அஞ்சலி – மேனாள் அமைச்சர் திரு செ.மாதவன்

ஊரில் ரெட்டைத் தெருவுக்கு ஒரு முகம் உண்டு. கிழடு தட்டிக் கொண்டிருக்கும் அந்த முகம் தலையில் டர்பன் கட்டியிருக்கும். கொஞ்சம் சிடுசிடுவென்று இருக்கும். இங்கிலீஷ் சரளமாகப் புரண்டு வரும் நாக்கு. லா பாயிண்ட்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லக்கூடிய மூளையும் டர்பனுக்கு உள்ளே உண்டு. ஊர்ப் பிரமுகர்களில் முக்கால்வாசிப்பேர் டர்பன் கட்டிய ரெட்டைத் தெரு வக்கீல்கள்.

சமயத்தில் பந்து வக்கீல் ஆபீசுக்குள் புகுந்துவிடும். டர்பன் கட்டிய வக்கீல்களின் ஆபீசில் படியேறிப் பந்தைக் கேட்டால் இங்கிலீஷில் பாய்ந்து வரும் கேள்விகளை எதிர்கொள்ளவேண்டி வரும். பதிலும் இங்கிலீஷில் எதிர்பார்க்கப்படும். அதில் வினைச்சொல், இறந்த காலம், நிகழ்காலம், கஷ்ட காலம் தப்பாக இருந்தால் உடனடியாகத் திருத்தப்படும். ‘ரென் அண்ட் மார்ட்டீன் கிராமர் புத்தகத்தை அந்தக் காலத்தில் கதைப் புத்தகம் மாதிரி வாசிப்போம்’. பந்தைக் கொடுக்கும்போது வக்கீல்கள் வழக்கமாகச் சொல்வது இது. அதெல்லாம் எதுக்கு? ரென் அண்ட் மார்ட்டினைப் பாராயணம் செய்தால் வருங்காலத்தில் டர்பன் கட்டிக்கொள்ள வேண்டிவரும். குதிரை வண்டியில் கோர்ட்டுக்குப் போகவேண்டி இருக்கும் மூல நோக்காட்டுக்குக் களிம்பு வாங்கிவர குமாஸ்தா¨வை அடிக்கடி டாக்டர் வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கும். டாக்டர் எல்லாத்துக்கும் ஒரே களிம்புதான் தருவார்.

வக்கீல் மாதவன் டர்பன் எல்லாம் கட்டுவது இல்லை. இளவயசு. சாந்தமான முகம். அவர் தலையை அடிக்கடி நாங்கள் அடித்த பந்து பதம் பார்த்ததுண்டு. குமாஸ்தா கோபப்பட்டாலும், அவரை அடக்கிவிட்டு, சகஜமாகச் சிரித்தபடி நின்றபடிக்கே பௌலிங் போடுவதுபோல் எங்களைப் பார்த்துப் பந்தை எறிவார். ‘ஜில்லுனு பானைத் தண்ணி இருக்கா தம்பி’. எதிர் வீட்டு சவுந்தரராமனை எப்போது அவர் கேட்டாலும் வெங்கல கூஜா நிறைய ஆரஞ்சு ஜூஸ் நிறத்தில் ஊருணித் தண்ணீரோடு சவுந்தரராமன் ஓடி வருவான்.

வக்கீல் மாதவன் அப்புறம் தேர்தலில் நின்றார். சட்ட அமைச்சரானார். பக்கத்து ஊர்தான் தொகுதி. எங்கள் ஊராக இருந்தால், எங்களுக்கு ஓட்டு இருந்தால் நிச்சயம் அவருக்குத்தான் போட்டிருப்போம். ரென் அண்ட் மார்ட்டினை ஞாபகப்படுத்தாத காரணத்துக்காகவே.

வக்கீல் மாதவன் அறிஞர் அண்ணா கட்சி. அண்ணாவும், கலைஞரும், நாவலரும் மற்ற பெரிய தலைவர்களும் பங்கெடுத்துக்கொண்ட மாநாடு ரயில்வே ஸ்டேஷன் போகிற வழியில் ஆவாரங்காட்டுப் பொட்டலில் நடந்தது. ‘வரப்போற எலக்ஷன்லே அண்ணாதான் ஜெயிப்பார்’ எங்களுக்கு இரண்டு வருடம் மூத்த பள்ளிக்கூட சீனியர்கள் சொன்னார்கள். அண்ணா வந்தால் இந்தி வாத்தியார் பிரம்படி இருக்காது.

அருமையாக அலங்கரித்த ரதத்தில் அண்ணா கையை அசைத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தார். எங்கள் வீட்டு வாசலில் ரதம் நின்றுபோய்விட்டது. அண்ணா புன்சிரிப்போடு இறங்கி நடக்க ஆரம்பித்தார். அந்தக்கால முரசொலி மலர் கிடைத்தால் பாருங்கள். அட்டையில் பெரிய புகைப்படம் தட்டுப்படும். அண்ணா, ரதம், எங்கள் வீட்டு வாசல். கம்பிக் கதவுப் பக்கம் தொளதொளவென்று நிஜார் அணிந்து கொண்டு

(என் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ பயோபிக்‌ஷனல் நாவலில் இருந்து)
——————-

மேனாள் சட்ட அமைச்சர் திரு மாதவன், தன் 85-ம் வயதில் நேற்றுக் காலமானார் என அறிந்து வருந்துகிறேன். அவர் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன