எட்டு பெட்டிகள்

 

குங்குமம் பத்தி – ‘அற்ப விஷயங்கள்’

வேற்றுமொழிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படத்தோடு செய்தி. ஒரு ரசிகர் ஆரவத்தோடு ஆல்பம் போட்டு வருடக் கணக்காக சேகரித்துக் கொண்டிருக்கிறாராம். எதை? நடிக நடிகையர், டைரக்டர் இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பற்றிய தகவலை. அதிலும் ஒரு விசேஷம். இவர் சேகரிப்பது இந்தப் பிரபலங்களின் ‘காலமானார்’ செய்திகள்.

மேல் நாட்டுப் பத்திரிகைகளில் இரங்கல் குறிப்பு எழுதுவதற்கு என்றே தனியாக சிறப்புச் செய்தியாளர்கள் உண்டு. ஆபிசுவரி எடிட்டர் வேலைக்கு ஆள் தேவை என்று கார்டியன் பத்திரிகை இரண்டு வருடம் முன் விளம்பரம் வெளியிட்டது. நூறு வருடமாகப் பிரசுரமாகும் தினசரி அது. நூறு வருடத்தில் எத்தனை பிரமுகர்கள் உள்நாட்டில், அயல் நாட்டில் மூச்சுவிட மறந்து போயிருப்பார்கள்? இவர்கள் எல்லோருக்காகவும் மனம் உருகி இரங்கி கண்ணீர் சிந்த வைத்த நினைவுக் குறிப்புகள் எத்தனை இருக்கும். அதில் தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் புத்தகமாகப் போட்டு கார்டியன் வெளியிட, அமோக விற்பனை. இனி அவ்வப்போது அடுத்த பதிப்பு வரும்போது புதிதாகச் சேர்க்க தகவலுக்குப் பஞ்சமே இல்லை. பக்கத்தையும் விலையையும் கூட்ட இதைவிட சுலபமான வழி வேறே ஏது?

ஆபிச்சுவரி அற்புதமாக வரவேண்டியது முக்கியம். செய்தி கிடைத்த ஒரு மணி நேரத்தில் எழுதி அச்சுக்கு அனுப்பும் காரியமில்லை இது. கதை எழுதுவதை விட கடினம். இதற்காக யாரெல்லாம் பிரபலமானவர்கள் பட்டியலில் இருக்கிறார்களோ அவர்கள் அத்தனை பேருடைய வாழ்க்கைக் குறிப்பு, அவர்கள் அவ்வப்போது பேசியதிலிருந்து நச்சென்று நாலைந்து வரிகள், வேறுபட்ட காலகட்டங்களில் எடுத்த புகைப்படங்கள் என்று பத்திரிகைகள் சேகரித்து வைப்பதுண்டு. அதில் அவ்வப்போது கூட்டிச் சேர்த்து ‘அன்னார் ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று முடியும் உருக்கமான கட்டுரையும் எழுதி தயாராக வைத்திருப்பார்கள்.

சமீபத்தில் அறிவியல் நாவலாசிரியர் ஆர்தர் சி கிளார்க் காலமானபோது வெளியான இரங்கல் குறிப்புக்குக் கீழே ஒரு வரி சேர்த்திருந்தார்கள் – ‘இந்த ஆபிச்சுவரி கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கிறது. எழுதியவர் மரணமடைந்து விட்டார்’. 2008 மார்ச்சில் காலமான ஆர்தர் கிளார்க்குக்கு 1998-ல் காலமானவர் எழுதிய அஞ்சலி. செய்திகளை முன்கூட்டித் தயாரிப்பதில் வரும் பிரச்சனை இது.

சில மரண வார்த்தைகள் வதந்தியாகவே சில பல காலம் நின்று போய்விடும். ஒரு நகைச்சுவை எழுத்தாளர் காலமானதாக செய்தி வந்தபோது அவரே பத்திரிகை அலுவலகத்துக்கு தொலைபேசினார். ‘என் மரணம் பற்றி வெளியாகியிருக்கும் செய்தி மிகைப்படுத்தப்பட்டது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”.

வெள்ளைக்காரனோ, கறுப்பனோ, பிரபலங்களின் சாவுச் செய்தி எல்லோரிலும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதைக் கேட்கிறபோது அல்லது படிக்கிறபோது வருத்தம் ஏற்படுகிறதுதான். ஆனாலும், பகிர்ந்து கொள்வதில் ஒரு தனி ஆவலும், பரபரப்பும் உண்டாகிறது, அலாதியான உணர்ச்சி அதெல்லாம்.

சாவுச் செய்தி இருக்கட்டும். மரணத்துக்காக வருந்தி மற்றவர்கள் செய்தி தருவது இன்னொரு சடங்கு. இந்தியாவில் இப்படிப்பட்ட சம்பிரதாயம் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் படுகிற ஒன்று. தொண்ணூற்றொன்பது வயதில் ஒரு பிரபலம் காலமானபோது ‘டீப்லி ஷாக்ட்’ என்று வேறு ஒருத்தர் வருந்தியிருந்தார். அவர் வருத்தம் புரிகிறது. ஆனால் மிகவும் அதிர்ச்சி அடைய இதில் என்ன இருக்கிறது?

பிரபலங்களின் மரணத்தை விட அதிக பாதிப்பு ஏற்படுத்துவது நெருங்கிய உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை இழப்பது. மறைந்தவர்களோடு தொடர்பு படுத்தி பழைய நினைவில் ஆழ்ந்து கண்ணீர் வடிக்க அவர்கள் பரிசளித்த அல்லது பயன்படுத்தியிருந்த ஒரு கைக்குட்டை கூடப் போதுமானது. இம்மாதிரி சேகரித்த பொருள்கள் மீது தனி அபிமானமும் மரியாதையும் உண்டாவதால் இதில் எதையும் வெளியே தூக்கிப்போட எப்போதும் மனம் வருவதில்லை.

இறந்து போன ஒவ்வொருவருக்காகவுமாக இப்படி சேர்த்த நினைவுச் சின்னங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குவிந்து வீடு நிறைந்து போகிறது. வீடு மாற்றி வேறு வீட்டுக்குப் போகவேண்டி நேர்ந்தால் இவற்றை பத்திரமாக மூட்டை கட்டி அனுப்பி குடி போகும் இடத்தில் திரும்ப எடுத்து அதேபடி வைத்தால்தான் நிம்மதி வருகிறது. அந்த நிம்மதியைத் தவிர நினைவு மூட்டைகளில் என்ன இருக்கிறது?

‘ஒன்றுமே இல்லை லாரி முழுக்க பழைய அடைசல்களோடு புதுவீட்டுக்குப் போகாமல் குறைந்த சுமையோடு புறப்படுங்கள். எட்டே பெட்டிகள் போதும். உங்களுக்கு அவசியமானதை மட்டும் நாங்கள் கவனித்துத் தேர்ந்தெடுத்து மூட்டை கட்டி அனுப்பித் தருகிறோம்’. பிரிட்டனில் இப்படி ஒரு விளம்பரத்தோடு தொடங்கிய ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ பிசினஸ் சக்கைப்போடு போடுகிறது இப்போது. பாட்டி படியப் படிய தலைவாரிய சீப்பு, தாத்தாவின் சாய்வு நாற்காலி, பெரியப்பா மூக்குக் கண்ணாடி, சித்தப்பா பல்செட் இதெல்லாம் குவிந்து இருப்பிடத்தில் பாதியை அடைக்கிறதா? எட்டு பெட்டி கம்பெனியைக் கூப்பிட்டால் அறை சுத்தமாகும். மனசு வெறுமையாகுமோ என்னமோ தெரியாது.

(கடந்த வாரம் குங்குமத்தில் வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன