New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 25 இரா.முருகன்

ஊரோடு வெள்ளை உடுத்தியிருக்கிறார்கள். ஒண்ணு, இங்கே சாயக்காரன் எல்லாரும் அஸ்தமித்துப் போயிருக்கணும். இல்லையோ, சாயம் துணியில் ஏறாமல் போய் அவன்களை ஊருக்கு வெளியே வேலிக்காத்தான் மண்டிய தரிசு பூமி நெடுக, உடுப்பைப் பிடுங்கிக் கொண்டு முண்டக் கட்டையாக ஓட ஓட விரட்டியிருக்கணும். அப்புறம், சாயமுமாச்சு, சாராயமுமாச்சு, இருக்கவே இருக்கு வெளுப்பு என்று வைராக்கியமாக உடுத்த ஆரம்பித்து இப்போது வெள்ளைப் பட்டியாகிப் போயிருக்கலாமோ இங்கே வந்து சேர்ந்த பிரதேசம்?

ராஜா தீவிரமாக யோசித்தபடி, இந்த ஊருக்கு என்ன பெயர் என்று பனியன் சகோதரர்களை விசாரித்தார். அதிலே குட்டையன் மிகமிஞ்சிய மரியாதையோடு விரை தரையில் மோதத் தாழ்ந்து உடம்பு வளைத்து வணங்கி முறையிடுகிற குரலில் சொன்னான் –

அம்பலப்புழை, மகாராஜா.

இதுக்கு அவன் நின்னபடிக்கே சொல்லி காலில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்திருக்கலாம். வயசாக வயசாக, யாராவது காலில் விழுந்து வணங்கினால் ரொம்ப இஷ்டமாகப் போகிறது. ஒரு நாள் முழுக்க ஊர்க்காரன் எல்லோரும் வரிசையில் நின்று காலில் விழுந்து கும்பிட்டுப் போனால் ராஜா சோறு தண்ணியில்லாமல் சுவாரசியமாக வேடிக்கை பார்த்து அருள் பாலித்துக் கொண்டிருப்பார். சேடிப் பெண் போன்ற சின்னஞ்சிறிசுகள், என்னத்தை சின்னஞ்சிறிசு, நாப்பது வயசாவது ஆகியிருக்கும் சிறுக்கி மகளுக்கு, ஆனால் என்ன, உருண்ட தோளை இறுகப் பற்றி, காலில் விழுந்தவளை எழுப்பி நிறுத்த ராஜாவுக்கு கை தினவெடுத்தது.

கிடக்கட்டும் சேடிப் பெண்ணும் மற்ற பெண்களும். வந்த இடத்திலும் அந்நிய ஸ்திரியை இச்சிப்பதிலேயே சகதியில் எருமையாக நினைப்பை நிறுத்துவது என்ன நியாயம்?

மனசு இடிக்க, ராஜா சரியென்று சொல்லி, கண்ணில் பட்டதை எல்லாம் சுவாரசியமாகக் கவனிக்க ஆரம்பித்தார். அவர் காலத்துக்கு அப்புறம் நூறு வருஷமாவது கடந்து வருகிற காட்சி இதெல்லாம். நூதன வாகனக் களவாணிகளான பனியன் சகோதரர்கள் அவரை எல்லா விதத்திலும் ஆசை காட்டி இப்படி காலம் விட்டுக் காலம் கூட்டி வந்து நிறுத்தி விட்டார்கள். அவர்களுக்கு ராஜா கொடுத்த கும்பினியார் தங்கக் காசு மேல் வெகு இஷ்டம். ராஜாவுக்கோ ஊர் உலக நிலவரம் அறிந்து வைத்துக் கொள்ள மகா இஷ்டம்.

ராணிக்குத் தெரியாமல், வேறு யாருக்கும் தெரியாமல் நூதன வாகனத்தில் அந்தக் களவாணிகளோடு கிளம்பி வந்தாகி விட்டது. போகிற வழியில் இவன்கள் காதை அறுத்துக் கடுக்கனை எடுத்துக் கொள்வார்கள என்று முன்னோர்கள் பயமுறுத்த, அதை மட்டும் கழற்றி இடுப்புச் சோமனில் முடிந்து வைத்திருக்கிறார் மகாராஜா. அதாவது வேட்டி மடிப்பில்.

சின்ன சரிகை தலைப்பாக வழியும் வெள்ளைச் சேலையில் சகலமான வயதுப் பெண்களும். பெண் குழந்தைகள் கூட வெள்ளைப் பாவாடையோடு தான் வளைய வருகிறார்கள். ஆண்களோ, தழையத் தழைய வேட்டி உடுத்தி, ஒண்ணு, இடது பக்கம் கணுக்காலில் இருந்து வேட்டி நுனியைத் தூக்கிப் பிடித்தோ, அல்லது சரி பாதியாக மடித்து முழங்காலுக்கு மேலே பட்டையாகக் கட்டியோ எந்தப் பரபரப்பும் இல்லாமல் சாவதானமாக நடக்கிறார்கள். கக்கத்தில் குடை வேறே.

வெள்ளைக்காரன் ஊரும் இதே படிக்குத் தான் இருக்குமோ? அங்கே சராய் உடுத்த வெள்ளையப்பன்கள் தானா ஊர் முச்சூடும் திரிவார்கள்?

ராஜா இன்னும் அந்த விசித்திரத்தை அனுபவிக்கிற தோதில் குண்டு குழியாகக் கிடக்கிற தெருவைப் பார்க்காமல் நடந்து வந்தார். பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக பனியன் சகோதரர்கள்.

சமூகம் பாதையிலே ஒரு கண்ணு வைக்க பிரார்த்திக்கிறோம். தடுக்கி விழுந்தால் அடி பட்டுடும். எங்களுக்கு சகிக்க ஒண்ணாத துன்பம் ஏற்படலாம்.

குழந்தைக்கு சொல்கிறது போல ராஜாவுக்கே யோசனை சொல்கிறான்கள்.

குண்டலினி மாதிரி கபால நடுவே ஜிவ்வென்று பற்றிக் கூராக ஏறிப் படர்ந்த கோபத்தை அடக்கிக் கொண்டு பனியன் சகோதரர்களை அவர் நோக்க, எதுவுமே நடக்காதது போல் அவர்கள் கள்ளச் சிரிப்பும் சகஜ பாவனையுமாக எலுமிச்சம் பழத்தையும் காகிதக் கட்டையும் நீட்டினார்கள். எதுக்காக அந்த அதீத உபசாரமெல்லாம்? அதுவும் எலுமிச்சம்பழம்? தாசி வீட்டுக்கா பயணம்?

மகாராஜாவும் ராணியம்மாவும் மகா சேமமாய் இருக்க, ஊர் செழிக்க, பயிர் பச்சை விளைய, மழை தவறாமல் பெய்ய, இங்கத்திய பகவான் கிருசுணசாமியை நேர்ந்துக்கிட்டோம். காணிக்கையோடு போய் நம்பூதிரிக்கு தட்சணை தரணும். பிரசாதமாகப் பால் பாயசம் சமூகத்துக்கு வந்து சேரணும்.

அங்கே, நம்ம ஊரில், ஜோசியக்கார அய்யர் யந்திரம் நிறுத்தறேன், தேவதையை பிரதிஷ்டை செய்யறேன் என்று ஊர் சௌக்கியப்பட ஏதோ செய்கிறதாக வராகன் தட்சிணை வாங்கினால், இங்கே அதே தரத்தில் இருக்கப்பட்ட மனுஷர்கள் பாயசம் விற்றுக் காசு பார்க்கிறார்கள் போல. அதை வசூலிக்கிற வகையில் இந்த குட்டையனும் நெட்டையனுமான பனியன் சகோதரர்களும் கூடுதல் வருமானம் தேடுகிறார்களோ. நடக்கட்டும்.

குப்பாயத்தில் இருந்து ஒரு வெள்ளிக் காசை தாராளமாக எடுத்துப் போட்டார் ராஜா. இன்னொரு வராகனோ நாலைந்து தங்கக் காசுகளோ அவர்களுக்கு தரலாம் தான். வந்ததும், வினோதமெல்லாம் கண்டதும் நல்லபடி முடிந்தால் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பு. அவர் மனதை சிரமமின்றிப் படித்த பனியன் சகோதரர்கள் ஏதோ நிச்சயம் செய்த மாதிரி ஒரே நேரத்தில் தலையைக் குலுக்கிக் கொண்டார்கள். காணாது கண்ட சந்தோஷச் சிரிப்பும் பொங்கி வழிந்தது அவர்கள் முகத்தில்.

யந்திரம் நிறுத்த சிலாக்கியமான இடம்.

பின்னால் குரல் கேட்டுத் திரும்பினார் ராஜா. அரண்மனை ஜோசியர்.

இந்த அய்யரையும் கூட்டி வந்தாகி விட்டதா? என்ன கண்றாவிக்கு? எப்படிக் கூட்டி வந்தார்கள்? எப்போது?

மகாராஜா மன்னிக்க வேணும். சமூகம் வண்டியில் ஏறினதுமே அசதியில் உறங்கியாச்சு. அதான் கேட்க முடியலே. முன்னாடி நிறைய இடம் சும்மா தானே கிடக்கு, நானும் வரேனேன்னு கேட்டார் சோசியர் அய்யர்.

அவரும் காசு கொடுத்துத்தான் நூதன வண்டியில் தொத்திக் கொண்டு வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குப் புரிந்த போது இன்னொரு குரல் –

நானும் தான் வந்திருக்கேன். உன் பக்கத்துலேயே தான் உக்கார்ந்து வந்தேன்.

ஆச்சரியத்தோடு ராஜா நிமிர்ந்து பார்க்க, மாமனாரான புஸ்தி மீசைக் கிழவன் வழுவழுவென்று ஏதோ பச்சையும் மஞ்சளுமான துணியில் தைத்த பாதிரி உடுப்போடும், முன்னால் வளைந்த அழகான பிரஞ்சு தேசச் சப்பாத்துமாக நரை மீசையைத் தடவிக் கொண்டு குதித்துக் குதித்து நடந்து வந்தான்.

மாமா, நீங்க எப்ப வந்தாப்பலே?

உபசாரத்துக்காகக் கேட்டார் ராஜா.

வங்காப்பய, நாம எங்கே போனாலும் பிடரியிலே மோந்துக்கிட்டு பின்னாடியே வந்துடறான் என்றது மனது. இந்த நூதன வாகனக் களவாணிகள் தான் கிழவனையும் சொகுசாக வண்டியில் உட்கார வைத்தோ, மேலே தாம்புக் கயிற்றால் கட்டிக் கிடத்தியோ இட்டு வந்தார்களா?

உருட்டி விழித்து பனியன் சகோதரர்களை ராஜா பார்க்க, அவர்கள் எங்களுக்கும் இவர் வந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உடனடியாகப் பார்வையால் வெளிப்படுத்தினார்கள். கிழவன் திடுமென்று தாண்டிக் குதித்துப் பிரவேசம் செய்ததில் அவர்களுக்கே ஆச்சரியம் என்றும் அந்தப் பார்வை சொன்னது.

கூத்து நடக்குன்னு சொன்னாப்பல. அதான் செத்த நேரம் இருந்துட்டுப் போகலாமேன்னு கிளம்பி வந்தேன்.

ராஜா முந்திக் கொண்டு தான் ஏன் அங்கே இருக்கிறேன் என்பதற்கு யாரும் கேட்காமலேயே காரணம் சொன்னார். கிழவன் எதுக்கு வந்திருப்பான் என்று அவருக்குத் தெரியும். கூட்டத்தில் கலந்து இருக்கப்பட்ட நடுவாந்திர வயசுப் பெண்டுகளிடம் சில்மிஷம் செய்ய இல்லாமல் வேறே எதுக்கு? அவன் உயிரோடு இருந்த காலத்தில் ரெண்டு பேரும் அபூர்வமாக உட்கார்ந்து சீமைச் சாராயம் மாந்திக் கொண்டிருந்த ஒரு சாயங்காலத்தில் கிழவன் பெருமையோடு சொன்னது நினைவு வந்தது ராஜாவுக்கு –

மாப்பிள்ளே, வயசாகிட்டு இருக்கில்லே. மனசும் அதுக்கு ஏத்த மாதிரி தானே மாறிக்கும் பாத்துக்குங்க. முன்பெல்லாம் வடிவா ஒரு சின்னக் குட்டிப் பொண்ணும் கூடவே மத்திய வயசுக்காரி அவ ஆத்தாளும் சேர்ந்து வந்தா, கண்ணும் மனசும் சின்னஞ்சிறிசு மேலே தான் விழும். இப்போ? கொப்பும் கொழையுமா நடு வயசுலே நிக்கறாளே அம்மாக்காரி, மாசாந்தர தீண்டல் நின்னா வர்ற சௌந்தரியம் அது. அதுலே தான் மனசு போய் தலை குப்புற விழுது. தனி வாசனை அந்த உடம்புக்கு, கேட்டுக்குங்க. அனுபவப்பட்டா, சேடிப் பொண்ணு எல்லாம் என்ன பிரமாதம்னு தோணும், போக வாசனை.

சேடிப் பெண்ணோடு ராஜாவின் பிற்பகல் விளையாட்டு விவரங்கள் தெரிந்த திமிரில் முறுவல் பூத்துக் கொண்டு கிழவன் அப்போது சொன்னான். அவன் அதே சேடியை வாய் உபச்சாரம் செய்யச் சொல்லி வற்புறுத்தியது பின்னால் தான் அந்தப் பெண் மூலமாக ராஜாவுக்குத் தெரிய வந்து கிழவனை ஜமீன் அரண்மனையில் இருந்து உடனே புறத்தாக்கினான் அப்போது.

கிழவன் இங்கே எந்த வயசில் பெண் தேடி வந்தானோ. யாராக இருந்தாலும் அவனுக்கு நூறு, நூற்றைம்பது வருஷம் பின்னால் வந்தவர்களாக இருக்கும். அந்த விஷயம் புரியாமல் ஏதாவது திரிசமன் செய்து வைத்தால்?

அவனுடைய சாவைக் கோலாகலமாகக் கொண்டாடி நாற்றம் பிடித்த கிழட்டு தேகத்தைப் புதைக்க எடுத்துப் போக இருந்த நேரம் ராஜா நினைப்பில் உடனடியாக வந்து நின்றது, கிழவனின் சடலத்தைப் படம் எடுக்கிறேன் என்று நூதன வாகனக் களவாணிகள் அப்போது கிளம்பியபோது, நட்டுக் குத்தலாக உட்கார வைத்த பிணமாக சேடிப் பெண்ணின் மடியில் விழுந்து மாரில் கையளைந்தவனாச்சே இந்தப் பொல்லாத கிழவன். ஆவி போனாலும் ஆசை போகாதவன் அல்லவோ இவன். கையைக் காலை வைத்துக் கொண்டு இந்த மலையாள பூமியில் சும்மா இருப்பானோ.

எதுக்கு பழங்கதை எல்லாம்? வந்தோமா, வந்த இடத்துலே வேடிக்கை பார்த்துட்டுப் போனோமா என்று இருக்காமல் எதற்கு வம்பு வலிக்கணும்?

ராஜா பரிவாக கிழவனைப் பார்த்துப் புன்சிரிக்க, அவன் கழுத்தைச் சுற்றி லேஞ்சி ஒன்றை சாவகாசமாகக் கட்டிக் கொண்டு நம்மூர் மேளம் வந்திருக்கு, பாத்தியா மாப்பிள்ளே என்று உற்சாகமாக ராஜாவை விசாரித்தான்.

அது சாவு மேளமாச்சே மாமா, உங்க சாவுக்கு அடிச்சு முழக்கினது தானே?

சாவா? எனக்கேது அதெல்லாம்?

கிழவன் வீம்பாகக் கேட்டு மிதக்க ஆரம்பித்து, இங்கே காலை வீசிப் போட்டு நடப்பதே சாலச் சிறந்தது என்றுபட, கௌரவமான தோரணைகளோடு பாதிரியார் நடை நடந்து முன்னால் போனான்.

அவனைப் பின் தொடர்ந்து ராஜா. அவருக்கும் பின்னால் நூல் பிடித்தது போல் அரண்மனை ஜோசியரும் அவருக்கும் சற்றுப் பின்னே, பனியன் சகோதரர்களும் நடந்து போனார்கள். ராணியைப் பெண் கேட்டு உறவும், குடிபடைகளும் சகிதம் எந்தக் காலத்திலேயோ இப்படி ஊர்வலமாகப் போனது ராஜாவுக்கு நினைவு வந்தது. அப்போதும் பின்னால் அரண்மனை ஜோசியர். ரொம்ப இளையவராக இருந்தார் ஜோசியர். களவாணிகளின் சிநேகம் அந்தக் காலத்தில் கிட்டியிருக்கவில்லை. வெகு பின்னால் தான் அதெல்லாம் ஆனது.

ராஜா ஒரு வினாடி நின்றார். கூட்டம் அலையடித்துக் கொண்டு ஒரு பரந்தவெளி. பக்கத்தில் மரத்தில் கூரை போட்டு மரத்தால் சுவரும் கதவும் வைத்து ஒரு கட்டிடம். சுற்றியிருந்த வெளியில் நின்று முட்டி மோதுகிற எல்லோரும் கையில் கிண்ணியோ, வெங்கலப் பானையோ, வெள்ளி அல்லது தாமிர கூஜாவோ பிடித்திருந்தார்கள். பெருஞ்சத்தமாக எல்லோரும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டிருந்ததும் அங்கே நடந்தது.

இதென்ன இங்கே ஜனம் ஏகத்துக்குக் கூடி இருக்கு? அவனவன் ஏனத்தைத் தூக்கிக் கொண்டு என்னதுக்காக இப்படி இரைகிறான்?

ராஜா பனியன் காரர்களை விசாரித்தார்.

அதை ஏன் கேக்கறீங்க மாப்பிள்ளே. இது கோவில். பால் பாயசம் நல்லா செஞ்சு தருவாங்களாம். அதை வாங்கிக் குடிக்கத் தான் அலை மோதுது ஜனம். விடிஞ்சதுமே கோவில் அய்யருங்க அண்டா முழுக்க பாயசம் காச்சி வச்சுடுவானுங்க. பிறகு ராத்திரி வரைக்கும் பாயசம் விக்கறதும் வாங்கறதும் தான் மும்முரமா நடக்கும். மூணு வேளையும் இதைக் குடிச்சுட்டு பீடி, சிகரெட் வலிச்சுக்கிட்டு அவனவன் நடந்து போகற மோஸ்தரை பாக்கணுமே

கிழவன் உற்சாகமாக அறிவித்தான். ராஜாவுக்குத் தெரியாத ஒரு தகவல் தனக்குத் தெரிந்த பவிஷு அவனுக்கு. அந்நிய மனுஷர்கள் அங்கே நடமாடாமல் இருந்திருந்தால், அவனுடைய வழக்கப்படி தரைக்கு முக்கால் அடி உயரத்தில் மிதந்தபடி வந்திருப்பான் அவன்.

விஷயம் தெரிந்தது மட்டுமில்லை, புதுசு புதுசாக இந்த வயசில் கற்றுக் கொண்டு வார்த்தையைச் சரியான இடத்தில் விடுகிறானே எழவெடுப்பான் என்று ராஜாவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அது என்ன கண்றாவியோ பீடி, அப்புறம் என்ன சொன்னான், சீரெட்டு. இருக்கட்டும். நல்ல இருக்கட்டும்.

கூம்பு கூம்பாகப் பிடித்துக் கூரை வைத்த இந்த மரக் கட்டிடம் தான் இந்த பூமியிலே கோவில்னு கூட எனக்குத் தெரியாமப் போச்சே என்று ராஜா உள்ளுக்குள் மருகினார்.

எப்போதும் அரண்மனையிலேயே சுக்குத் தட்டிப் போட்டு வெந்நீர் குடித்துப் பிருஷ்டத்தில் தட்டித் தட்டி வயிற்றில் இருந்து வாயு இறங்கிக் கிரமமாகக் கழிக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டு, முன்னோர்களுக்கு சாராயமும் கோழிக் கறியும் கொண்டு போய்ச் சேர்க்க ஜோசியக்கார அய்யரின் யந்திரங்கள் மூலம் முயற்சி செய்து கொண்டு, கும்பினி துரை கிடுக்கிப் பிடி போட்டு வரி கொடுக்கச் சொல்லும் பொழுதில், அதைக் கொடுக்க ராஜ்ஜியத்தில் வழியற்றுப் போனதால் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து காரியஸ்தனைக் கொண்டு லிகிதம் எழுதிக் கொண்டு, ராணியோடு அருகில் படுத்து சும்மா சகசயனமாக உறங்கிக் கொண்டு, அபூர்வமாகக் கிட்டும் பகல் நேரங்களில் சேடிப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்து அவள் வாயில் அடிக்கும் கருவாட்டு வாடையில் லகரி ஏற அவள் காலைப் பிடித்து மடியில் போட்டுப் பிடித்து விட்டுக் கொண்டு ஒரு ஜீவிதம் எப்போ முடிய என்று முன்னால் அவசரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கோவிலையும், குளத்தையும், பாயசத்தையும் அவரெங்கே அறிவார்.

மகாராஜா, பிழிச்சல் எடுத்துக் கொண்டு போகலாமா? சமூகம் ரொம்பவே தேகம் தளர்ந்த மாதிரி இல்லையோ தோணுது.

பனியன் சகோதரர்கள் மரியாதையோடு ராஜவிடம் விசாரிக்க, முன்குடுமிக் காரர்கள் நாலைந்து பேர் செடியும், கொடியுமாகக் கையில் சேர்த்துப் பிடித்துக் கொண்டு வெகு மும்முரமாகப் படிகளில் ஏறி, இறங்கி அலைந்து கொண்டிருந்த மூன்று நிலை பங்களா ஒன்று எதிர்ப்பட்டது. வாசலில் ஜிலேபி பிழிந்து எழுதி வைத்திருந்தது என்ன என்று தெரியவில்லை ராஜாவுக்கு. களவாணிகள் சொல்கிற பிழிச்சலா அது?

ஆயுர்வேத வைத்தியசாலை மாப்ளே. வாங்க. உடம்பு நேராக்கிட்டு வருவோம்.

துள்ளிக் குதித்துச் சற்றே மிதந்து, உள்ளே வேட்டி உடுத்து நின்ற பெண்டிரை ஆசையோடு பார்த்தபடி போகிற கிழவனையே பார்த்தபடி நின்றார் ராஜா.

இவன் மலையாளம் எங்கே படித்தான்? இந்தப் பெண்களை இவனிடம் இருந்து தினப்படிக்குப் பால் பாயசம் அருள்கிற கடவுள் தான் ரட்சிக்கணும்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன