பிஞ்சுகள் நாவலும் நானும்

கி.ரா – பிஞ்சுகள்

கோபல்ல கிராமம் தொடங்கி, கி.ரா அவர்களின் எல்லாப் படைப்புகளுமே எனக்குப் பிரியமானவை என்றாலும், ‘பிஞ்சுகள்’ நாவலோடு ஒரு தனிப்பட்ட பிணைப்பு உண்டு.

1970-களில் எங்கள் சிவகங்கை தமிழ்ப் புத்திலக்கிய வளர்ச்சிக்கான மையமாக இருந்தது. என் அன்புக்குரிய பேராசிரியர் கவிஞர் மீரா (மீ.ராசேந்திரன்) தமிழ்ப் புதுக்கவிதையிலும் – கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் -,
பேராசிரியர் நா.தர்மராஜன் சோவியத் படைப்பு மொழிபெயர்ப்பிலும், பேராசிரியர் இளம்பாரதி (ருத்ர துளசிதாஸ்) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற மலையாள இலக்கிய மொழிபெயர்ப்பிலும் சாதனை படைத்துக் கொண்டிருந்த நேரம் அது. இவர்கள் தமிழ், ஆங்கிலம், வேதியியல் துறை என்று வேறு வேறு துறைகளில் சிவகங்கை ராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் பேராசிரியர்களாக இருந்தாலும், தமிழுணர்வு இவர்களை நெருங்கிய நண்பர்கள் ஆக்கியது.

நான் இவர்களோடு இலக்கிய மாணவனாகவும் கலந்து பழக, அவர்கள் கைகாட்டிய பன்மொழி இலக்கிய நூல்களைப் படிக்க, அவர்கள் விவாதிக்கும்போது கேட்டு ரசித்துக் கொண்டிருக்க என்று எனக்கு அப்போது வாய்த்தது.

மீராவின் அன்னம் பதிப்பகம் ’பிஞ்சுகள்’ நூலை வெளியிட்டது. மீரா அவர்களிடமிருந்து புத்தகம் முதலில் வாசிக்கக் கிடைத்தவர்களில் நானும் ஒருவன். ஒரே வாசிப்பில் படித்து முடித்தேன். அற்புதமான இசை நிகழ்ச்சியைக் கேட்ட மாதிரி படித்துப் பல மணி நேரம் சென்றும் பிஞ்சுகள் நினைவில் சுழன்று கொண்டிருந்தது.

நிறையத் தயங்கி, ஒரு வழியாக அந்த நூலை அறிமுகம் செய்யும் விதமாக – கி.ராவை விமர்சனம் செய்ய நான் யார் – ஒரு கட்டுரை எழுதி, எங்கள் ரெட்டைத் தெருவில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருந்த சிவன்கோவில் தெற்குத் தெரு அன்னம் பதிப்பகத்துக்கு ஒரு சாயந்திரத்தில் போனேன். கல்லூரி இறுதியாண்டுப் படிப்பு முடித்திருந்த நேரம் அது.

அன்னம் பதிப்பகத்தில், மேலே குறிப்பிட்ட இலக்கிய மும்மூர்த்திகளும் உரையாடிக் கொண்டிருந்தபோது குறுக்கே புகுந்து என் கட்டுரையை நீட்டினேன்.

சரி தம்பி, படிச்சுட்டு சொல்றேன் என்றார் மீரா.

ஒரு வாரம் ஆச்சு, ரெண்டு வாரம் ஆச்சு, ஒரு மாதமே போயாச்சு. அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை.

ஒரு மாலை நேரம் நான் அன்னம் பதிப்பகம் படியேற, மீரா என்னிடம் ‘படிங்க தம்பி’ என்று ஒரு பத்திரிகையைக் கொடுத்தார். அது அந்த வாரம் வெளியான தாமரை மாத இதழ். புரட்டிப் பார்த்தேன். என் ‘பிஞ்சுகள்’ அறிமுகக் கட்டுரை ஒரு வார்த்தை கூட மாறாமல் அப்படியே வந்திருந்தது.

படிச்சேன். படிச்சோம். நல்லா இருந்துச்சு. தாமரைக்கு அனுப்பிப் போடச் சொன்னேன். நிறைய எழுதுங்க.

சார் சார் சார் என்று தொடங்கினேன். வார்த்தை ஏதும் வரவில்லை. நன்றி என்று சொல்வதற்குள் நா உலர்ந்து போனது. அவர் புரிந்து கொண்டார்.

நான் எழுதி அச்சில் வந்த முதல் கட்டுரை – முதல் படைப்பு – அது. பிஞ்சுகள் நாவலோடு எனக்கு மனதளவில் பிணைப்பு ஏற்பட்ட கதை இது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன