புது நாவல் – ராமோஜிகளின் கதை – அத்தியாயம் 1 பகுதிகள்

புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 1 இரா.முருகன்

நாவல் மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த யட்சன் இந்தக் கதையை எழுதி விட்டு வேறே வேலை பார் என்று சொன்னான். நான் மரத்தடியில் பழம் கிடக்கிறதா என்று பார்க்கப் போனபோது அவன் கக்கரமுக்கர என்று கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி என்னை அழைத்தான் – ராமோஜி ஓய் ராமோஜி! சற்று கவனியுமையா.

எனக்குத் தமிழ் சரியாகப் பேசவே தெரியாதபோது என்னத்தை எழுத என்று கேட்டேன் தரையில் உதிர்ந்து விழுந்த நாவல் பழத்தைப் பொறுக்கியபடி. எல்லாம் செய்யலாம், நான் உதவி செய்யறேன், எழுது என்றான் யட்சன். நாவல் பழத்தின் இனிப்பு வாயில் கரைந்து துவர்ப்பு நாக்கில் படிய மென்றபடி சரி என்றேன். வேறு என்னத்தை செய்ய?

எங்கள் வம்சத்தில் தடுக்கி விழுந்தால் ஒரு ராமோஜி வருவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு இருபது வருஷத்திலும் தம்பதி யாராவது தடுக்கிப் படுக்கையில் ஜோடியாக விழுந்து இன்னும் ஒரு ராமோஜி பிறக்காமல் இருந்ததில்லை.

ராமோஜிகளுடைய தகப்பன் பெயரும் அதே போல் பத்துஜி என்ற பத்மநாபராவ் ஆக இருப்பதும் வாடிக்கை. ராமோஜியான நான் என் ஆசைப் பெண்டாட்டி ரத்னாபாய் ராத்திரி வார்த்தை சொல்லி முடித்துக் களைத்துப் படுக்கையில் சுகமாக நித்திரை போக மூக்கு அடைப்பு இல்லாமல் செய்ய பட்டணம் பொடி வாங்கி வந்ததை யாரோ விஷமக்காரன் கதையாக எழுதப்போய் ஊரோடு பெரிய ஜனக்கூட்டம் ராமோஜி வம்ச சரித்திரம் கேட்கிறது என்பதை யட்சன் சொல்லாமலேயே அறிவேன். எழுத எழுத ஊற்று மாதிரி இது ஊறி வரலாம்.

இருநூறு வருஷத்தில் பத்து ராமோஜிகளாவது பிறந்து சுவாசித்திருக்கலாம. அடுத்த ராமோஜிகள் வந்து கொண்டிருக்கலாம். எல்லோருடைய ராமோஜி கதைகளும் ஒன்றாக, இது என் கதைதான்.

நான் கேட்டது, பார்த்தது, கேட்டவர்களும் பார்த்தவர்களும் சொல்லக் கேட்டது என்று கலந்து வரும் இந்த ராமோஜி கதை. சரித்திரப் புத்தகம் மாதிரி காலம் 1859, 1894, 1921, 1936 என்று வரிசையாகக் கடந்து போகும் வருஷங்களாக நம்பர் போட்டு வராது. முன்னே பின்னே வர சாத்தியமுண்டு. கூறியது கூறலும் ஏற்படலாம்.

இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். நடந்ததும் நடக்காததும் எதெல்லாம் என என்னிடம் கேட்டால் எதுவும் தீர்மானமாகச் சொல்ல முடியாது. ஆனாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை ராமோஜி உண்டு.

நான் என் முப்பத்தொன்றாம் வயதில் இதை எழுதுகிறேன். இப்போது நடப்பது யுத்தம் நடந்து கொண்டிருக்கும் 1944.

இதற்கப்புறம் நகரும் கதையை அவன் உத்தேசித்தால் சொல்லலாம் தானே என்று யட்சன் கேட்டான். சொல்லலாம் என்றேன். ஆனால் எதிர்காலம் ரொம்ப வேண்டாமே, அது தெரிந்தால் என்ன சுவாரசியம் என்றேன்.

சரி, வேண்டாம் என்றபடி நாவல் மரம் விட்டுப் பறந்தான் யட்சன்.

பெருமாள் செட்டி கடையில் காகிதம் வாங்கி, கட்டைப் பேனா ரெண்டும் மசிக்கூடும், நீல மை பொடியும் ரத்தின நாயக்கர் கடையில் ப்ராட்வேயில் வாங்கினேன்.

லட்சுமண ஆசாரியாரிடம் சொல்லி முன்னே வைத்து சம்மணம் கொட்டி இருந்து எழுத ஒரு கணக்கப்பிள்ளை மேஜை பண்ணித் தரச் சொன்னேன். தேக்கில் வேணுமா, தேவதாரு மரமா, பல மரம் கலந்து வேணுமா என்று ஆசாரியார் கேட்க, என்னத்தை சொல்ல?

ரத்னாபாயிடம் கேட்டபோது தேக்கு செலவு பிடிக்கும் என்றாள். பொடி டப்பா அடைத்து சூரத்தில் இருந்து வந்த ஏழெட்டு லேசான மரப் பெட்டிகள் வீட்டு சேந்தியில் உண்டு. அதை எல்லாம் உபயோகித்து லேசான, அழகான கணக்குப்பிள்ளை மேஜை ஒன்றில்லை, ரெண்டு செய்யலாம் என்றாள் அவள்.

பார்க்க அத்தனை நேர்த்தியாக இருக்காதே, சௌகரியப் படாதே, பொடி வாடை அடிக்குமே என்றேன். ரத்னாபாய் கேட்டாள் –

‘வாடை அடித்தால் என்ன போச்சு? நேர்த்தியாக இல்லை என்றால் தான் என்ன போச்சு? கணக்கப்பிள்ளை ஆள் அழகாக இருக்கிறாரா என்று பார்த்தா செட்டிமார் கடையில் கணக்கெழுத வேலைக்கு வைக்கிறார்கள்? மேஜை நேர்த்திக்கு யார் சர்ட்டிபிகேட் தரணும்? சௌகர்யப்பட என்ன இருக்கு? மேஜைமேல் குப்புறப் படுத்து யாரும் தூங்கப் போறதில்லே. முன்னால் உட்கார்ந்து காகிதம் வைத்து எழுத இடம் இருந்தால் போதும். அதுக்கு எதுக்கு அதிகமா செலவு செய்யணும்?”

அதுவும் சரிதான் என்று பட, லட்சுமண ஆசாரியாரிடம் சொன்னேன். முன்கூலி ஒரு ரூபாயும் தந்தேன். பொடி அடைத்து வந்த காலி மரப்பெட்டிகளும் ஏழெட்டு நீண்ட ஆணிகளும் அவருடைய வாள்பட்டறைக்கு எடுத்துப் போகப்பட்டன. கொடுத்து ஒரு மாதம் நடையாய் நடந்து ஒரு வழியாக மேஜை வந்தது. மேஜைகள் வந்தன.

சும்மா சொல்லக் கூடாது. சவுகரியமான மேஜை தான். ரத்னாபாய் பொடியோடு உட்கார்ந்து நூறு பக்க நோட்டில் முதல் பக்கம் முழுக்க ஸ்ரீராமஜெயமும் மற்ற ஸ்லோகங்களும் எழுதி ஆரம்பித்துத்தர, அடுத்த பக்கத்திலிருந்து எழுத ஆரம்பித்து விட்டேன்.

1944 டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை

விடிந்தபோதே ஒரே சத்தம். நான் அலுத்தபடி எழுந்து, வாசல் பக்கம் நகர்ந்தேன். கதவைத் திறக்காமல் ஜன்னலில் கறுப்புக் காகிதம் ஒட்டியது லேசாகக் கிழிந்திருந்த இடைவெளியில் பார்த்தேன்.

மத்தள நாராயண ராவும், பூதலிங்க ஆசாரியார் வகையறாவில் பட்ட சுபாங்கி அம்மாள், சோமசுந்தரம் பிள்ளை மருமகன், இன்னும் பரிச்சயமில்லாத ரெண்டு பதினைந்து வயதுப் பையன்களும் வாசலில் வந்து வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

“எனக்கு ஜூரம் என்று சொல்லி அவங்களை அனுப்பு” என்றேன் குளித்து விட்டு பூஜைக்கு எடுத்த பூச்சரத்தோடு வந்த ரத்னாபாயிடம்.

”எம்பாவாய் பாடாமல் மார்கழியில் இப்படி வழித்துக் கொண்டு தூங்கினால் ஜெர்மன் காரன் குண்டு போட்டுவிட்டுப் போவான். எழுந்து அவர்களோடு போய் ஹரி ஹரி என்று கோஷித்தபடி நாலு வீதி சுற்றி வந்தால் அடுத்த ஜன்மம் இல்லை; நேரே சுவர்க்கம்தான்” என்றாள் அவள்.

ஜெர்மன்காரர்களோடு சிப்ளா கட்டை சகிதம் ஹரி நாமம் சொல்லியபடி நாலு வீதி உலா வருவது கொஞ்சம் சிரமமான காரியம் என்றேன். எகத்தாளமா? இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை என்றபடி வாசல் கதவைத் திறந்தாள் அவள். நான் கொல்லைப்பக்கம் வேகமாக நகர்ந்திருந்தேன் அப்போது.

அந்த கோஷ்டி வீட்டுக்குள் சகல சுதந்திரத்தோடும் பிரவேசித்து மத்தளமும் கஞ்சிராவும் டோலக்கும் வாசித்து கோஷிக்க நான் அவசரமாக விசர்ஜனம் பூர்த்தியாக்கினேன். காலைக் கடன் முடித்தேன் என்று சொல்லலாம் கொஞ்சம் பண்டித மொழியில்.

அங்கே பித்தளை அண்டாவில் நிரப்பியிருந்த குளிர்ந்த நீரில் இருந்து மொண்டு விட்டுக்கொண்டு, சுதேசி சோப்பை நாலு இழுப்பு ஜலத்தோடு மேலே தேய்த்து இழுக்க, திரி திரியாக நெஞ்சிலும் கம்புக்கூட்டிலும் வந்தது.

இந்த சோப் இவ்வளவு தான் நுரை தரும். கரையாமல் மேலே தங்கி அரிக்கும். ஆனால் இதை எல்லாம் கருத நேரமில்லை. பக்தஜன கோஷ்டி இன்னும் உரக்கப் பாடி சமையல் அறை ஓரமாக நடந்து கொல்லைப் பக்கம் வந்துவிடக் கூடும்.

காந்தி பெயரை உரக்கச் சொல்லி அவசரமாக நீராடி முடித்து பழைய ஜரிகை வேஷ்டி, முழுக்கை மில்துணி சட்டை, கதர்த் துண்டு என்று அணிந்து கோபி சந்தனம் ரத்னாபாய் இட்டு விட நெற்றியில் வாசனையாகத் தரித்து கோஷ்டியில் கலக்க விரைந்தேன்.

கைத்தாளம் போட்டபடி அருகில் வந்த ரத்னாபாய் காதில் சொன்னது – ”ஜன்னலில் கருப்பு காகிதம் கிழிந்திருக்கிறது ஒரு வாரமாக. இன்றைக்காவது புதுசு வாங்கி வந்து ஒட்டுங்கள். இல்லாவிட்டால் ஏ ஆர் பி வார்டன் சத்தம் போடலாம். ஜெர்மன் காரன் நம் வீட்டு வெளிச்சத்தை காகிதக் கிழிசலுக்கு ஊடே பார்த்து பட்டணத்தை அடையாளம் கண்டு ஏராப்ளேனிலிருந்து குண்டு போடுவான், ஜாக்கிரதை”.

சரி என்று தலையசைத்து ராதே ராதே ராதே ராதே என்று கோஷ்டி கானம் பாடி வண்ணாரப்பேட்டை தெரு முழுக்க விழுந்து கிடந்த சாணத்தை மிதிக்காமல் சேர்ந்து நடந்தேன்.

ஆளுக்கொரு பொத்தல் மிருதங்கத்தைத் தட்டிக்கொண்டு வந்த புதுப் பையன்களிடம் யார் அவர்கள் என்று பூர்வோத்திரம் விசாரித்தபடி கூடப் பாடின போது, மலையாள உச்சரிப்பில், திருவனந்தபுரத்திலிருந்து மதராஸ் வந்ததாக அறிந்தேன். தாய்மாமான் கச்சேரிக்கு மிருதங்கம் வாசிக்கிறவராம். பெயர் கேட்டேன். ஒரு நாயக்கர் பெயர் சொன்னார்கள். பத்து மிருதங்கம் ரிப்பேர் பண்ண அடுக்கி வைத்திருந்ததில் இரண்டை பஜனைக்கு எடுத்து வந்ததாகவும் அந்தப் பிள்ளைகள் சொன்னார்கள்.

ஆக, இது எம்பாவாய் கூட்டமில்லை. பஜனை கோஷ்டிதான் என்ற நிதானம் வந்தபோது பாட்டுப் பாட வேண்டியது எனக்கு வாய்த்தது. உத்தேசமாக பரிபாலித முசுகுந்தா என்று ஆரம்பித்தேன். எடுத்துப்பாட ஆளில்லாமல் போனது. பல்லவியில் ஆரம்பிக்காமல் நட்ட நடுவே சரணத்தில் தொடங்கினால் யார் கூடக் குரல் கொடுப்பார்கள்? ஆனால் எனக்கே பல்லவி மறந்து போய்விட்டது.

சட்டென்று எல்லோருக்கும் தெரிந்த சரணம் நினைவு வர நிறுத்தி நிதானமாக நந்த நந்தன நந்தன முனிதன என்றபோது பத்து குரல் குஷியாக வந்துட்டோம் வாத்தியாரே என்று கூட வந்தது.

கைரிக்ஷாவில் வந்து இறங்கிய நாயக்கர் சுநாதமான மிருதங்க சத்தத்தோடு கோஷ்டியில் சேர்ந்தார். வாசித்தபடியே மருமகப் பிள்ளைகளைப் பாசத்தோடு பார்த்துச் சொன்னார் –

தூங்கிட்டிருந்தா என்ன? எழுப்பி கேட்டா மாட்டேன்னா சொல்லப் போறேன்? தோல் தப்பின மிருதங்கத்தை வாசிக்க எடுத்தாந்தா, நாயக்கன் வகையறா காதும் கையும் என்ன ஆச்சுன்னு திட்ட மாட்டாங்க? வாசிக்காம கூட வாங்க. பேரை ரிப்பேர் செய்ய, ரிப்பேர் பண்ண வச்ச வாத்தியத்தை ஒரு தட்டு தட்டினா போதும், தெரியுதா?

நான் அந்தப் பையன்களைப் பார்த்துப் புன்சிரிக்க அவர்களோ லட்சியமே செய்யாமல் தெருவில் குனிந்து வாசலில் மார்கழி மாதக் கோலம் போட்டுக் கொண்டு வரிசையாக வீடு தோறும் குனிந்து நின்ற பெண்களின் முகங்களை உன்னிப்பாகப் பார்த்தபடி வந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.

வக்கீல் குமஸ்தர் காகர்லா பக்தவத்சலம் வீட்டு வாசலில் வடிவாக நின்ற இரண்டு பெண்கள் பஜனை கோஷ்டியைக் கண்டு விருட்டென்று ஓரமாக ஒதுங்கி மேற்படி பையன்களைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு விஷயம் விளங்கிப் போனது.

பொத்தையோ பத்தையோ, தாள வாத்தியத்தைத் தூக்கிச் சுமந்து கொட்டிக்கொண்டு போக இந்த மலையாளக் கரைப் பையன்களைத் தூண்டிய உன்னதமான தரிசன அரம்பையர் அந்த இருவரும். ரத்னாபாய் கல்யாணமான புதுசில் இருந்த மாதிரி அமைதியான அழகு அது.

முசுகுந்த சக்கரவர்த்தியை மற்றவர்கள் கரிசனமாகக் கவனித்துப் சரணத்தின் மேல் சரணமாகப் பாடி கௌரவிக்க, நாயக்கர் என்னோடு கடைசி வரிசைக்குப் போனபடி தாளம் பிடித்தார்.

“கௌரவிச்சிருக்காங்க போல நம்மளையும்” என்று காவிப்பல் தெரிய சிரித்தார் அவர். எனக்குத் தலையும் வாலும் புரியவில்லை. யார் கௌரவித்தது, யாரை, என்ன கௌரவம் என்ற தகவலோடு இந்த நம்மளை என்பது நாயக்கர் மட்டுமா நானும் கூடவா என்றும் தெரிந்து கொண்டாலே தக்கபடி பேச முடியும்.

“ஏ ஆர் பி வார்டன் லிஸ்டுலே நம்ம ரெண்டு பேரோட பேரும் இருக்காம். நாளைக்கு தபால் அனுப்புவாங்களாம்”, மெய்சிலிர்த்துச் சொன்னார் நாயக்கர். எனக்கும் ஒரு வினாடி தரைக்கு மேலே பறக்கிற மாதிரி இருந்தது. கவுரவ பதவி தேடி வந்திருக்கிறது போலே இருக்கே!

பஜனை கல்யாண மண்டபத்து காம்பவுண்டில் முடிய, தயாராக வெண்பொங்கல் கிண்டிக் காத்திருந்த யாரோ பூவரச இலை தொன்னையில் விளம்பித் தந்தார்கள். ரெண்டு கையிலும் தொன்னையோடு நான் வீட்டுக்குள் நுழைய இதென்ன அசங்கியமாக கையை விரித்துக் கொண்டு என்று கேட்டு ரத்னாபாய் சிரித்தாள். அவள் மனசில் ஓடிய விகாரம் எனக்கும் ஒரு நிமிஷத்தில் மட்டுப்பட, “உஷ், பஜனை பிரசாதம்” என்றேன், சிரிப்பை அடக்கிக்கொண்டு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன