பயணிகள் கவனத்திற்கு

 

அற்ப விஷயம் -12

ஆலப்புழை எக்ஸ்பிரஸ் முக்கி முனகியபடி ஊடல் கொண்ட புதுப் பெண்டாட்டி மாதிரி ஊர்கிறது. மேற்கே சூலம், தென்மேற்கில் ஈட்டி, வடக்கே பிச்சுவா என்று ஜோசியர்கள் காலை நேர பண்பலை ஒலிபரப்பில் சொன்னதாலோ என்னமோ ரயில்பெட்டியில் கூட்டமே இல்லை. நடுராத்திரியில் கம்பளிப் போர்வையை பிடித்திழுத்து உலுக்கி எழுப்பி என்னை யாரோ விசாரிக்கிறார்கள் – ‘சேட்டா ஆலப்புழைக்கா?’ இல்லே, அமெரிக்கா போறேன் என்று சொல்லலாமா? வேணாம். இந்த ஆள் அதை ‘ஆ மரிக்கப் போறேன்’ என்று அர்த்தம் செய்து கொண்டு எதுக்குச் சாகக் கிளம்பினே சேட்டா என்று உயிரை வாங்குவார். அவர் வாயில் சோமபானமோ சுராபானமோ ஏதோ ரம்மியமாக வாசனை அடிக்கிறது. காலையில் எரணாகுளம் வரும்வரை அவர் தயவில் மலையாள அரசியல், மம்முட்டியின் மாயாபஜார் சினிமா, தேங்காய் விலைவாசி நிலவரம் என்று கேரளா நியூஸ்தான்.

வரவர பயணம் போகணும் என்றாலே என்ன சொல்லித் தப்பிக்கலாம் என்று மனசு திட்டம் போட ஆரம்பிக்கிறது. பெங்களூருக்குப் போகச் சொன்னால் உதறல்தான். பஸ்ஸில், ரயிலில் போகும் முன்னால் லேட்டஸ்ட் அரசியல், சினிமா நிலவரங்களைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். வண்டி பாதியில் நிறுத்தப்பட்டால் சொந்த ஊருக்கு நடந்தாவது வர வழி தெரியணும். விமானத்தில் கிளம்பினால், பெங்களூர் புது விமான நிலையத்தில் கொண்டு போய் விடுகிறார்கள். அது ஊரை ஏகத்துக்குத் தாண்டி, கிட்டத்தட்ட மைசூர் பக்கத்தில் இருக்கிறது. அங்கேயிருந்து பெங்களூருக்கு இன்னொரு பயணம். டாக்சியைப் பிடித்து சுமார் ரெண்டு மணி நேரம் கழித்து பெங்களூரை அடையலாம். இதுக்கு தனிச் செலவு ஏறக்குறைய ஆயிரம் ரூபாய். நேரம் போதாமல் பரபரப்பாக ஒரு பிசினஸ் மீட்டிங் முடித்து அடுத்த மீட்டிங் போகிற, பாக்கெட்டில் காசு நிரம்பி வழிகிறவர்களுக்காக பெங்களூர் ஏர்போர்ட்டில் இருந்து நகர மையத்துக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்கப் போகிறார்களாம். ஐயாயிரம் ரூபாய் தான் கட்டணம். ஆமா, ஹெலிகாப்டர் ஒவ்வொரு தெருவாக எப்படி நின்று ஆளை இறக்கிவிடும்? மேலே பறந்தபடியே உத்தேசமாக ‘ஸ்டாப்’ சொல்லி, பாராசூட்டை விரித்துக்கொண்டு குதித்துவிட வேணுமா? ஊசிமுனை கோபுரத்து மேலே பறக்கும்போது காலை விரித்தபடி எக்குத்தப்பாகக் குதித்தால் என்ன ஆகும்?

வெளியூர்ப் பயணம் இந்த லட்சணத்தில் என்றால், ஊருக்குள் போக்குவரத்து? கொல்கத்தாவில் இருந்து சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். காலையில் நண்பர் எழுப்பினார். ‘சுறுசுறுன்னு குளிச்சுட்டு கோமள விலாஸ்லே நாலு இட்லி சாப்பிட்டு கிளம்புங்க. இப்பப் புறப்பட்டா சரியா இருக்கும்’. எதுக்கு? சாயந்திரம் இல்லையா சென்னைக்கு ரயில் புறப்படுகிறது? அவர் என் அறியாமையை எள்ளி நகையாடினார். ‘அது சரி. கொல்கத்தாவிலே பண்டிகை நேரம் இது. தெருவுக்குத் தெரு பந்தல் போட்டு காளியாத்தா சிலை வச்சு பூஜை. ஆரத்தின்னு அமர்க்களப் படறதைப் பார்த்திருப்பீங்களே’. பார்த்திருக்கேன். பொந்தால் என்று நம்ம தமிழ்ச் சொல்லை வங்காள உச்சரிப்பில் சொல்லி, தெரு ஓரமாக நீள நெடுக்க மூங்கில் வைத்துக் கட்டி கூட்டம் வரிசையாகப் போகவர வழி செய்திருக்கிறார்கள். நடுத் தெருவும் அவ்வப்போது துர்க்கை பூஜைக்காக வசூல் செய்ய, விளக்கு போட்டு விழா நடத்த தாராளமாக ஆக்கிரமித்துக் கொள்ளப்படுகிறது. போதாக்குறைக்கு அரசியல் கட்சிக் கூட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், மறியல். கொல்கத்தாவுக்கே உரிய சாலை நெரிசல். வெள்ளை வெளேர் உடுப்பு அணிந்து பிரிட்டீஷ் காலத்துத் தொப்பி வைத்த போலீஸ் இருபத்தொண்ணாம் நூற்றாண்டு போர்ட் ஐகான் காரும், பத்தொன்பதாம் நூற்றாண்டு டிராமும் நெருக்கமாக ஊரும் தெருவில் விசில் ஊதிக்கொண்டு டிராபிக்கை ஒழுங்கு படுத்துகிறேன் என்று பெயர் பண்ணுகிறார்கள். சாயந்திர ரயிலைப் பிடிக்க காலை ஒன்பது மணிக்குக் கிளம்பி, நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நேரத்துக்கு ஸ்டேஷன் போய்ச் சேரலாம்.

கொல்கத்தாவிலும் மற்ற இந்திய நகரங்களிலும் போக்குவரத்தை கொஞ்சம் போல் சௌகரியமாக்க வேணும். கூடவே கணிசமாகக் காசும் பார்க்கணும். இந்த சீரிய நோக்கத்தோடு ஒரு லட்சம் ரூபாயில் நானோ என்ற பெயரில் மக்கள் கார் தயாரிக்கிறேன் என்று போன வருடம் ரத்தன் டாட்டா முன்வந்தார். வீட்டு வேலைக்காரியும், கூர்க்காவும், பிளம்பரும் எல்லாம் இனி நானோ காரில் போவதாக மேல்தட்டு ஆங்கிலப் பத்திரிகைகள் கார்ட்டூன் போட்டு நக்கலடித்தன. அதைப் படிக்கிறவர்களில் பலர் ஏற்கனவே கார் உள்ள வர்க்கம் என்பதால் இந்த வயித்தெரிச்சல் ஜோக் பிடிக்கும் என்பது அவர்களின் கணக்கு.

ஆனாலும் டாட்டாவை வங்காள அரசு இருகரம் நீட்டி வரவேற்றது. டாட்டா பிர்லா கூட்டாளி, பாட்டாளிக்குப் பகையாளி என்று இதுவரை மேடையில் முழங்கிய தோழர்கள் சுருதி மாற்றி, டாட்டாவை பாட்டாளிக்கு சேக்காளியாகக் காட்டினார்கள். கூடவே விளைச்சல் நிலமாக நானூறு ஏக்கர் விவசாயிகளிடம் இருந்து அவருக்கு பட்டா மாற்றிக் கொடுத்து தொழிற்சாலைக்காகக் காத்திருக்க, எதிர்க் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி திடும் பிரவேசம். நிலத்தைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி போராட்டம். நஞ்சையா நானோவா? இரண்டும் இல்லை. மம்தாவுக்கு வெற்றி. குஜராத்துக்குக் குடிபெயர்ந்த நானோவால் நரேந்திர மோடிக்கும் வெற்றி. வங்க அறிவுஜீவிகள் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு விவாதிக்கிறார்கள். டிராம் வண்டி வழக்கம் போல் ஊர்கிறது.

(published in last week’s Kungumam)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன