ராமோஜியம் – பல்லாங்குழியில் பசுவாக வழித்து வாரி – கும்பகோணம் 1935

கும்பேஸ்வரர் கோவிலில் ஏனோ கூட்டமில்லை. பத்து இருபது பேர் குளித்துத் தொழ வந்திருந்தார்கள். நான் ஷூக்களை கோபுர வாசல் தேங்காய்க் கடையில் விட்டுவிட்டு அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கொண்டு உள்ளே போனேன். கும்பேஸ்வரர் சந்நிதியில் கும்பிட்டு எதிரில் நோக்க, பெண்கள் பகுதியில் இரண்டு பேர் – ரத்னாவும் கங்காவும்.

தட்டை அர்ச்சகரிடம் கொடுத்து நிற்க, பெயர், நட்சத்திரம் சொல்லுங்கோ என்றார். லோக ஷேமத்துக்காக, எல்லா நட்சத்திரமும் என்று சொல்லிவிட்டு ரத்னாவைப் பார்த்தேன். வினாடி நேரம் திரும்ப நோக்கி, ஒரு குறுஞ்சிரிப்பு அவள் அதரங்களில். கங்கா, கண்களை மூடி தியானத்தில் இருந்தாள்.

இனிமையான நாட்கள் உனக்குக் காத்திருக்கின்றன, வா என்று அன்போடு கோவில் மணிச் சத்தமாகக் கும்பகோணமும் கும்பேஸ்வரனும் அழைக்க, நான் கோரிக்கை ஏதுமின்றிக் கை கூப்பித் தொழுதேன்.

சாரங்கபாணி கோவிலுக்குப் புறப்படும்போது பார்த்தேன், அந்தப் பெண்கள் இருவரும் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.

விட்டோபா மகாமகக் குளத்துப் படித்துறையில் சொன்னபடி காத்திருந்தார். கையில் சுதேசமித்திரன் பத்திரிகை.

காய் சமாச்சார்? அபூர்வமாக மராத்திக்குத் தாவினேன்.

“அமெரிக்காவிலே என்ன அது.. பண வீழ்ச்சி.. டெப்ரஷன் வந்து அங்கத்திய வெள்ளைக்காரன் எல்லாம் வேலை தேடி திருட்டு ரயில் ஏறிப் போறானாம்”.

“விடுங்க .. எங்கே நம்ம வேலையை ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டேன்.

கடைத் தெரு போவோமா என்றார். ஒரு நல்ல காப்பியா குடிச்சுட்டு ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன்.

மங்களாம்பிகா விலாஸ் போகலாம் என்று தீர்மானமாகச் சொன்னார் விட்டோபா. போனோம். வாழ்நாளில் இவ்வளவு ருசியாக நான் காப்பி குடித்ததில்லை. அரேபிய அமிர்தம்.

பெரிய கடைத்தெருவில் இரண்டு மளிகைக் கடைகளுக்கு விசிட் அடித்து முதலாளிகளிடம் டீ போர்ட் விற்பனை திட்டம் பற்றி முதல் அறிமுகம் நடத்த முற்பகல் நேரம் பரபரப்பாகப் போனது.

விட்டோபா ஆள் அச்சாபிச்சமாகத் தெரிந்தாலும் ஊர் முழுக்க ஒருத்தர் விடாமல் பரிச்சயப்படுத்திக் கொண்டிருக்கிறார். கடைத்தெருவில் நடக்கும்போதே ஒரு பத்திருபது பேருக்காவது சளைக்காமல் டீ ஆபீசரை அறிமுகப் படுத்தினார்.

”சார், டை கட்டிட்டு வந்திருக்கீங்க.. நல்லாத்தான் இருக்கு. ஆனா ஊர்லே இப்படி கோட்டும் சூட்டுமா வந்தா கொஞ்சம் மிரளுவாங்க.. பாத்துக்குங்க” என்று இலவச அறிவுரை வழங்கவும் அவர் தயங்கவில்லை.

பகல் உணவாக ராமாராவ் வீட்டில், சீரகச் சம்பா வடித்து சின்ன வெங்காயம் வேகவைத்துக் கலந்த, அரைத்து விட்ட சாம்பார், வாழைக்காய் காரக் கறி, புடலங்காய் அரையே அரைக்கால் காரக் கூட்டு, எலுமிச்சை ரசம், ஜவ்வரிசி வடகம், புதுசாக எண்ணெய் காய்ச்சி ஊற்றிய, நாள்பட ஊறிய கிடாரங்காய் ஊறுகாய், கெட்டித் தயிர் என்று அருமையான வீட்டுச் சாப்பாடு.

ஒரு நிமிஷம் தூங்கிவிட்டுப் போகலாம் என்று கண்கள் மூடித் திறந்தாலும் கட்டாயம் வேலை நேரத்தில் தூங்கக் கூடாது என்று தீர்மானித்தேன். சட்டைக் கையை மடக்கி விட்டுக் கொண்டு முகம் கழுவி, புத்துணர்வோடு கங்கா வீட்டுக்குப் புறப்பட்டேன்.

பல்லாங்குழி விளையாட்டு இன்றி திண்ணை காலியாக இருந்தது. விட்டோபா எனக்கு முன்னாலேயே வந்து பால்காரரிடம் வாங்கி வந்த பாலை உருளியில் வார்த்து வைத்திருந்தார். பக்கத்தில் குமுட்டி அடுப்பு.

“கொஞ்சம் தண்ணி வேணும்னா சேர்த்துக்கலாமா?” என்று குரலைத் தாழ்த்தி விட்டோபாவைக் கேட்டேன். முதல் நாள், டீ இல்லாமல் யாரும் திரும்பக்கூடாதே.

“அதெல்லாம் பால்காரர் பாத்துக்கிட்டார்” என்றார் அவர்.

”அடுப்பைப் பற்ற வைக்கலாம், நல்ல நேரம் தான்” என்றபடி அடுப்புக் கரி கூடையை எடுத்து நான் முன்னால் வைத்தேன்.

”அடடா பத்த வைக்க காக்கடா வாஙகலியே, தேங்காய் நார் கூட இல்லை .” என்றார் விட்டோபா, திடீரென்று நினைவுக்கு வந்தவராக.

உடனே பிரச்சனைக்குத் தீர்வு கண்டார் அவர். ”கமலாக்கா கிட்டே கேட்கலாம்.. நீங்களே கேளுங்க சார், ஆபீசர் கேட்டா அவங்களுக்கும் கௌரவம் கூடி தெரியும்”.

வாசல் கதவில் தட்டி சார் என்று கூப்பிட்டேன். அங்கே சார் யாரும் இல்லை என்று தெரியும் தான்.

உள்ளே இருந்து குரல், “யார் வேணும்?” என்றது. ரேழிக்கு அந்தப் பக்கம் கூடத்தை மறைத்திருந்த மான் படம் போட்ட திரையை விலக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தவள் ரத்னா.

”டீ ஆபீசர் சார், என்ன வேணும்?”

என்னைத் தான் கேட்கிறாள். கண்ணிலும் குரலிலும் விளையாட்டுத்தனம் மின்னுகிறது. நெற்றியில் கீற்றாக வியர்வை அரும்பி நெற்றிச்சுட்டியாக அழகு சேர்க்கிறது. அடுத்த சிரிப்பை எதிர்பார்த்து துடித்து நிற்கும் சிவந்த உதடுகள். நீலப் பாவாடையைச் செருகிய இடுப்பு மின்னலாகப் பளிச்சிடுகிறது. தரைக்கு ஒத்தடம் கொடுத்துக்கொண்டு மெத்தென்ற அழகான பாதங்கள் கொலுசணிந்து கொஞ்சம் போல் தெரிய கால் நகங்களிலும் பவழ நிறத்தில் சாயம் பூசியிருந்தது. இருளும் வெளிச்சமும் விளையாட்டுக் காட்டும் ராத்திரியில் பார்த்ததைவிட இன்னும் அழகாக, மனசை பல்லாங்குழிப் பசுவாக வழித்து வாரிக் கொள்ளை கொண்டவளாக ரத்னா நின்றாள். கையில் பிடித்திருந்த வாளியில் அவள் கொடியில் உலர்த்த எடுத்த துணிமணிகள்.

“கொஞ்சம் தேங்காய் நார் வேணும் ப்ளீஸ்”.

நான் சொல்லி முடிப்பதற்குள் அவள் ஏற இறங்க என்னைப் பார்த்து விட்டு, சலங்கை குலுங்கிய மாதிரி சிரிக்க ஆரம்பித்து விட்டாள். எனக்கும் சிரிப்பு வந்தது. டை, ஷூ, நாகரிகமானது என்று நான் நினைக்கும் தொளதொளத்த பேண்ட், கைப்பக்கம் சுருட்டி (சரியாக்கிக் கொள்ள மறந்து போய்விட்டது), கொஞ்சம் பேண்டுக்குள் விட்ட, மீதி வெளியே வழிந்து கொண்டிருந்த முழுக்கைச் சட்டை, கிராப்பு காணாத தலையில் வணங்காமுடி என்று நின்றுகொண்டு வீட்டுப் பெண்களிடம் தேங்காய் நார் யாசிக்கிறேன்.

“அடுப்பு மூட்டணும்..”. நான் சொல்லிக் கொண்டிருந்தபோதே அவள் வாளியை ரேழியிலேயே வைத்து விட்டுத் திண்ணைக்கு எனக்கும் முந்தி நடந்து போனாள். பின்னால் இருந்து பார்க்க, ரம்மியமான நடை அது.

“ரத்னா வாம்மா உன் கையாலே அடுப்பை மூட்டி, ஜோரா ஆரம்பிச்சு வை எங்க ரெண்டு பேருக்கும் வேலை நிரந்தரமாகட்டும் ..” என்றார் விட்டோபா.

நான் இதைவிட சிறப்பாக இந்த நேரத்தில் ஏதும் பேசியிருக்க மாட்டேன். விட்டோபாவுக்கு மனதுக்குள் நன்றி சொன்னேன்.

————————————————————

அரை மணி நேரத்தில் விட்டோபா வந்து, பேசிட்டேன் சார் என்றார். யாரோடு, என்ன என்று பொறுமையாகக் கேட்டேன்.

“அதான் கமலா பாய், நம்ம ஒண்ணு விட்ட அக்கா கிட்டே… நாளையிலே இருந்து நாலு நாள் அவங்க வீட்டுத் திண்ணையிலே டீ போட்டு தெருவுக்குக் கொடுக்கலாமாம், சரின்னு சொல்லிட்டாங்க”.

”அவங்க மகள் கங்கா கிட்டே கேட்டீங்களா?”

”ஓ அது தான் முதல்லே சரின்னது. அந்த சிரிப்புக் குப்பச்சிப் பொண்ணு நின்னுச்சே.. கமலாக்கா தம்பி மக .. இனிமே நல்லா பொழுது போகும்.. சர்க்கஸ் கோமாளி வந்த மாதிரி இருக்கும்ன்னு சொல்லிச்சு”.

சர்க்கஸ் கோமாளியா? இரு, உன்னை கவனிச்சுக்கறேன்.

”குப்பச்சின்னு எல்லாம் சொல்லாதீங்க” என்று கொஞ்சம் கோபத்தோடு விட்டோபாவிடம் சொன்னேன்.

”அதனாலே என்ன, சார் வேணுங்கறபடி சொன்னா தீர்ந்தது.. வாங்க, பால் காய்ச்ச குமுட்டி அடுப்பு, உருளி, கரண்டி எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்” என்றார் விட்டோபா.

எஸ் எஸ் எல் சி படித்து சுமாரான மார்க்கும் வாங்கி, சர்வீஸ் கமிஷன் எழுதி டெல்லியில் சர்க்கார் வேலைக்குப் போகக் கனவு கண்டதென்ன, இங்கே கும்பகோணத்தில் டீ ஆற்றி வீடு வீடாகக் கொண்டு போய்க் கொடுத்து பாத்திரம் கழுவி வைக்கும் உத்தியோகத்தில் வந்து சேர்ந்தது என்ன?

ஒரு நிமிஷம் மனமெங்கும் வருத்தம் சூழ்ந்தது. போகட்டும். இதுவும் சர்க்கார் வேலைதான். டீ ஆற்ற இங்கே அனுப்பியிருக்காவிட்டால் ரத்னாவை எப்படி பார்த்திருக்க முடியும்?

அன்று இரவு கனவில் யார் வீட்டுக் கொல்லையிலோ தேயிலை பயிரிட்டு அந்தத் தோட்டத்தில் கையை நீட்டி நீட்டி பெஹாக் ராகத்தில் பாடிக்கொண்டு ரத்னாவோடு திரிந்தேன்.

விடிந்து சுறுசுறுப்பாக கிணற்றுத் தண்ணீர் இரைத்து கிணற்றடியில் குளிரக் குளிர குளியல். ராமாராவின் இரண்டு பிள்ளைகளும் வேண்டாம் வேண்டாம் என்று நான் தடுத்தும் கேட்காமல், ”அண்ணா, சும்மா இருங்க” என்று தண்ணீர் இரைத்து ஊற்றினார்கள்.

ராமாராவ் மனைவி ”தட்டு இட்லி பண்ணப் போறேன் காலை ஆகாரத்துக்கு, சாப்பிட்டுப் போப்பா” என்று நிற்க வைத்தாள். தட்டு இட்லியாமே, என்ன அது?

இட்லி அடுக்குத் தட்டுக்குப் பதிலாக ஒரு பெரிய தட்டில் நல்லெண்ணெய் தடவி மாவு ஊற்றி இட்லிப் பானையில் வேக வைத்து ஒற்றை இட்லியாகச் செய்திருந்த அந்த தட்டு இட்லி, புதினா சட்னியும், ஒரு சிட்டிகை அஸ்கா தூவிய கார இட்லிப்பொடியும் நட்டுவாங்கம் செய்ய, அமோகமாக நாக்கில் நர்த்தனம் செய்தது.

அருமையான காப்பி வட்டை செட்டில் துளும்பி, பசியாறியதை சம்பூரணமாக்க வந்து சேர்ந்தது. இந்தக் காப்பி தேசத்தில் என்னாத்த டீ விற்றுக் கொழிக்க?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன