New Novel: வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 42 இரா.முருகன்

ஞாயிற்றுக்கிழமைக்கான சாவகாசத் தனத்தோடு ஊர்ந்து கொண்டிருந்தது ஆலப்புழை டவுண் பஸ். அம்பலப்புழையைத் தொட்டடுத்து ஏழெட்டு கிராமம். ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்படும் அது. அப்படிப் புறப்படாமல் அயோத்தி ராமன் வில் விட்ட அம்பு மாதிரி வலம் இடம் திரும்பாது நேரே போனால் வெறும் பதினைந்து நிமிஷத்தில் போய்ச் சேர்ந்து விடலாம் தான். ஆனால் அடித்துப் பிடித்துக் கொண்டு விரசாகப் போய்ச் சேருவதில் யாருக்கும் விருப்பம் இல்லை.

திலீப் மட்டும் வித்தியாசமாக இருக்க நினைத்தால் நடக்குமா என்ன? ஊரோடு, யாரோ சொல்லியபடிக்கு சரிசரி சரிசரியென்று தலையாட்டி ஆமோதித்து டவுண்பஸ் ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து ஊர்வதே அவனுக்கு விதிக்கப்பட்டது. ஊர்ந்து ஊர் சேர்ந்து உடன் விழித்து ஆடி அடங்கி உறங்கிப் பின் ஊரும் பொம்மை அவன்.

ஒரு வாரமாகத் தன்னை பொம்மலாட்டப் பொம்மையாக உருவகித்துக் கொள்ள அவனுக்கு சுவாரசியமாக இருக்கிறது. அதெதுக்கு ஒற்றை பொம்மையாகக் கயிற்றில் ஆட? தாலிக் கயறு கட்டிக் கூட்டி வந்த அகல்யாவும் இன்னொடு கயிற்றில் ஆடட்டும். ஆட்டுவிக்கப் படுகிற தோல் பொம்மைகள் அவர்கள்.

இந்த கயறு உவமானமும் அவனுக்கு ரொம்ப இஷ்டமாகி விட்டது. நாலைந்து மலையாளப் படம் பார்த்ததில் இடைவேளைக்கு அப்புறம் தாலிக் கயிறைக் கழற்றி எறியாத கதாநாயகியைப் பார்க்க முடியவில்லை இங்கே. திரை முழுக்க மார்பு நிறைக்க குளோஸ் அப்பில் அந்த மாதிரி காட்சி வரும்போதெல்லாம் அரை இருட்டில் பக்கத்து சீட் முகங்கள் துயரத்தையும் ஆத்திரத்தையும் தான் காட்டுமே தவிர அவன் போல முலையழகில் ஈடுபடுவது இல்லை. ஊரோடு அவனும் கோபப்பட வேண்டாமா? வேணும் தான். அகல்யாவிடம் கேட்டால் என்ன சொல்வாளோ? சொல்ல என்ன உண்டு? அவளும் அவனைப் போல கட்புத்லி தான். கயிற்றில் ஆடும் இன்னொரு பொம்மை.

அம்மா தகனம் முடிந்ததுமே அழுகைக்கும் புலம்பலுக்கும் நடுவே கற்பகம் பாட்டி சொல்லி விட்டாள் –

உனக்கு பணம் தேவையா இருக்கும். எங்க காலத்திலேயே யாராவது போய்ச் சேர்ந்தா, சம்ஸ்காரத்துக்கும் அப்புறம் பத்து நாள் காரியத்துக்குமா ஆயிரம் ரூபா வள்ளிசா எடுத்து வைக்கணும். இப்போ இன்னும் பத்து மடங்கு ஆயிருக்கும். உன் பெரியப்பன் தான் உனக்குத் தரணும் கடனாவாவது பணம். அந்த லோபி, ஈயாத லோபி தர மாட்டேன்னா நீ உன் சிநேகிதா கிட்டே வாங்கு. நான் என் தாலிக் கொடியை வச்சு உனக்குப் பணம் தரேன். கிழவிக்கு ஏது தாலி, கிழவனைத் தான் பாதாம் அல்வா மாதிரி முழுங்கிட்டாளேன்னு பார்க்கறியா? அவர் போனதும் என் கழுத்திலே இருந்து கழட்டி பால்லே போட்டு வச்சா. உக்ரமா தேவர்கள் கோபப்படுவாளாம் எங்கேயாவது தாலி இறங்கினா. கட்டி வச்ச பரம்பரை வீட்டை வித்தா கோபப்படற தேவர்கள் இருக்காளான்னு தெரியலை. அவா உன்னையும் உன் பெரியப்பனையும் ஆசீர்வாதம் பண்ணட்டும். என் வீட்டை இப்போ விக்க ஏற்பாடு பண்ண வேண்டாம். காலக் கிரமத்துலே, நான் போய்ச் சேர்ந்து, யார் கண்டது அடுத்த மாசமே தீபாவளிக்கு ரெண்டு நாள் முந்தி நான் போய்ச் சேருவேனா இருக்கும். வீட்டை வித்துடாதே.

பெரியப்பா வீட்டை விற்கிற மனநிலையில் இல்லை என்பதைப் பாட்டிக்கு எடுத்துச் சொல்வதற்குள் அவள் கட்டைப் பலகையைத் தலைக்கடியில் வைத்துத் தூங்கியிருந்தாள்.

பாட்டி பாவம். அவா சொல்றதை கேளுங்கோ. அவ வீடு அது. வித்துடாதீங்கோ நீங்களும் உங்க மினிஸ்டர் பெரியப்பாவும்.

அகல்யா அவன் அணைப்புக்குள் இடுங்கிக் கொண்டு சொன்னது அந்த ராத்திரியில் தான். அம்மாவை எரித்து விட்டு வந்து மனதில் சோகம் அணையுடைத்துப் பீறிட்டு வர அழுகையில் கரைந்து இருந்தவனை அகல்யா உதட்டைக் கடித்து முத்தமிட்டாள். மெல்லிய குரலில், நான் இருக்கேன் ராஜா உனக்கு என்றாள் அவள், அவன் காது மடலைக் கடித்தபடி. மழை ஓய்ந்த அந்த இரவில், கட்டிலும் தலையணையும் விலக்கி காலடி மண் நறநறத்த சிமெண்ட் தரையில் கிடந்து அவளோடு உக்கிரமாக அவன் உறவு கொண்டான். குறுகிய இருப்பிடத்தின் சுவர்கள் சற்றே வெளிநோக்கி நீண்டு வளைந்து, அவர்கள் முயங்க இடமொழித்துக் கொடுத்தன அப்போது. வாசலை ஒட்டிய தாழ்வாரத்தில் கற்பகம் பாட்டி ஆழ்ந்த நித்திரையில் கிடக்க அடைத்த கதவுகளுக்குப் பின் புழுங்கி வியர்க்கும் உடல்கள் ஒன்றக் கலந்தார்கள் அவர்கள். சாவு கையொப்பமிட்டுப் போன பரப்பில், உயிர் மூச்சு பிணைந்து உடல் அதிர அவர்கள் இசைந்து இயங்கினார்கள். வேறெதுவும் குறுக்கிடாமல் போகமும், கூடிப்பின் விலகலும் ஒரு மனதோடு நாடி விரைந்து கொண்ட மறுபோகமுமே நினைப்பும், நாட்டமும், கொண்டு செலுத்தும் செயலுமாகி புலனமிழ்த்தி இருந்த நேரம் அது. அதற்கும் இடைவேளை இப்போது. இது எப்போது தொடருமோ. பொம்மைகள் ஆட்ட நேரத்தைத் தீர்மானிப்பதில்லை.

டவுண்பஸ் பெரிதாகக் கிறீச்சிட்டுக் கொண்டு நிற்க, பெரிய பெரிய பலாப்பழங்களைச் செல்லமாக அணைத்தபடி நாலைந்து பேரும் பின்னாலேயே செண்டை, மேளம், இலைத் தாளம், கொம்பு என்று தூக்கிக் கொண்டு ஒரு பஞ்ச வாத்தியக் குழுவும் வண்டி ஏறினார்கள். கொம்பு வாசிக்கிறவன் திலீப் பக்கத்தில் உட்கார்ந்தான். அவனுடைய வாத்தியம் திலீப்பின் தலைக்குப் பக்கம் அவனுக்குக் கொம்பு முளைத்தது போல் நீண்டிருந்தது.

பூம் பூம்.

அந்தக் கொம்பில் இருந்து வந்த சத்தம் சங்கு முழங்குகிறது போல் இருந்தது. அம்மாவை எடுத்துப் போகும் முன் முழங்கிய சங்கு அது. கூட்டத்தில் எப்படியோ அவன் பக்கம் வந்து மிட்டாய்க்கடை பாலகிருஷ்ண கதம் சொன்னார் –

திலீப் பாய். உனக்குப் பணம் தேவைப்படும். நிறையப் பணம் வேண்டியிருக்கும். ஏதொண்ணுக்கும் கவலைப்படாதே. கை கொடுக்க நான் இருக்கேன். போ.

சவ ஊர்வல வண்டியின் முன்னால் ஏறிக் கொண்டபோது ஏனோ மனதுக்கு சந்தோஷமாக இருந்தது அப்போது என்று திலீப்புக்கு நினைவு வந்தது. ஏனோ இல்லை. அது பாலகிருஷ்ண கதம் கொடுத்த வாக்குறுதி குறித்தான மகிழ்ச்சி.

தகனம் முடிந்து அடுத்த நாளே அவனைத் தேடி வந்து, அவன் அஸ்தி பொறுக்கி எடுத்துப் பால் ஊற்றிக் கடலில் கரைக்கப் போயிருந்ததால், அகல்யாவிடம் ஒரு பழுப்பு கவரைக் கொடுத்துச் சென்றிருந்தார் அவர்.

கட்சி நிதியா மாமாஜி?

அவள் அப்பாவியாகக் கேட்க, அவர் சொன்னாராம் –

இல்லே பேடி. நாம நிதி கொடுத்தாத் தான் கட்சிக்குப் பணம் இருக்கும். இது நான் கொடுக்கறது. திலீப் கிட்டே கொடும்மா. புரிஞ்சுப்பான்.

திலீப்புக்கு அந்த ஐயாயிரம் ஏதோ உணர்த்தியது. எதையோ தியாகம் செய்ய வேண்டி இருக்கும் என்று தோன்றியது. அகல்யாவையா? சே, கதம் அப்படிப்பட்ட மனுஷர் இல்லை.

சூனாம்பட்டில் வைதீக காரியங்கள் தொடர்ந்து பத்து நாள் நடத்தி அம்மாவைக் கரையேற்ற வேண்டும் எனத் தீர்மானமாக, அவன் கதம் வீட்டுக்குப் போயிருந்தான். மாடுங்கா அந்தணர்கள் பொறுப்பேற்ற, சாவுக்கு மறுநாள் அது.

திலீப்பைப் பார்த்ததும் அவர் குடும்பமே சூழ்ந்து கொண்டது.

துக்கம் கேட்க அவங்க வீட்டுக்குத் தான் போகணும். அதைத் தவிர வேறே எல்லாம் பேசலாம்.

கதம் தன் மகளிடம் சொன்னதில் அவனுக்கு பரிவு புலப்பட்டது. அந்த மகள் போன வருடம் தான் போதார் காலேஜில் பி.ஏ முடித்தவள். துடிப்பான பெண். இந்திப் படத்தில் தங்கை வேடத்துக்கே அவதாரம் எடுத்திருக்கும் ஒரு நடிகையின் முகச் சாயல் அவளுக்கு உண்டு என்று திலீபுக்குத் தோன்றியது. தூங்கி எழுந்து வந்திருக்கிறாள். அந்த வசீகரத்தோடு எல்லாப் பெண்ணுமே அழகாகத் தெரிவார்கள். ஆனால் இந்தப் பெண்ணோ, ராத்திரி நல்லா தூங்கினாயாம்மா, காப்பி சாப்பிட்டியா, பல் துலக்கிட்டு சாப்பிடு என்று அண்ணா தோரணைகளோடு கண்கள் பனிக்க அழைத்துப் பேச வேண்டியவள்.

அவள் தான் கார்ப்பரேஷன் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட கட்சிக்கு மனுக் கொடுத்திருக்கிறாள் என்று ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் தோரணையில் கதம் அறிவித்தார். அவரை ஒரு மாதம் முன்னால் கட்சி ஆபீசில் பார்த்தது நினைவு வந்தது திலீப்புக்கு. அப்போது அவர் சொன்னது –

ஏய், நான் கவுன்சில் எலக்‌ஷன் நிக்கலே. இன்னும் ஒரு வருஷத்துலே அசம்பிளி எலக்‌ஷன் வருதே. நேரே எம்.எல்.ஏ தான். என் வயசுக்கு கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ளே குஸ்திச் சண்டை, தள்ளு முள்ளுன்னு தரையிலே கட்டிப் பிடித்து உருண்டு உதச்சு மெனக்கெட முடியாது.

ரொம்பப் பெருந்தன்மையாக அறிவித்தார் கதம் அப்போது. கூடவே சொன்னார்.

உன் பெயர் லிஸ்ட்லே இருக்கு. நம்ம வார்டுக்கு மூணு பேர் உண்டு.. உன்னைத் தவிர, ஸ்கூல் டீச்சர் ரகுநாத் காலே அப்புறம் ஒருத்தர்.

கவுன்சிலர் தேர்தலுக்கு வார்டில் டிக்கெட் கேட்கும் இன்னொருத்தர் யாரென்று அவர் அப்போது ஏன் சொல்லவில்லை என்று திலீப்புக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் புரிந்தது.

அவன் கேட்காமலேயே இருபதாயிரம் ரூபாய் புது நோட்டாக அவனிடம் கொடுத்து அம்மா சம்பந்தமான செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொன்னவர் மறக்காமல் சேர்த்துக் கொண்டது –

நீ இதை உடனே திருப்பித் தரணும்னு எதிர்பார்க்கலே. அஞ்சு வருஷம், பத்து வருஷம் ஆனாலும் சரிதான். நான் காத்திருக்கேன். முடியலேன்னாலும் பரவாயில்லே. உன் கிட்டே என் பணம் ஜாக்கிரதையா இருக்கட்டும். போதும்.

அவருக்கு நன்றி சொல்லிக் காலில் விழுந்து எழுந்தான் திலீப் அப்போது.

ஒரே ஒரு உதவி செய்யணும் திலீப்.

அவர் கருப்பாக இன்ஸ்டண்ட் காப்பிப்பொடி அடர்ந்திருந்த காபி டம்ளரை அவனிடம் கொடுத்தபடி கிசுகிசுப்பான குரலில் சொன்னார். அறைக்கு வெளியே அவருடைய மகள் நின்று கொண்டிருந்ததை திலீப் கவனிக்கத் தவறவில்லை.

திலீப், நீ நல்லா படிச்சவன். கவர்மெண்ட் வேலைக்கு போறே.

இல்லே சார். இது கேரளத்துலே, கவர்மெண்ட் நிதியோடு நடக்கற வேலை.

ஏதோ ஒண்ணு. நாளைக்கே அந்த இடத்தை கவர்மெண்ட் எடுத்துக்கிட்டா நீ மந்த்ராலயா உத்தியோகஸ்தன். அங்கே செக்ரெட்டேரியட்டா? ஏதோ ஒண்ணு.

சரி பாய் சாப். அப்படி இருக்கட்டும்.

உனக்கு இது பெரிய விஷயமே இல்லை. இந்த கவுன்சிலர் பதவி இல்லேன்னா உனக்கு உலகத்திலே பிழைக்க ஆயிரம் வழி உண்டு. நம்ம பாப்பா ஒரு டெர்ம் கவுன்சிலரா இருக்க ஆசைப்படறா. அப்புறம் கல்யாணம் கட்டிக் கொடுத்திடுவேன். எங்கேயோ கண் காணாத தூரத்துக்கு போயிடுவா.

இப்போ நான் என்ன பண்ணனும் கதம் பாய்சாப்?

உனக்குத் தான் கட்சியிலே சீட் கிடைக்கும்னு பேச்சு. நீ வேண்டாம்னு சொன்னா.

அவர் நிறுத்த, சட்டென்று சொன்னான் திலீப் –

என் தங்கச்சிக்கு இது கூட செய்ய மாட்டேனா என்ன.

கதம் பெற்ற மகள் வெளியே இருந்து வேகமாக உள்ளே வந்து அவன் கால் தொட்டு வணங்கி, ஆசிர்வதியுங்கள் அண்ணா என்றாள் பதவிசாக.

அடுத்த பத்து நிமிஷத்தில் அந்தப் பெண்ணே டைப் செய்து கொடுக்க, போட்டியிடக் கொடுத்த மனுவை விலக்கிக் கொண்டதாக திலீப் கட்சிக்கு அறிவிக்கும் கடிதத்தில் கையெழுத்துப் போட்டு, விடைபெற்றுப் போனான்.

கயிற்றில் ஆடும் பொம்மலாட்ட பொம்மை. அப்போது தான் அவன் மனதில் அந்தப் படிமம் வந்து படிந்தது.

வழக்கு முத்தச்சி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.

ஆலப்புழ – அம்பலப்புழ டவுண்பஸ் படிக்கட்டில் பல்லி போல தொங்கிக் கொண்டு நின்ற க்ளீனர் பையன் சத்தமாக அறிவித்துச் சிரித்தான்.

பஸ் இங்கே ஒரு அஞ்சு மினிட் நிக்கும். தோச, பரிப்பு வட, சாயா, மலையாளத்திலே தெறி பறைய, தமிழ்லே கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட வசதி எல்லாம் உண்டு மான்ய மகா ஜனங்களே. வழக்கு முத்தச்சிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.

அவன் அறிவிக்க, திலீப் அதிசயமாகப் பார்த்தான். மற்ற பயணிகள் குலுங்கிச் சிரித்தபடி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல கடைக்கு ஏக காலத்தில் நடந்து பரிப்பு வடையும் சாயாவும் உடனே விளம்பித் தரும்படி கோரினார்கள். கடைக்குப் பின்னால் தொலைவில் ஆங்காங்கே செடிகளுக்கும் புதர்களுக்கும் இடையில் குத்தி இருந்து சிறுநீர் கழிக்கும் வாடை இங்கே முகத்தில் குத்தத் தொடங்கி இருந்தது.

மிஞ்சிப் போனால் பத்து நிமிஷமோ, பதினைந்து நிமிஷமோ பிடிக்கும் இந்தப் பயணத்தை அரைமணி நேரமாக்கிய மகானுபாவன் யார் என்று திலீப்புக்குத் தெரியவில்லை.
உலகத்தோடு ஒட்டி செயல்பட, திலீப்பும் ஒரு கயிற்றைப் பற்றி. பற்றி? ஓரமாக உட்கார்ந்து மூத்திரம் போக வேண்டும். அவன் அவசரமாக இறங்கினான்.

சாப்பாட்டுக்கடைவாசலில் கால் நீட்டி இருந்த முத்தச்சி அவனைப் பார்த்ததும் தள்ளாடி எழுந்து அவனைக் கும்பிட்டாள்.

திருமேனி எனக்கு உடனே சாவு வர ஆசீர்வாதம் பண்ணு. ஜீவிதம் மதியாயி.

திலீப் சொன்னான் – அதது அதது நடக்கற நேரத்தில் நடக்கும். நான் திருமேனி இல்லே பாட்டி. பம்பாய் கி சோக்ரா. சின்னப் பையன்.

அவன் சட்டைப் பையில் இருந்து பர்ஸை எடுத்தான்.

இது திட்ட இல்லே, பாட்டித் தள்ளை. வாழ்த்த. நுங்கம்பாக்கம் நீலகண்டய்யர் சம்சாரம் கற்பகம்மாள் இன்னும் இருக்கபட்ட காலம் சௌக்கியமாக கழிந்து தூக்கத்திலேயே சொர்க்கம் போய்ச் சேரணும். தூக்கம்னா மலையாளத்திலே வேறே தானே. அது வேணாம். உறக்கத்திலேயே. உறங்கியே மெல்ல போகட்டும்.

கிழவி திருதிருவென்று விழித்தாள். பிரியமாகக் காசு கொடுத்து ஒருத்தரை வாழ்த்தச் சொன்னது அவள் ஆயுசிலேயே இதுதான் முதல் முறை.

வாய் கோணி, கண் நிலைக்க அவள் வெற்றுவெளியில் கைகளை நீட்டிப் பரத்தினாள். சுழலில் அகப்பட்டு வெள்ளப் பெருக்கத்தில் அடித்துப் போகப்படும் போது சின்னச் செடியையோ மிதக்கும் மரக் கட்டையையோ பற்றியபடி நீந்திக் கரை சேர்ந்து உயிர் பிழைக்கச் செய்யும் கடைசி முயற்சி போல அவள் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள். இதுவரை கற்றது எல்லாம், பேசியது எல்லாம், சபித்தது எல்லாம் பிரயோஜனப் படாதவை என்று ஆக, இன்னொரு தடவை முதலில் இருந்து தொடங்கி, புதிய ஒரு மொழியில் எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவளாக அவள் தெரிந்தாள். நீட்டிய கைகள் நீட்டியபடி இருக்க அவள் மெல்ல எழுந்தாள். ஓவென்று அழுதபடி திலீப்பின் கையைப் பிடித்துக் கொண்டாள் –

நாயனே, எனக்குத் தெரியாது. யாரையும் வாழ்த்த எனக்குத் தெரியாது.

சொல்லியபடி அவன் கையில் அவனிடமிருந்து வாங்கிய ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்து போய்விட்டாள். பஸ் திரும்பக் கிளம்பும் போது யாருமே எதுவுமே பேசவில்லை.

கிழவியைச் செயலில்லாமல் நான் ஆக்கி விட்டேனா? புதுசாகக் கவலைப் பட ஆரம்பித்தான் திலீப். எதிர்பார்க்க, கரிசனம் காட்ட, பயம் விலக எவ்வளவோ இருக்க, இந்த வயசான பெண்பிள்ளை எங்கே இதற்கு நடுவே வந்தாள். அவளுக்கு ஏதும் கயிறுகள் இல்லை. அவள் நினைத்தபடி நினைத்த இடத்தில் நினைத்த நேரம் கோலூன்றி நடுங்கும் கால்களை ஊன்றி ஆட முயலலாம். திட்டாமலேயே உயிர் வாழ முடியாதா என்ன? வாழ்த்தாமல் இத்தனை வருடம் வாழ்ந்தவளுக்கு அது என்ன கஷ்டம்? ஆனால் வருமானத்துக்கு என்ன செய்வாள்? திலீப் அவளை மறுபடி சந்திக்கும்போது ஐந்து ரூபாய் கொடுப்பான். அவனால் முடிந்தது அதுதான்.

என்னால் முடிஞ்சது இதுதான். இந்த சம்பளம் தான் திலீப்.

பிஸ்கட் சாஸ்திரி நேற்றைக்கு அவனிடம் சொன்னார். இன்னும் இருநூறு ரூபாய் சம்பளம் உயர்த்தித் தர முடியுமா என்று அவர் சந்தோஷமும் சாந்தமுமாக இருந்த நேரத்தில் விசாரித்தான் திலீப்.

உங்க பெரியம்மா இப்போதைக்கு வர மாட்டா. டாக்டரேட் வாங்கிட்டா. மற்ற நாட்டு பல்கலைக் கழகத்திலே எல்லாம் பேசக் கூப்பிடறா. பிரிட்டன் முடிச்சு பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அப்புறம் நடாஷா மூலமா சோவியத் யூனியன் பிரயாணம். அப்படி மெகா பெரிய சுற்றுப் பயணத் திட்டம். அவா வர வரைக்கும் இங்கே உனக்கும் வேலை இல்லே. எனக்கும் கிடையாது. சியாமளா வந்து கவர்மெண்ட் நிதி கையிலே கிடைக்க இன்னும் குறைஞ்சது மூணு மாசமாவது ஆகும். அதுவரை தண்டச் சம்பளம் தான் நமக்கு. எப்படி ஏத்தித் தர?

பஸ்ஸில் இருந்து இறங்கி வழக்கு முத்தச்சியிடம் காசு கொடுத்து பிஸ்கட்டைப் பிய்த்தெறியச் சொல்லலாமா என்று ஒரு நினைப்பு.
பிழைத்துப் போகட்டும். திலீப் படிப்புக்கு இந்த வேலை கிடைத்ததே ஆச்சரியம். பிஸ்கட் சாஸ்திரி அவனை இரைந்து பேசி எடுத்தெறிந்து இதுவரை வேலை வாங்கியதில்லை. ஆனால் நக்கலாக ஒரு சிரிப்பு அவரிடம் உண்டு. ட்ரங்குப் பெட்டிக்குள் ஷார்ட் ஹேண்ட் லோயர், டைப் ரைட்டிங் ஹையர், எஸ் எஸ் எல் சி சர்ட்டிபிகேட்டுகளுடனும், உள்ளூர் ஹெட்மாஸ்டர் கொடுத்த ரென் அண்ட் மார்ட்டின் இலக்கணப் புத்தகத்தை விட்டு இம்மியும் வழுவாத இங்கிலீஷில் நன்னடத்தை சர்ட்டிபிகேட்டுடனும் மதராஸ் செண்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலேறி, வடக்கே தில்லி, கிழக்கே கல்கத்தா, மேற்கே பம்பாய் என வேலை தேடிப் போய் வெற்றி கண்டு நிலைத்தவர்களின் தேகத்தில் ஊறி வரும் அந்தண எள்ளல் அதுவென்று திலீப்புக்குத் தெரியும். அத்தனை படித்த அவன் அப்பாவும் பெரியப்பாவும் கூட அந்த மனநிலையில் ஊறியவர்கள் என அவன் அறிவான்.

தியேட்டர் வாசலில் பஸ்ஸை நட்ட நடு ரோடில் நிறுத்தி, சகாவே அடிச்சுப் பொளி என்று பஸ் டிரைவரும் க்ளீனர் பையனும், விசில் ஊதாமல் காத்திருந்த கண்டக்டரும் திலீப்பை உற்சாகப்படுத்தி இறக்கி விட்டு பஸ் நகர்த்திப் போனார்கள். இந்த எட்டு மாசப் பழக்கத்தில் அவன் கிட்டத்தட்ட நூறு மலையாளி இளைஞர்களுக்கு நல்ல சிநேகிதனாகி விட்டான். கோவில் போகிற வழியில் ஒரு வினாடி புன்சிரித்துப் போகிற தலை குளித்த, உதடு பெருத்த மலையாளி தேவதைகளும் அதில் உண்டு. இன்னும் ஒரு வருஷம் எல்லோர் புண்ணியத்திலும் இங்கேயே குப்பை கொட்டினால் அவனுக்காகவே பஸ் விடுவார்கள். அந்த சுந்தரிகள் ஏட்டா என்று விளித்துக் கைகோர்த்து வருவார்கள்.

அடி செருப்பாலே.

மனதில் அகல்யா மிரட்ட துள்ளிக் குதித்து நடந்தான் திலீப். தியேட்டர் வாசலில் வைத்திருந்த புகைப்பட போஸ்டரைப் பார்த்து திகைத்துப் போய் நின்று விட்டான் அவன்.

இந்திப் படம் தான். நேற்று பத்திரிகையில் சிறப்பு காலைக் காட்சி என்று போட்டு விளம்பரம் செய்த சினிமா இல்லை. படப் பெட்டி வராததால் வேறே ஒண்ணு.
பம்பாய் கிராண்ட் ட்ரங்க் ரோடில் அவன் மாட்னி பார்த்துப் பாதியில் எழுந்து வந்த சினிமா அது.

மனதில் ஃப்ரேம் ஃப்ரேமாகப் படிந்து போயிருக்கிற படம். ஆனாலும் பார்த்தாக வேண்டும் இப்போது. அவனைக் கட்டி நிறுத்திய கயிறை வலித்து இழுத்து யாரோ ஆட்டுகிறார்கள்.

டிக்கெட் எடுத்து உள்ளே போகிறான். தியேட்டர் இருட்டில் நியூஸ் ரீல் ஓடும் சத்தம். இது கிராண்ட் ரோடா, அம்பலப்புழையா?

திலீப் எதிர்பார்த்து இருக்க, சற்றும் பிசகாமல், ஊஊஊ என்று காண்டாமிருகம் போலவோ, நிலக்கரி பற்ற வைத்து ஓட்டும் ரயில் இஞ்சின் போலவோ ஊளையிடும் தீக்குச்சி அழகிக் கதாநாயகியைப் பின்னால் இருந்து அணைக்க அடி மேல் அடி வைத்து நெருங்கி வருகிறான் கதாநாயகன். அழகான முன்பாரம் கொண்ட பெண். அடுத்து என்ன ஆகும் என்று திலீப் அறிவான்.

வேகம் கொண்டு கடகடத்துச் சுழலும் கூரை மின்விசிறிகள் வெக்கையைக் கூட்டிப் புழுக்கத்தை சர்வ வியாபகமாக நிறுத்தி வைக்கும் நொடி இது. அவை ராட்சசத்தனமாகச் சுழல்கின்றன இப்போது. திலீப்புக்கு இதுவும் தெரியும்- குளோசப்பில் உதட்டைச் சுழித்து அழகு காட்டும் கதாநாயகி, குச்சியில் செருகிய ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி கண்ணடிப்பாள். கண்ணடிக்கிறாள். கதாநாயகன் குரங்கு போலக் குதித்து யாஹு என்று சத்தம் போட்டு வரப் போகிறான். இதோ, அவன் குதித்து வந்து, கதாநாயகியைத் துரத்திப் பிடித்து அவளைத் தூக்குவான். தூக்குகிறான். வரப் போகும் கணங்கள் தெரிந்தால் உற்சாகமின்மை தான் ஏற்படும். திலீப் வெளியே போய் உலகுக்குச் சொல்வான்.

அரங்கத்தில் உள்ளே வரும் வழி ஓரமாக, ஒளிக் கற்றையைக் கசிய விட்டுக் கொண்டு ஒரு கதவு திறக்கும் இனி. கம்பளிச் சால்வையும், சரிகை மாலையும், புகையும் ஊதுபத்தியும் ஒரு தட்டில் சுமந்து ஒரு முதிய முகம்மதியர். அவர் இடுப்பில் இருந்து இறங்கி வழியும் பைஜாமாவும், மேலே இறுக்கமான கமீஸும் அதற்குச் சுற்றி மேலே அரைகுறையாக நிற்கும் கை இல்லாத கம்பளிக் கோட்டுமாக உள்ளே நுழைவார். நேரே நடந்து இடது பக்கம் கதவு திறந்து அவர் வெளியேறுவார். திலீப் எதிர்பார்த்து இருந்தான். அதொன்றும் நடக்கவில்லை. எதுவும் அப்படி நடக்கவில்லை. வாழ்க்கையில் சுவாரசியம் அழிந்து போய்விடவில்லை. தேவனுக்கு ஸ்தோத்ரம் சொல்ல அவனுக்குத் தோன்றியது.

ஆனாலும், அதெல்லாம் எந்த நேரமும் நடக்கக் கூடும் என எதிர்பார்த்து எப்போதெனத் தெரியாத நிச்சயமின்மை சூழ இருப்பது மூச்சு முட்ட வைத்தது.

இது பம்பாய் இல்லை. நீ அன்றைக்கு அங்கே போயிருந்தவன் இல்லை. இங்கே காட்சியும் ஒலியும் சூழலும் அன்று அனுபவப்பட்டது இல்லை. காலம் திரும்பித் திரும்பி வந்து ஒரே புள்ளியில் குவியம் கொள்ளும் என்று எதிர்பார்க்காதே.

யாரோ கயிற்றை இயக்கி, திலீப்பை நிமிர்த்தி சிறு காலடிகளாக வைத்து தியேட்டருக்கு வெளியே நடக்கச் செய்கிறார்கள்.

கால்கள் நடாஷா தங்கியிருக்கும் ஹோட்டல் படி ஏறச் சொல்கின்றன. மழை பெய்து சகதி நிறையாத, சுத்தமான பளிங்குப் படிகள் உள்ளே இட்டுச் செல்லும் விசாலமான கட்டிடம் அது.

ரிசப்ஷனில் இருப்பவர் எந்த விஷமப் பார்வையும் இன்றி கோயிலுக்கோ, குரிசுப் பள்ளிக்கோ போயிருந்து வெளிவரும் நொடியில் மனதை நிறைக்கும் அதே புனிதமான உணர்வுகள் மேலெழ அவனைப் பார்த்துச் சொல்கிறார் –

மதாம்மா உள்ளே தான் இருக்காங்க. உறக்கம் போல. காலிங் பெல் அடியுங்க.

அடித்தான். ஒரு முழு நிமிடம் ஏதும் ஆகவில்லை.

அவள் உறங்குகிறாள். அவள் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறாள். அவள் உயிர் போய் உடலாகக் கட்டிலில் சரிந்து கிடக்கிறாள். அவள் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்துச் சுட்டுக் கொண்டு தரையில் ரத்த வெள்ளத்தில். வேண்டாம். மனதைக் கட்டுக்கடங்காமல் ஆடாது நிறுத்தச் சொன்னான். நூலில் ஆடும் பொம்மைக்கு மனம் ஆடினால் என்ன ஆகும்? அது இற்று வீழ்ந்து இறுதிப் படும்.

வேண்டாம்.

இன்னொரு முறை காலிங் பெல்லை அடித்தான். பத்து வினாடி கடந்து போக, கைகள் கதவை ஓசையெழத் தட்டப் பரபரத்தன.

நடாஷா.
மெல்லக் கூப்பிட்டான். திரும்பவும் சத்தமாக நடாஷா என்றபடி கதவில் இடிக்க முற்பட்டபோது கதவு திறந்தது.

சுத்தமான உடுப்புகளை உடுத்து வசீகரமாகத் தலை சீவிக் கொண்டையும் இட்டிருந்தாள் நடாஷா. முழங்கால் வரை தழைந்த சிவப்பு ஸ்கர்ட். மேற்தோல் நிறத்தில், தொடை வரை உயர்ந்த மெல்லிய காலுறைகளை இட்டிருக்கிறாள் அவள். தழைத்துத் தைத்த கறுத்த மேலுடுப்பை மீறிச் செழித்து அடர்ந்து நின்ற மார்பிடத்தைப் பார்க்கவொண்ணாமல் தலை தாழ்த்தினான் திலீப்.

ஊர் சுத்திட்டிருக்கியா?

அவன் முகவாயை நிமிர்த்தி, புன்சிரிப்போடு கேட்டாள் நடாஷா.

நிதானமான, படபடக்காத அழகிய விழிகள் அவளுக்கு. எதையும் எதிர்கொள்ளும் பார்வை அவளுடையது. விண்கலத்தில் உலகைச் சுற்றி வரும் தீரமான சோவியத் பெண்கள் இந்த நிதானத்தோடு தான் செயல்படுவார்கள். நடாஷாவும் வாலண்டினா தெரஷ்கோவா போல விண்ணில் வலம் வருவாள். திலீப் அண்ணாந்து பார்த்திருக்க சந்திரனில் அரிவாள் சுத்தியலோடு, செங்கொடி பிடித்து, லெனின் நாமம் சொல்லியபடி அடியெடுத்து வைப்பாள்.

அவனை உள்ளே கூப்பிட்டு உட்காரச் சொல்லி விட்டுக் கதவுகளை ஒலியில்லாமல் அடைத்தாள் நடாஷா.

நாற்காலியில் விஸ்கி போத்தல் இருந்ததால் அவன் ஒரு வினாடி தயங்கி கட்டிலில் உட்கார்ந்தான். அவன் அருகே தோள் தொடும் நெருக்கத்தில் இருந்தபடி அவள் அவன் கைகளைப் பற்றிச் சொன்னாள்-

செர்யோஷா. என் பாய் ப்ரண்ட். விட்டுட்டுப் போயிட்டான் ராஸ்கல்.

அதான் ஏற்கனவே சொன்னியே. நினைவில்லையா? அன்னிக்கு லைப்ரரியிலேருந்து வெளியே வந்த போது.

திலீப் சுவாதீனமாக விஸ்கி பாட்டிலில் இருந்து அவள் எச்சில் படுத்திய, கொஞ்சம் திரவம் மிச்சமிருந்த கிளாஸில் மது ஒழித்து ஒரே மடக்கில் விழுங்கினான்.

போதும் உனக்கு இது வேணாம். பகல் நேரம் வேறே.

நடாஷா தடுத்தாள். அவன் மாட்டேன் எனத் தலையாட்டினான்.

சொன்னாக் கேளு.

அவள் சொல்லச் சொல்ல பிடிவாதத்தோடு கை நீட்டி மறுபடி பாட்டிலை எடுத்தான் அவன். விஷமம் செய்யும் குழந்தை போல இன்னும் ஒரு மிடறு கிளாஸில் ஒழித்து விழுங்கினான். நடாஷாவைப் புன்சிரிப்போடு பார்த்தபடி காலி கிளாஸை அவளிடம் கொடுத்தான். கட்டிலேயே அதை வைத்தாள் அவள்.

அவள் யட்சி. அப்சரஸ் ஆளி என லாவணி ஆடும் தேவ கன்யகை. மாட்னி ஷோ சினிமாக் கதாநாயகியை விட அழகானவள். தெரஷ்கோவா போல துணிச்சலானவள். அத்துணிச்சலின் அண்மை அவனுக்கு வேண்டியிருக்கிறது.

செர்யோஷா போய்ட்டான்

அவள் திரும்பச் சொல்ல அவன் காலிக் குப்பியைப் படுக்கையில் இருந்து எடுத்து நாற்காலியில் வைத்தான். சட்டென்று இருகை நீட்டி அவளை முடிந்தவரை தழுவக் குனிந்து மாணப் பெரிய முலைகளுக்கு நடுவே காமம் மிகுந்தெழ முத்தமிட்டான். கட்டிலில் அவளைக் கால் பரத்திச் சாய்க்க முயன்று தோற்று மறு திசையில் மல்லாந்து விழுந்தான்.

நாயே.

அவள் எழுந்து திலீபைப் பேயறை அறைந்தாள். இடுப்பைப் பிடித்துத் தூக்கிச் சுற்றி வெறுந்தரையில் தொப்பென்று போட்டாள்.

என் பாய் பிரண்ட் செத்துப் போனான்னு சொல்றேன். உனக்கு என் கிட்டே உடம்பு சுகம் கேக்குதா? நீ மனுஷன் இல்லே. கேடு கெட்ட பன்றி. பன்றியும் நாயும் கலந்து உயிர்க் கொடுத்த இழிந்த பிறவி.

அவன் முதுகிலும் மார்பிலும் காலால் எற்றினாள். திலீப் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

வெறி நாயே.

குரல் எழாமல் கூச்சலிட்டு ஒரு நொடி அவன் இடுப்புக்குக் கீழே ஏறி மிதித்து இறங்கினாள் நடாஷா. உயிர் போய்த் திரும்பி வர, அரை மயக்கமானான் அவன்.

கீழே கூட்டி வந்து ஆட்டோ ரிக்‌ஷாவில் அவனை நடாஷா அமர்த்தியதை மூன்றாம் மனிதனுக்கு நடப்பது போல் திலீப் அரை பிரக்ஞையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்தப் பையனுக்கு உடம்பு சுகமில்லை. பாத்துக் கூட்டிப் போ. இந்தா வண்டி வாடகை. மருந்து ஏதாவது வேணும்னா வாங்கிக் கொடு. தஸ்விதானியா திலீப்.

அவள் அனுப்பி வைக்க, உச்சி வெயில் நேரத்தில் ஆட்டோ அம்பலப்புழைக்கு ஓடியது.

என்ன சகாவே, மதாம்மா கிட்டே விரல் வித்தை காட்டினியா?

ஆட்டோ ஓட்டியபடி திரும்பப் பார்த்துச் சிரிக்கிறவன் திலீப்புக்கு இங்கே கிடைத்த தோழன் தான். சகா, வண்டியை திலீப் ஆபீசில் நிறுத்தினான்.

எங்கே போயிருந்தேள்? நான் ஒரு மணிக்கூறா காத்துண்டிருக்கேன்

ஆபீஸ் வாசலில் கான்வாஸ் பையும், பெட்டியுமாக அகல்யா நின்றிருந்தாள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன