என் புதிய நாவல் ‘1975’ பற்றி பி.ஏ.கே அண்ணா (எழுத்தாளர் திரு பி.ஏ.கிருஷ்ணன்

தம்பி முருகனின் ‘1975’. பி.ஏ.கிருஷ்ணன்

எங்கள் ஊர்பக்கம் சிறுகிழங்கு கிடைக்கும். முன்னால் அதை வேக வைத்து உண்பது கடினம். இப்போது குக்கர் வந்து விட்டதால் வேக வைப்பது எளிதாகி விட்டது. ஆனாலும் சிறுகிழங்கைப் பற்றித் தெரியாதவர்கள் ‘சே, இது என்ன காய்கறி? ‘ என்பார்கள். ஆனால் ஒரிரு முறை உண்டால் அதைத் தேடி அலைவார்கள். அதன் ருசி அலாதியானது. மனதில் பல நாட்கள் நிற்கக் கூடியது. தம்பி முருகன் எழுதும் முறையும் அப்படித்தான். அலாதியானது. உள்ளே நுழைந்து படித்தால் எப்போதும் மெல்லிய முறுவலை வரவழைக்கக் கூடியது.

நான் தமிழ் நாவல்கள் படித்து பல நாட்கள் ஆகி விட்டன. கஷ்டப்பட்டு எடுத்து ஒரு பக்கம் படித்தாலே ஆயாசம் தொற்றிக் கொள்ளும். விடாது படித்தால் தூக்கம் தொற்றிக் கொள்ளும். நாவல்கள் மோசமானவை என்று நான் சொல்ல வரவில்லை. நான் ஒரு நாவலை எழுதி முடித்து விட்டு விடாமல் திருத்திக் கொண்டிருக்கிறேன். இன்னொன்றையும் தொடங்கியிருக்கிறேன். மற்றவர்கள் நாவல்களைப் படித்தால் ஓரளவு ஒட்டிக்கொண்டிருக்கும் கற்பனைத் திறனையும் அந்த முயற்சி வழித்து எடுத்து விடுமோ என்ற பயம். கிளாசிக்ஸ் என்று சொல்லப்படுபவைதாம் விதி விலக்கு. நம்மால் அந்த உயரத்தை எட்ட முடியாது என்ற உறுதியோடு படிக்க முடியும்.

தம்பியின் 1975ம் விதி விலக்கானது எனக்கே ஆச்சரியத்தைத் தருகிறது. ஆயாசமும் வரவில்லை. தூக்கமும் வரவில்லை. நேற்று படித்து முடிக்கும் போது இரவு பன்னீரண்டு.

புத்தகம் 1975 என்ற தலைப்பில் இருந்தாலும் அது 1975-77 எமர்ஜென்சி ஆண்டுகளைப் பேசுகிறது. அப்போது இளைஞர்களாக இருந்தவர்களை உலுக்கிய ஆண்டுகள் அவை. நண்பர்கள் கைது செய்யப்பட்டு அடிவாங்கிய போதும் ஏதும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆண்டுகள். குடும்பச் சூழ்நிலை அப்படி. இந்தக் கதையின் நாயகன் வங்கியில் அதிகாரியாகச் சேருகிறார். அவர் சென்னையில் துவங்கி அரசூர்(சிவகங்கை) நகரில் வேலையைக் கற்றுக் கொண்டு, தில்லியில் அழகான பெண்கள் மத்தியில் அதிகாரியாக விடலைத்தன்மையை இழக்கும் போது எமர்ஜென்சியும் முடிவிற்கு வருகிறது. சாதாரண மக்கள் அந்தக் காலகட்டத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை அதிராமல் கதை கூறிச் செல்கிறது. பாருக்குட்டி, பாம்பு டான்ஸ் ஆடும் மேனாகார்ச்சனா, ஜெபர்சன் வாத்தியார், பாயல், தில்லியின் சர்தார்கள், வங்கி அதிகாரிகள், இன்னபிறர் தங்கள் வாழ்வுகளை அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் காலத்திற்கு ஏற்ற மாதிரி சிறிது மாற்றிக் கொள்கிறார்கள். ‘என் தாய் கேட்டிருக்க வேண்டும் இதை’ என்று வீர வசனம் பேசவில்லை. தில்லியில் குடும்பக்கட்டுப்பாடு என்ற பெயரில் ‘அறுத்து’ விடுவதையும் அவர்கள் அணுகும் முறை புரட்சி செய்வது என்பதை மனித குலம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது என்பதைச் சொல்கிறது. ஏற்றுக் கொள்வதற்கும் இன்னும் பலமான அடி விழ வேண்டும்.

தம்பிக்கே உரித்தான நகைச்சுவை நாவல் முழுவதும் சாரைப் பாம்பு போல வழுக்கிக் கொண்டு ஓடுகிறது. பாம்பு மீது கண் வைத்துக் கொண்டிருந்தாலே போதும். நாவல் முடிந்து விட்டதே என்று தோன்றும்.

வாழ்த்துகள் தம்பி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன