New : நாவல் 1975 : என்னைத் தவிர யாரும் கதை நான்லீனியராக நகர்வதை லட்சியம் செய்யவில்லை என்பதை உணர்ந்த கணத்தில்

நான் எழுதி வரும் (நிறைவு செய்து கொண்டிருக்கும்) நாவல் 1975-இல் இருந்து சில பகுதிகள்

ஹோலியும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்திருக்கிறது. மார்ச் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இது. தெருவில் தெரிந்தவர்களும் பரிச்சயமில்லாதவர்களும் வண்ணப்பொடி கலந்த தண்ணீரை எதிர்ப்படுகிறவர்கள் மேலெல்லாம் அடித்து விளையாடும் நாள். குளிர் இந்தத் தினத்தோடு விடைபெறும்.
#1975_நாவல்

குளிரோடு எமர்ஜென்சியும் கூடவே இந்திரா காந்தி அரசும் விடைபெற்றுப் போகப்போவதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. எமர்ஜென்சி ஒழிந்து போகிறது என்ற மகிழ்ச்சி அத்தனை முகங்களிலும் ஹோலிக்கு முன்பே வண்ணச் சிதறலாக படிந்து நிற்கிறது

#1975_நாவல்

லோக்சபா கலைக்கப்பட்டுவிட்டது. உள்ளே இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியே வந்த மறுநிமிடம் புதுக் கட்சியை ஏற்படுத்தி எல்லாப் பிணக்கையும் தள்ளி வைத்துவிட்டு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

இந்திராவை எதிர்ப்பது என்ற ஒற்றைவரி அஜண்டாவோடு இவர்கள் எப்படி மாற்று அரசாங்கம் கொண்டு வருவார்கள் என்று அங்கங்கே அறிவு ஜீவிகள் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு விவாதித்தாலும், எமர்ஜென்சி போய்த் தொலைந்ததில் அவர்களுக்கும் மிட்டாய் தின்னும் குழந்தைகளாக சந்தோஷம்
#1975_நாவல்

ஈராஸ் தியேட்டர் ஆப்பரேட்டருக்கு தமிழ் தெரியாததால் பிலிம் சுருள்களை சரியான வரிசையில் போடாமல் படத்தில் ஏகக் குழப்பம். எஸ்.வரலட்சுமி பாடி முடித்து ஐந்து நிமிடத்தில் அதே பாடலை எம்.ஜி.ஆர் பாடுகிறார். புதிய கதாபாத்திரங்கள் வேறே, சுபாவமாகச் சுற்றி வருகிறார்கள்.

எதற்கும் கலங்காத புரட்சித் தலைவர் ஏசுதாஸ் குரலில் பாடிக் கொண்டிருக்கிறார் :

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
#1975_நாவல்

என்னைத் தவிர யாரும் கதை நான்லீனியராக நகர்வதை லட்சியம் செய்யவில்லை என்பதை உணர்ந்த கணத்தில் நானும் மௌனமாக உட்கார்ந்து ரசிக்க ஆரம்பித்தேன். பக்கத்தில் லட்சுமண் கௌடாவின் அப்பா அந்த நடுக்கும் குளிரிலும் வெட்டிவேர்த் தட்டி விசிறியை எடுத்து வந்து விசிறிக் கொண்டிருக்கிறார்
#1975_நாவல்

மதராஸிகளிடம் நான் வேலை மெனக்கெட்டுப் போய் ஆஷாராணிக்காக பிரசாரம் செய்து புண்ணியமில்லை. சர்க்கார் வேலைக்காரன் நான். எலக்ஷன் பிரசாரம் எல்லாம் செய்ய அனுமதி இல்லை. வாய் வார்த்தையாக நேரில் போய்ப் பார்த்துச் சொன்னாலும், என்னைப்போன்ற பேங்க் அதிகாரி மெட்ராஸ்காரர்கள் இங்கே ஓட்டுப் போட முடியாது. இந்த நியூடெல்லி தொகுதி லாஜ்பத் நகர், ஜங்புரா, கோல் மார்க்கெட், சரோஜினி நகர் இப்படி ஏழு நிலப்பிரதேசங்கள் அடங்கியது. அவற்றில் ஒன்றுகூட மதராஸ் இல்லை. இதை ஆஷாராணி பட்னியிடம் விளக்கினேன் அது நேற்றைக்கு சாயந்திரம் பேங்க் அரை நாள் சனிக்கிழமைக்கு வேலை பார்த்து முடித்த பின்.
#1975_நாவல்

சாவகாசமாக நீதிக்குத் தலைவணங்கிக் கொள்ளலாம் என்று உத்தேசித்து காலுவோடு கூட வெளியே வந்தேன்.

“பட்னிக்கு நம்ம பேட்டையிலே லாட்டா ஐம்பது லட்சம் ஓட்டு விழுது. வாஜ்பாயியும் அவுட், சஷிபூஷனும் அவுட். ஒரு பிரமாதமான ஐடியா வந்திருக்கு, அதை பேசத்தான் கூப்பிட்டேன்” என்றான் காலு.

லாஜ்பத்நகர் நாலு பகுதிகள் தொடங்கி நிஜாமுதீன், ஜங்க்புரா, டிபென்ஸ் காலனி, லோதிரோடு, கோல்ஃப் லிங்க்ஸ் என்று சேர்த்துக் கொண்டாலும் ஐம்பது லட்சம் வாக்காளர்கள், ஏன் ஜனத்தொகையே இங்கே கிடையாது என்று அவனிடம் சொன்னேன். அது ஐம்பது லடசம் ஆகணும்னா என்ன செய்யணும் என்று கேட்டான். காலையிலே கெட்ட வார்த்தை பேசுவதில்லை, அதுவும் ஹோலி அன்றைக்கு என்று தெரியப்படுத்தினேன்.
#1975_நாவல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன