ராமோஜியம் – விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்திகளுக்கு எழுதிய கடிதம் மற்றும் ராமோஜி, மதறாஸ் ரேடியோ ஸ்டேஷனுக்கு எழுதியது 1945

அடுத்த சிக்கன யோஜனை, சிக்கனம் பேண சாப்பாட்டைக் குறைப்பீர். என் பெண்டாட்டி மிசிஸ் அகல்யா பாய் விட்டோபா ராவ் தினசரி சொல்வது இது.

வயிறு பருத்து தொந்தி விழுந்ததால் குறைக்க காலையில் நடக்கச் சொல்லி அலுத்துப் போய், கசரத் செய்யச்சொல்லி அதுவும் நடக்காமல் தீனியைக் குறைக்கச் சொல்கிறாள். ஆனால் சர்க்கார் இதை சிக்கனம் பேணும் நடவடிக்கையாகக் காணுகிறதே. வேடிக்கை தான்.

சர்க்கார் சொல்கிறதே என்று ராத்திரி சாப்பிடாமல் தூங்கப் போய், அரைத் தூக்கத்தில் செம்பா ஹோட்டலில் ஜாஸ்தி தித்திப்பு போடாத அசோகா, பெரிசு பெரிசாக மொறுமொறுப்பாக எண்ணெய் மினுக்கும் தவலை வடை ஒன்றில்லை ரெண்டு, காரமான வத்தல் மிளகாய்ச் சட்னியோடு சாப்பிடுகிறதாக சொப்பனம் கண்டு வெறும் வாயை மென்றபடி ராத்திரி எழுந்திருக்கவும் வேண்டாம். நான் தலகாணியை மென்றபடி எழுந்தேன்.

ராத்திரி கொலைப் பட்டினி கிடந்து, அதிகாலையிலேயே, முந்தாநாள் சாமிராவ் வீட்டு கல்யாண பட்சணமாக கொடுத்தனுப்பியதில் காரல் வாடை வர ஆரம்பித்திருந்த அதிரசத்தையும், புளிப்பாக கிஸ்மிஸ் திராட்சணாப்பழம் வாயில் தட்டுப்படும் குஞ்சாலாடு உருண்டையையும் (லட்டு தின்னால் கையில் எண்ணெய் மின்னக் கூடாது.. இஞ்சே சாமிராவ் வீட்டில் என்ன எண்ணெய் உபயோகமோ லட்டு கூட காரல் வாடை அடிக்கிறது), முள்ளுத் தேன்குழலையும் காணாதது கண்டதுபோல் வாயில் வாரி அடைத்துத் தின்று வயிற்றில் மாந்தம் ஏற்படவும் வேண்டாம். எனக்கு வயிறு பலூன் மாதிரி வீங்க உப்புசம் கண்டது வாஸ்தவம்.

ஜீரணத்துக்கு மிளகு சீரக ரசம் பண்ணித் தந்தாள் வீட்டுக்காரி. கூடுதல் அடுப்புக்கரிச் செலவு, ரசப்பொடி, எண்ணெய், தாளித்துக்கொட்ட பருப்பு, கடுகு செலவு, பிரயத்னம். தேவைதானா?

சரி ரம்ஜானுக்கு அத்தர் கடை காதர் பாய் உபவாசம் இருக்கிற மாதிரி சூரியன் உதித்ததிலிருந்து சாயந்திரம் அஸ்தமனம் வரை லோட்டா தண்ணீரையும் சுக்குப்பொடி கலந்த பானகத்தையும் குடித்து விரதம் இருப்போம் என்று இருந்து பார்த்தேன். சுக்கு ஜீரணத்தைத் தூண்ட, ராத்திரி ராட்சப் பசியோடு ரெண்டு ஆள் சாப்பாட்டை தின்றது தான் கைமேல் கண்ட பலன்.

சாப்பாட்டைக் குறைப்பதும் கூட்டுவதும் உடம்பு வாகு பொறுத்த விஷயம். சர்க்கார் இதில் தலையிட வேண்டாமே. இதில் சிக்கனம் பேண என்ன இருக்கிறது?

பாடுபட்டு வேலை செய்து வெய்யிலில் அலைந்து மழையில் நனைந்து குளிரில் நடுங்கி பணம் சம்பாதிப்பதே குடும்பமும், எப்போதாவது ரெண்டு பேர் சொந்த பந்தமென்று வந்தால் அவர்களும், நானும் மனசுக்குப் பிரியமானதைச் சாப்பிட்டு ஓய்ந்து கிடக்கத்தானே.

பிரியமான சாப்பாடு எது அரண்மனையில் பத்து சமையல்காரர்கள் ஊத்துக்குளி நெய் விட்டு அன்னத்தைப் பொறித்து சாப்பிட தட்டில் வைப்பதா?

நான் சாதம் என்ற அன்னத்தை சொல்லவில்லை. உங்கள் இங்கிலாந்தில் எங்கேயும் அன்னப் பறவையைச் சுட்டுத் தின்ன தடை இருந்தும், அரண்மனையில் அந்த மாமிசம் பாகம் பண்ணிச் சாப்பிட தடையேதும் இல்லையாமே.

எங்களுக்கு சாப்பிடாமல் இருக்க சர்க்கார் யோஜனை சொல்லாமலேயே சிவராத்திரியும் வைகுண்ட ஏகாதசியும் இன்னும் மாசாமாசம் ஒரு பொழுது வைக்கும் தினங்களும் உண்டு. ஒருபொழுது சாதம் சாப்பிடுவதில்லை, தோசை மட்டும் என்று இதை சாமர்த்தியமாக மாற்றி விரதம் இருப்பதாகப் பெயர் பண்ணுகிறவர்களும் உண்டுதான். சாப்பாட்டு சிக்கனத்தை அவர்களிடம் வேணுமானால் டீத்தூள் விற்கும் போது பிரசாரம் பண்ண நான் ரெடி.

அரண்மனையில் ஒரு வைகுண்ட ஏகாதசிக்கு பட்டினி கிடந்து பரம பத சோபானப்படம் விளையாடிக் கொண்டு கண்முழித்து சூரியோதயத்தில் துவாதசி விடியக் குளித்து, முருங்கைக்கீரை சமைத்து சுடச்சுட வெண்டைக்காய் சாம்பாரோடும், புதுப்புளியும் பச்சை மிளகாயும் இத்தனூண்டு அதிகமாக, வெழுமூணாக ஓட்டி அரைத்த தேங்காய்த் துவையலோடும் அரிசி அப்பளத்தோடும், தேங்காய் சேர்க்காமல் வெறுமனே வேகவைத்த புடலங்காய்க் கறியோடும், எலுமிச்சை ரசத்தோடும் சீரகச் சம்பா பழைய அரிசிச் சாதம் வடித்துச் சாப்பிட்டுப் பார்க்கலாம். அருமையான ரசானுபவமாக இருக்கும். அது வசப்பட சிக்கனம் வேணாம்.

தாது வருஷப் பஞ்சத்தின்போது இந்த பாரத தேசத்தில் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் பட்டினியில் துடித்துச் செத்துப் போனபோது இங்கத்திய பிரிட்டீஷ் சர்க்கார் என்ன செய்தது? ஒரு துரும்பையும் எடுக்கவில்லை. போட்டோ பிடிக்கிற துரைகளை அனுப்பிப் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் பஞ்சை பராரிகளை அண்டக் கொடுத்து உட்கார வைத்துப் படம் எடுத்துப் பரலோகம் போக வைத்தது சர்க்கார். அது என்ன மாதிரி சிக்கனம்?

சாப்பாட்டைக் குறைக்கச் சொல்லி சிக்கனம் பேணுவதை விட சாப்பிடவே ஒண்ணுமில்லாமல் நாள்கணக்காக பசித்து உயிரை விட்டால் சர்க்கார் சிக்கனக் கணக்கில் எவ்வளவு வரவு வைக்கும்?

காந்திஜி சதா உண்ணாவிரதம் இருந்து தேசத்துக்கு சிக்கனம் பேணி தன் ஆரோக்கியத்தையும் கஸ்தூர்பாவின் உயிரையும் இல்லாமல் போக்குமளவு தேசத் தொண்டு செய்து வருகிறார். ரெண்டு வருஷம் முன் நீங்கள் அவரைச் சிறையில் போட்ட 1943-இல் அவர் 21 நாள் உண்ணாவிரதம் இருந்தது ஞாபகம் இருக்குமே. அதற்கு கூடுதலான நாட்கள் சாப்பாடு இல்லாமல் மதறாஸ் கவர்னர் மதிப்புகுரிய ஹோப் துரையவர்கள் உண்ணாவிரதம் இருந்து, தேசத்துக்காக சிக்கனம் பேண வேண்டும். செய்வாரா?
———————————————————————

ராமோஜியம் நாவலில் இருந்து

ராமோஜி கடிதங்கள் – 1945

மதிப்புக்குரிய மதறாஸ் ரேடியோ ஸ்டேஷன் டைரக்டர் சார்

இந்த ஞாயிறு பகல் சின்னச் சின்னதாக ரெண்டு நாடகங்களை ஒலிபரப்புகிறீர்கள். விநோதமான உரையாடல் இவற்றில் இருப்பதைக் கவனித்தேன் –

“கிருஷ்ணசாமி, இப்படி உச்சி வெய்யில்லே நீலச் சட்டை போட்டுக்கிட்டு, எட்டு முழ வேட்டி கட்டிக்கிட்டு, வலது கையிலே புதுக் குடை பிடிச்சுக்கிட்டு வியர்த்து விறுவிறுத்து போஸ்ட் ஆபீஸ் வாசல்லே நின்னுக்கிட்டிருக்கீங்களே, சௌக்கியம் தானா?”

இப்படி ஒருத்தர் பேச இன்னொருத்தர் கிட்டத்தட்ட இதே ரீதியில், “கோடு போட்ட வெள்ளை சட்டை, கருப்பு கலர் பேண்ட் போட்டுக்கிட்டு, உயரம் குறைஞ்ச சைக்கிள்லே வந்து காலை ஊணிக்கிட்டு நிக்கறீங்களே சோமு, வேகாத வெய்யில்லே நீங்க எங்கே போறீங்க?”

பதில் வரும். ஐந்து நிமிடத்துக்கு மேல் இதையெல்லாம் கேட்க முடியாது என்பதால் பதினைந்து நிமிடத்தில் நீங்களே ராமு – சோமு சம்பாஷணையை யுத்தகால அரசாங்கப் பிரச்சாரமாக்கி முடித்து வைக்கிறீர்கள்.

இந்த மாதிரியான நடுப்பகல் ஞாயிற்றுக்கிழமை நாடகங்களுக்கெல்லாம் உங்கள் நிலைய நடிகர்களை முழுக்க உபயோகித்துக் கொள்கிறீர்கள் என்று தெரிகிறது. மொத்தம் ஐந்து பேர், மூன்று ஆண், ரெண்டு பெண் என்று ஐந்தே நடிகர்களை வைத்துக்கொண்டு நீங்கள் குறைந்தது நூற்றைம்பது பேர் பங்கு பெறும் மகாபாரதத்தையே சப்த ரூபமாக நடத்திக் காட்டி விடுவீர்கள் என்று அடக்கமுடியாத ஆச்சர்யத்தோடு சொல்கிறேன். பாராட்டுகள் சார்.

முழுக்க வாயைத் திறந்து வயிற்றிலிருந்து பேசினால் துரியோதனன், நெஞ்சிலிருந்து மென்மையாகப் பேசினால் தர்மபுத்திரன், மூக்கை பாதி மூடிக்கொண்டு பேசினால் அர்ஜுனன், ஹூம் என்று அவ்வப்போது கனைத்தால் நகுலன், நல்லது அண்ணா என்று அடிக்கடி முணுமுணுத்தால் சகாதேவன், ஆரஞ்சு மிட்டாயை முழுங்கி தொண்டையில் இன்னும் முழுக்க உள்ளே போகாததுபோல் பேசினால் பீமசேனன் என்று உங்கள் நிலைய நடிகர் ஒரே ஒருத்தரே பஞ்ச பாண்டவர்களைக் குரலில் கொண்டு வந்து விடலாம்.

‘சத்திய சந்தனும், பொன் ஆபரணங்களைப் பூண்டவனும், அத்திமாலை புனைந்தவனும், ஒளி வீசும் விழிகளைக் கொண்டவனும், சிவப்புப் பட்டாடை அணிந்தவனுமான தர்மபுத்ரனே’ என்பது போன்ற ரேடியோவுக்கே ஆன வசனங்களை கல்பகோடி வருஷம் முந்தி வியாச முனிவரே எழுதி வைத்திருப்பதால் ரேடியோ நாடகமாக்க எந்தக் கஷ்டமும் படவேண்டாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன