கடவுள் துகள்

 

கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி

டிஜிட்டல் கேண்டீன்-26

பூமியும் கிரகங்களும் சூரியனும் இல்லாத காலம் அது. உறைய வைக்கும் குளிர். ஆயிரத்து முன்னூறு கோடி வருடம் முந்தைய அந்தக் காலகட்டத்தில், அண்டப் பெருவெளியில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. இந்த அண்டப் பெருவெடிப்பு (Big Bang) ஏற்பட்டதும் எங்கும் பெரும் வெப்பம் சூழ்ந்து கவிந்தது. அணுத் துகள்களான நியூட்ரான்களும் புரோட்டான்களும் ஒளியின் வேகத்தில் பாய்ந்து ஒரு சேரக் கலந்தன. இக்கலப்பில் அணு மையப்பொருள் தோன்றியது. வெப்பம் சற்றே குறைய இன்னொரு 379,000 ஆண்டுகள் பிடித்தன. இப்போது மற்ற அணுத் துகளான எலக்ட்ரான்களும் அணு மையப்பொருளும் சேர, ஹைட்ரஜன் வாயுவின் அணு உருவானது. அந்த அணுவில் பிறந்ததுதான் நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம்.அகில முதல் அணுவுக்கு, பின்னால் வந்த மற்றவற்றுக்கு, இந்தப் பிரபஞ்சத்துக்கு கனபரிமாணத்தை அளித்து அவற்றை வாழவைத்தது எது? விரிந்து கொண்டே போகும் பிரபஞ்ச வெளியில் விண்மீன் தொகுதிகளை இழுத்துப் பிடித்து ஒட்ட வைத்த கரும் சக்தியை உருவாக்கியது எது? கண்ணுக்குப் புலப்படாத இன்னொரு துகள் இந்த ஆச்சரியத்தை நிகழ்த்தியதாம். ஆன்மீகத்துக்கு அருகே நெருங்கி விட்டோம். காணக் கிடைக்காத அந்தத் துகள்தான் கடவுள் துகள் (God Particle).

ஜப்பானில், ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் இரண்டாம் உலகப் போர் முடிவில் அணுத் துகள்களின் வலிமையை உணர்ந்தோம். அணுவைப் பிளந்து ஆயிரம் உயிர்களைப் பலி கொண்ட பேரழிவு அது. அணு உலையில் துளைத்துப் பகுத்த இந்த அணுத் துகள்கள் பரம சாதுவாகக் கட்டுக்கடங்கி நம் வீட்டில் நாற்பது வாட்ஸ் பல்ப் எரிய வைக்க மின்சாரம் கொடுக்க முடியும் என்பதையும் கண்டோம். ஆனாலும் சகல பொருட்களுக்கும் வல்லமையும் உயிர்க் கனமும் தரும் கடவுள் துகள் இன்னும் ஒரு கோட்பாடு என்ற நிலையிலேயே இருக்கிறது. எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போல் இதுவும் நிச்சயமாக இருக்கிறது என்பதை உணர வைக்க முடியுமா? அறிவியலும் தொழில்நுட்பமும் தேடத் தொடங்கியுள்ளன.

செப்டம்பர் பத்தாம் தேதியிலிருந்து பத்திரிகைகளிலும் டெலிவிஷன் சானல்களிலும் அதிகமாக அடிபடும் ஒரு பெயர் – சாரி, ஜெயா அமிதாப் பச்சன் இல்லைங்க – அணு ஆய்வு அமைப்பு என்ற அர்த்தம் வரும் பிரஞ்சு மொழிச் சுருக்கமான CERN. சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவுக்கு அருகே இந்த ஆய்வு மையம் கோடிக்கணக்கில் செலவழித்து ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. இது இன்னும் சில ஆண்டுகளில் முடியும்போது புத்தம்புது அறிவு வசப்படும் என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள். என்ன ஆய்வு அது?

அண்டப் பெருவெடிப்பு காலத்தில் இருந்த சூழ்நிலையை CERN ஆய்வுக் கூடத்தில் நகலெடுத்தது போல் உருவாக்கியிருக்கிறார்கள். கல்லும் பாறையுமான நிலப்பரப்பில், தரைக்கு நூறு மீட்டர் கீழே சகல பாதுகாப்போடும் அமைந்த ஆய்வரங்கம் இது. இங்கே பெருங்குளிர் சூழலுக்கு நடுவே, மோதிரம் போல விரியும் குழல் பாதைகள் இருபத்தேழு கிலோமீட்டர் நீளம் கொண்டவை. இந்தப் பாதைகளில் கொஞ்சம் போல் பிரபஞ்சம் உருவாகிறது. அதாவது, Big Bang காலகட்டத்தில் நிகழ்ந்தது போல் அணுத் துகள்களான புரோட்டான்கள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் இந்தக் குழல் பாதைகளில் சுற்றிச் சுழன்று பயணம் போகின்றன. குழல்கள் நடுநடுவே சந்தித்து வேறு திசைகள் நோக்கிப் பிரிகிறவை என்பதால் இந்த அணுத் துகள்கள் வேகத்தோடு சில நேரங்களில் ஒன்றோடொன்று மோதிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த மோதலை வினாடிக்கு பல லட்சம் புகைப்படங்களாக, நகரும் ஒளிச் சித்திரங்களாகப் பதிந்து வைக்க நூற்றுக் கணக்கில் அதி நவீன காமிராக்கள் பாதை முழுக்கக் காத்திருக்கின்றன.

செப்டம்பர் பத்தாம் தேதி இங்கே ஒரே திசையில் இரண்டு குழல் பாதைகளில் ப்ரோட்டான்களை வெற்றிகரமாகப் பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள். அவற்றில் சில ஒன்றோடொன்று மோதிக் கொண்டதும் நிகழ்ந்திருக்கிறது. செயற்கையாக அணுத் துகள்களை மோத வைத்தால் அது சின்னச் சின்னக் கருந்துளைகளை (Black Hole) உருவாக்கி மனித குலத்துக்கு பெருநாசம் ஏற்படுத்தும் என்று சில அறிஞர்கள் பயமுறுத்தினார்கள். பிரபஞ்சப் பெருவெளியில் மடிந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் கருந்துளைகளாக மாறுகின்றன. இறக்கும் காலத்திலும் ஈர்த்து இழுக்கும் சக்தி உள்ளே நிறைந்து வழிகிறவை இந்த விண்மீன்கள். தம் பரப்பைக் கடக்கும் எதையும் உறிஞ்சி உள்வாங்கி காணாமல் போக்கிவிடும் வல்லமை கொண்டவை. நல்லவேளை. ஆராய்ச்சி நடந்தபோது, சின்னதோ பெரிசோ, கருந்துளை ஏதும் உருவாகவில்லை. அடுத்த கட்ட ஆய்வில் அணுத் துகள்களை எதிர் எதிர் திசைகளில் செலுத்தி மோதச் செய்யப் போகிறார்கள். கடவுள் துகள் அப்போது புலப்பட வாய்ப்பு உள்ளதாம்.

‘கடவுள் துகளை இந்த ஆராய்ச்சி கைவசமாக்கினால், நூறு டாலர் தருகிறேன்’. பந்தயம் கட்டியிருப்பவர் பிரபல வான்பொருளியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங். ‘ஏற்கனவே நாம் அறிந்த அணுத் துகள்களுக்கு பங்காளிகளான சூப்பர் பார்ட்னர் துகள்களை வேணுமானால் கண்டுபிடிக்க முடியும். அப்போது கடவுள் துகள் கோட்பாட்டையே நாம் மாற்ற வேண்டி வரலாம்’. அடித்துச் சொல்கிறார் ஹாக்கிங். துகளை மட்டும் கண்டால் கடவுள் தெரியாதா? தேடுவோம்.

(written before the CERN collider stopped functioning and published in Kalki two weeks ago – era.mu 10th Oct 08)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன