New : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்

An excerpt from ‘Beerangi PaadalkaL’ பீரங்கிப் பாடல்கள் நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி

எட்வின்சேட்டன் வேலை ஆரம்பித்தது அவருடைய குழுவிலுள்ள வேலையாட்கள் வெளிச் சருகை உரித்து சுத்தமாக்கி வைத்த பெரிய வெங்காயத்தோடுதான். இடது கையால் ஒவ்வொரு வெங்காயமாக எடுத்து உயர்த்திப் பிடித்து வலது கையில் வைத்திருந்த கத்தியால் நீள வாக்கில் அரிந்து தரையில் வைத்திருந்த முறத்தில் போட்டார் அவர். இடது கையில் வெங்காயம் இல்லாவிட்டாலும் வலது கையில் பிடித்திருந்த கத்தி உயர்ந்தது. ஒரு முறம் நிறையும் போது வேலையாட்கள் இன்னொரு காலி முறத்தை அங்கே வைத்தார்கள். வெங்காயம் தீர்ந்தபோது எட்வின்சேட்டன் சொன்னார்: “அப்புகுட்டா, அரிசி களைந்து வை. களைஞ்ச தண்ணி, கண்ணீர் மாதிரி ரொம்பத் தெளிவா ஆகிறவரைக்கும் விடாம களையணும்”.

வேர்களையும், வாடிய இலைகளையும் கிள்ளி எடுத்து விட்டுக் புதினாவையும், கொத்துமல்லியையும் அவர் பலகை மேல் வைத்து கட்டுக்கட்டென்று அரிந்தார். வேலைக்கு நடுநடுவே தலையுயர்த்தி வேலையாட்களைப் பார்த்துச் சொன்னார்: “ சக்கரியா, நீ சும்மா வாய் பார்த்துக்கிட்டு நிக்காம வெள்ளைப் பூண்டையும், இஞ்சியையும், பச்சை மிளகாயையும் தனித்தனியா அரிந்து வை. மகனே வேலாயுதா, நீ அந்த கசகசாவை நல்லா வெண்ணெய் மாதிரி அரைச்சு எடு”.

—- —– —-
அப்பன் கேட்டார் : “எட்வினே, நீர் பிரியாணி செய்ய எங்கே கத்துக்கிட்டீர்?”

“எங்க அப்பன்கிட்டே தான். பிரியாணிக்கு ரெண்டு பாணி உண்டுன்னு அப்பன் சொல்லிக் கேட்டிருக்கேன். முதலாவது வடக்குப்பாணி. லக்னோ ஸ்டைல். இறைச்சியும், சோறும் தனித்தனியா வேகவச்சு அசெம்பிள் செய்து தம் வச்சு பிரியாணி செய்யறது. இன்னொண்ணு தெற்குபாணி. தெற்கிலே நிஜாம் நாடு, ஹைதராபாத் ஸ்டைல். எல்லாத்தையும் அவியல் மாதிரி ஒண்ணாப் போட்டு வேகவிடுவாங்க. நாம இங்கே செய்யறது வடக்கு ஸ்டைல் பிரியாணி”.
——– ————- ———
எனக்கு ஞானஸ்நானம் நடந்த நாளில் அதிகாலையிலேயே எட்வின்சேட்டனும் அவருடைய வேலையாட்களும் பிரியாணி செய்ய ஆரம்பித்தார்கள். வாங்கி வைத்த நெய்யில் பாதியைப் பெரிய கொப்பரையில், ஊற்றிச் சூடாக்கி, அரிந்து வைத்த வெங்காயத்தில் பாதியை அதில் போட்டு, எட்வின்சேட்டனின் சமையல் கோஷ்டியில் வந்த வேலாயுதன் வறுத்தார். எட்வின்சேட்டன் கண்ணை மூடியபடி கொப்பரையைச் சுற்றி, வாடை பிடித்துக் கொண்டு நடந்தார். “வேலாயுதா, வறுக்கற வெங்காயம் நம்ம எஸ்.எஸ்.கோடர் முதலாளி கன்னம் மாதிரி சிவப்பா ஆகும் போது அரிஞ்சு வைச்ச வெள்ளைப் பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயெல்லாம் கொப்பரையிலே போட்டு வறுக்கணும். பிரியாணி செய்யறது மூக்கை வச்சு. சமையல்குறிப்பை பார்த்துப் பார்த்து சொல்றது இல்லே. கமகமன்னு வாசனை வரும்போது நான் சொல்லுவேன், நிறுத்து வேலாயுதான்னு. அப்போ நீ நிறுத்தி, எரிஞ்சிட்டிருக்கற விறகை உருவணும்”.

சக்கரியா இன்னொரு கொப்பரையில், மீதி வெங்காயத்தை நெய்யில் போட்டு வறுத்தார். எட்வின்சேட்டன் அவரைக் கூப்பிட்டுச் சொன்னார் : “ஏய், வெங்காயத்தோட கலர் மாறி மஞ்சள் ஆகும்போது, உடச்ச முந்திரிப்பருப்பையும், கிஸ்மிஸ் பழத்தையும் போட்டு மிதமான சூட்டுலே வறுத்துக்க. பழுப்பு நிறத்துலே வரும்போது அரிச்சு எடு”.

வெங்காயமும் இஞ்சியும் மற்றதும் வறுபட்டு நல்ல வாசனை வர ஆரம்பித்து, சமையல் கொட்டகையில் பரவியபோது எட்வின்சேட்டன் அந்த கொப்பரையில் மாமிசத் துண்டுகளை இட்டுக் கலந்தார். இறைச்சி சிவந்த போது, தயிரும், கசகசாவும், உப்பும் சேர்த்து வறுத்தார். அப்போது அவருடைய குழுவில் வந்த சக்கரியா உடைத்த முந்திரியும், உலர்ந்த திராட்சையும், வெங்காயமும் சேர்த்து வறுத்ததை அரிந்தெடுத்து ஒரு முறத்தில் பரப்பினார். மீதி வைத்திருந்த நெய்யில் எட்வின்சேட்டன் களைந்து வைத்திருந்த அரிசியை இட்டு வறுத்தார். அரிசி ஈரம் உலர்ந்தபோது கொப்பரைக்குள் தண்ணீர் விட்டு, அதை மூடி வைத்தார். “சர்க்காரியாவே, சோறு கொழஞ்சுடாம பார்த்துக்க. பிரியாணியிலே பாதி வேலை அரிசி வேக வைக்கறது தான். வெந்த அரிசிக்குள்ளே அந்த அரிசிமணியோட கண்ணு தெரியணும்”.
———— —————
மூன்று மகள்களோடு கோமஸ் வந்ததுமே வீட்டுப் பின்பக்கம் போய் தம் வைத்து முடித்ததா என்று கேட்டார். எட்வின்சேட்டன் சொன்னார் : “கோமஸ் வராமே எப்படி தம் வைக்கறதாம்?”

இறைச்சி பாதி வெந்த சேதியை வேலாயுதன் எட்வின்சேட்டனுக்குச் சொன்னார். எட்வின்சேட்டன் சமையல் கொட்டகைக்குப் போய் இறைச்சியோடு எலுமிச்சைச் சாறும், அரிந்து வைத்திருந்த கொத்துமல்லித் தழையும், புதினா இலைகளும் சேர்த்து வறுத்தார். சட்டுவத்தை வேலாயுதனிடம் கொடுத்து விட்டு மற்ற வேலையாட்கள் போல எட்வின்சேட்டனும் சாலட் செய்ய தக்காளியும் பச்சை மிளகாயும் அரிந்தார். சிறிது நேரத்தில் வேலாயுதன் கூவினார்: “எட்வின்சேட்டா, இறைச்சியிலே இருந்து கொழுப்பு விலகிடிச்சு”.

அடுப்பில் எரிந்த கொள்ளிகளில் ஒரு விறகை மட்டும் விட்டுவைத்து மற்றதையெல்லாம் எட்வின்சேட்டன் எடுத்து விட்டார். அந்த நேரத்தில் எங்கள் வீட்டுப் பின் வராந்தாவில் ஆள் கூட்டம் நிறைந்திருந்தது. எல்லோரையும் பார்த்தபடி எட்வின்சேட்டன் சொன்னார்: “இனி, தம்”.

தம் மசாலாப்பொடியை எட்வின்சேட்டன் நகமுனையால் அளந்து, வெந்த இறைச்சி மேல் தூவினார். அதன் மேல் மூன்றில் ஒருபாகம் சோற்றைப் பரப்பினார். தண்ணீர் விட்டுக் கரைத்திருந்த மஞ்சள்பொடியை அவர் சோற்றின் மேல் தெளித்தார். அதன் மேல் எட்வின்சேட்டன் இன்னொரு மெல்லிய அடுக்கு சோற்றைப் பரப்பினார். அதன்மேல், வறுத்த முந்திரிப் பருப்பும், உலர்ந்த திராட்சையும், வெங்காயமும். இன்னொரு நகக்கண் அளவு மசாலாப்பொடி. மேலே, இன்னொரு அடுக்கு சோறு. மஞ்சள்பொடி கரைத்த நீர். மேலே, மிச்சமிருந்த சோறு. ரோஸ்வாட்டர். மேலே தம் மசலாப்பொடி கொஞ்சம் போல. மாதாகோவிலில் பூசை வைக்கிறதை நோக்குவது போல, கூடியிருந்தவர்கள் எட்வின்சேட்டன் சமையல் செய்வதை நோக்கி நின்றார்கள்.

அரிசிமாவை நீர்விட்டுப் பிசைந்து விரலளவு கனத்தோடு கூடியதாக நீட்டி எடுத்து, வேலையாட்கள் எட்வின்சேட்டனிடம் கொடுத்தார்கள். கொப்பரையின் மேல் அடைத்து மூடி, சட்டியும், மூடியும் தொட்டுப் போகும் வரையை முழுவதுமாக அரிசிமாவுப் பட்டியால் அடைத்தார் எட்வின்சேட்டன். அது முடிந்ததும், கொஞ்சம் போல எரியும் தீக்கங்கு எடுத்து மூடி மேல் வைத்தார். கூடி நின்றவர்களைப் பார்த்துச் சொன்னார் எட்வின்சேட்டன் : “இதான் தம். கொப்பரைக்குள்ளே இப்போ சித்திரையிலே கத்தரி வெய்யில் அடிக்கறதுக்கு பத்து மடங்கு அதிகமான சூடு இருக்கும். இறைச்சியோட ஜூசும், வாசனை திரவியங்களும் ஒண்ணோட ஒண்ணு தீவிரமா முட்டிமோதி ஒரு கைகலப்பு நடக்குது அங்கே. நான் இதுவரைக்கும் மூவாயிரத்துக்கு மேல் பட்ட இடங்களிலே பிரியாணி சமைக்க தம் வச்சிருக்கேன். இருந்தாலும், நண்பர்களே, தம் வைக்கும் போது கை நடுங்காமல் இருந்ததில்லே. கை நடுக்கம் போனால் கலையும் போகும். தம் வச்சு முடிச்சு திறக்கற போது என்ன ஆகியிருக்கும்னு எனக்கு முன்கூட்டி எப்போதும் தெரியாது. நாம மனுஷ இனமாச்சே. என்ன நடக்கப் போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சா, வேதப் புத்தகம் எதுக்கு?”

நாவல் பீரங்கிப் பாடல்கள்

(திரு.என்.எஸ்.மாதவனின் மகத்தான நாவல் ‘லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள்’ தமிழாக்கம் இரா.முருகன்)

கிழக்கு பதிப்பகம்
தொலைபேசி +91-44-4200-9603

384 பக்கம்

ரூபாய் 450

Some accolades :

Book of the year 2004 – Malayala Manorama

Epic imagination … N S Madhavan has rejuvenated Malayalam fiction – The Little Magazine

An outstanding work of historical fiction which tells the story of the inhabitants of the Malabar coast from ancient times to the present day…. Reading the book, we come to the conclusion that Kerala is rightly described as God’s own country not only because of the beautiful landscape of green hills and waterways, but also because of the people who inhabit it – Kushwant Singh

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன