New : அவரவர் எழுத்து


(Photo credit Murugan Ashwin)

நண்பரான ஓர் எழுத்தாளர் -பத்திரிகையாசிரியரைத் தொலைபேசியில் அழைத்தேன். எடுத்தது அவருடைய புதல்வர்.

‘அப்பா காலையிலே பத்து மணி வரை பேச மாட்டார். எழுதற நேரம். நீங்க கூப்பிட்டதா சொல்லிடறேன். திருப்பி அழைப்பார்’

இது நல்ல ஒரு வழக்கம். எழுத்தை ஒரு யோகமாக, தவமாக மதித்து முழு ஈடுபாட்டோடு செயலாற்றுகிறவர்களை வணங்குகிறேன்.

எனக்கு எழுதும் போது எல்லாப் பேச்சும், சத்தமும், சங்கீதமும் வேண்டும். நாலு பத்தி லேப்டாப்பில் எழுதியதும் ட்விட்டரில் ஐந்து நிமிடம் கடத்தி விட்டுத் திரும்ப எழுதுவது பிடித்த வேலை.

எழுதிக் கொண்டிருக்கும்போது லேப்டாப்பில் சஞ்சய் சுப்ரமணியன் இசை ஓடிக் கொண்டிருக்கும். பாட்டுக்களைத் தேர்ந்தெடுக்க அவ்வப்போது எழுத்தை நிறுத்துவேன். சிந்து பைரவி ஆலாபனையோடு ‘விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்’ என்று திருமங்கையாழ்வார் பாசுரத்தை அவர் எடுத்தால் பாசுரம் முடியும் வரை அதில் ஈடுபடுவதன்றி எழுதத் தோன்றாது.

எழுத்து அப்படி எல்லாம் நிகழும் சூழலில் வாய்க்கிறதென்றால், எழுதியதை எடிட் செய்யும் போது ஆழ்ந்து தோய்ந்திருக்கும் மனநிலையும் கவனமும் எனக்குக் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. நாவல் ஒரு அத்தியாயம் (12000 + சொற்கள் ஏறக்குறைய) எடிட் செய்ய கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் பிடிக்கும்.

ஆங்கிலப் பத்தி எடிட் செய்ய இன்னும் அதிக நேரம் எடுக்கும். எழுதித் திருப்பி எழுத எழுத மொழி நடை நன்றாக வரும். ஆங்கிலப் பத்தி எடிட் செய்ய ஆரம்பிக்கும் போது 1200 சொற்கள் கொண்டிருந்தால், இறுதியாக்கப் பட்ட பிரதி 1800 சொற்கள் ஆகலாம்.

ஒவ்வொருத்தர் எழுத்து ஒவ்வொரு மாதிரி!

நண்பர் ரமேஷ் வைத்யா கேட்கிறார் –

நீங்க எழுதிட்டு எடிட் பண்ணுவீங்களா? ஆச்சரியமா இருக்கு. எடிட்டடாவே எழுதுவீங்கன்னு அனுமானிச்சிருந்தேன்
//

நிச்சயமா எடிட் இல்லாட்ட எழுத்து இல்லை.

நாவல்னு சொன்னா, ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு அடிப்படை ரிதம் – point of view சம்பந்தப் பட்டதாக, பொருளடக்கம் தொடர்பானதாக, மொழி நடை பற்றியதாக அது இருக்கலாம். அந்த அத்தியாயத்திலே எங்கேயாவது ஒரு வாக்கியத்திலே சுருதிபேதம் தட்டினா, எடிட்டுக்கு உட்காரும்போதே தெரியும். மாற்றலேன்னா மனதுக்கு நிறைவாகாது. சமயத்திலே அதோடு சேர்ந்து ஒரு பத்தியே மாறும்..

உரையாடல்லே இருந்து narrative போகிறது, narrative-லே இருந்து உரையாடல் போகிறது இதெல்லாம் jerk இல்லாம இயல்பாக இருக்கணும். ஒரு ஒற்றைச் சொல் தனியாகத் துருத்திக்கிட்டு, மற்ற text-க்கு இசையாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அங்கே சரியான சொல் வரணும்னா எடிட்-லே தான் மெனக்கெடணும்..

ஒரே நாவல்லே ஏழெட்டு பேச்சு- எழுத்து நடை பயன்படுத்தறதாலே, அந்த consistency-யும் எடிட்லே பார்க்க வேண்டி வரும்.

பத்தி பிரிக்கறது கூட எடிட்லே தான் தீர்மானமாகும் எனக்கு. இறுதி எடிட் செஞ்சுட்டு படித்தால், ஆடோபான் சாலையிலே ஃபெராரி வழுக்கிட்டு ஓடற மாதிரி போகணும்!

உஷ்.. தொழில் ரகசியம்.. இதுக்கு மேலே சொல்லக் கூடாது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன