New: இளைப்பாறுதல் – புதிய நெடுங்கதை இரா.முருகன்


இளைப்பாறுதல் இரா.முருகன்

கருப்பையா என்ற கார்ப் ஓட்டல் அறைக்குள் நுழையும்போது ஏர்கண்டிஷனரின் மெல்லிய சத்தம் கேட்டது. கையில் பிடித்திருந்த மடிக்கணினியை ஒரு நாற்காலியில் வைத்து இயக்கி, திரையில் தெளிந்த படிவத்தில், கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட அறை திறக்கப்பட்டதா, அறை குளிர்ந்து இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு ஆம் என்று பதில் பதிந்தான் அவன்.

எப்போது ஏசி போட்டார்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் போல குளிர்ந்து இருந்தது அறை. என்றாலும் இது போதாது. இன்னும் அரை மணி நேரத்தில் ஏழெட்டுப் பேர் உட்கார்ந்ததும் வெக்கையைக் கிளப்பிவிடக் கூடாது.

இரண்டு பேரைத் தவிர, வரப் போகிற மற்றவர்களை கருப்பையா அறிவான். ஆறு மாதமாக இங்கே அவனோடும் அவனுடைய நூற்றிருபது பேர் கொண்ட குழுவோடும் தான் அவர்கள் சேர்ந்திருந்து வேலை பார்க்கிறார்கள். ஜப்பானியர்கள். டோக்கியோவில் ஒரு வங்கியை நடத்திப் போக கம்ப்யூட்டர் மென்பொருளை இங்கே எல்லோருமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

யூதா நகமுரா என்ற ஜப்பானிய அதிகாரி தலைமை வகிக்கும் குழு இது. யூதா-சான் என்று அவரைக் கூப்பிடுகிறார்கள் அனைவரும். எல்லோருக்கும் சான் என்ற மரியாதை விளி கட்டாயமானது. கருப்பையா என்ற கார்ப்-சான் உட்பட. நேற்றைக்குப் புதிதாக டோக்கியோவில் இருந்து வந்து சேர்ந்த இரண்டு அதிகாரிகளின் பெயரை கருப்பையா மறந்து விட்டிருந்தான். புது-சான்கள்.

யூதா-சான் உள்ளங்கையில் அடங்கக் கூடிய சிறு கம்ப்யூட்டரோடு சதா இருப்பவர். அதில் எப்போதும் வேலைத் திட்டம் என்ற கோப்பு திறந்த நிலையில் இருக்கும். மென்பொருள் குழுவை எந்த விதத்திலேனும் பாதிக்கும் விஷயங்கள் பற்றிய கேள்வித் தொகுப்பு அது. ஆம், இல்லை என்ற பதில்களோடு ரெண்டுக்கும் நடுவில் வரும் பதில்களையும், அலசி ஆராய்ந்து மதிப்பிட்டுக் கருத்துச் சொல்ல அந்த உள்ளங்கை கம்ப்யூட்டரில் திறன் பொதிந்திருக்கிறது. பொய் சொன்னால் கண்டு பிடிக்கப்பட்டு நயமாகச் அறிவிக்கப் பட்டு விடும்.

குழுவின் உறுப்பினர்கள் நேற்று இரவு நான்கு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டார்களா? அதற்கும் கூடுதல் நேரம் ஓய்வெடுத்துக் கொண்டார்களா? காலையில் உணவு உண்டார்களா? கிரமமாகக் காலைக் கடன் கழித்தார்களா? இப்படித் தொடங்கி அந்தரங்கமாக, முந்தாநாள் ராத்திரி எத்தனை முறை உடல் உறவு கொண்டார்கள்? யாரோடு எல்லாம் உறவு கொண்டார்கள்? உறை அணிந்தார்களா? அனைத்துத் தகவலும் யூதா-சானுக்கு தேவை. எல்லாமே அலுவலத்தில் முழு ஈடுபாட்டோடு பணி புரிதலை ஏதோ விதத்தில் பாதிக்கும்.

நேற்று நடந்தது இது –

இரண்டு வாரம் சென்று தீபாவளிப் பண்டிகை வருவதாகத் தெரிய வர, யூதா-சான் தகவல் பரப்பில் அது தொடர்பாக நூற்று எழுபத்தேழு கேள்விகளைச் சேர்த்தார். பண்டிகை வரும் தினமான வியாழக்கிழமை யாரும் விடுமுறையில் செல்லக் கூடாது என்றும், அவர்களுக்காக அலுவலக வளாகத்திலேயே தீபாவளி கொண்டாடலாம் என்றும், சத்தம் எழாத பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும், இந்திய மற்றும் ஜப்பானிய இனிப்பு தலா நூற்றைம்பது கிராம் வழங்கலாம் என்றும், ஒவ்வொருவருக்கும் ஜப்பான் சில்க் துணியில் கைக்குடையோ உள்ளாடையோ பண்டிகைப் பரிசாக வழங்கலாம் என்றும் உள்ளங்கைக் கம்ப்யூட்டர் அறிவுறுத்தி எழுப்பிய கேள்விகள் அவை. மென்பொருளாக்கத்தை திட்டமிட உதவும் அக்கேள்விகளை யூதா-சான் நேற்று உலகுக்கு அறிவித்தார்.

தீபாவளிக்கு விடுமுறை இல்லை என்று கேட்டு அழுது, முகம் சிவந்து, அலுவலகக் கரும்பலகையில் எழுதியதை அழிக்க வைத்திருந்த சாக்பீஸ் தூள் நிரம்பிய துணியை யூதா-சான் மேல் விட்டெறிந்து ஓடிய குழுவின் உறுப்பினரான இளம்பெண்ணை அவர் பரிவோடு பார்த்தார். இதை எதிர்பார்த்துக் கேள்விகளைச் சேர்க்காத தன் அறியாமையை அவர் கவலையோடு பகிர்ந்து கொண்ட போது கார்ப் என்ற கருப்பையா ஆதரவாக நாலு வார்த்தை சொல்ல வேண்டி வந்தது. அங்கே ஒரே உள்ளூர் அதிகாரி அவன்.

அப்போது தான் கம்ப்யூட்டர் நினைவூட்டிய சில கேள்விகளைக் கார்ப்-சான் என்று விளித்துக் கருப்பையாவிடம் யூதா-சான் கேட்டார். முதலாவதாக –

குழுத் தலைவர்கள் ஓய்வெடுத்துப் புத்துணர்ச்சி பெறக் கூட்டம் நடந்ததா?

இல்லை என்றான் கருப்பையா. என்றால் இன்று மாலை ஓய்வெடுத்தாக வேண்டும் என்றார் யூதா-சான். அதற்கான செயல் திட்டம் நடப்பாக்கப் படட்டும்.

யூதா-சான் கண்டிப்பாக அறிவிக்க இப்போது கருப்பையா ஓட்டல் அறையில் தனியாக நிற்கிறான். என்ன எல்லாம் ஓய்வெடுப்புக் கூட்டத்துக்கு வேண்டும் என்று உறுதி செய்து கொள்ள நீண்ட ஒரு கேள்வி – பதில் அடுக்கை உருவாக்கி கருப்பையாவின் மடிக் கணினியில் இறக்கி அனுப்பியிருக்கிறார் யூதா-சான்.

கோனிச்சிவா.

வாசலில் சத்தம் கேட்டது. அகிரா-சான் பளபளக்கும் கருப்பில் கைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு தயங்கி நின்றார். கருப்பையா பதிலுக்கு ஹலோ சொல்லாவிட்டால், ஜாக்கிரதையாக அறைக்குள் எடுத்து வைத்திருந்த ஒரு காலையும் திரும்ப எடுத்து வெளியில் காத்திருக்க அவசரம் காட்டினார் அவர்.

கோனிச்சிவா.

குனிந்து வணங்கி கார்ப்-சான் சொல்ல, அகிரா-சான் தேய்ந்த பற்களை ஜாக்கிரதையான சிரிப்பில் தெரியக் காட்டி உள்ளே வந்தார்.

குழல் விளக்குகளுக்கு நேர் கீழே நான்கும் மூன்றுமாக இரண்டு வரிசைகளில் ஏழு நாற்காலிகள் இடப் பட்டிருந்தன. முன்னால், வெள்ளைத் துணி விரித்த, உயரம் குறைவான ஒரு சிறு மர மேஜையும். திட்டமிட்ட படி இட்டவை அவை.

இதற்கான கேள்விகளைத் தேடி ஆம் என்று பதில் தர வேண்டும் என்று நினைவு படுத்திக் கொண்டு, கருப்பையா நாற்காலி வரிசைப் பக்கம் பின்னும் மரியாதையோடு கை காட்ட, அகிரா-சான் அரிகடோ கோசமாஸி என்று நன்றி சொல்லி அதில் முதல் வரிசை வலது புறம் முதல் நாற்காலியில் அமர்ந்தார்.

எல்லாம் தொடங்கப் பதினைந்து நிமிடம் முன் வரச் சொல்லி எனக்கு உத்தரவு.

அவர் சொல்ல, சரியான நேரத்துக்கு வந்துள்ளீர்கள் என்றான் கருப்பையா. சிறு குழந்தை போல் கைகொட்டிச் சிரித்தார் அவர்.

ஜப்பானிய பாரம்பரிய இசை போல அவருடைய கைப்பேசி ஒலிக்க, மோஷி மோஷி என்று மரியாதையோடு முகமன் கூறி எழுந்து நின்றார். அடுத்த கால் மணி நேரம் அவ்வப்போது ஹயி குடாஸி என்று ஆமோதித்துப் பணிவாகத் தலை குலுக்கியபடி காதில் வைத்த மொபைலில் கேட்டபடி இருந்தார் அவர்.

பேசி முடித்ததும், அற்புதங்களைப் பகிர்ந்து கொள்ளும் பரவசத்தோடு கருப்பையாவை நோக்கினார். டோக்கியோவில் இருந்து மூத்த நிலை பகுதி ஏழு அதிகாரி அகிரா-சானைத் தொலைபேசியில் கூப்பிட்டிருந்தாராம். அந்த அதிகாரியின் தகுதிக்கு அவர் அகிரா-சான் என்ற பிறவி இருப்பதையே அறிந்திருக்கத் தேவையில்லையாம். என்றாலும், அகிரா-சான் நினைப்பது, தன் அதிர்ஷ்டமே இப்படித் தேடி வந்து தெய்வ அருளைப் பொழிகிறது என்றுதானாம்.

அழைத்த அதிகாரி என்ன பேசினார்? எண்ணில் எழுதியதை இங்கிலீஷ் மற்றும் ஜப்பானிய எழுத்தாக்கிக் காட்டும் மென்பொருள் துண்டு அகிரா-சானின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. பதினைந்து பேர் ஏழு நாள் இடைவிடாமல் இயக்கப் போகிற சோதனை ஓட்டம் திட்டமிடப் பட்டுள்ளது. அதை அடுத்த வாரம் எப்படி நடத்துவது என்று ஜப்பானியத் தலைவர் ஆணைகள் பிறப்பித்ததாகச் சொன்னார். அகிரா-சான் அதிகார மட்டத்தில் எவ்வளவு கீழே இருந்தாலும் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதி டோக்கியோ அதிகாரி அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். அகிரா-சான் மிகுந்த மனக் கிளர்ச்சியோடு காணப்பட்டதாக கருப்பையாவுக்குத் தோன்றியது.

எண்ணை எழுத்தாக மாற்றுவது எப்படி? மந்திரவாதம் போல பிரமிக்கத் தக்க நிகழ்வு அது. நடத்திப் போக எனக்கு அனுமதி கொடுத்த நிறுவனத்துக்கு, இன்னொரு பிறவி இருந்தால் அதிலும் இதே போல் ஊழியனாக இருப்பேன் நான்.

அகிரா-சான் கைகள் சற்றே நடுங்கச் சொல்லி திரும்பவும் நாற்காலியில் அமர, மற்றவர்கள் கூட்டமாக உள்ளே நுழைந்தார்கள்.

மொத்தம் ஐந்து ஜப்பானிய கம்ப்யூட்டர் வல்லுனர்கள். எல்லோருடைய இடது கையிலும் ஒளிரும் கருப்புப் பெட்டிகள் இருந்தன. யூதா-சான் முதலில் வந்தார்.

யூதா-சான் பின்னால் மரியாதையான இரண்டடி இடைவெளி விட்டுப் பணிவாகச் சிரித்தபடி மரி-சான் வந்தார். குழுவில் இருந்த ஒரே பெண் தலைமைப் பொறியாளர் இவர். மரி-சான் அணிந்திருந்த தங்கக் காதணிகள் அறையில் ஒளிர்ந்த எல்லா விளக்குகளும் அளித்த பிரகாசத்தில் தகதகத்தன.

மரி-சானைத் தொடர்ந்து வந்த இஷிகவா-சான் வலக் கையில் ஒரு மிகச் சிறிய ரைஸ் குக்கரை வைத்திருந்தார். பின்னால், நேற்று டோக்கியோவில் இருந்து வந்து சேர்ந்த இரண்டு புது-சான்களும் அடுத்து என்ன செய்வது என்ற நிச்சயமில்லாமல், பதற்றத்தோடு யூதா-சானைப் பார்த்தார்கள்.

நேரமாகி விட்டதோ? யூதா-சான் கேட்டபடி நின்றார். அவர் அமர்ந்த பிறகு அமர மற்றவர்கள் காத்து நின்றிருந்தார்கள்.

இல்லை, இரண்டு நிமிடம் முன்னே வந்திருக்கிறீர்கள் என்று உற்சாகப்படுத்தும் விதத்தில் கருப்பையா சொன்னாலும், யூதா-சான் முகம் துக்கத்தைக் காட்டியது.

மிகவும் வருந்துகிறேன். இரண்டு நிமிடம் முன்னால் வந்து உங்கள் நேரத்தை சாப்பிட்டு விட்டேன்.

துயரத்தோடு கூறி உள்ளங்கையில் பற்றிய கம்ப்யூட்டரில் நேரத்துக்கு வந்தாயிற்றா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் பதிவதாகச் சொல்லியபடி அமர்ந்தார். அவருடைய துக்கத்தில் பங்கு பற்றி, மற்றவர்களும் மௌனமாக உட்கார்ந்தார்கள். புது-சான்கள் முகம் இறுக, கருப்புப் பெட்டிகளை மடிமேல் வைத்துக் கொண்டு நாற்காலி நுனியில் தொடுக்கி அமர்ந்து இருந்தார்கள்

யூதா-சான் உள்ளங்கைக் கம்ப்யூட்டரைக் கண் இடுக்கிப் பார்த்து விட்டுத் தலையுயர்த்தி எல்லோரையும் பொதுவாகக் கேட்டார் –

குழு முழுவதும் இறுக்கம் தளர்ந்து, மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா?

ஒரே குரலில் எல்லோரும் ஆம் என்று சொன்னார்கள். கருப்பையா மற்றவர்களை விட அதிக உச்சத்தில் ஆமென்றான். யூதா-சான் முகத்தில் எட்டிப் பார்த்த சிறு சிரிப்பு கடமை கருதி அங்கே நின்றது. கம்ப்யூட்டரை மடியில் வைத்தபடி, நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து அவர் பணிவாகத் தலையசைத்தார்.

அவர் முகம் உணர்ச்சி காட்டாமல் இருக்க, அடுத்த கேள்வியைக் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து உரக்கப் படித்தார்.

எல்லோருக்கும், ஆளுக்கு அரை போத்தல் அரிசி மது வழங்கப்பட்டதா?

கூவென்று கூவியபடி அகிரா-சான் தன் வசம் இருந்த சாக்குப் பையைத் திறந்தார். நுண்கருவி போல சுழலும் சக்கரமும், ஏறி இறங்கும் ரசமட்டத்தில் உள்ளே மெர்க்குரியோ வேறே எதோ உலோகக் கூழுமாக ஒரு சிறு யந்திரம் வெளியே எடுக்கப்பட்டது, அது துணி விரித்த மரமேஜை மேல் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஜப்பானிய அரிசி மதுவான சாகே போத்தல்கள் வெளியே எடுத்து வைக்கப் பட்டன. மது அருந்த, நேர்த்தியான ஜப்பானியக் கண்ணாடிக் கோப்பைகளும் அடுத்து வெளிப்பட்டன.

அந்த இயந்திரத்தை போத்தலில் அலகு பட நுழைத்துக் கையால் சக்கரத்தைச் சற்றே சுழற்றினார் அகிரா-சான். அவர் மறுகையில் பிடித்த கோப்பையில் மிகச் சரியாக அரை போத்தல் சாகே என்ற அரிசி மது மாற்றப்பட்டது.

வேறு மது வகைகள் யாருக்காவது வேண்டுமா?

கையில் சாகே கோப்பையை உயர்த்தியபடி யூதா-சான் கேட்க, இல்லை என்றார்கள். ஆம் என்று மெல்ல வந்த இரண்டு குரல்கள் திருத்தி இல்லையென்றன. புது-சான்கள் பதைபதைத்து இருக்கைகளில் இருந்தார்கள்.

இந்திய வகை வறுவல்கள் யாருக்காவது வேண்டுமா?

இந்தக் கேள்விக்கும் இல்லை என்று பதில் வந்தாலும், எல்லோருடைய கண்ணும் மேஜை மேல் இருந்தது.

உணவு விடுதி நிர்வாகத்திடம் சொல்லி அவர்கள் இருந்த அறை ஜன்னல் பக்கம் இன்னொரு சிறு மேஜையிட்டு வைத்திருந்த பியர் போத்தல்களைப் பார்த்தான் கருப்பையா. அவற்றோடு கூட நான்கு தட்டுகளில் நொறுக்குத் தீனி பரப்பி வைக்கப்பட்டு, மேலே கண்ணாடிக் காகிதத்தால் மூடியிருந்தது. அவற்றை அவன் தான் வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும். பியர் இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்காக, முறுக்கும், பிகானிர் புஜியா கார ஓமப்பொடியும்.

சாகே அருந்த ஆரம்பித்த போது, யூதா-சான் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்டார். ஒரே குரலில் ஆம் என்றார்கள். வாசலில் யாரோ வந்து நின்றார்கள்.

ஆட்டக்காரப் பெண் என்றான் கருப்பையா. சிறு வயதுப் பெண். மெலிந்து கருத்து உயர்ந்திருந்த அவள் கல்லூரி மாணவி போல் சூடிதார் அணிந்திருந்தாள். கால் செருப்பை விட இடம் பார்த்து வெளியே பூத்தொட்டிக்குப் பின்னால் பத்திரமாக அவற்றைக் கழற்றினாள். தோளில் மாட்டியிருந்த பையோடு உள்ளே வந்தாள். சூயிங் கம் மென்றபடி எல்லோருக்கும் பொதுவாக வணக்கம் சொன்னாள் அந்தப் பெண்.

மன்னிக்கவும். மன்னிக்கவும். தொடர்ந்து முணுமுணுப்பாகக் குரல் எழுந்தது. மரி-சான். மனதில் ஜப்பானிய மொழியில் எழுதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் சில கண நேரத்தில் இப்படி ஒலி எழுப்புவது அவள் வழக்கம்.

இவள் நாட்டியம் ஆடுவாளா?

மரி-சான் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் குரலில் கேட்டாள். அரிசி மதுவைச் சுவைத்தபடி இருந்த அவள் முகம் கௌதம புத்தரை ஈன்ற மாயாதேவியின் முகம் போல நிதானமும் சாந்தமுமாக இருந்தது.

ஆம், இந்திய நடனம். பாம்பு நடனம் அது.

புத்தம்புதுத் தகவல்களைத் தரும் பொறுப்போடு அறிவித்தான் கருப்பையா.

பாம்புகள் உண்டா?

உண்டு என்றாள் அந்தப் பெண். அவளுடைய தோள்ப் பையை அச்சத்தோடு பார்த்தபடி ஒரே நேரத்தில் எழுந்து நின்றார்கள்.

பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளதா? யூதா-சான் கேட்க, ஆம் என்றனர் அவர்கள் ஒரே குரலில்.

உன் நாட்டிய உடைகள்? கருப்பையா நாட்டியப் பெண்ணைக் கேட்டான்.

ஒரு நிமிடத்தில் அணிவேன் என்றாள் அவள்.

பின்பாட்டு, நட்டுவாங்கம், மிருதங்கம், தாளம்?

இதோ என்று அவள் தன் மொபைல் தொலைபேசியைச் சுட்டினாள். பையில் இருந்து இரண்டு தலை நாகம் போல் சிறு இரட்டை ஒலிபெருக்கிகள் இணைத்த அமைப்பைத் தொலைபேசியில் செருகினாள்.

பாம்பு? யூதா-சான் கேட்க, வரும் என்றபடி, தோள் பையோடு குளியல் அறைக்குள் சென்று கதவைச் சார்த்திக் கொண்டாள், இஷிகவா-சான் கையில் அரிசி மதுவும், குக்கருமாக ப்ளக் பாயிண்ட் தேடினார்.

இங்கே கொறிக்க வைக்கப்பட்டிருக்கும் ராஜஸ்தான மாநில பிகானீர் புஜியா உலகப் புகழ் பெற்றது. நீங்கள் விருப்பப்பட்டால் உண்ணலாம். சைவ உணவு.

கார்ப்-சான் பணிவோடு சொல்ல, இஷிகவா-சான் மரியாதையோடு மறுத்து தன் டாக்டர் டோக்கியோவில் வெறும் அரிசிச் சாதத்தில் உலர்ந்த மீன்பொடியிட்டு உண்பதையே வலியுறுத்தியிருக்கிறார் என்றார்.

அவர் அரிசி கொதிக்க வைத்துக் கொண்டிருந்தபோது குளியலறை உள்ளே இருந்து பளபளக்கும் நாட்டிய உடை அணிந்து அந்தப் பெண் வெளியே வந்தாள். முகத்தை அலம்பி, புதுப் பொட்டும் வைத்து கண் எழுதிய அழகான நாட்டிய மங்கை இப்போது அவள்.

மரி-சான் எழுந்து அவளருகில் போய் தோளை அணைத்துக் கொண்டாள். மன்னிக்கவும், மன்னிக்கவும், மன்னிக்கவும் என்று அவள் ஓசை உயர்த்தி அந்தப் பெண்ணை அன்போடு நோக்கிச் சொன்னது –

என் காதணிகளை அணிந்து ஆடு சிறுமியே.

நாட்டியப் பெண் வேண்டாம் என்று மரியாதையோடு கூறி மரி-சானின் கையைத் தன் கையில் வைத்துக்கொண்டு அழகாகப் புன்சிரித்தாள்.

நிகழ்ச்சி தொடங்குகிறது. இடத்தில் அமரவும்.

யூதா-சான் சொல்லியபடி இன்னொரு தடவை, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என உள்ளங்கைக் கம்ப்யூட்டரைப் பார்த்துப் படித்தார். ஆம் என்றபடி மரி-சான் திரும்ப வந்து உட்கார்ந்தாள்.

அவளுக்கும் சாகே கொடுங்கள் என்று நாட்டியக்காரியைக் காட்டி மரி-சான் சொல்லியபடி இன்னொரு மடக்கு அரிசி மது உறிஞ்சினாள்.

வேண்டாம் என்று புன்சிரிப்போடு மறுத்து நாட்டியக்காரி மொபைல் தொலைபேசியின் திரையில் தொட்டு அதை நாற்காலியில் வைக்க அறையெங்கும் சூழும் இசை. மிருதங்கமும் சாரங்கியும் வீணையும் இணைந்து ஒலிக்கிறது என்று கருப்பையா மற்றவர்களுக்குச் சொன்னான்.

அந்தப் பெண் கைப்பையில் இருந்து சில ஊதுபத்திகளை எடுத்தாள். சிக்கி முக்கிக் கல் போல் தென்பட்ட ஒரு சிறு சாதனத்தை அழுத்தி அவற்றை பற்ற வைத்தபடி, இது சிகரெட் லைட்டர் இல்லை, புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் என்றாள். கைப்பையில் இருந்து ஒரு பிளாஸ்டிக் பூத்தொட்டியை எடுத்து ஊதுபத்திகளைச் செருகி மேஜையில் வைத்தாள். ஆட ஆரம்பித்தாள்.

எல்லோரும் மகிழ்ச்சியா? யூதா-சான் கேட்க, ஒட்டுமொத்தமான ஆம் கேட்டு முகம் மலர உள்ளங்கை கம்ப்யூட்டரில் பதிந்தார் அவர். இன்னொரு அரை போத்தல் அரிசி மது அருந்தும் நேரம் வந்ததா என்று அவர் அடுத்து கேட்க, கருப்பையாவைத் தவிர மற்றவர்கள் ஆம் என்றார்கள்.

கார்ப்-சான், மன்னிக்கவும், பெரும்பான்மையின் கருத்து.

யூதா-சான் தலை வணங்கிச் சொல்லி விட்டு ஆம் என்பதைப் பதிலாகப் பதிய, அகிரா-சான் கறாராக கைக்கருவி வைத்து ஆளுக்கு அரைக் கோப்பை சாகே அளந்து திரும்ப எல்லோருக்கும் வழங்கினார்.

யூதா-சான் கம்ப்யூட்டரில் பார்த்துத் தலையாட்டிச் சொன்னார் –

உங்கள் எல்லோருக்கும் நம் நிறுவனத்தின் மூன்றாம் இடத் தலைவர் வாழ்த்துக் கூறச் சொன்னார். விரைவில் பணி முடிந்து ஜப்பானில் உங்கள் அன்பான இல்லங்களுக்கு திரும்பச் சொன்னார். அவருக்காக கொஞ்சம் சாகே அருந்தவும்.

மன்னிக்கவும் என்று ஒலியெழுப்பினாள் மரி-சான். அரிசி மது அவள் குரலை இன்னும் கீச்சென்று ஆக்கி நடுங்கவும் வைத்திருந்தது. அவள் அழுவது போல் கூறினாள் –

என் மகள் கல்யாணம் செஞ்சுக்கப் போறாளாம். ஈமெயில் அனுப்பியிருக்கா. அவள் நர்ஸாக உத்தியோகம் பார்த்துக் கட்டின வீடு. அவளுக்கும் கணவருக்கும் இப்போ வேணும். சரிதானே. நான் இங்கே வேலை முடிஞ்சு எங்கே திரும்புவேன்?

இந்தக் கேள்விகள் உள்ளங்கைக் கம்ப்யூட்டரில் இல்லை என்றார் யூதா-சான். இல்லை என்று புது-சான்கள் இரண்டு பேரும் உரக்கச் சொன்னார்கள். மரி-சான் புரிந்தது என்று சொல்லித் தலையசைத்து ஆட்டத்தைப் பார்க்க முனைந்தாள்.

துரிதமான இசை மொபைல் தொலைபேசியில் இருந்து ஒலிக்க, நாட்டியமாடும் பெண் அலாரிப்பு, கவுத்துவம் என்று அறிவித்தபடி ஆடித் தோடியமங்களம் தொடங்கி இருந்தாள். மரி-சான் அவளுக்கு ஒரு முத்தத்தைப் பறக்க விட்டபடி சாகேயை ருசித்தாள். பாம்பு இல்லாத வீடு கிடைத்தாலே ஒழியக் காதலிக்காதே என் பிரியமான மகளே என்றாள் அவள். நாட்டியப் பெண் சிரித்தபடி ஆடினாள்.

இஷிகவா-சானின் ரைஸ்குக்கர் ரயில் போல் விசிலடித்தது. இன்னும் சற்று நேரம் வெந்த அரிசியை வைத்திருந்தால் உணவு சுவையாக இருக்காது என்று அது உணர்த்துவதாக மெல்ல அறிவித்தபடி தள்ளாடி நடந்து குக்கர் பக்கம் போனார் இஷிகவா-சான். சாகே பாதி நிறைத்த கோப்பையை தரையிலிட்டார்.

உணவு ஒவ்வாமல் போய், நான் கம்பெனிக்காக முழு ஈடுபாடும் உழைப்புமாகப் பணியாற்றக் கடினமாக உள்ளது. போகும் இடத்தில் எல்லாம் சோற்றைச் சுமந்து போவது இன்னும் எத்தனை நாளோ. வெற்று அரிசிச் சோறு தின்பது மலம் உண்பது போல் கொடுமை. வயிறும் மூளையும் தீவிரமாகப் போராட, நான் தோற்றுவிடக் கூடாது என்று வாழ்த்திக் கொஞ்சம் சாகே அருந்துங்கள்.

அவர் குரல் கேவலோடு விண்ணப்பித்தது.

கண்ணனின் குறும்புகளை யசோதையிடம் ஆய்ச்சியர் புகார் செய்வதை ஆடிக் கொண்டிருந்த பெண் சட்டென்று நின்றாள். அவள் முதுகுப் பக்கம் வண்ண மயமான பட்டு ரவிக்கையின் அமுக்கு பொத்தான் அவிழ கச்சை தட்டுப்பட்டதை மறைக்கவோ என்னவோ சுவரோடு சாய்ந்து நின்று யாரிடமாவது சேஃப்டி பின் இருக்குமா என் விசாரித்தாள். மரி-சான் தன் கைப்பையில் இருந்து எடுத்த நீளமான பின்னை, தள்ளாடி நடந்து போய் அவளுக்குத் தந்தாள். இது தங்கமா என்று அந்தப் பெண் அவசரமாக விசாரிக்க, மரி-சான் சொன்னாள் –

என் காதலன் எனக்குப் போன வருடம் பிறந்த நாளில் பரிசு கொடுத்தது. ஆடி விட்டுக் கொடு. இந்த வருடமும் அவன் கொடுத்ததாக பாவித்துக் கொள்ளப் போகிறேன். நீ என் மகள் தான். ஆடு. பாம்பு வருவதற்குள் முடித்து விடு, என்ன?

ஒரே வினாடியில் குளியலறை போய் வந்து கண்ணன் மேல் புகார்கள் தொடர, வெகு இயல்பாக மறுபடி அந்தக் கணத்தில் புகுந்து கொண்டாள் இளம் பெண்.

அகிரா-சானின் மொபைல் ஒலித்தது. கால்பந்துப் பந்தயத்தில் கடைசி நிமிடத்தில் கோல் போட்டதைக் குறித்து வானொலி வர்ணனையாளர் விடாமல் கூவும் சத்தம் அது. ஆடும் சிதம்பரத்து நடராஜனின் அற்புதத்தை நாட்டியமாடும் பெண் அழகாக இடது பாதம் தூக்கி ஆடிக் கொண்டிருக்க, இந்த வர்ணனையாளன் குரல் தொலைபேசி அழைப்பாக இடை வெட்டி, குறி அறுபட்ட பூனையின் வாதனைக் கதறல் போல் ஒலிப்பதாக கருப்பையா நினைத்தான். மற்றவர்களும் பொறுமையின்றி அகிரா-சானைப் பார்க்க அவர் பதறி எழுந்து, மோஷி மோஷி என்று சொல்லியபடி அறைக் கோடிக்கு ஓடினார்.

டோக்கியோவில் நடுநிசி, ராத்திரி பனிரெண்டு மணி இருக்கும் இப்போது.

யூதா-சான் கருப்பையாவின் தகவலுக்காகச் சொல்ல, காளியின் நிருத்தமாக கண் சிவக்க விழித்து உடல் அதிர ஆடத் தொடங்கினாள் இளம் பெண்.

அகிரா-சான் விசும்பியபடி மொபைல் தொலைபேசியைக் காதோடு அணைத்துக் கொண்டு வந்தார். உடுக்கு ஓசைக்கு நடுவே அவர் அறிவித்தது –

எண்ணை எழுத்தாக்கும் இந்த மென்பொருள் துணுக்கின் முக்கியத்துவத்தை ஏன் யாரும் உணரவில்லை என்று துக்கப்படுகிறார் டோக்கியோவில் என் பிரிவுத் தலைவர். நாம் இங்கே அவருக்கு எல்லா ஆதரவும் தந்து வெற்றிகரமாக முடித்து வைப்போம் என்று வாக்குறுதி அளித்தேன் எல்லோர் சார்பிலும் , சரியா?

அகிரா-சான் அரை போத்தல் சாகே திரும்ப அளந்து, டோக்கியோவில் அவருடைய தலைவரும், எண்ணை எழுத்தாக்கும் மென்பொருளும் வெற்றி பெற வாழ்த்தி ஒரே மடக்கில் குடித்தார். ஒலிக்கத் தொடங்கிய மகுடியின் இசைக்கு நாட்டியப் பெண் பாம்பு போலச் சுழன்று சுழன்று ஆடுவதை அருகில் போய்ப் பார்த்த அவர் தானும் அப்படி ஆட முயன்று, தோற்றுத் தரையில் விழுந்தார்.

நான் தோற்று விழுந்தாலும், எண்ணை எழுத்தாக்கும் மென்பொருள்.

அவர் உரக்கத் தொடங்கி சத்தமில்லாமல் தரையில் கிடக்க, அந்தப் பெண் பாம்பு நடனத்தைத் தொடர்ந்தாள்.

மன்னிக்கவும் என்று மரி-சான் ஒலியெழுப்ப, அறைக் கோடியில் இருந்து ஒரு பாம்பு மெல்ல ஊர்ந்தது. அகிரா-சான் நின்றபடி மொபைல் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்த இடம் அது. ஊர்ந்து உள்ளே வரும் அது ஒரு மலைப்பாம்பு என்று கருப்பையாவுக்குத் தோன்றியது. இல்லை, அது ஒரு சாதாரண மண்ணுளிப் பாம்பு தான். அரிசி மது அரைக் கோப்பை அரைக் கோப்பையாக நிறைய அருந்தியதால் பார்வை கெட்டதாக அவன் நம்பினான்.

இன்னொரு முறை உள்ளங்கைக் கணினியில் பார்த்து, எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா என யூதா-சான் கேட்க, மரி-சான் ஜூடோ வீரர் போல இடுப்பை வளைத்து அவரை வணங்கிச் சொன்னாள் –

நான் மகிழ்ச்சியாக இல்லை. அடுத்த அறையில் மகளும் அவள் கணவனும் காதல் செய்யும் ஒலிகள் என்னைச் சலனப்படுத்துகின்றன. எனக்கு இது போல் ஒரு நல்ல இடம், வெளியே சத்தம் கேட்காத அறை வாடகைக்காவது கிட்டாமல் நான் எப்படி கல்யாணம் செய்து கொள்வது? என் காதலன் சத்தமெழுப்பாமல் என்னோடு காதல் செய்வான் தான். ஆனால் நடுவே பேசாமல் எப்படி முடியும்?

இதற்கான கேள்விகள் கம்ப்யூட்டரில் இல்லை என்று தலையைக் குலுக்கிய யூதா-சான் அவளைத் திரும்ப உட்காரச் சொன்னார். எனக்கு ஒரு முழு போத்தல் சாகே தர முடியுமா எனக் கேட்டாள் மரி-சான்.

இந்தக் கேள்வியும் என்னிடம் இல்லை. கரிசனத்தோடு யூதா-சான் கூறினார்.

பாம்பு மெல்ல ஊர்ந்து நடனமாடும் பெண் பக்கத்தில் தலை உயர்த்தி நின்றது.

அது ஒரு நாகப் பாம்பு. படம் எடுத்து அந்தப் பெண் பக்கத்தில் நின்று அவள் போல், அவளை விட அற்புதமாக ஆடும். அதைப் பார்ப்பதை விட.

கருப்பையா என்ற கார்ப்-சான் தொடங்கிய சொற்றொடரை முடிக்காமல் தன் நாற்காலியில் குலைந்து போய் அமர்ந்திருந்தான். அரிசி மதுவின் தாக்கம் அது.

அவசரமாகக் கைக்கணினியில் பார்த்த யூதா-சான் கருப்பையாவைக் கேட்டார்:

பாம்பு வரும் நடனங்களைக் கண்டு களிப்பதால் வேலைத் திறன் குறைந்து, அடுத்த மாதம் ஏழாம் தேதி டோக்கியோவுக்கு அனுப்ப வேண்டிய மென்பொருள் அனுப்பப் படாமல் தாமதமாகிப் போகுமா?

அவர் கேட்க, கருப்பையா இல்லை என்று தலையாட்டினான். என்ன பதிய என்ற யூதா-சானின் அடுத்த கேள்விக்கு, இல்லை என்று பதியச் சொன்னான்.

இது ஒரு நல்ல பாம்பு. அவன் யூதா-சானிடம் சொல்ல, மகுடி இசை இன்னும் உயர்ந்தது. அந்தப் பாம்பு படமெடுக்காமல், நாட்டியமாடும் பெண்ணின் காலைக் கவ்வி இழுத்துக் கொண்டிருந்தது. அவள் நின்ற இடத்திலேயே இடுப்பை வளைத்து ஆட, நெற்றியில் வியர்வை துளிர்த்தது.

யூதா-சான் எழுந்து நின்றார். கேளுங்கள் என்றார் சத்தமாக.

அந்தப் பெண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு விழுங்கிக் கொண்டிருந்தது. ஆட்டத்தின் தீவிரத்தில் அவள் கைகளை இன்னும் வளைத்து உயர்த்தி ஆடிக் கொண்டிருந்தாள். தீவிரமடைந்த இசையைக் கீறிக் கொண்டு கடிகாரச் சத்தம்.

யூதா-சானின் மொபைல் தொலைபேசி பிக்பென் கடியாரத் தொனியில் பனிரெண்டு மணி அடித்தது.

என்னை கம்பெனி பணியில் இருந்து நீக்கியிருக்கிறது.

யூதா-சான் சொல்ல, கருப்பையா என்ற கார்ப்-சான், என்ன செய்ய வேண்டும் என்ற நிச்சயமில்லாமல் கைத்தட்டினான்.

போன வருடத்து பிசினஸ் இலக்கு நிர்ணயித்ததை விட ஐநூறு டாலர் குறைவாக சாதித்திருக்கிறேன் என்று காரணம். அந்தக் கணக்கு தவறு என்று எனக்குத் தெரியும். என்றாலும், நம்பிக்கை தோற்று விட்டதல்லவா? அது பெரும் சோகம்.

யூதா-சான் துயரத்தோடு பார்க்க, மற்ற அனைவரும் எழுந்து தலை தாழ்த்தி நின்றார்கள். பாம்பு நடனத்துக்கான மகுடி இசை ஓய்ந்து, திரும்பவும் ஒலித்தது.

மன்னிக்கவும். மன்னிக்கவும். மன்னிக்கவும். இசையோடு மரி-சான் குரல் ஒலி.

என் மகள் அடுத்த வாரம் திருமணம் செய்து கொள்ளட்டும். அவள் நர்ஸ் வேலையில் சம்பாதித்துக் கட்டிய அந்த ப்ளாட்டில் அவளே இருக்கட்டும். நான் இங்கேயே இருப்பேன். வந்த வேலை முடித்து பாம்பு நடனம் கற்றுக் கொண்டு ஆடப் போகிறேன். எங்கே அந்த ஆட்டக்காரிப் பெண்? எனக்கும் இந்த இசை வேணும். பாம்பு வேணும். கிழிந்து பின் குத்த வேண்டாத ஆட்ட உடை வேணும்.

மரி-சான் அடம் பிடிக்கும் குழந்தை போல் கேட்டாள்.

அந்தப் பெண்ணை முழுவதுமாகப் பாம்பு விழுங்கியிருந்தது.

கருப்பையா ஒரு அதிர்ச்சியோடு தன் முன்னால் மகுடி இசை ஒலித்துக் கொண்டிருந்த நடனப் பெண்ணின் மொபைல் தொலைபேசியைப் பார்த்தான். அந்தப் பெண் இப்போது எங்கே? அவளுடைய ஆட்டத்துக்கான பணத்தை எப்படி அவளுக்குத் தருவது? உள்ளங்கைக் கம்ப்யூட்டரில் பதிந்த கேள்வி பணம் கொடுக்கப்பட்டதா என்று இருக்கும். அவன் இல்லை என்று பதில் தந்தால் அவனுடைய இந்த மாத சம்பளம் மட்டுமில்லை, வேலையே போய் விடலாம்.

யூதா-சான், நான் எப்படியாவது ஆட்டக்காரியிடம் பணத்தைச் சேர்ப்பித்து விடுகிறேன்.

அவன் அமெரிக்க வாடிக்கையாளார்களுக்கு, நாளைக்கு எப்படியும் மலையைப் புரட்டிக் கடலில் போட்டு விடுவேன் என்று கம்பெனி சார்பில் உறுதிமொழி கொடுக்கும் தொனியில் அறிவித்தான். யூதா-சான் கருணையோடு புன்னகைத்தார். அவர் பொதுவாகப் பார்த்துக் கேட்டார் –

நான் நாளைக்கு டோக்கியோ திரும்புகிறேன். அப்புறம் வேறே வேலை தேட வேண்டும். எனக்குக் கிடைக்குமா?

அவர் உள்ளங்கையில் பிடித்த கம்ப்யூட்டரில் எட்டிப் பார்த்த மரி-சான் அப்படி ஒரு கேள்வி அங்கே இல்லை என்றாள்.

எண்ணை எழுத்தாக்கும் மென்பொருள் துகளை நாங்கள் வெற்றிகரமாக இயக்கும் போது எங்களோடு கூட இருக்க மாட்டீர்களா?

அழுவது போல் கேட்டார் அகிரா-சான்.

பாம்பு மெல்ல அசைந்து அறையை விட்டுப் போய்க் கொண்டிருந்தது. மரி-சான் தன் கைப்பையில் இருந்து எதையோ எடுத்தாள். நகைக்கடையில் நகை வைத்துக் கொடுக்கும் பட்டுத் துணி போர்த்திய சிறிய சிமிழ் அது.

பெட்டியைத் திறந்து ஒரு தங்க சேஃப்டி பின்னைக் கையில் பிடித்தபடி யூதா-சானைப் பார்த்து இரைஞ்சும் குரலில் கேட்டாள் அவள் –

இதை என் மகளிடம் திருமணப் பரிசாகக் கொடுத்து விட முடியுமா? அவள் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை சாவுச் சடங்குகளை நிர்வகிக்கிறவன். அவன் மூலம் உங்களுக்கு அடுத்த வேலை கிடைக்கலாம்.

யூதா-சான் குனிந்து அவளை வணங்கினார். எல்லோரும் சேர்ந்து கிளம்பினார்கள். கருப்பையா நாற்காலியில் இருந்த மொபைல் தொலைபேசியைக் கையில் எடுத்துக் கொண்டான். அதிலிருந்து மகுடி இசை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அதை எப்படி நிறுத்துவது என்று அவனுக்குத் தெரியவில்லை.

இந்தக் கவரில் இருக்கும் பணம் நடனப் பெண்ணுக்குப் போக வேண்டியது. அவளைப் பாம்பு விழுங்கி விட்டது. இந்தத் தொலைபேசியும் அவளுடையது

அவன் ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்த அழகான இளம்பெண்ணிடம் சொல்லியபடி பணம் வைத்த காகித உறையயும் தொலைபேசியையும் கொடுத்தான். அவள் நளினமாக ஃபோனை இயக்க, மகுடி இசை நின்றது.

அந்தப் பெண் ஓட்டலில் பதிவு செய்து கொண்ட நடனக்காரி தான். ஆனால் பாம்பு பற்றித் தெரியவில்லை. பிராணிகளை நாட்டியத்தில் பயன்படுத்துவது தவறு என்று அரசுத் துறை எச்சரிப்பதை நீங்கள் அறிவீர்கள்.

அவள் சொல்ல, தெரியும் என்றான் கருப்பையா. அந்தப் பணம்?

அவள் வந்தால் நாங்கள் கொடுத்து விடுவோம். கொடுத்ததும் உங்களுக்கு தகவல் அனுப்புகிறேன். உங்கள் கைப்பேசி எண்ணைப் பதிந்து செல்லுங்கள்.

நாட்டியப் பெண் தங்கத்தால் செய்த ஒரு சிறு பின்னை அணிந்திருக்கிறாள். எங்கள் குழு உறுப்பினர் மரி-சான் அவளுக்கு இரவல் கொடுத்தது.

கருப்பையா சொல்ல, ஆடிப் பாடி மகிழ்விக்க வருகிறவர்களுக்கு அன்பளிப்போ, இரவலோ பார்வையாளார்கள் தருவதை உணவு விடுதி நிர்வாகம் அனுமதிப்பதில்லை என்று கறாராகச் சொன்ன ரிசப்ஷனிஸ்ட், நாட்டியப் பெண் திரும்பிக் கொண்டு வந்து கொடுத்தால் தங்கத்தில் செய்த சேஃப்டிபின் கருப்பையாவின் அலுவலகத்துக்கு உடனே அனுப்பி வைக்கப்படும் என்றாள்.

அவள் கொடுத்த நீளமான, ஓட்டல் நிர்வாகத்துக்கான கம்ப்யூட்டரில் தன் மொபைல் எண்ணைப் பதிந்து வெளியே வந்தான் கருப்பையா. அறையில் இருந்து, பிக்கானீர் புஜியா நொறுக்குத் தீனியை எடுத்து வந்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

குளிரூட்டப்பட்ட வேன் ஒன்றில், அவர்கள் வேலையைத் தொடரக் கம்பெனிக்குப் பயணமானார்கள்.

எல்லோரும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறீர்களா?

கைக்கம்ப்யூட்டரில் பார்த்து உரக்கக் கேட்டார் யூதா-சான்.

கருப்பையா தொடங்கி வைக்க, இருக்கையிலேயே இப்படியும் அப்படியுமாகப் பாம்புகள் போல் வளைந்து ஆடியபடி அவர்கள் ஆம் என்றார்கள். ஒரு வினாடி தாமதமாக ஆம் என்று இரண்டு குரல்கள் வேன் தரையில் இருந்து ஒலித்தன.

(இரா.முருகன்)

பிரசுரம் : உயிர்மை மார்ச் 2017

நன்றி உயிர்மை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன