New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 40 இரா.முருகன்


வாழ்ந்து போதீரே அத்தியாயம் நாற்பது இரா.முருகன்

சகித்துக் கொள்ளக் கூடிய வாழ்க்கைதான்.

வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே.

சங்கரனுக்கு மெல்லிய முணுமுணுப்பாக சினிமாப் பாட்டு எல்லாம் கூடி வந்தது. தமிழ்ச் சங்கத்தில் போன வாரம் திரை கட்டிப் பார்த்த தமிழ்ப் படம். சிவாஜி கணேசனோடு ஒரு நேர்த்தியான ரெண்டாம் ஹீரோயினும் கூட உண்டு. முதல் கதாநாயகியின் ஹெட்மாஸ்டர் தோரணை அவனுக்கு சரிப்பட்டு வரவில்லை. ரெண்டாம் ஹீரோயின் மகா அழகி. அவள் மட்டும் கண்ணைக் காட்டினால் மலை உச்சியில் இருந்து சங்கரன் இப்படியே போய்க் குதிப்பான். அப்புறம் அவனுடைய புது மேலுடுப்பு என்ன ஆகும்? போன மாதம் தான் தைத்த ஷெர்வானி அது.

வசந்த முல்லை போலே. என்ன ராகம்? சாருகேசியா?

மாக்ஸிம் கார்க்கி போல முழங்காலுக்குக் கீழே வழியும் கோட்டுப் போட்ட டிரைவர் அவனுக்கு முன்னால் ஏழெட்டு ஃபைல்களை ஒற்றைக் கட்டாகக் கட்டி மப்ளர் சுற்றிய தலைக்கு மேல் சுமந்தபடி ஓட்டமும் நடையுமாக விரைகிறான்.

சங்கரனை வீட்டில் இருந்து ஆப்பீஸில் எழுந்தருளப் பண்ண கார் ஓட்டி அழைத்து வருவதும் திரும்பக் கொண்டு வந்து விடுவதும் மட்டுமில்லை அவனுக்கு மாசச் சம்பளம் வாங்கித் தருவது. ஃபைல்களைச் சுமந்து போவதும், வருவதும் அவன் வேலை தான்.

அதில் இருக்கும் கெத்துக்காகவே சங்கரன் சாயந்திரம் வீட்டுக்குப் போகும்போது ஏதாவது ஏழெட்டு ஃபைல்களை எடுத்து வைத்து விடுவான். அதில் முதல் ஃபைல் ரெண்டு பக்கம் அவன் வீட்டில் ஒப்புக்குப் படித்திருந்தால் அதிகம்.

என்ன செய்ய? சூபரண்டண்ட் சங்கரன். வீட்டிலும் ஃபைல் பார்க்கிற சர்க்கார் அதிகாரி. கார் வைத்திருக்கிறவன். தோரணைகள் தேவையாகி இருக்கின்றன.

வசந்த முல்லை போலே. தில்ஷித் கௌர் வந்திருப்பாளா? பல் துலக்கி இருப்பாளா?

மின்விசிறி சுற்றாத நடு ஆபீசில் ஏதாவது யாரோடாவது பேசப் போகும்போது முட்டை ஆம்லெட்டும் ஸ்ட்ராங்க் சாயாவும் கழித்து வந்த வாடை, புகையிலைப் பொடி வாசனை, ஆலு பரத்தாவும் தயிரும் உண்டு வந்தது என்று ஆளாளுக்கு வாடை பரத்துகிறார்கள். தில்ஷித் உதட்டுச் சாய வாடையோடு வருவாள். அவளிடம் பேசும்போது அரை அங்குலம் கூடுதலாக நெருங்கி விடுகிறான் தற்செயலாக. அவள் வாய் நாற்றமும் இப்போது வசீகரமாகப் போய் விட்டது.

எல்லா வாடைகளும் வருக. சங்கரன் ஏலக்காயும் கிராம்பும் மணக்க வந்து கொண்டிருக்கிறான். மாமனார் கடையில் விற்க லக்னௌவில் இருந்து வரவழைத்தது. தெய்வீக மணம். கடைசி ஒரு நிமிடத்துக்கு முன் துப்பி விடவேண்டும். இல்லை என்றால் குதிரை லத்தி வாடையோடு வாயில் கரையும்.

சாப், நாஷ்டா.

டிரைவர் தார்யாசிங்க் குனிந்து வளைந்து காலை ஆகாரத்துக்குக் கிளம்பினான். காய்ந்த புல்லைக் கொளுத்திய வாடை அவனிடம் வருவது. ஜவ்வாது எடுத்து கஷ்கத்தில் தேய்த்து வந்தால் நாறாது. அதிகாரி வெறும் டிரைவர் சிப்பந்தியிடம் பேசக் கூடிய விஷயமில்லை இது. அதற்கு வாடை எதுவாக இருந்தாலும் சகித்துக் கொள்வதே மேல்.

சங்கரன் ஃபைல்களை மேஜைக்குக் கீழே எடுத்து வைத்து விட்டு, எல்லையில்லா எங்கும் நிறை ஏக பரம் பொருளே என்று நின்று கண்மூடியபடி மனதுக்குள் பாடினான். பள்ளிக் கூடத்தில் ப்ரேயர் பாட்டு. அது தான் நினைவில் இருக்கிறது.

ஃப்ளாஸ்க் சுத்தமாக்கி வைத்திருக்கிறதா? சற்றே பின்னால் திரும்பி மர அலமாரியில் பார்த்தான். உண்டு. கீழே தண்ணீர் நனைந்த வட்டத்தோடு கீழ்த் தட்டில் இருக்கிறது. சாய்வாலா கிஷோட் நெஹி சாயா போட்டு சகலருக்கும் விநியோகிக்கும் முன்னால் சங்கரனின் உத்யோக முத்திரையான தெர்மாஸ் பிளாஸ்கை அலம்பி வைத்திருக்கிறான் வழக்கம் போல். இந்த நாள் இனிதே.

வசந்த முல்லை போலே வந்து. அந்த ரெண்டாம் கதாநாயகி ராஜசுலோசனா.

கேபின் கதவை யாரோ தட்டுகிறார்கள். நீட்டி முழக்கி எஸ் சொன்னான் சங்கரன். அமைச்சரே வந்தாலும் சரிதான். உள்ளே வரும்போது எழுந்து நின்று உபசார வார்த்தை சொன்னால் போதும். அமைச்சர் இல்லை. தஃப்த்ரி என்ற தலைமைச் சேவகன் ப்ரிஜேஷ் குமார்.

சாப், கோவா கிறிஸ்தியானி பெண் யாரோ உங்களைப் பார்க்கணும்னு வந்து இருக்காங்க.

டெபுடி நம்பீசன் சாரைப் பார்க்கச் சொல்லு ப்ரிஜேஷ். நான் பிசியா இருக்கேன் தெரியலியா?

அவனுக்குத் தெரிந்திருக்காது. ஒற்றை ஃபைல் கூட இல்லாத மேஜை விளிம்பில் உட்கார்ந்து திங்கள் கிழமையன்று ஆபீசில் முதல் வேலையாக ராஜசுலோசனாவை நினைத்துக் கொண்டு இருப்பது அவனுக்குத் தெரியாது.

சாப், முக்கியமானவங்களா தெரியறாங்க.

ப்ரிஜேஷ் சொன்னால் தப்பே இருக்காது. அமைச்சர் அனுப்பி யாராவது கோவாவில் இருந்து முந்திரிப் பருப்பு மது விற்க வந்திருப்பாளோ.

போய் அனுப்பி வை ப்ரிஜேஷ்.

அவன் போனான்.

கையெழுத்துக்காக நேற்று சாயந்திரம் கிளம்பும் நேரம் வந்த இரண்டு ஃபைல்களை மேஜையின் முதல் தடுப்பில் இருந்து எடுத்து மேலே வைத்தான் சங்கரன். ஒவ்வொன்றும் நாலைந்து காகிதம் மட்டும் செருகிய ஃபைல்கள். மெல்ல, மிக மெல்லப் படிக்கலாம். உடனே கையெழுத்து போட்டு விட்டால் இன்றைக்குச் செய்ய வேறே வேலை கிடையாது.

கேபின் கதவில் தட்டும் ஒலி. கோவா பெண்மணி. வசந்த முல்லை போலே. ராஜசுலோசனா போல இருப்பாளா?

ஃபோன் அடிக்க ஆரம்பித்தது. எஸ் என்று வாசலில் நின்றவர்களுக்கு வரச் சொல்லிக் கூவியபடி டெலிபோனை எடுத்தான். அமைச்சர்.

நமஸ்காரம். வணக்கம் சார். நானலைண்மெண்ட் பத்தி தமிழ்லே பேசணுமா? அணி சேரா இயக்கம். ஆமா, அதான். அனுப்பி வைக்கிறேன். நல்லது சார்.

அவன் ஃபோனை வைத்து விட்டு முன்னால் இருந்த ஃபைல்களைப் பார்த்தபோது வெளிநாட்டு செண்ட் வாடை சூழ்ந்தது.

அவனுக்குப் பழக்கமானது.

தெரிசா.

நிமிர்ந்து பார்த்தான். தெரிசா தேவதை போல் சிரித்தபடி முன்னால் நின்று கொண்டிருந்தாள். இங்கே எங்கே, எப்படி? அபத்தமாகப் பட்டது. மனம் களி காட்டுகிறதா? வசந்த முல்லை போலே வந்து. ராஜசுலோசனாவா தெரிசாவா?

எழுந்து நின்று கை நீட்ட, அவள் மேஜைக்கு அந்தப் பக்கம் நின்று கை குலுக்கினாள். அழுத்தமாகப் பூசிக் கண் இமை ஓரம் வரியோடப் பரத்தியிருந்த கண்மையின் மெல்லிய அயோடின் வாடை. தெரிசா தான். வசந்த முல்லை போலே வந்து. வந்தாகி விட்டது.

இடுப்பை இறுகிப் பிடித்து பூச்சரமாக வழிந்து பாதங்களைத் தொடும் நீலப் பாவாடை. மேலே சிவப்பு ஸ்வெட்டர் உத்தேசமாக மார்பு மறைக்க, உருண்ட தோள் பற்றி இருக்கும் பொத்தான் போடாத கருப்பு டெனிம் ஓவர் ஜாக்கெட். அவள் உடுப்பும் இருப்பும் வாவாவென்று அழைப்பு விடுக்க, முன்னால் வந்து அவளை இறுக அணைத்துக் கொண்டான் சங்கரன். தெரிசாவின் கருத்தடர்ந்த புருவங்களை இதழால் ஒற்றி, மூடத் துவங்கிய இமைகள் மேல் மிக மென்மையாக முத்தமிட்டு, அணைப்பு விலகாமல் தலையைச் சற்றே தாழ்த்தினான்.

மிண்ட் மணக்க மணக்கப் பக்கத்தில் நிற்கும் பெண். தீர்க்கமான மூக்கின் மேல் எண்ணெய் சற்றே படிந்து மின்னுகிறது. புதிதாக ஒற்றை மூக்குத்தி அங்கே திளங்கிப் பிரகாசிக்கிறது. சங்கரன் அவள் முகத்தை நிமிர்த்தினான். மூக்குக்கும் மேலுதடுக்கும் இடைப்பட்ட வெளியில் துளிர்த்திருந்த வியர்வையைத் தன் உதடுகளால் ஒற்றினான்.

வசந்த முல்லை போலே வந்து. காலை நேரத்துக்கான நினைப்பும் செயலும் இல்லை இதெல்லாம். இருக்கட்டுமே. இது விசேஷமான தினம் போல.

அவள் மூக்கை ஒரு முறை விரலால் நிமிண்டிச் செல்லமாகச் சொன்னான் –

மூக்கி.

ம்ம்ம்

தெகால் மூக்கி.

அப்படீன்னா?

பிரஞ்சு ஜனாதிபதி ஷார்ல் தெகால்.

அவர் மூக்கை ஏன் பிடிச்சே?

அம்சமான பிரஞ்சுப் பொண்ணு தரேன்னார்.

போக வேண்டியதுதானே என்று சொல்லியபடி அவன் தோளில் தலை சாய்த்தாள் தெரிசா.

சங்கரன் சட்டைப் பையில் இருந்து கர்ச்சீப் எடுத்தான். வசந்தியுடையது. ஆபீஸ் அவசரத்தில் அது தான் கிடைத்தது.

வினாடி தயக்கத்துக்குப் பின் அந்தக் கைக்குட்டையால் தெரிசா மூக்கு மேல் மினுங்கிய எண்ணெய்ப் பிசுபிசுப்பை மெல்லத் துடைத்து, கர்ச்சீபை முகர்ந்தான்.

தெரிசா.

அவள் பெயரை ரகசியம் போல் உச்சரித்தபடி கர்ச்சீஃபை முத்தமிட்டான். தெரிசா அதைப் பிடுங்கித் தரையில் வீசினாள். வெறியோடு அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு விலகினாள். கேபின் வாசலில் தட்டும் ஒலி.

தெரிசாவின் தலைமுடி சூழப் பரத்திய இருட்டைத் துறந்து மெல்ல வெளிவந்த சங்கரன் அவளுடைய தோளைப் பற்றி முன்னால் இருந்த நாற்காலியில் அமர வைத்தான். தான் மேஜைக்குப் பின் போய் கையில் ஃபைலை எடுத்துப் பிரித்தபடி எஸ் என்று நீட்டி முழக்கிச் சொன்னான்.

கதவு மெல்லத் திறக்க உள்ளே எட்டிப் பார்த்தவள் தில்ஷித் கவுர்.

ஆடிட் ஓஃப்ஜக்‌ஷன் பதில் அனுப்ப இன்னிக்கு இறுதி நாள். நினைவு படுத்தச் சொன்னீங்க சார். அனுப்பி வச்சுடட்டா?

அவள் ஜாக்கிரதையாக தெரிசாவை நேராகப் பார்க்காமல் சங்கரனையே நோக்கியபடி கேட்டாள். உள்ளே வரும்போது தீர்க்கமாகப் பார்த்து விட்டுத்தான் வந்தாள் என்பதை சங்கரன் கவனித்திருந்தான். அவள் முகக் குறிப்பில் அசூயை தென்பட்டதையும் கவனிக்கத் தவறவில்லை அவன். அழகுக்கு அழகு இசையாது என்று அவனோடு சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் வசந்தி மலையாளப் பழமொழி சொல்லிக் காட்டுவாள் –

ரெண்டு தலை ஒண்ணிச்சாலும் நாலு முலை சேராது.

அந்த நாலும். வேணாம் சங்கரா, அணி சாரா இயக்கம் பற்றி நினைத்துக் கொள்.

சங்கரன் எழுந்து அலமாரியில் இருந்து தனியாகக் கட்டி வைத்திருந்த இரண்டு புத்தம்புது ஃபைல்களை தில்ஷித் கவுரிடம் நீட்டினான். ஒன்று கீழே சரிய, அவள் சட்டென்று முன்னால் நகர்ந்து அவன் தோளில் முகம் பட குனிந்து அந்த ஃபைலைப் பிடித்தாள். தீர்க்கமான வாய் நாற்ற வாடை. லகரியில் இதுவுமுண்டு.

மிசஸ் கௌர், இவங்க மிசிஸ் தெரிசா சிக்கந்தர். பிரிட்டன்லே இருந்த் வந்திருக்காங்க.

தெரிசா முசாபர்.

அவள் விரல்களை சற்றே நீட்டி தில்ஷித்தின் கைகளைப் பற்றிக் குலுக்க, தெரிசா முகத்திலும் இணக்கமின்மை தென்பட்டு விலகியதைப் பார்த்தான் சங்கரன்.

வேர்கள் இந்தியாவில் தான் இருக்கு இன்னும் இவங்களுக்கு.

அவன் சொல்ல, தெரிசா அழகாகச் சிரித்தாள்.

வேர் மட்டுமில்லை, கிளையும் இலையுமாக செடியே இடம் பெயர இருக்கு. இந்திய குடியுரிமை வாங்க மனுச் செய்திருக்கேன்.

சங்கரன் ஆச்சரியத்தோடு தெரிசாவைப் பார்த்தான்.

தில்ஷித் இன்னொரு முறை அவள் கையைப் பற்றி அன்போடு குலுக்கினாள். அசூயை தேவையில்லா நேரம். வந்திருக்கும் அழகியும் இந்த நாட்டில் தான் இனி. வெள்ளைக்கார பிம்பம் விடை பெறட்டும்.

தில்ஷித் உதட்டைக் குவித்து எதற்கோ சோ நைஸ் சொல்லி தெரிசாவை வாழ்த்திப் போக, கதவை அடைத்து தாழும் இட்டு உள்ளே வந்தான் சங்கரன்.

மேஜை விளிம்பில் இருந்தபடி திரும்ப தெரிசாவுக்குக் கை நீட்டினான் அவன்.

ஏய், வேணாம், ஆபீஸ்.

அவள் தான் நினைவு படுத்த வேண்டி இருந்தது.

இங்கேயே இருக்கப் போறியா? குழந்தையை விசாரிப்பது போல் சங்கரன் கேட்டான்.

ஆமா அம்பலப்புழையிலே.

நான் சீசன் டிக்கெட் தான் எடுத்து வச்சுக்கணும். சங்கரன் சொன்னான்.

ஏன், நீயும் அங்கே வந்துடேன்.

குடும்பம் இருக்கே?

கூட்டிட்டு வந்துடு.

ஆபீஸ்?

அங்கே இருக்கற ஆபீஸுக்கு மாறிக்கோ.

அது ஸ்டேட் கவர்மெண்ட் ஆபீஸ். ஜிலேபி பிழிஞ்சு ஒடிச்சுப் போட்ட மாதிரி எழுத்தெல்லாம் இருக்கும்.

கத்துக்கோ.

அவன் குனிந்து அவள் மடியில் கை வைத்து வருட, அவனைத் தோளில் பிடித்து உயர்த்திக் கூட்டிப் போய் அவனுடைய இருக்கையில் உட்கார வைத்தாள் தெரிசா.

வலிமையான வனப்பு. சங்கரன் அனுபவித்தது தான். மனம் இன்னும் கேட்க ஆரம்பித்திருக்கிறது

சிடிசன்ஷிப் கிடைச்சால் நல்லது தான். ஆனா கொஞ்சம் கஷ்டமா இருக்குமே. எப்படி முயற்சி செய்யறே?

அவன் தெரிசாவைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

நான் எதுக்கு முயற்சி செய்யணும். நீ தான் இருக்கியே.

தெரிசா தலையை அழகாகச் சாய்ந்து அவனைப் பார்த்தபடி சொன்னாள். வாசல் கதவு தட்டு ஒலி.

கிஷோர் நெஹி இரண்டு கோப்பைகளில் ஆவி பறக்கும் சாயாவும், ஒரு தட்டில் வறுத்த முந்திரிப் பருப்பும் வைத்து எடுத்து வந்து பணிவோடு தெரிசாவிடம் நீட்டினான். நன்றி சொல்லி அதை மேஜையில் விட்டுப் போகச் சொன்னான் சங்கரன்.

தில்ஷித் மேடத்துக்குத் தான் நன்றி சொல்லணும் சாப். அவங்க தான் விருந்தாளி வந்திருக்காங்கன்னு சொல்லி.

கை காட்டி நிறுத்தினான் சங்கரன்.

தில்ஷித் மேடத்துக்கும் நன்றி.

புது சாயா பத்தை வாங்கி வந்தேன் சாப்.

கடைக்காரனுக்கும் நன்றி.

சங்கரனோடு அவனும் சிரித்து வெளியே போனான்.

தெரிசாவுக்கு உதவ அவனால் முடியும் தான். நேரடியாக இல்லாவிட்டாலும், தில்லி சர்க்கார் உலகத்தில் அங்கும் இங்குமாகக் கயறு இழுத்து இயக்கம் முடுக்கி அரசாங்க இயந்திரத்தை அவனுக்காகவும் சுழலச் செய்யலாம்.

யாரிடம் உதவி கேட்கலாம்? அவனுக்குப் படியளக்கும் கலாசார அமைச்சகத் தெய்வம், அவர்களுடைய அமைச்சர்? ரேஷன் கார்ட் வாங்க, பிரதமர் நேருவிடம் ரெகமெண்டேஷனுக்குப் போன மாதிரி அது ரொம்ப அதிகமான சிபார்சு இல்லியா? வேறே அண்டர் செக்ரட்டரி, சூப்பரெண்டண்ட்.

ஏன் நார்த் ப்ளாக், சவுத் ப்ளாக் என்று செக்ரட்டேரியட்டிலேயே இன்னொரு அமைச்சகம், இன்னொரு அதிகாரி என்று பார்க்கணும்? அரசியல் வட்டாரத்தில் யாராவது?

சட்டென்று ஜோதிர்மய் மித்ரா மோஷய் நினைவுக்கு வந்தார். மிகச் சரியான மனுஷர். அவன் சொன்னால் செய்வார். அவர் கேட்டால் கிடைக்காதது இல்லை.

இது நிச்சயம் நேரம் கடத்தாமல் முடிந்து விடும் என்று மனதில் ஒரு நிம்மதி எட்டிப் பார்த்தது. விஷமமாகச் சிரித்தபடி தெரிசாவிடம் கேட்டான் –

முடிச்சுக் கொடுத்தா எனக்கு என்ன தருவே?

என்ன வேணும்? திருப்பிக் கேட்டாள். அவன் கேட்காமல் கேட்பதை அவளறிவாள்.

முன்னால் சாய்ந்து குறுக்கே கை நீட்டி மேஜை மேல் இருந்த அவளுடைய செழுமையான முழங்கையை வருடினான் சங்கரன்.

சார், ஆடிட் பைல் மெசஞ்சர் வைக்காம, நம்ம போலேந்த்ரநாத் பாபு மூலமே கொடுத்தனுப்பிட்டேன். டாக்சி கட்டணம் மட்டும் கொடுத்தா போதும். பத்திரமாப் போய்ச் சேர்ந்திடும்.

தில்ஷித் கவுர் எதையோ எதிர்பார்த்து வந்தவளாக அவசரமாகக் கதவைத் திறந்தாள்.

அவள் வந்தது வேறு எதற்கும் இல்லை என்று சங்கரனுக்குத் தெரியும். தில்ஷித்தின் உள்மனது சொல்லி அனுப்பியிருக்கும் வந்திருக்கும் அழகான பெண்ணைப் பற்றி. சங்கரன் சாப்ஜி அவர்களின் பார்வை அவள் மேல் மேய்ந்தபடி இருந்ததை தில்ஷித் கவனித்திருக்கலாம். அதைவிட முக்கியமாகத் தன்னிடம் குழையாமல் அதிகாரி மிடுக்கோடு அவன் பேசி அனுப்பியது அவளுடைய அழகு பற்றி வரும் சுயநம்பிக்கையை வெட்டிச் சிதைத்திருக்கலாம்.

சங்கரன் அவசரமாக நிமிர்ந்து, தெரிசாவைப் பார்த்து உரத்த குரலில், தில்ஷித் கவுர் கேட்கச் சொன்னான் –

இப்படித்தான் ஃபைல்கள் நகரும் மிசிஸ் முசாபர். புரிந்ததா? உஷ். ரகசியமாக வைத்திருக்கணும் என்ன? எங்கள் சோம்பேறித்தனத்தைப் பற்றி லண்டனில் சொல்லி விடாதீர்கள்.

நகைச்சுவையாகச் சொல்வது போல் அதீதமான அபிநயங்களோடு சொல்லியபடி தில்ஷித்தைப் பார்த்தான்.

அவள் வந்த விஷயம் தான் பேசுகிறோம். படுத்துப் பிணைந்து கிடந்து சுகம் கொண்டாட முஸ்தீபு செய்யவில்லை பார் என்ற தோரணை.

எனக்குத் தெரியுமடா திருடா என்ற பாவனையில் தில்ஷித் கள்ளச் சிரிப்போடு கேட்டாள் –

சாப், நாட்டுப்புறக் கலைவிழா செலவுக் கணக்கு பேப்பர்கள் தரமுடியுமா? நீங்கள் பிரதமரின் காரியாலயத்துக்கு நாளை மறுநாள் அனுப்ப வேண்டும்.

அவளும் ஆபீஸ் வேலையாகத் தான் வந்திருக்கிறாளாக்கும். ஆனாலும் சங்கரன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரியும்.

ஃபைலைக் கொடுக்கும் போது கவுரிடம் மெல்லிய குரலில் இந்தியில் கேட்டான் –

காஜர் கா ஹல்வா கொண்டு வந்திருக்கியா?

சாப்பிடணும் போல இருக்கா? அவள் ரகசியம் பகிரும் குரலில் சொன்னாள்.

சூடா இருக்கும் இல்லே

நல்ல இனிப்பாகவும் இருக்கும்.

சில பேர் சமைச்சா இனிப்பு கூடுதலா இருக்கும். முகராசி. கைராசி.

போதும்.

தில்ஷித் முணுமுணுத்தபடி கள்ளக்கண் போட்டு தெரிசாவைப் பார்த்தாள். வெற்றி பெற்றவர்களின் பார்வை அது என்று சங்கரனுக்குத் தெரியும்.

மெய்தான் சொல்றேன். சங்கரன் சொன்னான்.

தனக்கான பாராட்டையும் ரசனை கலந்த சிலாகிப்பையும் அங்கீகரித்து, தில்ஷித் இந்தியில் அவனிடம் சொன்னாள் –

இன்னிக்கு என்ன மாதிரி தினம்னு என் குண்டலியை ஜோஸ்யன் கிட்டே காட்டித்தான் கேட்கணும்.

ரொம்ப நல்ல தினம். ஜாதகம் எல்லாம் எதுக்கு? அழகிகளுக்கு எந்நாளும் நன்னாளே.

சங்கரன் உற்சாகப்படுத்தும் குரலில் சொல்ல, அவள் அழகாக வெட்கப்பட்டு, தெரிசாவைப் பார்த்துச் சிரித்தபடி வெளியே போனாள்.

ரொம்ப அழகா இருக்காங்க. தெரிசா சொன்னாள்.

ஏதோ கொஞ்சம் போல அழகு தான்.

அவளுடைய முகம் மலர்ந்ததைக் கவனிக்காதது போல், தொலைபேசியில் யாரிடமோ உரக்கச் சொன்னான் சங்கரன் –

அவசர பெர்சனல் வேலை. கசின் வந்திருக்கா. மினிஸ்டர் கிட்டே சொல்லிடு.

தெரிசாவோடு அவன் வெளியே போகும்போது தில்ஷித் கவுர் ஸ்வெட்டரை பகல் சாப்பாட்டுக்கு வெகு முன்பே அவிழ்த்திருந்தாள்.

உங்க சிநேகிதி ரொம்ப அழகு என்றாள் அவள் இந்தியில், சங்கரனிடம்.

ஏதோ கொஞ்சம்.

அவனும் இந்தியில் சொல்லியபடி தெரிசாவைத் தேடினான். அவள் முன்னால் போய்க் கொண்டிருந்தாள்.

தில்ஷித்தின் ஓங்கித் திரண்ட மார்புகளைத் தீர்க்கமாகப் பார்த்தபடி சங்கரன் நகர்ந்து போனான்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன