ஊரும் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலே

என் கட்டுரைத் தொகுப்பான ‘ராயர் காப்பி கிளப்’ அச்சுப் புத்தகம், கிண்டில் மின்நூலில் இருந்து-

எழுபது ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்டது தமிழ்த் திரையிசை. அதில் தோய்ந்து தகவல் சுரங்கமாக, ஆழ்ந்த புலமையோடு ரசனையைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் அபூர்வம். ‘ஸ்கிரீன்’ பத்திரிகையில் திரை இசை பற்றித் தொடர்ந்து எழுதி வந்த வி.ஏ.கே ரங்காராவ் இவர்களில் முன்னோடி. இந்தித் திரையிசைக்கு ராஜு பரதன், தற்போது வி.கங்காதர் போல் .

(இது 2002-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. திரை இசை என்சைக்ளோபீடியாவான நண்பர் சரவணன் நடராஜனை இதற்கப்புறம் தான் அறிமுகப் படுத்திக் கொண்டேன்.)

தமிழ்த் திரையிசையின் வரலாற்றில் ஈடுபாடு கொண்ட இரண்டு இளம் நண்பர்கள் எனக்கு உண்டு. நாங்கள், தி.ஜானகிராமன் எழுதி, சிறந்த நாடக, திரைப்படக் கலைஞரான எஸ்.வி.சகஸ்ரநாமத்தால் தன் சேவா ஸ்டேஜ் குழுவினரின் நாடகமாகவும், பின் அவராலேயே திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்ட ‘நாலு வேலி நிலம்’ பற்றி அண்மையில் பேசிக் கொண்டிருந்தோம்.

தஞ்சைக் கிராமத்தைக் களனாகக் கொண்டு உருவான அப்படத்தில் வரும் ஓர் அழகான காதல் பாடல் – திருச்சி லோகநாதனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியது. மாட்டு வண்டியில் போய்க் கொண்டே பாடுகிற காதலன் முத்துராமன் என்கிறார் நண்பர். நாயகி யாரென்று தெரியவில்லை. இந்த இனிமையான பாடல் முழுக்க மாட்டு வண்டியின் காளை மணியோசை இசைந்து வரும் அழகே தனி. பாடலும் அழகுதான்.

காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்ளும் இந்தப் பாடல் எனக்கு ‘பாபி’ இந்திப் படத்தில் வரும் ‘ஜூட் போலே கவ்வா காடே – காலே கவ்வே ஸே டரியா’ வை நினைவு படுத்தும்.
பாடல் முழுவதையும் தன் நினைவிலிருந்து கொடுத்த நண்பருக்கு நன்றி. நீங்களும் ரசிக்க அது இங்கே –
காதல்
ஊரும் உறங்கையிலே
உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடம் கொண்டு
நான் வருவேன் சாமத்திலே.

நல்ல பாம்பு வேடம் கொண்டு
நடுச் சாமம் வந்தாயானால்
ஊர்க்குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்திடுவேன்.

ஊர்க்குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்தாயானால்
செம்பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய்த் தூக்கிடுவேன்.

செம்பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய்த் தூக்க வந்தால்
பூமியைக் கீறியல்லோ
புல்லாய் முளைத்திடுவேன்.

பூமியைக் கீறியல்லோ
புல்லாய் முளைத்தாயானால்
காராம்பசு வேடம் கொண்டு
கடித்திடுவேன் அந்தப் புல்லை.

காராம்பசு நீயானால்
கழுத்து மணி நானாவேன்.
ஆல மரத்தடியில்
அரளிச் செடியாவேன்.

ஆல மரம் உறங்க
அடி மரத்தில் வண்டுறங்க
உன் மடியில் நானுறங்க
என்ன வரம் பெற்றேண்டி!

அத்தி மரமும் ஆவேன்
அத்தனையும் பிஞ்சாவேன்.
நத்தி வரும் மச்சானுக்கு
முத்துச் சரம் நானாவேன்.

கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய பாடலாக இருக்கலாம் என்றார் நண்பர். இசை கே.வி.மகாதேவன். (சேவா ஸ்டேஜ் ஆத்மநாதனாகவும் இருக்கலாம்).

இது பற்றி, எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் மருமகனும், தமிழ்ப் புதுக்கவிதையில் முன்னோடியுமான கவிஞர் – ஓவியர் வைதீஸ்வரன் சார் என்னிடம் சொன்னது இது –

“நாலு வேலி நிலம் திரைப் படத்தை திரும்ப நினைத்துப் பார்க்கும்போது எனக்குள் சோகம் கவ்விக் கொள்ளுகிறது..

தகவல்கள் துல்லியமாக ஞாபகம் இல்லை. பாடலை இன்று படிக்கும் போது அதை ஒரு நாடோடிப் பாடல் தொகுப்பில் கண்டு பிடித்து விடலாம் என்று தோன்றுகிறது.

ஒரு படத்திற்கு பாடலாசிரியர் என்று பொதுவாக ஒருவர் பெயரை திரையில் காண்பித்தாலும் சில இடைச் செருகல் பாட்டுக்களும் அவருடைய பங்களிப்பாகவே தோற்றம் கொண்டு விடுகின்றன. இன்றைய சினிமாவில் கூட இப்படிப் பட்ட சந்தர்ப்பங்கள் நேரிடுகின்றன….

நாலு வேலி நிலத்தில் நான் போலிஸ் இன்ஸ்பெக்டராக நான்கு நிமிடங்கள் தோன்றி நம்பி மோசம் போன எஸ்.வி.சுப்பையாவை பார்த்து நாலு வார்த்தை பேசுகிறேன். எஸ்.வி. சுப்பையா அந்த சில நிமிஷங்களில் தன் பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதற்காக எவ்வளவு முனைப்புடன் செயல் பட்டார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நல்ல நடிகர்.
இந்தப் படம் திரு எஸ்.வி. ஸஹஸ்ரநாமத்தின் வாழ்க்கையில் ஒரு பெரிய அதிச்சியை ஏற்படுத்தி விட்டது..

ஒரு தடவை இந்தப் படத்தை தொலைக் காட்சியில் ஒளி பரப்பு செய்தார்கள். 10 வருடங்களுக்கு முன்பு. மறுபடியும் திரையிடப் பட்டால் ஸ்வாரஸ்யமாக இருக்கும்.”

படம் சரியாக ஓடாததால், டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் வாங்கிய பணத்தை எஸ்.வி.சகஸ்ரநாமம் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன