New: எழுதி வரும் நாவலில் இருந்து..

Draft awaiting editing

மேன்செஸ்டர், விமானம் விண்ணேறிப் பறக்கும் அழகான வெளியும், குளிர் சற்றே பூசிய நவம்பர் மாதக் காற்றும், இதமாகக் காயும் வெய்யிலுமாக வரவேற்றது. பதினைந்தே நிமிடத்தில் எமிக்ரேஷன் சோதனைகள் உடனடியாக முடிந்து, பேக்கேஜ் கன்வேயர் பெல்ட்டில் வந்து சேர்ந்து, விமானம் இறங்கிய பதினைந்தாம் நிமிடம் ஏர்போட்டின் வெளியே இருந்தான் சிவா.

ஒரே ஒரு டாக்சிதான் வெளியே இருந்தது. யாரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நாற்பது பேர் விமானம் விட்டு இறங்கியதில் சிவா தவிர வேறு எல்லாருக்கும் கூட்டிக்கொண்டு போக யாரோ வந்திருந்தார்கள் போல. ஐந்தே நிமிடத்தில் அந்த இடமே காலியாகி, அவன் மட்டும் டாக்ஸி ஸ்டாண்டுக்கு நடந்தான்.

இதென்ன இவ்வளவு பெரிய நகர விமான நிலையத்தில், டாக்ஸி நிறுத்துமிடத்தில் ஒரே ஒரு டாக்சி தானா இருக்கும்? அதற்கும் டிரைவர் இல்லை. வெளியே ஒரு இளம்பெண் டாக்ஸியில் சாய்ந்தபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. நீளமான வெள்ளைப் பாவாடையும், அழகான கத்தரிப்பூ சட்டையும் அணிந்து, ஷேக்ஸ்பியர் நாடகத்திலிருந்து வந்திறங்கிய பெண்.

டிரைவர்கள் எந்த ஊரிலிருந்தாலும் ட்ரைவர்கள்தான். வண்டியை ஓரமாகப் போட்டுவிட்டு பக்கத்தில் டீ குடிக்கவோ, சிகரெட் பற்ற வைக்கவோ, அவசரமாக ஏதாவது சாப்பிட்டு வரவோ போகிறவர்கள் அவர்கள். பயணங்களுக்கு இடையே தின்று, குடித்து, சிறுநீர் கழித்து, வீட்டுக்கு தொலைபேசி அவர்களுக்கு தெருவிலேயே பாதி வாழ்க்கை கழிந்துபோகும். இந்தக் காரின் ட்ரைவர் எங்கே போனார்?

”நான் உனக்கு உதவி செய்ய முடியுமா?”

அந்தப் பெண் சிகரெட்டை ஷூவால் அணைத்துக் கையிலெடுத்துக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு சிவாவைக் கேட்டாள். இளம்பெண் இல்லை. அவள் பக்கத்தில் வந்தபோது சுருக்கங்கள் கண்ணில் தெரிந்தன. நடுவயது? நாற்பது? ஐம்பது?

சிவா மறக்காமல் தேங்க்யூ சொன்னான்.

“இந்த டாக்சியோட ட்ரைவரை தேடறேன்”.

“அப்படியா, சொல்லு, எங்கே போகணும்?”

அந்தப்பெண் காரை ரிமோட் அழுத்தித் திறந்தாள். ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டீரிங்கைப் பற்றியபடி கேட்டாள்.

சிவாவுக்கு ஒரு நிமிட ஆச்சரியம். இவள் இந்தக் காரை ஓட்டுகிறவளாக இருக்கலாம் என்று ஏன் தோன்றவில்லை? பெண் டாக்ஸி ட்ரைவர்களை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கூட அவன் பார்த்ததில்லை. இங்கே முதல் தடவையாக இந்தப் பெண்.

“வெளியூர்’”.

“லண்டனா? பாரீஸா? ஆம்ஸ்டெர்டாமா?” அவள் சிரித்தபடி கேட்டாள்.

”லண்டன் இருநூத்தெழுபது கிலோமீட்டர். இப்போ கிளம்பினா நடுராத்திரிக்குப் போய்ச் சேரலாம். பாரீஸ், படகுத்துறைக்குப் போய், காரை படகுலே ஏத்திக்கிட்டு ப்ரான்ஸ் எல்லைக்குப் போய் அங்கேயிருந்து ஓட்டிப் போகணும். எப்படியும் நாளைக்குப் பகல்லே ஈபில் டவர் பக்கமா நின்னுக்கிட்டிருக்கலாம். ஆம்ஸ்டர்டாம் நானே போனதில்லே”

“எனக்கு அங்கே எல்லாம் போகவேண்டாம் மேடம்”.

“மேடமா? அது ப்ரொபஷனல் செக்ஸ் ஒர்க்கர்ஸ் வச்சு நிர்வகிக்கற கம்பெனி மேனேஜரைக் கூப்பிடற வடிவம். நான் அந்தத் தொழிலுக்குப் போகிறபோது சொல்றேன். கூப்பிடு”.

அவள் இன்னும் உரக்கச் சிரித்தாள். கூப்பிடு தூரத்தில் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு தலை உயர்த்திப் பார்த்து, என்ன சேதி என்று விசாரித்தது. பதில் வராமல் போகவே திரும்ப புல் தின்னப் போய்விட்டது.

இருட்டிக் கொண்டு வந்தது. நாலைந்து தூறல் வேறே பலமாக கைத்தண்டையில் விழுந்தது. சிவா குனிந்து காருக்குள் பார்த்து,ச் சொன்னான் –

“சிஸ்டர், நான் கால்டர்டேல் போகணும், கொண்டு போய் விடுவீங்களா?”

“எக்ஸ்சலெண்ட். இப்படி என்னை இதுவரை என் தம்பி மட்டும் கூப்பிட்டிருக்கான். அரைத் தம்பி. எங்க அம்மாவோட ரெண்டாவது புருஷனோட பிள்ளை”.

சிவாவுக்குப் பழகாத சமூகம் அது. இப்படி ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஒரு பெரிய புல்வெளியில் நின்றபடி விவாதிக்க எப்போது அவகாசம் வாய்த்தது அங்கே? பிரிட்டன் பிரிட்டன் தான்.

”நான் சிவா”, அவன் தன் கையை நீட்டிக் குலுக்கினான்.

கார்க் கதவை நன்றாகத் திறந்தபடி அவள் கையை இறுகப் பற்றிச் சொன்னாள் : “லிண்டா. லிண்டா அட்கின்சன்”.

சிவா இழுத்து வந்த லக்கேஜை காரில் பின்னால் வைத்துவிட்டு சௌகரியமாக முன்னால் உட்கார நினைத்தான். “டிக்கியை ஓபன் செய்ய முடியுமா, ப்ளீஸ்” அவன் கேட்டபோது அவள் அடக்க முடியாமல் சிரித்தாள்.

“ஏன், என்ன ஆச்சு?” தப்பா ஏதும் சொல்லிட்டேனா? சிவா குழப்பத்தின் உச்சத்தில் இருந்தான். “அவள் அவன் கையைப் பற்றியபடி சொன்னாள் – “இங்கே டிக்கி இதுதான்” அவன் பின்புறத்தைச் சுட்டிக்காட்டி அடுத்த சிரிப்புக்கிடையே பாதி சைகையும் வார்த்தையுமாகத் தெரிவித்தாள்.

“ஐயையோ, அக்கான்னு சொல்லியாச்சு, வேறே நினைவெல்லாம் இல்லே. தப்பான வார்த்தைன்னா மன்னிச்சுக்கணும் லிண்டா. இங்கே கார் பின்புறத்துக்கு என்ன சொல்லணும்?”

“பூட். அதுதான் இங்கே புழங்கற வார்த்தை”. அவள் பொத்தானை அழுத்த காரின் பூட் திறந்து உயர்ந்தது. லக்கேஜை உள்ளே போட்டு இறக்கி மூடியபிறகு சிவா முன்னால் உட்கார்ந்தான்.

“போகலாமா?”

“நாற்பத்தெட்டு கிலோமீட்டர். நாற்பது பவுண்ட் கட்டணம். நடுவில் காம்ப்ளிமெண்டரி டீ, பிஸ்கட் உண்டு” லிண்டா அநாயாசமாகக் காரை வளைத்துத் திருப்பியபடி சொன்னாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை படர்ந்து விரியும் புல்வெளி. தொடுவானத்துக்கு அப்பாலும் அதுதான் இருக்கும். அங்கங்கே பசுக்களைப் போல் பெரியதாக உருண்டு திரண்ட செம்மறி ஆடுகள் சாவகாசமாக அசைபோட்டபடி அததற்கான மோனத்தில் மூழ்கி நின்றன. இத்தனை ஆடுகளையும் மேய்க்கிற ஒரு ஆணோ பெண்ணோ கண்ணில் தட்டுப்படவில்லை. அவை தாமே அந்தந்த நேரத்துக்குப் பட்டியைத் திறந்து வெளியே வந்து ஆற அமர மேய்ந்து விட்டு சாயங்காலம் கூட்டமாகத் திரும்பப் போய்ப் பட்டியில் அடைந்து உறங்குமோ. இங்கிலீஷில் மேயும் ஆடுகள் அவை எல்லாம். தமிழில் தஞ்சாவூர்க் கிராமப் புறத்தில் மேயும் சோனியான ஆடுகளை மிரட்டி ஒடுங்க செய்யக் கூடிய பெரிய செம்மறிகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன