நாவல் 1975 – முதல் மதிப்பீடுகள்

சென்னை புத்தகக் கண்காட்சி 2019 நேரத்தில் வெளியாகி இருக்கும் நாவல் 1975 நல்ல மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது. முதலிரண்டு இவை :

நண்பர் ஹரன் பிரசன்னா

இரா.முருகனின் 1975 நாவல். எமெர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு விலக்கபடும் வரையிலான 21 மாதங்களில் ஒரு வங்கி அலுவலர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை எமர்ஜென்ஸியின் பின்னணியில் சுவைபடச் சொல்லும் நாவல். சுவைபட என்றால் வெற்று வார்த்தை இல்லை, நிஜமாகவே சுவைபட. இரா முருகனின் எழுத்தில் இந்நாவலில் (சப்டில்) மென்நகைச்சுவை உச்சம் கொள்கிறது என்பேன். பல இடங்களில் நான் வாய்விட்டுச் சிரித்தேன். பாருக்குட்டியின் அத்தியாயமும் முத்துக்கிட்டுவின் அத்தியாயமும் உச்சம்.

வங்கி அதிகாரியாக லோன் தரவேண்டிய கட்டாயத்தில் அல்லாடும் சங்கரன் போத்தி எமர்ஜென்ஸியின்போது சென்னையிலும் டெல்லியிலும் பணி புரிகிறார். சென்னைக்கும் வட இந்தியாவுக்கும் எமர்ஜென்ஸி இரண்டு வேறு முகங்களைக் காட்டுகிறது. ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதையும் அரசு அலுவலகங்கள் கேள்வி கேட்காமல் சரியாகச் சொல்லி வைக்கப்பட்ட மாதிரி இயங்குவதையும் பாராட்டும் கூட்டம் ஒரு பக்கம். தன் உரிமைகளை சுதந்திரத்தை இழந்ததைப் பற்றிக்கூடப் பேச அஞ்சம் கூட்டம் இன்னொரு பக்கம். எமர்ஜென்ஸி எப்படி மக்களால் பார்க்கப்பட்டது என்பதை அழகாகப் பதிவு செய்கிறது நாவல்.

வலுக்கட்டாய லோன், வலுக்கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, இவை தரும் இன்னல்கள் எல்லாவற்றையும் மிக விரிவாக எழுதி இருக்கிறார் முருகன். அரசுக்கு எதிராக ஒற்றை வார்த்தையைக் கூடச் சொல்லத் தயங்கும் அரசு அதிகாரிகள். இந்திரா, சஞ்சயின் பெயரைச் சொல்லி அனைவரையும் மிரட்டும் கட்சி வர்க்கம். எந்தத் திட்டம் வந்தாலும் இந்திராவின் அல்லது சஞ்சயின் பெயர். லோன் வாங்க கடை தொடங்கினாலும் தொழில் தொடங்கினாலும் இந்திரா/சஞ்சய் பெயர். ஒருவர் எண்ணெய்க் கடை ஆரம்பிக்க, சஞ்சய் விளக்கெண்ணெய் என்று பெயர் வைக்க, கட்சி கவுன்சிலர் கொதித்துப் போய் அதற்கு இந்தியா விளக்கெண்ணெய் என்று வைக்கச் சொல்கிறார்!

இந்திராவின் இருதம்பசத் திட்டமும் சஞ்சயின் ஐந்தம்சத் திட்டமும் சங்கரன் போத்திக்கு மனப்பாடமே ஆகிவிடுகிறது. ஒவ்வொரு அதிகாரிக்கும் இப்படித்தான் இருந்திருக்கும். நரிக்குறவர்களுக்கெல்லாம் கூப்பிட்டு லோன் கொடுக்கிறார்கள். யார் சிக்கினாலும் குடும்பக்கட்டுப்பாடு. எமர்ஜென்ஸி முடிந்து இந்திரா தோற்க, சங்கரன் போத்தி சென்னைக்கு வந்து கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆக, நாவல் சுபம்.

அங்கேயும் இங்கேயுமாகத் தெறிப்பாக வரும் பல சம்பவங்கள் சுவாரஸ்யமளிக்கின்றன. நரேந்திரர் குஜராத்தி என்ற பெயர், கோபால் கோட்ஸேவின் பெயர், 25 அமசத் திட்டத்தின் பாடல்களைப் பாடமுடியாது என்று மறுக்கும் கிஷோர் குமார் (காரணம் சன்மானம் கிடைக்காது என்பதற்காகவாவ்ம்!), 20 அம்சத் திட்டத்தை விளக்கும் பாட்டு, இனிப்பில்லாமல் டீ சாப்பிட்டு வாக்கு கேட்கும் வாஜ்பாய், ரகசியமாக கம்யூனிஸ வகுப்பெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் எனப் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல விஷயங்கள் இந்தத் தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. நாவலில் இதைச் சொல்வது மிகப் பெரிய ஆவலைத் தரவல்லதுதான்.

எமர்ஜென்ஸியின் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரமாக அலசும் புத்தகமல்ல இது. அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான புனைவு. இந்தத் தெளிவுடன் இந்த எல்லைக்குள் நின்று வாசித்தால், புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடிக்கான மென்நகைச்சுவையும் விறுவிறுப்பும் உறுதி.

To order online: http://www.nhm.in/shop/9789386737625.html

To order thru phone: Dial for books 044-49595818
———————————————————-
நண்பர் ‘ராம்கி’ ராமகிருஷ்ணன்

எமர்ஜென்ஸிதான் கதைக்களம். அந்த 21 மாதங்கள் நடந்த சம்பவங்களை பின்புலமாகக் கொண்டு, விறுவிறு நடையில் ஒரு நாவல். எமர்ஜென்ஸியை விலக்கி, இந்திரா காந்தி தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்வதோடு நாவலும் முடிகிறது. சைக்கிள் முனி இரா. முருகனின் நாவல் வரிசையில் இன்னொரு சூப்பர் ஹிட் நாவல். பாராட்டுகள் ஸார்! #ChennaiBookFair2019 #MyRecommendations

——————————————
Dr. Subramanian Ramamurthy

Got your ‘1975’ from Amazon in just one day. Started reading it ! Old time
Murugan ji is back!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன