ஔரங்கசீப்

ஔரங்கசீப் நாடகத்தின் நோக்கம் ஔரங்கசீப்பை அற்புதமான குணநலன்கள் கொண்ட, நீதிக்கும் நேர்மைக்கும் உருவகமாக நின்ற கதாநாயகனாகச் சித்தரிப்பது இல்லை.

மத சகிப்புத்தன்மையில் அக்பர் ஒரு முனையில் என்றால், அவருடைய கொள்ளுப் பேரரான அவுரங்கசீப் முற்றிலும் எதிர்முனையில் இருந்தவர். இந்துக்கள் கட்டாயமாகச் செலுத்த வேண்டி இருந்த ஜெசியா வரியை அக்பர் விலக்கினார். ஜெஸியா வரியைத் திரும்ப விதித்தவர் ஔரங்கசீப். அந்த வரிப் பணம் சமூக நலனுக்காகப் பயன்பட வேண்டும் என்று இன்னொரு சட்டம் கொண்டு வந்து அதுவும் போதாமல், நலிந்த முஸ்லீம் குருமார்களின் நலனுக்காக ஜெசியா வரிப்பணம் செலவிடப்பட வேண்டும் என்று அடுத்த மாற்றம் கொண்டு வந்தவர் அவர். இசை போன்ற அழகுணர்ச்சியும் கலாச்சாரப் பின்னணியும் கொண்ட நுண்ணிய ரசனையைப் புறம் தள்ளித் தடை செய்தவரும் அவரே. தன் தந்தை ஷாஜஹானுக்குப் பிரியமானவை என்பதாலேயே இசையையும், அழகும் நேர்த்தியான கட்டுமானமும் கொண்ட கட்டிடங்களை நிர்மாணித்து ரசிக்கும் கட்டிடக் கலையையும் புறந்தள்ளியவர் ஔரங்கசீப். அரசுப் பணத்தில் அழகுணர்ச்சி ஏன் என்ற கருத்தாக்கம் அதன் பின்னொட்டாக வந்திருக்கலாம்.

ஔரங்கசீப் நாடகம் அவர் தம் தந்தையாரான சக்கரவர்த்தி ஷாஜஹானையும் தமக்கை ஜெஹனாராவையும் சிறை வைத்து, போட்டியாக இருந்த தாரா ஷிகோவையும் மற்ற சகோதரர்களையும் கொன்று, தில்லி முகலாயப் பேரரசின் ஆறாவது பேரரசராக முடி சூட்டிக் கொள்ளும் நேரத்தை* காலமாகக் கொண்டு நிகழ்கிறது. பாபர், ஹுமாயுன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப் என்று போகும் வரிசை இது.

ஔரங்கசீப்பின் மூத்த சகோதரி ரோஷனாரா அவரைச் சார்ந்து இயங்கியவர். இன்னொரு சகோதரியான ஜஹனாராவோ மற்ற சகோதரனான தாரா ஷிகோவைச் சார்ந்து இயங்கிவர். எல்லோருமே ஷாஹஹானுக்கும் அவர் மிகவும் நேசித்து தாஜ்மஹாலில் வைத்து ஆராதித்த மும்தாஜ்க்கும் பிறந்த குழந்தைகள்.

நல்லவர்கள் X அல்லாதவர்கள் = ஔரங்கசீப், ரோஷனாரா X தாரா, ஜஹானாரா
என்று எளிமையான சமன்பாடு சரித்திரத்தில் இல்லை. இந்த நாடகம் நிகழும் 1658-க்குப் பிறகு, ரோஷனாரா காதலித்தார் என்ற காரணத்துக்காக ஔரங்கசீப் அவளை அரண்மனையில் இருந்து புறத்தாக்க, தாராவுக்குப் பிரியமான சகோதரி ஜஹனாரா ஔரங்கசீப் அணிக்கு மாறி அந்தக்கால அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்குகிறார் என்று போகிறது வரலாறு.

இறக்கும் தறுவாயில் நோயுற்று மூத்துத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் புலம்பும் ஷாஜஹான், நாடகம் காட்டும் இறந்த காலம். அவனைச் சிறை வைத்து முகலாயச் சக்கரவர்த்தியாகும் ஔரங்கசீப் நாடகத்தின் தற்காலம். தன் சகோதரன் ஔரங்கசீப்பைக் கொன்று, மத சகிப்புத் தன்மையோடு அக்பர் ஆண்டது போல தான் ஓர் அரசு அமைக்க வேண்டும் என்று கனவு கண்ட தாரா மனதளவில் வாழ்ந்தது நாடகக் களன் சார்ந்த எதிர்காலத்தில். இந்தக் கால ஒருமையின்மை, ஆளுமை அடிப்படையிலான முரண்கள் காரணமாக எழும் தனிமனித, குடும்ப, சமூக வாழ்க்கை சார்ந்த பிரச்சனைகளையே நாடகம் முன்னெடுத்துப் போகிறது.

* ஔரங்கசீப் தன் சகோதரன் தாரா ஷிகோவை வென்ற சாமு கார் போர்க் காலம் – 1658 CE

நாரத கான சபா, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை

செப் 15,16,17,18

ஷ்ரத்தா தியேட்டர்ஸ், தியேட்டர் நிஷா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன