ராமோஜி – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து

excerpts from my forthcoming novel ‘Ramoji’ (being edited)

டீ குடித்து விட்டு யுத்தத்தைத் தொடர்ந்து

ஒரு தோளில் கனமான கதர்ப்பை. கையில் தூக்குப் பாத்திரத்தில் பலகாரம். நகரவே கஷ்டமாக இருந்தது. நடக்க வேறே வேண்டும்.

“விறுவிறுன்னு வாங்க”, ஆராவமுது நடக்க, பின்னால் நான். தண்டியில் உப்புக் காய்ச்ச மகாத்மா கூட இவ்வளவு வேகமாக நடந்திருக்க மாட்டார். இனியும் நடக்க வயது இடைஞ்சல் செய்யும். 1930-இல் அவர் நடந்து இப்போ பதினாலு வருஷமாச்சே.

நான் கையில் பிடித்திருந்த தூக்குப் பாத்திரம் லொடலொட என்று ஆடி முழங்காலில் அடித்தது. ஐந்து மைல் மட்டும் நடக்க ஒரு கஷ்டமும் இருக்காது என்று நான் நினைத்திருந்தது தப்பாகி விட்டது.

வீட்டிலேயே இருந்திருக்கலாம். ரத்னாபாய் மணக்க மணக்க ஏதேதோ சமைத்திருப்பாள். ட்ராம் கண்டக்டர் வீட்டிலிருந்து மோர்க்குழம்பு வந்திருக்கும். விலாசனி நாயர் அவியல் கொண்டு வந்திருப்பாள். கூடியிருந்து கலந்து சாப்பிட்டு முகம் பார்த்து வம்பு கேட்டிருக்கலாம். தூக்குப் பாத்திரம் கையில் ஆட ஆராவமுது கூட நடக்காமல், ரத்னாபாய் கால் மடித்து உட்கார்ந்து சாப்பிடும் அழகைப் பார்த்துப் பரவசப்பட்டிருக்கலாம்.

அவதான பாப்பையா சாலை கடந்து ஒரு மைல் நடந்து அப்புறம் வெட்டவெளி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமோ வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் வெறிச்சென்று தரிசு. ரத்னாபாயை இங்கே கூட்டி வந்தால் அவளுக்குப் பிடித்திருக்கும். பாகவதர் படப்பாட்டு அல்லது பங்கஜ் மல்லிக் பாடிய இந்தி சினிமாப்பாட்டு ’சுந்தர் நாரி ப்ரீதம் ப்யாரி’ என்று பாட எனக்கு உத்தரவிட்டு அவள் நாட்டியமாடி இருப்பாள்.

செருப்புப் போடாமல் நடக்கவே முடியாது என்கிறபோது நாட்டியம் எங்கே வந்தது? லண்டன் உடுப்பும் மான்செஸ்டர் ஷூவுமாக அவள் ஆடுவதைக் கற்பனை செய்ய சுவாரசியமாக இருந்தது. விலாசினி ஆடினால்? இது ஏன் பிடிவாதமாக கரடிப்பிடி போல விலாசினி நினைப்பு. அவள் கல்யாணமான ஸ்திரி. கேளு நாயர் பெண்டாட்டி. அவள் மேல் இச்சை எதுக்கு? கசடு ஏதும் மனசில் வரக்கூடாத காலைப் பொழுது. நீள நடந்து போகும் யாத்திரை நேரம் இது. கோவிந்தோ என்று உரக்கக் கூவினேன்.

சட்டென்று பசி உக்ரமாகக் கிளம்பி வயிற்றை ஓலமிட வைத்தது. இது நியாயமான பசி. சாப்பிட முன்னே பின்னே இருந்தால் பரவாயில்லை. நல்ல சூடாக, குடிக்க ஒரு..

“ஒரு டீ அல்லது காப்பி கிடைச்சா பிரமாதமா இருக்கும்”, நான் சொன்னபோது ஆராவமுதன் சரிதான் என்று தலையசைத்தார்.

டாங்கை ஓரமாக நிறுத்தி, பாதை ஓரத்தில் பால் மாவு உபயோகித்து டீ போட்டு தெம்பாக ஒரு டீ குடித்து விட்டுத்தான் உக்கிரமாக யுத்தத்தை நேச நாடுகளின் ஐக்கியமான படை தொடரும் என்று டீ போர்ட் வாராவாரம் ஒரு தமிழ்ப் பத்திரிகை விடாமல் விளம்பரம் கொடுத்து வருவது மனதில் அழிக்க முடியாமல் படிந்திருப்பதால், யுத்த நடவடிக்கையாக தேத்தண்ணீர் அருந்த ஆர்வம் காட்டினோம். பால்பொடி இருந்தாலும் பரவாயில்லை.
———— ———————

“பெரிய தோதிலே தான் இருக்கும் போல”.

ஒரு பெஞ்ச் போட்டு நாலைந்து தார் வாழைப்பழம் மாட்டி சின்ன வேம்பாவில் வென்னீர் சுட வைத்தபடி இருந்த கடையைக் கவனித்துச் சொன்னேன். ஆசாரக்கோவையை அப்புறம் பார்த்துக் கொள்ளும் உத்தேசத்தோடு ஆராவமுதும் என்னோடு கடையை நோக்கி நடந்தார்.

”வண்ணான் வந்தானே” என்று கடையில் பழைய ஓடியன் ரிக்கார்ட் பாடத் தொடங்க, முண்டாசுக்காரர் ஒருத்தர் அதை நிறுத்தி தனியாக எடுத்து வைத்தார். “இருக்கற தொந்தரவு போதாதுன்னு இது வேறேயா?” அவர் எங்களைப் பார்த்துச் சிரித்தார்.

கடைக்காரர் இரண்டு கையும் குவித்து நமஸ்காரம் செய்தபடி சொன்னார் – “வெங்கட்ரமணா”. கோஷ்டியாக கோவிந்தாக்கள் உச்சபட்சச் சத்தத்தை எதிரொலிக்க கடை வாசல் களை கட்டி விட்டது.

”சாமிகளே வாங்க. சின்னச்சாமி யாரோ” அவர் ஆராவமுதுவைப் பிரியத்தோடு குசலம் விசாரித்தார். “உக்காருங்க, கலர் சாப்படறீங்களா?”, அன்போடு கேட்டார். எனக்குத்தான் அகாலத்தில் கலர் உபசாரம். அது உபசாரங்களில் மிக உயர்ந்தது. வேண்டாம் எனக் கை கூப்பி மன்னிக்கச் சொன்னேன். அததுக்கு நேரம் உண்டே. சிவப்பும் ஆரஞ்சு நிறத்திலுமாக சோடா கலரை நீளமான பாட்டிலில் நிரப்பி ஏப்பம் வரக் குடிக்க ரத்னாபாய் கூட இருக்கும் ராத்திரியாக இருக்க வேண்டும்.

“பார்த்து ரெண்டு மாசமாவது இருக்கும். நல்லா இருக்கீங்களா” கடைக்காரர் ஆராவமுதிடம் கேட்டார்.

“ஆமா, வரவே முடியலே. போகணும் போகணும்னு நினைச்சுக்கிட்டே நாள் கடத்தியாச்சு.. அப்படி என்ன சோம்பல் .. வாடான்னு வெங்கடேசப் பெருமாள் சத்தம் போட்டார்.. கிளம்பி வந்துட்டேன்.. சகுந்தலா எங்கே திருமலை? உறங்கிட்டிருக்கா? இங்கே வந்தா முதல்லே தங்கச்சி தான் வாங்கண்ணான்னு டீயை வச்சுக்கிட்டு வாசல்லே நிக்கும்.. அது படிக்க திருவிளையாடல் புராணம் புஸ்தகம் வாங்கிட்டு வரச் சொல்லி ஏக காலம் ஆச்சு. இப்போ தான் முடிஞ்சுது” கடைக்காரர் கையைப் பிடித்தபடி ஆராவமுது பேசிக் கொண்டே போனார்.

கடைக்குப் பக்கத்தில் போனவர்கள் கூட உள்ளே வந்து ஆராவமுதிடம் நலம் விசாரித்துப் போவதைப் பார்த்தேன். அவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை குடிநீர் இலாகா ஆபீஸில் உபரி சீனியர் குமஸ்தன் இல்லை இப்போது.

யானைக்கவுனியிலிருந்து நூல் பிடித்த மாதிரி ஐந்து மைல் கோவிந்தோ என்று நடந்து நடந்து அவர் இந்த ஊர் மனுஷராகி விட்டிருந்தார் என்று புரிந்தது.

—— —– ——
ஒரு மரப்பெட்டிக்குள் இருந்து பல முறை திறந்து காட்டப்பட்ட ஒரு கடிதத்தை எடுத்து வெளிச்சத்தில் பிடித்துக் காட்டினார் திருமலை.

உங்கள் மகள் சகுந்தலா என்ற கல்பனா ஆன்சிலரி நர்ஸ் உத்தியோகத்தில் நியமனமானவர் கல்கத்தாவிலிருந்து வேலை நிமித்தம் பயணமாகும்போது காணாமல் போனார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தேடிக் கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுக்கப் படுகிறது” என்று ராணுவ உயர் அதிகாரி கையெழுத்துப் போட்ட கடிதம். டியருக்கும் சாருக்கும் இடையே நிறைய இடைவெளி. கையெழுத்துப் போடுகிற இடத்தில் இப்படிக்கு ”ராணுவ சீஃப் கமாண்டர் உத்தரவுப்படி” என்று போட்டு கையெழுத்து.

“ஆன்சிலரி நர்ஸா? கேட்டபடி எழுந்தார் ஆராவமுது. வாசல் பக்கம் போய் இரும்பு வாளியில் வைத்திருந்த நல்ல நீரில் சிக்கனமாக கை அலம்பி வாசல் பெஞ்சில் அமர்ந்தோம் நானும் அவரும்.
——————
——————–

“இருபத்திரெண்டு வயசு. கொள்ளை அழகு. இன்னும் புஷ்பவதியாகல்லேங்கறதை விட்டுட்டு பாத்தா, ஒரு குறை கிடையாது.. அம்மா இல்லாத பிள்ளைன்னு போற்றி வளர்த்தாருங்க. காந்தி காந்தின்னு ஜபம் பண்ணுவா. இந்த திரையிலே காந்தி படம் வரைஞ்சு வச்சது அவ தான். எங்கேயோ இருந்து வந்தாங்க. வீடு வீடா புத்தகம் படிக்கக் கொடுத்தாங்க. ஆளே மாறிப்போயிட்டா. தலைமுடியை தானே வெட்டி கிராப் வச்சுக்கிட்டா.. ஒரே மாசத்துலே. பேரையும் கல்பனான்னு மாத்திக்கிட்டா.” கடையில் படி ஏறிய யாரோ ஆதரவாகச் சொன்னார்கள்.

—- —– —–

”எங்கே இருக்காளோ கொழும்போ, மலேயாவோ இல்லே அபிசீனியாவோ. தினம் பேப்பர் வரவழச்சு படிக்கறேன். கல்பனான்னு அவ பெயர் வரக்கூடாதுன்னு வேண்டிக்கறேன். எங்கேயாவது டாங்கைக் கவுத்து போட்டுட்டு டீ போட்டு கூட வந்த நர்சுங்க, டாக்டரம்மா, ராணுவத்தார்களுக்கெல்லாம் கொடுத்துக்கிட்டு இருப்பா. நல்லா இருப்பான்னு தான் நினைக்கறேன். தனிப்பட்ட உசிரு எல்லாம் இங்கே யாருக்கு பெரிசாப் போச்சு?”.

திருமலை குரல் எடுத்து ஒரு வினாடி அழுதுவிட்டு உடனே சுவிட்ச் அணைத்த ரேடியோவாக சும்மா இருந்தார்.
—- ———– —————- \
—- ———– —————-

வீட்டில் ஞாயிறு காலை படி ஏறும்போது ரத்னாபாயைக் கேட்டேன்.

“எத்தனை தேசபக்தி, தெய்வ பக்தி கானங்கள் நேற்றைக்கு கற்றுக்கொண்டாய் கானக் குயிலே?”

அவள் விநோதப் பிராணியைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தாள்.

“தேசபக்தி பாரதியார் பாட்டு, பட்டம்மாள் பாட்டு எல்லாம் சண்டையை தெருவுக்குள்ளே கொண்டாந்துடும் வேணாம்னு வச்சோம். தெய்வபக்தின்னு, “தாயே யசோதா உன் தன் ஆயர் குலத்து உதித்த” இப்படி உருப்படி பாட நாங்க கச்சேரி செய்யப் போறதுமில்லே, இனியொரு கல்யாணத்துக்கு நீங்க பொண்ணு பார்க்க வந்து பஜ்ஜி சொஜ்ஜி தின்னுக்கிட்டு பாட்டு கேட்கப் போறதுமில்லே. நாலு பஜனை பாட்டு பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார், ஓம் ஓம் சக்தி ஓம், வேல்முருகா ஆடி வா, ராதே ராதே ராதே ராதே, இப்படி குஷியாப் பாடினோம். அருமையா பொழுது போச்சு .. அப்புறம் சமையல் குறிப்பு பரிமாறிக்கிட்டோம். ஹரிதாஸ், பர்மா ராணி, பூங்கோதை, ஜகதலப்ரதாபன் இப்படி சினிமா கதை, அரட்டைன்னு கொஞ்ச நேரம். கருங்குயில் குன்றத்துக் கொலை வழக்கு, மேனகா, மோகனசுந்தரம் இப்படி நல்ல நல்ல தமிழ் நாவல்கள் பத்தி பேசினோம். அடுத்த வாரம் படிச்ச நாவல் ஒருத்தரோடு ஒருத்தர் மாத்திக்க இருக்கோம்..” என்றாள். இத்தனை சுந்தரிப் பெண்கள் தீவிரமாகப் படிக்கிறார்கள். தமிழ் நாவலுக்கு நல்ல எதிர்காலம் உண்டென்று விளங்கிப் போனது.

கஸ்தூரி மாதர் சங்கம் யுத்த காலத்திலும் கலகலப்பாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. யுத்தம் முடிகிற அறிகுறிகளே தெரியவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன