இந்திக் கொம்பு

 

குங்குமம் பத்தி – அற்ப விஷயம் (இல்லை)

விடிகாலையில் சுத்த பத்தமாகக் குளித்துவிட்டு டி.வியில் மத்திய அரசு சானலைப் போட்டால் பெருமாள் தரிசனம் கிடைக்குதோ என்னமோ, பைஜாமா குர்த்தா ஆசாமிகள் கண்ணில் தட்டுப்படத் தவறுவது இல்லை. முகத்தில் இந்தித் தனம் எழுதி ஒட்டியிருக்கும் இளைஞன் ஒருத்தன் மாட்டு வண்டியில் சாய்ந்து பேசுவான். முட்டாக்குப் போட்ட அம்மா இந்திப் பசுமாட்டைப் பால் கறந்தபடி கேட்பாரள். கம்பளிப் போர்வையோடு கட்டை மீசைத் தாத்தா சத்தமாகச் சொல்வார். இவர்கள் எல்லோரும் வாயசைத்தது இந்தியில் என்றாலும் அதுக்குப் பொருந்தாமல், குரல் தமிழில் மொழிமாற்றி ஒலிக்கும். ‘விவசாயிகளே, எண் 1551க்கு தொலைபேசுங்க. விவசாயம் பத்தின சந்தேகங்களுக்கு உங்க மொழியிலேயே பதில் கிடைக்கும்’.தெரியாமல்தான் கேட்கிறேன். தமிழ்நாட்டு விவசாயி வயலுக்குக் கிளம்பியிருக்கும் நேரத்தில் யாருக்காக 1551 நம்பரைக் கூப்பிடச் சொல்லி இந்திக்காரர்கள் குரல் விடுகிறார்கள்? தஞ்சைக் கிராம விவசாயி இந்த பைஜாமா ஆசாமிகள் பேசுவதைக் கவனித்துக் கேட்கணும் என்பதே தில்லி விவசாய அமைச்சகத்தின் லட்சியம் என்றால், எங்க ஊர்க்காரங்களையே வைத்துப் படம் பிடித்து ஊர் முழுக்கக் காட்டலாமே? அது முடியாது. மத்திய அரசு விளம்பரம் என்றால் இந்தியில் அரைகுறையாக யோசித்து இந்தியில் இயக்கிப் பேசி எடுத்து அப்புறம் போனால் போகிறது என்று மற்ற இந்திய மொழிகளில் மொழிமாற்றியாக வேண்டிய சமாச்சாரம். அது என்ன, ‘உங்க மொழியிலே பதில் கிடைக்கும்?’னு ஓட்டற வேலை? தமிழ்நாட்டில் எங்க மொழின்னு தமிழ் தவிர வேறே என்னய்யா இருக்கு?

நடுராத்திரிக்கு ஆர்ட் சினிமா போடுகிறவை லோக்சபா, ராஜ்யசபா சர்க்கார் சானல்கள் (எத்தனை பேர் பார்த்திருக்கீங்க, கை தூக்குங்க பார்ப்போம்). அந்த நேரம் தவிர மற்ற நேரம் அவை கைகட்டிச் சேவை புரிவது இந்திக்குத்தான். நாடாளுமன்றம் நடக்கிற நேரம் என்றால் ஆணி அடித்த மாதிரி காமிராவை நிறுத்தி அதைக் காட்டுவார்கள். இல்லையோ, குறுந்தாடி வைத்த, கண்ணாடி போட்ட நபர்கள் இந்தியில் பேசச் சட்டமாக வந்து உட்கார்ந்து விடுவார்கள்.

மத்திய அரசு பெட்ரோல் கம்பெனி ஒன்று எண்ணெய் உபயோகத்தைக் குறைக்க வழிசொல்கிறது. நாட்டுக்கு நல்லது தான் இது. ஒரு காரில் ஒருத்தர் என்று போகாமல், ஆபீஸ் போகும் போது நாலைந்து பேர் ஒரே காரில் போங்களேன் என்று பெட்ரோல் பங்குகளில் பெரிய விளம்பரம் வைத்திருக்கிறார்கள். தமிழில் இல்லாவிட்டாலும் ஆங்கிலம் என்பதால் இங்கே பலரும் சிரமப்படாமல் அதைப் படிக்க முடிகிறது. அது என்ன விளம்பரத்தின் கீழே ‘தூர் கோ கோஜ்’ என்று இங்கிலீஷில் எழுதியிருக்காங்க? தூரத்தைப் பற்றி யோசனையாம். எந்த தூரம்?

இந்திக்கு சூடன் சாம்பிராணி காட்டி கைங்கர்யம் செய்வதில் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளை வேறு யாரும் நெருங்கக்கூட முடியாது. இந்தி வளர்ச்சித் துறை என்று வைத்து அதிகாரிகளைப் பயிற்சி கொடுத்து இந்தியா பூரா அனுப்பி மொழியைப் பரப்ப ஆணையிடுவார்கள். வங்கி மேலாளர்களுக்கு விசிட்டிங் கார்ட் அடித்துக் கொடுத்திருப்பது ஒரு பக்கம் ஆங்கிலத்திலும் மற்றது இந்தியிலும் இருக்கும். இந்தி விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு என்ன செய்யறீங்க என்று புலியடிதம்மம் கிளை மேனேஜரைக் கேட்டேன். நாக்கை நீட்டிக் காட்டினார் அவர். சும்மா சொல்லக் கூடாது. சுத்தமாக இருந்தது அது.

திருச்சி பக்கம் ஒரு அரசுடமை வங்கிக் கிளைக்குப் போனபோது இரும்பு நாற்காலியில் இந்தி தினப்பத்திரிகை ஒன்று பரிதாபமாகக் கிடந்தது. யாரும் எப்போதும் படிக்காத அதை எதுக்காக வாங்கணும்? கிளையில் ஒரு இந்திப் பத்திரிகை வாங்கவேண்டும் என்று விதிமுறையாம். கழிவறையில் தண்ணீர் வராத கட்டிடம் என்பதால் பத்திரிகைக்கு உபயோகம் இருப்பதாகத் தெரிய வந்தது.

எல்லா மொழியையும் வரவேற்கும் மாநிலம் நம்ம தமிழகம். ஆனால், நாங்கதான் அரசபாடை, அதான் சார், ராஜ்பாஷா என்று தோள் தட்டிக்கொண்டு யாராவது லந்து செய்தால் மண்டையில் தட்டி ஓரமாக உட்கார வைத்துவிடவும் நாம் தயார். அமிதாப் பச்சன் மனைவி ஜெயபாதுரி மும்பையில் பேசும்போது ‘நான் இந்திக்காரி, தேசிய மொழி இந்தி. அதில் தான் பேசுவேன்’ என்று அடம் பிடித்தாராம். அதை மராத்திய ராஜ் தாக்கரே தட்டிக் கேட்ட விதம் வேணுமானால் தப்பாக இருக்கலாம். எங்கும் இறுமாந்து பவனிவரக் கொம்பா முளைத்துள்ளது இந்திக்கு?

ஒரு பக்கம் இந்திப் பிரச்சார சபை தபாலில் அளிக்கும் பயிற்சியும், தேர்வும், இன்னொரு பக்கம் தூர்தர்ஷன், விவித்பாரதி, வங்கிகள் சாமரம் வீசுவதும் என்று இருந்தாலும், பாக்கியராஜ் சொல்கிற மாதிரி ‘ரகுத் தாத்தா’ என்று இந்தி தள்ளாடித் தள்ளாடித்தான் இங்கே நடக்கும். தமிழ்ப் பிள்ளை உள்ள வீட்டில் துள்ளி விளையாட அதற்கு எப்போதும் இடம் இல்லை.

(குங்குமத்தில் கடந்த வாரம் வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன