புதிது: மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – பகுதி 2

இரா.முருகன் : இன்னும் ஒரு கதை. இதுவும் பெருவாரியான கவனத்தைப் பெற்றது. இந்திரா காந்தி மரணத்தை அடிப்படையாகக் கொண்ட ‘வன்மரங்கள் வீழும்போள்’ (பெரிய மரங்கள் விழும்பொழுது).

என்.எஸ்.மாதவன் அந்தக் காலகட்டத்தில் – 1984 – நான் தில்லியில் பணியில் இருந்தேன். நான் இருந்த நகர்ப் பகுதியில் இந்திரா மரணத்தைத் தொடர்ந்து எழுந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையும் கலவரங்களும் உச்சத்தில் இருந்தன. போக்குவரத்து முடங்கி இருந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த சீக்கிய சகோதர சகோதரிகளுக்கும் அன்னையர், தந்தையருக்கும் பாதுகாப்பு தர வேண்டியும், அவர்களின் உயிரைக் காக்கவும் பெரும்பான்மையினர் திரண்டெழுந்ததை நான் நேரில் கண்டேன். எங்கள் பகுதியில் என் கார் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. நான் ஏற்கனவே கார் டாங்க் நிரம்ப பெட்ரோல் போட்டு வைத்திருந்தேன். காரில் ஏற்றி வந்து பல சீக்கிய நண்பர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றினோம். அப்போது தான் வெளிநாட்டில் இருந்து, எனக்குப் பரிச்சயமான ஒரு சீக்கியர் குடும்பம் தில்லிக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தது. அவர்களுடைய உறவினர்கள் தொலைபேசியில் அவர்களைத் தொடர்பு கொண்டு ஏர்போர்டிலேயே தங்கி இருக்கச் சொன்னார்கள். வந்த குடும்பத்தில் ஒரு சின்னஞ் சிறுவன். அவனுடைய பாட்டி தொலைபேசியில் அவனிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி இருந்தாள். நான் ஏர்போட்டுக்கு அந்தக் குடும்பத்தைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுவன் பயத்தில் உறைந்து ஒரு மறைவில் ஒண்டி ஒளிந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவன் கண்களில் தென்பட்ட பயம் உண்மையானது. வேதனை அளிப்பது. நாம் இதுவரை போற்றிப் பாதுகாத்து, உயர்த்திப்பிடித்த மதச் சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகள் தோல்வியடைந்த ஒரு சூழலை, வன்முறை வென்று பேயாட்டம் போட்ட நரகத்தைச் சொல்லிக் கொண்டிருந்தன அந்தப் பயமும் திக்கற்ற தன்மையும். வன்மரங்கள் வீழும்போள் கதைக்கு அடித்தளம் இதுதான். 1984 அக்டோபர் 31 முதல் 1984 நவம்பர் 3 வரை தில்லியில் சீக்கியருக்கு எதிரான வன்முறை கையோங்கி இருந்தது. அப்போது ஒரு சீக்கிய யுவதியும் அவளுடைய ஏழு வயது மகனும் வன்முறையில் இருந்து தப்பி ஒரு கத்தோலிக்க கன்யாஸ்திரிகளின் மடாலயத்தில் தஞ்சம் புகுகிறார்கள். அந்தச் சிறுவனின் இன அடையாளமான குடுமி முடியப்பட்ட, வெட்டப்படாத தலைமுடியை அவனுடைய உயிரைப் பாதுகாக்க வெட்டும் கன்யாஸ்த்ரிகள் எந்த விதமான மிரட்டலுக்கும் பணியாமல் அந்தத் தாயையும் மகனையும் பாதுகாப்பதைச் சொல்லும் கதை. கதையின் தலைப்பு ராஜிவ் காந்தி பத்திரிகையாளர்களோடு நடத்திய நேர்காணலின்போது சொன்னது – ‘’ஒரு பெரிய மரம் விழும்போது சுற்றிலும் இருக்கும் சிறு உயிர்கள் மடிவது இயல்பானது’. சீக்கியர்கள் கொலை செய்யப்படுவது, இந்திராவின் மரணத்திற்கான இயல்பான எதிர்வினை என்று இனப் படுகொலையை ஒரு இளம் பிரதமர் நியாயப்படுத்திய அவலத்தைச் சுட்டவே அதைத் தலைப்பாக வைத்தேன்.

இரா.முருகன் : வன்மரங்கள் வீழும்போள் திரைப்படமும் ஆனது அல்லவா?

என்.எஸ்.மாதவன் : ஆம். என் நண்பரும் பிரபல மீடியா ஆளுமையுமான சசிகுமார் இயக்கத்தில் வந்த இந்தித் திரைப்படம் அது. சசிகுமாரைத் தமிழர்கள், முக்கியமாக 40-வயதுக்கு மேற்பட்ட சென்னைத் தமிழர்கள், 1980-களின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஆங்கிலச் செய்தி வாசிப்பவராக அடையாளம் காண வாய்ப்புண்டு. தலைப்பு சினிமாவுக்காக காயா தரன் (கூட்டுப்புழு) என்று மாற்றப்பட்டது.

இரா.முருகன் : நீங்கள் எழுதியது எழுதியதுபோல் கதை திரைப்படமானதா? உங்களுக்கு அந்த முயற்சியில் திருப்தி ஏற்பட்டதா?

என்.எஸ்.மாதவன் : சசிகுமார் கதையமைப்பில் சில மாற்றங்களைச் செய்தார். கதைப் போக்கிலிருந்து விலகாமல், சமகாலத் தன்மையைப் புகுத்திக் கதையின் களத்தையும் காலத்தையும், பின்னணியையும் மாற்றி அமைத்தார். 1984-ல் தில்லியில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட காலகட்டக் கதை, காயா தரன் திரைப்படத்தில் 2002-இல் குஜராத் தலைநகரத்தில், ரயில் எரிப்பைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்த காலத்துக்கும் நீட்சி அடைந்தது. யோசித்துப் பார்த்தால் இரண்டுமே சிறு தீப்பொறி பற்றி ஒரு காடே எரிவது போல் வேறு எங்கோ புறப்பட்டு, ஒரு இனத்துக்கு எதிரான வன்முறையான அவல வரலாறு. இரண்டு நிகழ்வுகளும் ஏற்படுத்திய துயரமும், அவலமும் ஒரே போலத்தான். சினிமாவில் அதைக் கொண்டு வருவதில் சசிகுமார் வெற்றி பெற்றிருந்தார்.
என்றாலும், என் கதைகளைத் திரைப்படமாக்கத் தரும்படி எழும் கோரிக்கைகளை நான் பெரும்பாலும் ஏற்பதில்லை. புனைகதை இலக்கியம், திரைப்படம் இரண்டும் வெவ்வேறான இரண்டு படைப்பு வடிவங்கள்.

இரா.முருகன் : எனக்குச் சற்றே ஆச்சரியமாக இருக்கிறது. நடுவில் பத்தாண்டு எழுதாமல் இருந்து, கடந்த 40 ஆண்டு காலத்தில் நீங்கள் எழுதிய சிறுகதைகள் அறுபது அல்லது எழுபது இருக்கக் கூடும். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் எல்லாக் கதைகளுமே நினைவில் நிற்பவை. தேசிய அளவில் கதா விருது மூன்று முறையும், கேரள சாகித்ய அகாதமி, மற்ற பல விருதுகளும் பெற்ற, வாசகர்கள் நேசித்துப் போற்றும் கதைகள் அவை. ஷூரகன், நாலாம் லோகம், சர்மிஷ்டா போன்ற கதைகளை என்.எஸ்.மாதவன் தான் எழுதியிருக்க முடியும். அவற்றைச் பேசி நாவலுக்குப் போவோமா?

என்.எஸ்.மாதவன் : மூன்றும் சுய அனுபவங்களிலிருந்து எழாமல், ஆனால் பரவலாக நன்கு அறியப்பட்ட பின்னணிகளில் இயங்குகிறவை. அந்த அளவில் என் மற்றைய படைப்புகளிலிருந்து மாறுபட்டவை. ஷூரகன் கதை கேரளத்தில், ஏன் தமிழ்நாட்டிலும் கூட வெகுவாக ஒரு பத்தாண்டு முன் பரவியிருந்த ஈராக் அதிபர் சதாம் உசைன் ஆதரவு பற்றியது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இல்லாத Weapons of Mass Destruction – பெரும் அழிவு விளைவிக்கும் போர் ஆயுதங்களைத் தேடுவதாகாச் சாக்குச் சொல்லி ஈராக்கை முற்றுகை இட்டு, சதாமைக் கைது செய்ய, இங்கே அவருக்கு ஆதரவு கூடியதே அன்றிக் குறையவில்லை. பிறந்த குழந்தைகளும், தெருக்களும், அரங்குகளும் சதாம் பெயரிடப்பட்டன. அவர் படம் தெருவோர நடைபாதையில் நிறைய விற்கப்பட்டது. கதையில் சதாம் ரசிகரான ஒரு மலையாள நாவிதர் எப்படியோ போர்க் காலத்தில் ஈராக்கில் கொண்டு சேர்க்கப் படுகிறார். கேரளத்திலிருந்து நாவிதராகப் பணிபுரிய குவைத் போனவர் அவர். ஈராக்கில் சதாம் சிறையில் இருக்கும்போது அவரோடு பழக நேருகிறது. சதாம் இறப்பதற்கு முன் இந்த மலையாளி நாவிதர் அவருக்குக் கடைசி முறையாக முகச் சவரம் செய்து விடுகிற கதை அது. சதாம் என்ற சர்வாதிகாரியையும், சதாம் என்ற யுகபுருஷனையும் மற்றவர்கள் கட்டி நிறுத்த, அவரை ஒரு சாமானியனாக, இன்னொரு சாமானிய கேரள நாவிதரின் பார்வையில் காட்ட நான் விரும்பியதன் விளைவு ஷூரகன் என்ற இக்கதை.

நாலாம் லோகம் கதை சோவியத் யூனியன் சிதறுண்டு போன காலத்தைச் சொல்வது. அது நடப்பதற்குச் சில நாட்கள் முன் சோவியத் விண்வெளி வீரர் ஒருவர் ஒரு விண்கலத்தில் உலகைச் சுற்றிவர அனுப்பப் படுகிறார். அவர் வேலை முடிந்து அந்த விண்கலம் திரும்புவதற்கான ஆயத்தங்களில் இருக்கும்போது ஒரு பிரச்சனை பூதாகரமாக எழுகிறது – திரும்பி எங்கே போவது? அவரை விண்வெளியில் கொண்டு செலுத்திய சோவியத் நாடு இல்லாமல் போனதால் அவர் எந்த வேறு நாட்டுக்குப் போக வேண்டும்? யாரும் முடிவு எடுக்காமல் சிக்கல் பெரியதாக, அந்த விண்வெளி வீரர் விண்கலத்திலிருந்து வெளியே வந்து பெருவெளியில் பூமியைச் சுற்றும் ஒரு மனித உடல் கொண்ட செயற்கைக் கோளாக மாறிப் போகிற கதை இது.

‘சர்மிஷ்டா’ நான் மகாபாரதத்தின் ஒரு சிறு பகுதியை மாற்றி எழுதிப் பார்த்த கதை. அந்த மாதிரி முயற்சிகளில் அதிக நாட்டம் இல்லை என்றாலும் இந்த ஒரு கதை எழுத எனக்குப் பிடித்திருந்தது. பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவனான யயாதி சக்கரவர்த்தி, சர்மிஷ்டா என்ற இளம் பெண்ணை மணந்து அவள் தந்தை சுக்கிராச்சாரியார் கொடுத்த சாபத்தில் வீழ்கிறான். நடுவயதில் கவியும் முதுமை. அதுதான் சாபம். சாப விலக்காக, அவன் தன் மகன் புருவின் இளமையை யாசித்து வாங்கி அவனுக்குத் தன் முதுமையைத் தருகிறான். யயாதி உலக இன்பங்களில் இளைஞனாக ஈடுபட்டுக் கொண்டிருக்க, இளமையில் முதுமையடைந்த அவன் மகன் புரு வாழ்வின் இறுதி நாட்களைத் தளர்ந்த தேகத்தோடு எண்ணிக் கொண்டிருக்கிறான். புருவின் மனைவி பார்வையில் கதை நடக்கிறது. அவனுடைய இளமை அவளுக்குமானது. அதைத் தொலைக்கும் முன் அவளோடு அவன் பேசி இருக்க வேண்டாமா?

(தொடரும்)

குமுதம் தீராநதி மே 2018 இதழில் பிரசுரமானது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன