New: புது நாவல் : மேன்செஸ்டர், குளிர் பூசிய நவம்பர் மாதக் காற்றும், இதமாகக் காயும் வெய்யிலுமாக வரவேற்றது

(First cut – awaiting editing)

வெளிச்சம் மங்கிக்கொண்டு வந்ததாகத் தோன்றியது. சற்றே புழுக்கம் தொடங்கியிருந்தது. ஆஸ்ட்ரிக்ஸை மூடி வைத்துவிட்டு விமானத்தின் அந்தக் கோடிக்கு மெல்ல நடந்தான் சிவா. முன்னால் இடத்தை அடைத்துக்கொண்டு ஒபீலிக்ஸ் நடப்பதாகக் கற்பனை செய்யச் சிரிப்பு வந்தது. சின்னவயதில் இருந்து ஈடுபாட்டோடு படித்த காமிக்ஸ் ஆஸ்ட்ரிக்ஸ். அதன் நுண்ணரசியலையும், நளினமான நகைச்சுவையையும் அவன் புரிந்துகொண்டபோது பிள்ளைப் பருவம் கழிந்து எத்தனையோ வருடமாகி இருந்தது. ஆஸ்ட்ரிக்ஸ், ஒபிலீக்ஸ், கெடாபிக்ஸ், காகஃபோனிக்ஸ்.. உங்கள் உலகம் ரம்மியமானது. அங்கே தாமதமாகும் விமானப் பயணங்கள் கிடையாது. விழுந்து விழுந்து எழுந்திருந்து மேலே வரப்பார்க்கும் சிவா போன்ற கம்ப்யூட்டர் ப்ராஜக்ட் மேனேஜர்கள் கிடையாது. கம்ப்யூட்டர்களும்.

கழிப்பறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது கொஞ்ச தூரத்திலிருந்தே தெரிந்தது. வயதான பயணிகள் இரண்டு பேருமே காணவில்லை. தாத்தா பாட்டியை சூசு போகக் கூட்டிப் போயிருக்கார். சிரிப்பு வந்தது. அதன் பின்னால் இருக்கும் ஆழ்ந்த அன்பும், பிரியமும் சிரிக்காதே என்றது. அந்த வயதில் பாத்ரூம் அழைத்துப் போவதுதான் காதல். பிளட் பிரஷர் மாத்திரை சாப்பிட்டாயா என்று விசாரிப்பது தான் கொஞ்சுதல். குழந்தைகளாகச் சேர்ந்து சிரிப்பதுதான் நையாண்டியும் கிண்டலும். குழந்தைகளுக்குக் காமம் தெரியாது. பாத்ரூம் கதவு திறக்க ஒன்றாக வந்த பெரிசுகள் அவனைப் பார்த்தபடி வெளியே வந்தன. பாட்டி வயதில் அழகாக வெட்கம் படர, தரையைப் பார்த்தபடி கிழவரின் தோளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“நீங்க பாகிஸ்தானா?” பெரியவர் தடுமாறும் இங்க்லீஷில் சிவாவைக் கேட்டார். இந்தியன் என்றான். அவர் தலையை ஆட்டி வரவேற்றுவிட்டுச் சொன்னார், “நாங்க மலேயாவிலே இருந்து வரோம். இந்தியாக்காரங்க தான். என் தாத்தா காலத்திலே மெட்றாஸ் பக்கம் இருந்து ரப்பர் தோட்டத்து வேலைக்குப் போனவங்க”.

“தமிழ் பேசுவீங்க தானே?” சுதா கேட்க, அந்த முதியவர்களின் முகங்கள் நூறு வாட்ஸ் பல்பு போட்டதுபோல் பிரகாசமடைந்தன. அவர்களுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்து இதுவும் அதுவுமாக குடும்பம், உத்தியோகம், பிடித்த சாப்பாடு என்று பேசிக்கொண்டிருக்க, ஷாப்பிங்க் போன பயணிகள் வரிசையாக உள்ளே நுழைந்தார்கள். சிவா விடைபெற்று அவனுடைய இருக்கைக்கு நடந்தான்.

முன்சீட் குஜராத்திப் பெண் ஒரு பெரிய பொதியை மேலே லாக்கரில் வைக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். சிவா எழுந்து நின்று அவளுக்கு உதவியாக லாக்கர் கதவைத் திறந்து அந்தப் பொதியை உள்ளே தள்ள, அவள் பதைபதைத்து, “பாயிசாப், தீரே ஸே தீரே ஸே” என்று மெதுவாக உள்ளே பொதியை வைக்கச் சொன்னாள். “அத்தனையும் சாக்லெட்” அவள் முகத்தில் பெருமையும் சாதனை செய்த மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தது.

கையில் பிடித்துக் கடிக்க ஆரம்பித்த சாக்லெட் பாரை சிவாவிடம் நீட்டி, எடுத்துக்குங்க என்றாள். முழுசா வேணும்னாலும் எடுத்துக்குங்க. நான் கடையிலேயே ஒரு பெரிய பீஸ் சாப்பிட்டுட்டேன் என்றாள். ஒரு சிறு துண்டை உடைத்தெடுத்து அவன் நன்றி சொல்லி மெல்ல ஆரம்பிக்க விமானம் ரன்வேயில் ஓடி மேலெழும்பத் தொடங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன