சிவப்புக் குதிரை ஏறித் தலையில் கொம்பும் வாலில் அம்பு முனையுமாக வருவது யார்?

Snippet of translation from Lanthan Batheriyile Luthiniyakal (Malayalam) – The work is 60% completed as of now

லாரன்ஸ் பள்ளத்து எங்களைப் பயமுறுத்தத் தொடங்கினார். நரகம் பற்றிய நடுங்க வைக்கும் வாக்குகளை ராத்திரி நேரத்தில் எடுத்துச் சொல்லும் பிரசாரகர் போல அவர் உரக்கக் குரல் கொடுத்தார் : “காது கொடுத்துக் கேளுங்கள். சிவப்புக் குதிரையின் காலடிச் சத்தம் இடி முழக்கம் போல் கேட்கவில்லையா? சாத்தானின் உலா தொடங்கி இருக்கிறது. முன்னால் கட்டி வைத்திருக்கும் தொடை எலும்புகளுக்கு மத்தியில் மண்டையோட்டின் படம் வரைந்த கருப்புக் கொடி பிடித்து, திருச்சபைக்கு எதிராகக் கலகத்தைத் தொடங்கி வைத்த, திருச்சூர் செயிண்ட் தாமஸ் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட, கண்ணில் பகையும், பட்டை பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியுமாக இருக்கும் கல்வித்துறை அமைச்சர் ஜோசப் முண்டசேரி, அவருக்குப் பின்னால், ரெண்டாம் முத்திரை உடைந்து வந்த சிவப்புக் குதிரையேறித் தலையில் கொம்பும், வாலில் அம்பு முனையும், கையில் வாளுமாக ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட், அவருக்குப் பின்னால், சாத்தானின் புரோகிதர்களில் முதல்வனாக உச்சிக்குடுமியோடு நியமனமான ஒரே ஒரு பார்ப்பன அமைச்சர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், சாத்தானின் உலாவில் அடுத்து நடந்து வர்றது, எங்கும் பஞ்சத்தை விதைக்கும் உணவு மந்திரி கே.சி.ஜார்ஜ்.

”உணவு மந்திரி கே.சி. ஜார்ஜ் நமக்குத் தருவது விதைக்கவோ, அறுவடை செய்யவோ முடியாத பொருளான மக்ரோனியை. மக்ரோனி என்றால் என்ன? கோதுமை மாவின் இன்னொரு வகை. பட்டினி கிடந்தாலும் கேரள மக்களுக்கு மக்ரோனி வேண்டவே வேண்டாம். சுய மரியாதை உள்ள எந்த மலையாளியும் கோதுமையைத் தொடக்கூட மாட்டாங்க. அதானாலே தான் கம்யூனிஸ்ட்காரங்க கோதுமையை மக்ரோனி ஆக்கி மோசடி செய்து நம்மை ஏமாத்தறாங்க. யாருக்கு வேணும் இவங்க கோதுமையும் அதுக்குப் பிறந்த மக்ரோனியும்”?

லாரன்ஸ் பள்ளத்து ஒரு நிமிடம் பிரசங்கம் செய்வதை நிறுத்திக் கண்மூடி இருந்தார். நான் கேட்டேன், “அப்போ புனித அப்பம்”? சிறிது நேரம் இருட்டில் விழுந்தேன். செவியில் பெரிய சத்தம் கேட்டது. என் பின்னந்தலையில் பலமாக அடித்து லாரன்ஸ் பள்ளத்து கேட்டார் : “இந்த தெய்வ விரோதியோட பெயர் என்ன?”

மற்றப் பிள்ளைகள் தலைகுனிந்து இருந்தார்களே தவிர என் பெயரைச் சொல்லவில்லை. நான் அழப்போவதில்லை என்று தீர்மானித்தேன். ஞாயிற்றுக்கிழமை வகுப்பு முடிந்து நான் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பரங்கி ஜபக்கூடத்துக்கு முன் கண்மூடி நின்றேன். நான் பிரார்த்திக்கவில்லை. கேள்வி கேட்டேன். நான் குற்றம் செய்தவள் என்றால் என் குற்றம்தான் என்ன? கிழக்கில் இருந்து காற்று திரும்ப வீசியபோது, அணைந்த மெழுகுவர்த்திகளில் இருந்து உயர்ந்த உருகிய மெழுகின் வாடை குமட்ட வைத்தது. நான் பாதை ஓரமாகக் குந்தி உட்கார்ந்து வாந்தி எடுத்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன