யானைக்கவுனி தாண்டுதல் – எழுதப்படும் என் புது நாவலிலிருந்து

யானைக்கவுனி தாண்டுதல்

மாதம் ஒரு தடவை மெட்றாஸில் இருந்து திருப்பதிக்கு நடந்து, அங்கே போய்த் தரிசனம் செய்து, திரும்பி நடந்தே மெட்றாஸ் வந்து சேர்கிறவர். ஆராவமுதன். மெட்றாஸிலிருந்து திருப்பதி கணிசமான தூரம். இது எப்படி சாத்தியம்? நான் அவரிடம் ஒரு முறை ஆர்வத்தோடு விசாரித்தேன் இரண்டு வருஷம் முந்தி ஒரு சாயந்திர நேரம் அது.

ஆராமுது என்னைப் பக்கத்தில் உட்கார்த்திச் சொன்னது இது –

”உமக்கே தெரியுமே மதறாஸில் இருந்து திருப்பதி எண்பது மைல் தூரம். இது ஒற்றைவாடையில் திருப்பதிக்குடை தாண்டும் இடத்திலிருந்து திருப்பதி மலை அடிவாரம் வரைக்கும். போக எண்பது வர எண்பது ஆக நூற்று அறுபது மைல், அப்புறம் தரிசனத்துக்காக திருமலை ஏறி இறக்குதல் இப்படி ரெண்டு நாளில் முழுக்க நடப்பது சிரமம். எங்க அப்பா நடந்து போனார். ஆனால் அவர் போய் அங்கேயே இருந்துட்டார். இப்போ நான் இதை செஞ்சுக்கிட்டிருக்கேன்” அவர் வெற்றிலை போட்டபடி என்னை ஆர்வமாகப் பார்த்தார்.

“நீங்க போறதாக சொல்றீங்களா, இல்லேன்னு சொல்றீங்களா?’. குழப்பம் தாங்காமல் கேட்டேன்.

“வால்டாக்ஸ் ரோடு கடைசி யானைக்கவுனியிலே இருந்து ஐந்து மைல் விடுவிடுன்னு நடப்பேன். ரோட்டுலே பஸ்ஸை நிறுத்தி ஏறிப்பேன். திருப்பதி பஸ் இல்லேன்னா தடா போகிறது. திருப்பதிக்கு ஐந்து மைல் இருக்கும் போது இறங்கிடுவேன். அங்கே இருந்து மலையடிவாரம், மலையேற்றம் எல்லாம் நடந்துதான். திரும்பும்போதும் அதேபடி நடை, பஸ் சவாரி, நடை. இதான் விஷயம்”.

அவர் சொன்னது சுவாரசியமாக இருந்தது. ஆராவமுதுவிடம் சொன்னேன் அதேபடிக்கு.

“நீரும் என்னோடு ஒரு யாத்திரை வாரக் கடைசியிலே வாரும்; பிடிச்சுப்போனா விடவே மாட்டீர்” என்று அழைப்பு விட்டு முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் ஆராவமுது. ”அதிகாலையிலே கோவிந்த நாமம் முழங்கியபடி காலை எட்டிப் போட்டு நடக்கறது தனி அனுபவம் ஓய். கிட்டினா விட மாட்டீர்”.

எனினும், அப்புறம் கொஞ்சம் நாள் நான் அவரிடமிருந்து தப்பிக்க முனைந்தேன். பல்வலி என்றோ முதுகுவலி என்றோ சால்ஜாப்பு சொல்லித் தப்பித்தது மட்டுமில்லாமல் அவர் திருப்பதி லட்டோடு திங்கள்கிழமை கொஞ்சம் தாமதமாக ஆபீசில் நுழைந்தால் எனக்கான பிரசாதத்தை வேறு யாரையாவது வாங்கி வைத்திருந்து அப்புறம் தரச்சொல்லி விட்டு வெளியே காண்டீனுக்கு ஓடுவது என் வாடிக்கை.

”அடுத்த வாரம் சனி, தொடர்ந்து திங்கள் லீவு. ரம்ஜான், சிவராத்திரி ரெண்டும் அடுத்தடுத்து வருதே. திருப்பதி போய்த் திரும்புவோம். வாங்க” என்று சொல்லியபடி அவர் சூபரிண்டெண்ட் அறைக்கு முன்னால் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

’வரும் சனிக்கிழமை வீட்டில் பாட்டு கிளாஸ் சமஷ்டி விருந்தோடு தொடங்கும்’ என்று என்று ரத்னாபாய் அறிவித்திருந்த நினைவு.

“அவங்க அவங்க வீட்டுலே சாம்பார், அவியல், ரசம், பாயசம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சப்பாத்தி, குருமா, அப்பளம், வடை இப்படி வீட்டுக்கு ஒரு பதார்த்தமாக தயார் செஞ்சு எடுத்து வந்து சங்கம் ஆபீஸ்லே சாப்பிட்டு பாட்டு பாடற திட்டம்” என்று கஸ்தூரி மாதர் சங்கத் தலைவர் முன்கூட்டியே சொல்லிய விஷயம் அது.

அத்தனை வீடு தெருவில் உண்டா என்று சந்தேகத்தைக் கிளப்பினேன். இல்லை தான். ஆகவே அடுத்த தெருக்களையும் சங்கத்தில் சேர்த்தாச்சு என்று போகிற போக்கில் சொல்லிப் போனாள் ரத்னா. இப்படி பாதி வண்ணாரப்பேட்டை சனிக்கிழமை என் வீட்டுக்குப் படை எடுக்கும் சாத்தியம். நான் வீட்டிலிருக்கலாமா என்று யோசித்தேன்.

“ஊர்ச் சாப்பாடுலே உங்களுக்கும் பங்கு உண்டு” என்று அவள் சலுகை காட்டினாலும், நாலு வீட்டில் வாங்கி ஒன்றாக்கிச் சாப்பிட எனக்கு ஏனோ மனம் வரவில்லை. பேசாமல் ஆராவமுதனோடு திருப்பதி போய்த் திரும்பி வந்தாலென்ன? சனிக்கிழமையும், திங்களும் லீவுநாள் என்பதால் ஆற அமர திட்டம் போட்டுப் போனால் யாத்திரைக்கு யாத்திரை, சௌகரியத்துக்கு சௌகர்யம் என்று மனது சொன்னது.

“நானும் வரேன்” என்று ஆராவமுது மேஜைக்குப் போய்த் தெரிவிக்க அவர் கை குலுக்கி சந்தோஷப்பட்டார்.

சனிக்கிழமை அதிகாலை, அதாவது ஐந்து மணி சுமாருக்கு வால்டாக்ஸ் வீதிக் கடைசியில் யானைக்கவுனிக்கு வரச் சொன்னார் ஆராவமுது. அவ்வளவு சீக்கிரம் எழுந்து குளிக்கிறது இருக்கட்டும், யானைக்கவுனி போக கைரிக்ஷா எங்கே கிட்டும்?

“எந்த வெண்டைக்காய்ப் பட்டணத்திலே இருக்கீர்? உங்க வண்ணாரப்பேட்டையில் தொடங்கி ஒரு ட்ராம் லைன் நேரே யானைக்கவுனி வருதே. ஏறி உக்கார்ந்தா எலிபண்ட்கேட்.”

வீட்டுக்கு வந்ததும் மறக்காமல் முதல் தகவலாக நான் திருப்பதி போக இருப்பதை ரத்னாபாயிடம் சொன்னேன்.

“நானும் வரேன். அடுத்த மாதம் போகலாம்” என்றாள் ரத்னா.

“போகலாம். அது அடுத்த மாதம். இப்போ நடந்து போகிறதாக ஒரு வேண்டுதல்”. என் வார்த்தைப் பிரயோகத்துகு நானே மனதில் ஒரு பாராட்டு சர்ட்டிபிகேட் எனக்குக் கொடுத்துக் கொண்டேன்.

பிரார்த்தனை என்று சொல்லி அந்தரத்தில் விட்டால் போதும். பல நாள் முந்தியதோ இப்போது போன நிமிஷம் ஏற்படுத்திக் கொண்டதோ அல்லது வேறு யார் ஏற்கனவே வைத்திருந்த பிரார்த்தனையை நிறைவேற்றப் போகும்போது துணைக்குப் போகிறதாக அர்த்தமோ இந்த பிரயோகத்தில் தட்டுப்படும்.

நடந்து போகிறதாகவும் சொன்னேன். இங்கே ஆரம்பித்து அங்கே திருமலை வரை நடக்கப் போவதில்லை என்பதைச் சொல்லவில்லை. ஆரம்பத்தில் நடை, அப்புறம் பஸ், இறுதி ஐந்து மைல் நடை என்று யாத்திரை இருக்கும் எனக் கேட்டால் சொல்லிக் கொள்ளலாம்.

“அதென்ன பக்தி அபரிமிதமா பெருக்கெடுத்துப் போறது?”, ரத்னா என் சட்டையில் கைப்பொத்தானை – கஃப்லிங்கை – பிடித்துத் திருகியபடி சிரித்தாள்.

“வாரக் கடைசி என்றால் பஜனை கோஷ்டி வாசலில் மட்டுமில்லாமல் வீட்டுக்கு உள்ளேயும் சமையல்கட்டு வரை வந்து மத்தளம் முழக்கி ஆட சலுகை கொடுத்து வகை செஞ்சிருக்கீங்க. இப்போ பாத யாத்திரை. பக்திக்கு மெச்சி பெருமாள் கோவிந்தோன்னு நேரே வந்துடப் போறார்” அவள் சொன்ன அழகுக்காகவே அவர் ஒருநடை வந்து போகலாம்.

“ஆமா, நீங்க ஜாம்ஜாம்னு மாதர் சங்க மகாநாடு, வண்ணாரப்பேட்டையில் வன போஜனம் இப்படி அமர்க்களப் படுத்தப் போகிறபோது நான் தனியாக வாய் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து என்ன செய்யப் போகிறேன் பெண்ணே? ஊருக்குப் போய் நாலு புது முகங்களைப் பார்த்து, சுவாமி தரிசனமும் செய்து வருகிறேன்” என்றதற்கு அவள் ஒரே ஒரு ஆட்சேபம் தான் தெரிவித்தாள் –

“முழுக்க நடந்து போக முடியுமா என்ன? கால் யானைக்கால் வந்த மாதிரி முழுக்க வீங்கினால் டாக்டர், ஊசி, களிம்பு, மாத்திரை என்றும், அதிசயமான மெஷினுக்கு முன் நிறுத்தி எக்ஸ் ரே என்றும் டாக்டர் படம் பிடிக்கச் சொன்னால் எப்படி நகர்வீர்கள்? நடந்தே ஆகணுமா?” என்று அழாத குறையாக வினவினாள் அவள்.

நடைப் பயணத்தின் விரிவான விளக்கம் அடுத்து நான் சொல்ல வேண்டிப் போனது. இதானா உங்க சூரத்தனம் என்று எள்ளி நகையாடுவாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பதிவிரதை அடுத்த கேள்வியாகக் கேட்டது –

“அந்த ஐந்தும் ஐந்தும் பத்து மைல் பஸ்ஸுக்குப் பின்னால் ஓடி காசு சேமிக்க வேண்டாமே. முழுக்கவே வாகன சவாரியாக போனால் போகிறது என்று பஸ் ஏறிப் போங்களேன். பஸ் டிக்கட் பணத்தை வேணும்னா திருமலை மேலே ஆண்டி, தாதன், பரதேசி யாரும் இருந்தா தானம் பண்ணிடுங்க, இல்லே அதுக்கான தொகைக்கு பன்னோ, ரொட்டியோ வாங்கி யாருக்காவது பசிக்கு தின்னக் கொடுத்துடுங்க” என்று யோசனை மழை பொழிந்தாள். சரி என்றேன் இப்போதைக்கு.

“பாத யாத்திரை என்று யாரிடமும் சொல்ல வேண்டாம். உங்கள் சிநேகிதருக்கும் அதுதான் என் கோரிக்கை. வழி முழுக்க நடந்து போகும்போது அப்படி சொல்லிக்கலாம்” அவள் திஸ்ர நடையில் முழுச் சாப்பு வைத்துத் தனி ஆவர்த்தனத்தை முடித்தாள்.

ஆக ஐந்து மணி முதல் ட்ராமில் பீச்சில் சுண்டல் விற்கக் கிளம்பியவன் போல ஒரு தூக்குப் பாத்திரத்தில் இட்லி, பாத்திரத்துக்குள் மிளகாய்ப்பொடி எண்ணெய் முழுக்காட்டி, வேர்க்கடலை சட்னி, எட்டு பத்து தோசை என்று சுமந்து வந்திருந்தேன். சகலரும் உறங்கும் ராத்திரி ரெண்டு மணிக்கே எழுந்து உட்கார்ந்து பிரியத்தோடு ரத்னாபாய் அதெல்லாம் செய்து கொடுத்திருக்கிறாள்.

“தேங்காய் இல்லையோ, சட்னிக்கு வேர்க்கடலை எப்படி? மகாத்மா காந்தி ஆகாகான் அரண்மனையில் மலேரியா காய்ச்சலோடு போஸ்ட் கார்ட் போட்டிருக்காரா? ஆட்டுப்பால் காப்பியும் போடச் சொன்னாரா:”

”ஆமா, இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. தேங்காய் சட்னி சேர்க்கை சரியில்லாம கெட்டுப் போயிடும். வேர்க்கடலை ராத்திரி வரை தாங்கும்”, அவள் புத்திசாலித்தனம் காலை நாலுக்குப் பிரகாசம்.

“சாமிகளே, திருப்பதி போறீங்க போல”, டிக்கெட் கொடுக்க வந்த ட்ராம் கண்டக்டர் விசாரித்தார். எப்படி தெரியும் என்று ஆச்சரியப்பட்டு பர்ஸை திறந்தபடிக்கே உட்கார்ந்திருந்தேன்.

“இந்த பாத்திரத்துக்குள்ளே இட்லி, தோசை, வேர்க்கடலை சட்னி தானே?” அடுத்த கேள்வி என்னைக் கிட்டத்தட்ட விழுத்தாட்டி விட்டது.

கடவுளே கண்டக்டராக வந்திருக்கிற நினைப்பில் கொஞ்சம் திளைத்தேன், கை கூப்பலாமா சல்யூட் அடிக்கணுமா என்று குழப்பம்.

“நான் உங்க தெருக்கோடி வீடு தானே. ரத்னாபாய் தங்கச்சியோட கஸ்தூரிபாய் சங்கத்திலே என் வீட்டுக்காரி சுந்தரிபாயும் உண்டு சார். இன்னிக்கு தெருவிலே யார் வீட்டிலே என்ன சமைச்சு எடுத்து வந்து கூட்டத்துலே பகிர்ந்துக்கணும் அப்படீன்னு எல்லோருக்கும் தெரியுமே? நம்ம வீட்டு உபயம் மோர்க்குழம்பு” அவர் ட்ராம் டிக்கெட்டோடு பலமான சிரிப்பையும் கொடுத்து பின்னால் நகர்ந்தார்.

Being edited – excerpts from my forthcoming novel ‘Ramoji’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன