மரச்சீனியை ஏற்றுக் கொள்ளலாம் என்றால் மக்ரோனியை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது?


அடிக்கடி வறட்சியும் அது காரணமாக உணவுத் தட்டுப்பாடும் ஏற்படுவது கேரளத்தில் நடப்பதுதான். அப்போதெல்லாம் திருவிதாங்கூர், கொச்சி அரசர்கள் கஞ்சித்தொட்டி திறந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தர்மக் கஞ்சி வார்த்தார்கள் என்றாலும் பட்டினிச் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. போர்த்துகீசியர்கள் பிரசீலில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் மரச்சீனிக் கிழங்கைத் கேரளத்தில் தினசரி உண்ணும் உணவாக்க்க திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாள் மகாராஜா முனைந்து பிரசாரம் செய்தபோது பஞ்சம் கொஞ்சம் தணிந்தது. மரச்சீனியை ஏற்றுக் கொள்ளலாம் என்றால் மக்கள் ஏன் மக்ரோனியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்து அரசு நியாயவிலைக் கடைகளில் மக்ரோனி விநியோகிக்க முன்கை எடுத்தது. இத்தாலியில் கிளிஞ்சல், நாடா, சுருள் உருவங்களில் உலா வந்த மக்ரோனி கேரளத்துக்குத் தானியமணிகளின் உருவத்தில் வந்து சேர்ந்தது.

லந்தன்பத்தேரியில் ஜனநாயக இளைஞர் சங்கம் மக்ரோனி ஆதரவுப் பிரசாரத்தில் இறங்கியது. மலாக்கா ஹௌஸுக்கு முன்னால் அடுப்பு மூட்டி, பெரிய வாணலியில் மக்ரோனிக் கஞ்சி செய்து இறக்கி அவர்கள் இலவசமாக விநியோகித்தார்கள். உடல்நலத்தின் உறைவிடமும், நல்ல சுவையும் மணமும் கொண்டதுமான மக்ரோனியின் சிறப்பு பற்றி ராகவன்மாஸ்டர் எழுதிய நோட்டீசுகள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டன. மக்ரோனி உணவுவகைகளைச் சமைப்பதற்கான சமையல் குறிப்புகளும் வழங்கப்பட்டன.

#Lanthan_Batheriyile_LuthiniyakaL translation #பீரங்கி_பாடல்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன