New Novel ‘1975’ : எமர்ஜென்சி பற்றி நெகட்டிவ் ஆகச் சொல்கிறார். பக்கத்தில் நின்றாலே ஆபத்து. விலகி நின்றேன்

மூன்று மணிக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது, “உள்ளம் உருகுதையா” என்று கோவிலில் மார்கழி மாதத்துக் காலையில் பாடுவது போல் லவுட்ஸ்பீக்கர் பாடிக் கொண்டிருந்தது. “இருபது அம்சத் திட்டம்”, என்று எழுதி இருந்த துணி பேனர்களை கதர் உடுத்த சிலர் மேடைக்குப் பின்னால் ஏற்றிக் கொண்டிருந்தனர். உள்ளூர் ரெவின்யூ தாசில்தாரும், அவர் ஆபீஸ் கூட்டமும் என்று மேனேஜர் சொன்னார். தாசில்தாரும், கலெக்டரும் பொதுக்கூட்டத்துக்கு பேனர் கட்டி, சவுண்ட் டெஸ்டிங் ஒன் டு த்ரீ என்று ஒலிபெருக்கி, மைக் டெஸ்ட் செய்து, பாட்டு போட்டுக் கொண்டிருந்தால், தாசில்தார், கலெக்டருக்கு விதிக்கப்பட்ட வேலையை யார் பார்ப்பது? அங்கே அதெல்லாம் நினைக்க ஆளில்லை. இருபதம்ச திட்டம் தவிர வேறே யாரும் எதையும் யோசித்ததாகத் தெரியவில்லை. இந்த நினைவு எழுந்தபோது இன்னொரு சின்ன பேனரில் சஞ்சய் காந்தி ஐந்தம்சத் திட்டம் என்று எழுதி பிடித்துக் கொண்டு இரண்ட் இளைஞர்கள் பாய்ந்து மேடை ஏறினார்கள். தாசில்தாரும், ஆர்டிஓவும் கட்டிய இருபதம்சத் திட்டம் பேனர் மேல் கால்வாசி மறைத்துக் கொண்டு ஐந்தம்சம் உட்கார்ந்தது. இந்திரா காந்தி படத்தில் மூக்குக்கு மேல் வீறாப்பாக நிற்கிற சஞ்சய் காந்தி படம்.

“இந்த லோன் இருபதிலே வருமா, அஞ்சுலேயா?” மேனேஜர் நியாயமான சந்தேகத்தை எழுப்ப, ஆர்டிஓவும், தாசில்தாரும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்கள். “எம்பி என்னன்னு பேசறாரோ அதுபடிக்கு போட்டுடுங்க” என்றார் ஆர்டிஓ ஒரு முடிவுக்கு வரமுடியாமல். நல்லெண்ணெய் செக்கு வைத்து வியாபாரம் செய்து தில்லிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் போனவருக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் ஐந்து அம்சம் இருபது அம்சத்துக்கும் என்ன வேறுபாடு சொல்ல முடியும் தெரியாது யாருக்கும்.

ஜெபர்சன் என்னைப் பார்த்துப் புன்னகை பூத்தார். “என்ன தோழர்?” என்று கேட்டேன். “அவங்க தில்லியிலே குனியுங்கன்னு தான் சொன்னாங்க. இவங்க நம்மூர்லே தரையிலே மண்டி போட்டு தவழ ஆரம்பிச்சுட்டாங்க” என்றார் அவர் பூடகமாக, எமர்ஜென்சி பற்றி நெகட்டிவ் ஆகச் சொல்கிறார். பக்கத்தில் நின்றாலே ஆபத்து. மெட்றாஸ் பீச்சில் கருப்பு சதுரம் போட்ட நோட்டீஸைப் பிடுங்கிப் போன போலீஸ் சொன்ன மாதிரி, “இதெல்லாம் கவர்மெண்ட் விரோதமான சமாசாரம். கையிலே வச்சிருந்தாலே குற்றம்”.

நான் என்னை அறியாமல் ஜெபர்சன் அருகில் இருந்து விலகி நின்றேன். பக்கத்தில் இருந்த குருவிக்காரர்களின் கூட்டம் மேனேஜர் எவ்வளவு சொல்லியும் நாற்காலிகளில் உட்கார மாட்டோம் என்று சொல்லித் தரையிலேயே குந்தி இருந்தது.

“இன்னிக்கு ஹீரோ, ஹீரோயின் நீங்க தான். தயவு செஞ்சு நாற்காலியிலே உட்காருங்கப்பா, டீ தரச் சொல்றேன்”, கேஷியர் வணங்கிச் சொன்னார். “சாமி, டீ கொடுங்க. அது போதும். மகாராசனா நீங்க, அவரு, இவரு, அங்கே நிக்கற்வரு எல்லா பேங்க் சாமிகளும் நல்லா இருக்கட்டும்”..

ஒரு குருவிக்காரக் கிழவர் வாழ்த்தியபடி, பாசிமணி மாலை கோர்ப்பதைத் தொடர்ந்தார். அவருக்குப் பின்னால் உட்கார்ந்து அதே வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ஒரே நேரத்தில் தலை உயர்த்தி ஒருத்தரை ஒருத்தர் பார்க்க, கிழவர் குருவிக்கார மொழியில் – அதற்கு ஒரு பெயர் உண்டாமே – ஏதோ சொல்ல, கூட்டமாக அவர்கள் ஓரமாகப் போய் சாக்கடையில் உமிழும்போது எம்பியின் அம்பாசிடர் கார் கொடி பறக்க வெகு விமர்சையாக வந்து சேர்ந்தது.

எல்லாக் கூட்டத்திலும் தட்டுப்படும் ஊர்ப் பிரமுகர்களான ஹைஸ்கூல் ரிடயர்ட் எட்மாஸ்டர், ஹோமியோபதி வைத்தியர், ஊருக்கு இருந்த ஒரே எழுத்தாளரான டைப் ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர், மங்கையர்க்கரசி மாதர் சங்க செயலாளார் உரக்கடை ஷண்முகநாடார் சம்சாரம் ரோஸ்லின் ரீட்டா அம்மையார் ஆகியோர் ஆளுக்கு பத்து நிமிஷம் அன்னை இந்திரா புகழ் பாடி நாட்டுக்கு எப்படி இருபது அம்சத் திட்டம் தேவையானது என்று சொல்ல, ஓரமாக நின்று எங்கள் மேனேஜரும், ஆர்டிஓ, தாசில்தாரும் மட்டும் வலிக்க வலிக்கக் கை தட்டினார்கள். அக்கவுண்டண்ட் குருவிக்கார கும்பலைக் கை தட்டும்படி சைகை காட்ட, கொஞ்சம் தாமதமாக டால்டா டின்கள் அதிவிமர்சையாகக் கொட்டி முழக்கப்பட்டன. அப்போது மிகப் பெரிய ஜனநாயக நாடு நம் நாடு என்று சொல்லிக் கொண்டிருந்தார் எம்.பி.

எம்.பி பேசும்போது எங்கள் வங்கியின் பெயரைத் தவறாகச் சொன்னார். மேனேஜர் அவசரமாக எம்பிக் குதித்து சரியாகச் சொல்ல, அவர் ஏதோ ஒண்ணு என்றது எங்கள் எல்லோர் மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. ஏதோ ஒண்ணாக இருக்கவா, இத்தனை பாடுபட்டு டாகுமெண்ட் தயார் செய்து எல்லா வேலையும் கருத்தாகச் செய்து கொண்டிருக்கிறோம்.எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு லிஸ்டில் இருந்து பெயர் படிக்க, முதலில் அங்கங்கே கூடியிருந்த ஊர் மகாஜனங்கள் சிரித்த பிறகு அந்தப் பெயருக்கு உரியவர் மேடை ஏறிப் பணமும், துணியும் வாங்கிக் கீழே இறங்கினார். கடைசியாக ரெண்டு பெயர்கள் – எண்ணூறு, ஆயிரம் ஆளே காணோம். இன்னும் இரண்டு தடவை சொல்ல, எம்.பிக்குப் பொறுமை போய், ‘இன்னிக்கு முழுக்க படிச்சுக்கிட்டே இருப்பீங்களா? எனக்கு வேறே வேலை வெட்டி இல்லையா?” என்று எகிறினார். வாழ்க்கை பூரா வெட்டியாகக் கழித்துக் கொண்டிருப்பவரை ஓட்டுப் போட்டு தில்லிக்கு அனுப்பி வைத்து கவர்மெண்ட் கட்டிடத்தில் தூக்கம் போட வைத்தால் இதுவும் சொல்வார், இன்னமும் சொல்வார்.

“இறுதியாக மேனேஜர் பேசுவார்” என்று ஆர்டிஓ அறிவிக்க, தப்பிக்க சைகை கிடைத்த சந்தோஷத்தில் எம்பி கிளம்பினார். “அடுத்த கூட்டம் இருக்கு” என்றார் புன்சிரிப்போடு அவர் மேனேஜரிடம். எல்லா பேங்குகளும் ஏற்பாடு செய்த கடன் தொகையை எடுத்து வழங்கிக்கொண்டே இருக்கிற உன்னதமான உத்தியோகம் அவருக்கு.

மேனேஜர் மைக்கைப் பிடித்து, “துன்பப் பட்டு, துயரப்பட்டு, வாழ்க்கையின் ஓரத்துக்குத் துரத்தப்பட்டு, தள்ளி வைக்கப் பட்டு” என்று அவருக்கு சம்பந்தமே இல்லாத அடுக்கு மொழியில் பொழிந்து கொண்டிருந்தார். “இது போன மாசம் பட்டுப்பூச்சி வளர்க்கறவங்க சங்கத்துக்கு லோன் கொடுத்தபோது எழுதின பேச்சு. அதையே எடுத்து விட்டுட்டிருகார்” என்றார் அக்கவுண்டண்ட். எம்.பி நடக்க ஆரம்பிக்க, “அன்னை வாழ்க”, “இருபது அம்ச திட்டம் வாழ்க” என்று எல்லாம் கோஷம் முழங்க அவர் கார் பக்கம் போனார். வாழ்க முழங்கியவர்களில் ஆர்டிஓவும் உண்டு என்பதை நான் கவனித்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன