)

கண்ணகி மதுரையை எரியூட்டுவதை விவரிக்கும் மதுரைக் காண்டம் – அழற்படு காதையில் அரச பூதம், அந்தண பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் என்ற நான்கு பூதங்கள் நகர் நீங்குவதாகக் குறிப்பிடப்படுவது இடைச் செருகல் என்கிறார் மகரிபா. இப்பகுதிகள் ‘கந்தியார் போலும் ஒருவரால் பாடி இடைமடுக்கப் பட்டன’ என்கிறார் ந.மு.வெங்கடசாமி நாட்டாரும், தம் சிலப்பதிகார உரையில் (கழகப் பதிப்பு).

பாசாண்டச் சாத்தனைப் பற்றிச் சொல்லும்போது முனைவர் குறிப்பிடுவது –
“(சாத்தன்) சாதாரண மானுடன் போன்றே ஒரு குடும்பத்தில் மகனாக வளர்கிறான். திருமண உறவிலும் ஈடுபடுகிறான். எட்டாண்டு வாழ்க்கை நடத்துகிறான். அதன் பின் அந்த வாழ்க்கையைத் துண்டித்துக் கொண்டு கோயில் கொண்டாலும், அந்தக் கோயிலுக்கு தேவந்தியை (மனைவி) வரச்சொல்லி அவளோடு கொண்ட தொடர்பைத் தொடர்கிறான்.”

‘கோட்டத்து நீ வா எனவுரைத்து நீங்குதலும்’ என்ற அடியைத் தனியே பார்க்காமல், பின்னால் வரும்
‘ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும்
தீர்த்தத் துறைபடிவே னென்றவளைப் பேர்த்திங்ஙன்
மீட்டுத் தருவா யெனவொன்றன் மேலிட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்’
என்பதோடு சேர்த்துப் பார்த்தால் தேவந்தி மணவாழ்க்கையைத் தொடரக் கோவிலுக்குப் போகவில்லை என்பது புலனாகும்.

(‘ஐம்பெரும் காப்பியங்களில் இயற்கையிறந்த கூறுகள்’ – முனைவர் எஸ்.கே.எம்.மகரிபா – வெளியீடு : முப்புள்ளிப் பதிப்பகம், 24, கிரிநகர், இராமாபுரம், சென்னை 600 089).

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன