ராமோஜியம் நாவலில் இருந்து – ராமோஜி கடிதங்கள் 1945

அருள் வாக்கு நிகழ்ச்சியில் மடாதிபதிகளோ, பாதிரியார்களோ, மௌல்விகளோ நல்ல சிந்தனை என்று ஐந்து நிமிடத்தில் சொல்கிறார்கள். போன வாரம் புதனன்று சைவ மடாதிபதிகள் அருள் வாக்கு சொல்லும்போது மாசில் வீணையும் மாலை மதியமும் என்று ரயில் வேகத்தில் சொல்லிப்போய் ஈசன் இணையடி நிழல் அமைதியும் அழகும் மிக்கது என்றார். அந்த வேகத்தில் பேசினால் அப்பர் சுவாமிகளுக்கே அவர் தேவாரம் புதியதாக புரியாததாகக் கேட்கும். என் போன்ற சாமானியனுக்கோ? அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருப்பதைத் தவிர வேறே என்ன மார்க்கம் உண்டு?

அருள் வாக்கு சொல்ல பல்லக்கில், ரதத்தில், பிளஷர் காரில், கனவான்கள் ரேடியோ ஸ்டேஷனுக்கு வந்து போவதில்லை என்று நினைக்கிறேன். அவர்களையும் டேப் எடுத்து விடுகிறீர்களா? அப்படியானால் காலை நேரத்தில் அருள் வாக்கு கேட்க விட்டுப் போனவர்களுக்காக மாலையில் அதைத் திரும்பப் போடலாமே.

எல்லா நல்லோரும் அருள் வாக்கு சொல்ல வருகிறார்களே, காந்திஜியிடம் வாங்கி ஒலிபரப்புங்களேன். அவர் இங்க்லீஷில் சொன்னாலும் இந்தியில் சொன்னாலும் அதை அப்படியே ஒலிபரப்பி கூடவே தமிழிலும் நம் ஊர் காந்தியவாதிகளில் நல்ல குரல் வளம் உள்ளவர்களைக் கொண்டு சொல்லலாமே.

அருள் வாக்குக்கு அடுத்து துதிப்பாடல்கள் என்று ஒரு சங்கீத நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. தேவாரம், பாசுரம், தேம்பாவணி, சீறாப்புராணம் என்று எல்லா மத நூல்களில் இருந்தும் கலந்துகட்டியாகப் பாடல்களை ஒலிபரப்புவதாகப் புரிகிறது. தெய்வம் ஒன்று என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக தேவாரத்துக்கும் தேம்பாவணிக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரே மெட்டில் கோஷ்டி கானமாகப் பாட வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை.

ரேடியோவில் நிலைய வித்வான் என்று ஏழெட்டுப் பேரை நியமித்திருப்பதாக அறிவது, இந்த துதிப்பாடல்கள் நிகழ்ச்சியின் போது தான். ’பித்தா பிறைசூடி பெருமானே’ சுந்தரர் தேவாரம் பாடுவது நிலைய வித்துவான்கள் என்று அறிவித்துப் பெண்குரல்கள்’ பாடும். அடுத்து ’கருப்பூரம் நாறுமோ நாச்சியார் திருமொழி’ என்று கட்டைக் குரலில் பாடுகிற ஆண்களும் நிலைய வித்வான்கள் தான். ’கானில் நிலவானேன் கண்ணே ரகுமானே’ என்று குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல் பாடுவதும் ஆண்களும் பெண்களுமான நிலைய வித்வான் கோஷ்டி தான். இவர்கள் சர்க்கார் சம்பளம் வாங்குவதால் ரேடியோவில் வேலைக்குச் சேர்ந்ததும் பெயரையும் தனிப்பட்ட அடையாளத்தையும் இழந்து விடுவார்களா தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியையும் டேப் எடுக்கிறீர்களா? காலை ஆறரை மணிக்கு போன வாரம் புதன்கிழமை கேட்ட அதே துதிப்பாடல் அதே குரலில் அதற்கு அப்புறம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அதே நேரத்தில் கேட்பதை வைத்துத்தான் கேட்கிறேன். வித்வான்கள் மதறாஸ் நிலையத்தில் வேலை பார்ப்பதால் அவர்கள் பஸ்ஸில், ட்ராமில், எலக்ட்ரிக் ட்ரெயினில் ரேடியோ ஸ்டேஷனுக்கு தினசரி காலை வேலைக்கு வருவார்கள் தானே, அப்போது பாடச் சொன்னால் புதுசாகப் பாடமாட்டேன் என்றா சொல்லப் போகிறார்கள்?
— —- — —
— —– — —-

செய்தி அறிக்கையின் ஆரம்பத்தில் சாலிவாஹன சதாப்தம் சக வருஷம் என்று யாருக்கும் புரியாத, என்ன தேவை இதற்கெல்லாம் என்று தெரியாத தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த நாள் நட்சத்திரம் வகையறா எல்லாம் சொல்லி முடித்து அடுத்து சொல்வார்கள் – அகில பாரத் செய்திகள், வாசிப்பது கமலாம்பாள் அல்லது வாசிப்பது பஞ்சவர்ணம்.

அதென்ன வாசிப்பது? ஆல் இந்தியா ரேடியோவில் வாசிப்பது புது மாதிரி பிராணியா? மனுஷராக இருந்தால் வாசிப்பவர் என்றல்லவா சொல்ல வேண்டும்? அல்லது டெல்லித் தமிழில் மனுஷர், விலங்கு, கல், மண், மலை எல்லாவற்றுக்கும் அது இது என்று தான் குறிப்பிடுவதோ?

—– —- —-
—– —- —–

காலை எட்டு மணிக்கு சங்கீதக் கச்சேரி ஆரம்பித்தால் அது எந்த நிலைமையில் இருந்தாலும், எட்டரைக்கு வித்வான் கச்சேரியை நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்புறம் சாயந்திரம் ஆறு மணிக்கு மீதி அரை மணி நேரம் கச்சேரிக்கு அனுமதிக்கிறீர்கள். எட்டு மணிக்கு கச்சேரி தொடங்கி, ரெண்டு கீர்த்தனை பாடிய பிறகு கமாஸ் ராக வர்ணமாக மாதே மலயத்வஜ பாண்ட்ய சம்ஜாதே என்று ஆரம்பித்து, சிட்டை சுவரம் பாதி பாடும் போது எட்டரை ஆகி கழுத்தைப் பிடித்துத் தள்ளுவீர்கள். வித்வான் தம்பூராவைத் தூக்கிக் கொண்டு லொங்குலொங்கென்று வீட்டுக்குப் போய் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டு கச்சேரியை எங்கே விட்டோம் என்று வேட்டியில், துண்டில் முடிச்சு போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். சாயந்திரம் திரும்பி வந்து அதே இடத்தில் ஆரம்பித்துத் தொடர வேண்டும். பிடில் காரருக்கும் மிருதங்கமான பக்க வாத்தியம், கஞ்சிரா இருந்தால் உப பக்க வாத்தியக் காரர்களுக்கும் அவ்வளவாக சிரமம் இல்லை – தனி ஆவர்த்தனத்தின் நடுவே பாதிக் கச்சேரியை நிறுத்திப் போய் சாயந்திரம் தொடர்கிற சூழ்நிலை இல்லாவிட்டால். ஆக, கடியாரத்தைப் பார்த்துக்கொண்டே பாட வேண்டியிருப்பதால் வித்வானின் கற்பனையில் செழித்து வரவேண்டிய வாய்ப்பாட்டு, வாய்ப்பாடு சொல்வது போல் யந்திரத்தனமாக மாறி விடுகிறது. இது சரியா?

இப்படி பாதியில் கழுத்தை நெரிக்காமல், முழுக் கச்சேரியையும் ராத்திரி வைத்தால் என்ன? சொல்லப் போனால் காலை எட்டு மணிக்கு அரைக் கச்சேரியோ, காலே அரைக்கால் கச்சேரியோ வைத்தால் யார் அதைக் கேட்கிறார்கள்? ஸ்திரிகள் ஆபீசுக்குப் போகிற வீட்டுக்காரர், ஸ்கூல் போகிற பசங்கள் என்று டிபன் கொடுத்து கையில் மத்தியான சாப்பாடு கட்டிக் கொடுத்து பிசியாக இருக்கிறார்கள். ஆண்களோ ஆபீஸ் நினைவில் அவசரமாக ஷேவ் செய்து கீறிக்கொண்டு ரத்த விளாறாக குளித்து ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இருக்கிறார்கள். எதிர் வீட்டு விலாசினி டைப்பிஸ்ட் போன்றவர்கள் வீட்டுக் காரியமும் முடித்து ஆபீஸ் வேலைக்குப் போகத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆக எல்லோரும் பரபரப்பில்.

ரிடையர் ஆன பெரியவர்கள் கச்சேரி கேட்கிறார்கள் எட்டு மணிக்கு என்பீர்கள். அவர்கள் நாள் முழுக்க, நடுராத்திரியில் ரேடியோ கச்சேரி, பிரசங்கம் இருந்தால் கூட கேட்பார்கள். பொழுது போக வேண்டுமே.

நாகசுவரக் கச்சேரியில் பாதியில் நிறுத்தி அப்புறம் தொடர்வது எப்போதுமே நடப்பது தான். பாதி கல்யாணி ஆலாபனையில் இருக்கும்போது கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று நூறு பேர் கூச்சலிட, கல்யாணியை விட்டுவிட்டுக் கொட்டி முழக்க நாகசுவர, தவில், ஒத்துக்கார வித்வான்களுக்குப் பழக்கமாகி விட்டதால் எட்டரைக்கு கொட்டி முழக்கி சாயந்திரம் விட்ட இடத்தில் ஆரம்பிக்க கஷ்டம் இருக்காது. மற்றவர்கள்?

இரண்டு வாரம் முன் திருவானைக்கோவிலில் இருந்து வந்த ஒரு பெண் வித்வான் உற்சாகமாக ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்தபோது எட்டரை மணி ஆகிக் கச்சேரி பாதியில் நிறுத்த, என் நண்பர் கேளப்பன் நாயர் கேட்டது – ”கார்ப்பரேஷன் குழாயில் வெள்ளம் வரத்து நின்னு போயிருக்குமோ?”.

ராமோஜியம் நாவலில் இருந்து

ராமோஜி கடிதங்கள் – 1945

மதிப்புக்குரிய மதறாஸ் ரேடியோ ஸ்டேஷன் டைரக்டர் சார்,

——————————————————————————-

ராமோஜி கடிதங்கள் – கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்திக்கு எழுதிய லிகிதத்தில் இருந்து – 1945

சர்க்கார் கொடுத்திருக்கும் இன்னொரு சிக்கனம் பேணுவோம் யோஜனை – குழந்தை பொம்மைகளை ரிப்பேர் செய்து பயன்படுத்துங்கள்.

எங்கள் வீட்டுக் குழந்தைகள் மிஞ்சிப் போனால் மரப்பாச்சி பொம்மை நாலைந்தை வைத்து விளையாடும். அதுவும் பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள். அதற்கப்புறம் வீட்டிலேயே பல்லாங்குழி, தாயக்கட்டம் ஆட ஆரம்பித்து விடும். ஆம்பிளைப் பசங்கள் சீசனுக்குத் தகுந்த மாதிரி பம்பரம், கோலிக்குண்டு, கிட்டிப்புள் விளையாடும்.

அதில் சீசன் என்பது திடீரென்று தொடங்கி ரெண்டு மாசம் கோலாகலமாக நடந்து அடுத்த சீசன் தொடங்குவது. யாருக்கும் தெரியாது, எனக்கு இன்று வரை புரியவில்லை எப்படி திடீரென்று பம்பரக்குத்து சீசன் தொடங்கும் என்று எப்படி என்றைக்கு அது முடிந்து கோலிக்குண்டு காலம் ஆரம்பித்தது என்று. உங்களுக்கு அரன்மணையில் அதெல்லாம் விளையாடக் கொடுத்து வைத்திருக்காதுதான். இது எதுவும் பொம்மை பிரிவில் வராது. அப்படியே எடுத்துக் கொண்டாலும் எப்படியோ பழைய பம்பரங்களும் கோலிகளும் அநேகமாக எங்கேயோ பத்திரமாக வைக்கப்பட்டிருந்து சீசன் நேரத்தில் கையில் கிடைத்து விடும். கிட்டிப்புள் என்பது மரக் குச்சியை பேனாகத்தியில் நறுக்கி பெரிய பையன்கள் செய்து விளையாட எடுத்து வருவது. ஒரு காசு செலவில்லை இதில்.

மரப்பாச்சியையும், கோலிக்குண்டையும் பழுது பார்த்து விளையாடச் சொன்னால் குழந்தைகள் கூட சிரிக்கும். ஆக்கர் விழுந்த, அதாவது மற்ற பம்பரங்களால் குத்து வாங்கிய பம்பரத்தை மறுபடி சரியாக்க விஞ்ஞானிகள் வழி செய்து கொடுத்தால் தான் உண்டு.

மற்றப்படி கொலுவுக்கு கொலு மண் பொம்மைகளைப் பரணில் இருந்து இறக்கிப் படி ஏற்படுத்தி இருத்துவோம். அதில் அந்தந்த வருடம் ஒன்று ரெண்டு உடைந்து போகலாம் தான். அதற்காக பின்னமான பொம்மையை படியில் இருத்த முடியாது. ”எங்கம்மா சீர் கொடுத்த பொம்மையிலே எனக்குப் பிடிச்சது” என்று தலை உடைந்த ராஜா பொம்மையை பார்த்து வீட்டுக்காரி ரெண்டு சொட்டுக் கண்ணீர் விட, குறைந்தது நாற்பது வருஷப் பழசான அந்த பொம்மையை அகற்றி வெளியே போடும் அனுபவம் எனக்கு உண்டு.

மண் பொம்மையை ரிப்பேர் செய்து சிக்கனம் பேண வேண்டாமே. வருஷா வருஷம் நாலு புது பொம்மை வாங்கினால் பொம்மை செய்கிற பண்ருட்டி விற்பன்னர்களுக்கு வருமானம் வருமே. என்ன நான் சொல்றது?

அடுத்த சிக்கனம் பேணுவோம் யோஜனை இது – டெலிபோனில் குறைவாகப் பேசுங்கள். மகாராஜா பாரத தேசத்து ஜனங்களைப் பற்றி என்ன நினைக்குது?

நீங்கள் இங்கே சொத்தை சொள்ளை நீக்கித் தேர்ந்தெடுத்து அனுப்பி வைச்ச நபர்கள் நடத்தும் சர்க்கார். நாங்கள் என்ன செல்வச் செழிப்பில் கொழித்துக் கொண்டு ஆளாளுக்கு பங்களா, கார், வேலைக்கு ஆட்கள், டெலிபோன் என்று சகல வசதியோடு இருக்கிறதாக நினைக்கிறதா?

டெலிபோனே பார்த்திருக்காத கோடிக்கணக்கான ஜனங்கள் உள்ள பூமி இது. அகஸ்மாத்தாகப் பார்த்திருந்தாலும், அதை எப்படி உபயோகிக்கிறது என்று தெரியாது.

நானே ஏழெட்டு வருஷம் முன்பு மெட்றாஸில் இருந்து டீ போர்ட் ஆபீசர், ஆவன்னா மாவன்னா மளிகைக்கடையில் எனக்கு போன் பேசிய போது எந்தக் குழாய் காதுக்கு, எது வாய்க்கு என்று ஒரு நொடி குழம்பிப்போனேன்.

சுதந்திரம் வந்த அப்புறம் எல்லோருக்கும் ஆளுக்கொரு வீடு, அங்கே வீட்டுக்கொரு டெலிபோன், ரேடியோ என்று வசதி வரட்டும். கம்மியாக டெலிபோனில் பேசுவது, அதிகமாகப் பேசுவது பற்றி அப்போது முடிவு செய்து கொள்ளலாம்.

பழைய செருப்பைத் தைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு சிக்கனம் பேணும் யோஜனையாம். வேறே என்ன செய்கிறோம் நாங்கள் என்று நினைக்கிறது சர்க்கார். என் செருப்பில் தோலை விட தைத்த நூல் தான் ஜாஸ்தி. செருப்பு தைப்பவர்கள் எல்லாம் தெய்வங்கள். நாங்கள் காலை வீசி நடக்க வெய்யில் மழை என்று பாராமல் மரத்தடியில் உட்கார்ந்து உடனே பழுது பார்த்துக் கொடுத்து வெறும் ஒரு அணா, ரெண்டு அணா கூலி வாங்கிக் குடும்பம் நடத்துவது இங்கிலாந்தில் இருக்காது மகாராஜா. சிக்கனம் பேணும் சர்க்கார் இவர்களுக்கு ஏதாவது சகாயம் செய்யுமா?

பழைய குடையைத் தைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு சிக்கனம் பேணுவோம் யோஜனை. நான் கல்யாணம் ஆன நாளிலிருந்து காசி யாத்திரைக்குக் கொடுத்த குடையைத் தான் தைத்துத் தைத்துத் தைத்துத் தைத்து மழையிலும் வெய்யிலிலும் பிடித்துக்கொண்டு போகிறேன். காசி யாத்திரை பற்றி நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். அவசியம் தெரியணும் என்றால் கும்பகோணம் ஆனா மாவன்னா மளிகைக்கடைக்கு ஃபோன் பண்ணி சோலையப்பன் தெருவில் விட்டோபாவைக் கூப்பிட்டு விடச் சொல்லுங்கள். காசி யாத்திரை ஏற்பாடு செய்து ஜமாய்த்து விடலாம்.

(கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து – 1945)

From the forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன