New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 24 இரா.முருகன்

விநோதமான ஊர் இது. நெற்றியில் சந்தனம் பூசாமல் யாரும் வெளியே இறங்குவதில்லை போலிருக்கிறது. யாரை அடுத்துப் போனாலும் சந்தன வாசம் தான் மூக்கில் குத்துகிறது. கிறிஸ்தியானிகளும் இதரரும் கூட வீட்டுக்குள் இருக்கும்போது மணக்க மணக்கப் பூசி இருந்து, வெளியே இறங்கும்போது மனசே இல்லாமல் அழித்துத் துடைத்து விட்டு, ரோமக்கால்களில் இறங்கிய மிச்ச சொச்ச வாடையோடு தான் நடமாடுகிறதாகத் தோன்றுகிறது. அப்புறம் ஒன்று. இது ஆண்கள் பற்றிய கணிப்பு. பெண்களும் அதே தோதில் இருக்கலாம். நந்தினி போல.

நந்தினியின் மார்புக் குவட்டு வியர்வையில் கசியும் சந்தன வாடையை மனதில் அனுபவித்து நாசி விடர்த்த, வைத்தாஸின் கண் நிறைந்து போனது.

என் நந்தினி. இப்படி உன்னைப் பிரிந்து, கழிசடை நினைப்பும், எழுதி எழுதி இச்சை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யும் கேடுகெட்ட தனமும், அரசியல் என்றும் கலாசார உறவு என்றும் கடவுளின் மூத்த சகோதரி என்றும் புழுத்த பன்றி மாமிசமாக, புளிப்பு முற்றிப் பூசனம் பிடித்துக் களைய வேண்டிய காடியாக, ஆயிரம் தடைகள் உன்னோடு உறவாட முடியாமல் ஒரு சேர என் வழியை அடைக்க, இன்னும் ஒரு வாரம், இதோ அடுத்த மாதம், இதுவும் கடந்து போகட்டும், விரைவில் உன் அணைப்பின் கதகதப்பில் உயிர் கலந்து இருப்பேன் என்று காலத்தைக் கடத்தி வருவது என்ன மாதிரி வாழ்க்கையில் சேர்த்தி? என் எழுத்தும் என் பதவியும் என் வயதும் என் அனுபவமும் குப்பைக்குப் போகட்டும். எந்தத் தடையும் இடுப்புக்குக் கீழ் பிடித்துக் கட்டி நிறுத்தாமல் உன்னை நான் கலக்கும் நாள் என்றைக்கோ.

வைத்தாஸ் கண்களில் இன்னும் நடனம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அர்ஜுன நிருத்தம் என்று பெயர் சொல்கிறார் குறூப். கோவிலில் வெடி வெடித்து வழிபாடு நடத்தித் தரும் குடும்பமாம். அர்ஜுன நிருத்தம் ஆடுவாராம். ஆடி ஓய்ந்த கால் என்றாலும் நேற்று ராத்திரி ஆட்டக் காரர்களோடு சளைக்காமல், அசராமல் சேர்ந்து ஆடி அமர்க்களப் படுத்தி விட்டார் அவர். இவ்வளவுக்கும் அவருக்கு எழுபது வயது கடந்திருந்தது. அவர் சொல்லித்தான் அது தெரியும்.

அந்த ஆட்டமும் பாட்டும் வைத்தாஸ் நினைவில் இன்னும் சுழன்று கொண்டே இருந்தன. ஒரே வரியை கிட்டத்தட்ட நூறு முறை ஒவ்வொரு தடவையும் ஒரு சிறு மாற்றத்தை குரலின் கனத்திலும், ஒலித் துணுக்கைக் குறுக்கியும் விரித்தும் ஒலித்தும், இரங்கல், பரிவு, வற்புறுத்துதல், உரிமையோடு முழங்குவது என்று குரலில் வித்தியாசம் காண்பித்தும் ராத்திரி முழுக்கச் சளைக்காமல் ஆடினார்கள் அந்த ஆட்டக் காரர்கள். மயில் தோகையை இடுப்பைச் சுற்றி கம்பீரமாக அணிந்து ஆடிய அவர்கள் எல்லோரும் ஆண்கள்.

பெண்கள் இல்லாமல் நளினத்தை ஆடிக் காட்டும் நடனங்களில் இந்தப் பகுதி மக்கள் ஏன் அபார உற்சாகம் காட்டுகிறார்கள் என்று வைத்தாஸுக்குப் புரியவில்லை. இவ்வளவுக்கும் உருட்டி விட்ட வெங்கலச் சிலை போலத் திமிறும் அழகோடு நடமாடும் கருத்த சுந்தரிகளின் பூமி இது. நந்தினி என்ற தேவதையும் இங்கே இருந்து போன குடும்பத்தில் வந்தவள் தானே. என்ன தான் இன்று கடவுளின் தமக்கை ஆகியிருந்தாலும் மயிலும் நிருத்தமும் அவளுக்குள்ளும் நிறைந்தவைதானே. ஆனாலும் அர்ஜுன நிருத்தத்தைப் பற்றி அவள் சொல்லியதாக நினைவு இல்லை.

வைத்தாஸ் ஷவரில் குளிக்க நின்றபோது நாளைக்கு மகாநாட்டில் அவன் எதை எல்லாம் குறித்துப் பேச வேண்டும் என்று துண்டு துணுக்காகத் தோன்றிப் போனது.

எப்படி ரசிக்கிறார்கள் இங்கே. தூக்கம், தூக்கம், மயில்பீலித் தூக்கம் என்று பதறியடித்துக் கொண்டு ஆணும் பெண்ணுமாக ஓடி வந்த உற்சாகம் அவன் நாட்டுக் கிராமங்களில் இரவு நேர ஆட்ட முரசு கேட்டதும் ஓடி வந்து குவியும் பெருங்கூட்டத்துக்கு இணையாக இருந்தது.

எல்லோருக்கும், எங்கும், கொட்டும், குரவையும், தாளத்தை இயல்பாக உள்வாங்கி எல்லா வேகத்திலும் நடனமாடுவதும் உயிரணுக்களில் கடந்து வந்து அழியாத அடிப்படை ரசனையாக நிற்கிற அனுபவத்தை நினைக்க அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. ஆடத் தெரியாத யாரும் உலகில் இல்லை.

கந்தகம் கொளுத்தியது போல சகலரின் கம்புக் கூட்டுக்குள்ளும் இருந்து பிரவகித்த வியர்வை மூக்கில் குத்தும் வாடை அவன் மேல் இன்னும் பூசி இருந்தது. ஆட்டம் ஆரம்பித்த நிமிடங்களில் அசௌகரியமாக இருந்தாலும், நடனத்திலும் ஓங்கி ஒலிக்கும் பாட்டிலும் மனம் லயித்தபோது அந்த வாடை பிரக்ஞையில் இருந்து விலகி, அப்புறம் ஒரு கட்டத்தில் பாட்டு வரிகளில் கனமாகப் படிந்து திரும்ப வந்து சேர்ந்தது. இனி எப்போதும் வைத்தாஸ் மனதில் சந்தனத்தோடு சேர்ந்து எழுந்த, கூட்டமான வியர்வை மணமாகவே அர்ஜுன நிருத்தம் நிற்கும்.

அது மட்டுமில்லை. இலுப்பை எண்ணெய் ஊற்றிய தீபங்களின் மஞ்சள் சுடர்கள் புழுக்கமான இரவில் நிறைக்கும் நெடியும் சந்தனத்தோடும் வியர்வையோடும் கலந்து பாட்டும் ஆட்டமும் ஆன ரசவாதம் அது.

ஆட்டக்காரிகள் எப்போ வருவார்கள்? வைத்தாஸ் விசாரித்தான்.

இது கதகளி போல ஆண்களே ஆடும் ஆட்டம். என்ன குறைச்சல் அதனால்?
கூடக் கூட்டிப் போன வெடி வழிபாட்டு குறூப் வாயில் புகையிலைக் கட்டையை அதக்கியபடி கேட்டான்.

வைத்தாஸ் தான் இன்னும் கதகளி பார்த்ததில்லை என்று பாட்டு சத்தம் உச்சத்துக்குப் போய்க் கொண்டிருந்தபோது சொன்னான். குறூப் உலக்கையை விழுங்கி சுக்குக் கஷாயம் சாப்பிடும் நிதானத்தோடு ஆறுதல் சொன்னதை வைத்தாஸ் புரிந்து கொண்டது இந்தத் தோதில் –

கதகளியும் மோகினி ஆட்டமும், திருமேனிகள் கடவுள் விக்கிரகங்களைத் திடம்பு என்று ஓமனப் பெயரிட்டுத் தலையில் தூக்கி வைத்து ஆடும் நிருத்தமும் பார்க்காவிட்டால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. ஆனால், ஓட்டந் துள்ளலும், இந்த மயில்பீலி நிருத்தமும் காணாமல் போனால் மலையாள பூமிக்கு வந்ததும் போனதும் எல்லாம் வீணாகி விடும்.

குறூப் அனுமதி வாங்கிக் கொடுத்ததால், அந்தப் பாட்டை கொஞ்சம்போல ஒலிநாடாவில் பகர்த்திக் கொண்டான் வைத்தாஸ்.

நேற்றுக் காலையில் கோவிலுக்கு அடுத்த தெருவில் போய்ப் பார்த்த புராதன வீட்டிலும் அர்ஜுன நிருத்த ஆபீஸ் தான் இயங்கிக் கொண்டிருந்தது. அப்படித்தான் சொன்னார் குறூப். பம்பாயிலிருந்து வந்த அமைச்சரின் மனைவியாம் அங்கே நிர்வாகம் செய்து வரும் மதராஸ் பெண்மணி.

எம்பிராந்திரியின் வீட்டுக்காரியான முதுபெண் சோழி உருட்டிப் பார்த்துச் சொல்லித் தான் அந்த வீட்டைப் பார்க்கப் போயிருந்தான் வைத்தாஸ். அந்தப் புராதன வீட்டை வாங்கச் சொல்லி ஆலோசனை கொடுத்த எம்ப்ராந்திரி மனைவி இன்னும் மூணு பேருக்கும் அதே ஆலோசனையைச் சொல்ல வேண்டி போனதாக அவள் சொன்னாள்.

என் மகன் பத்ம சங்கர எம்ப்ராந்திரி லண்டனில் இருந்து கொண்டு கடிதம் எழுதியிருக்கிறான். சோழியும் பிரசன்னமும் உன் வயதுக்கும் ஆக்ருதிக்கும் கூடி வரவில்லை. அதுவும் நாலும் ஒரே போல என்றால் பிரச்னம் இல்லை அது. பிரச்சனை. இதெல்லாம் ஓரம் கட்டிவிடு என்கிறான். பத்மன் தெரியும் தானே?

முதுபெண் வசீகரமாகச் சிரித்தது மனதில் பூவாகச் சிதறியது. அர்ஜுன நிருத்தம் போல் அழகான சிரிப்பு அது.

பத்மன் எம்ப்ராந்தரியைத் தான் லண்டனில் சந்திக்க முடியாமல் போனதை அவளிடம் சொல்லலாம் என்று வைத்தாஸுக்குத் தோன்றியது அப்போது.

கிடக்கட்டும், இந்த மாநாடு முடிந்து நாடு திரும்ப வழியைப் பார்க்க வேண்டும். நந்தினி இன்னும் எத்தனை நாள் தனியாகக் கஷ்டப்படுவாள்?

அறையில் இருந்த கருத்த டெலிபோன் மணி அடித்தது. கீழ்த் தளத்தில் இருந்து ரிசப்சனிஷ்ட் பெண் பேசினாள். கவனித்துக் கேட்டாலே அர்த்தமாகும் மலையாள இங்கிலீஷ்.

நீங்கள் கேட்ட வெளிநாட்டு தொலைபேசி இணைப்பு கிடைத்திருக்கிறது. பேசுகிறீர்களா?

வைத்தாஸ் பரபரப்போடு ஹலோ சொன்னான். அந்தப் பக்கம் ஏழு கடலும் ஏழு மலையும் தாண்டிப் பறக்கும் சிறிய நாரையின் குரலாக ஹலோ.

நந்தினி.

அடுத்த வாரம் நான் அங்கே..

சொல்லும்போதே அவனுக்குக் குரல் நடுங்கியது. அழ ஆரம்பித்தான்.

வேணாம். நானே வந்து.

நந்தினி சொல்லிக் கொண்டே இருக்க டெலிபோன் தொடர்பு அறுந்து போனது. அப்புறம் அரை மணி நேரம் காத்திருந்தும் நந்தினி கிடைக்கவில்லை.

வருகிறாள்.

அது போதும். வைத்தாஸ் மனம் முழுக்க நிம்மதி நிறைந்திருக்க, டாக்சி வந்து விட்டது என்று யாரோ வந்து சொன்னார்கள். ஆலப்புழையில் போய் ஒரு முழுக்கை ஜிப்பாவும் வேஷ்டியும் எடுக்க வேண்டும். இன்னும் இரண்டு நாள் இங்கே நிகழ்கலை மாநாட்டுக்காக இருக்க வேண்டி இருக்கிறது. கால் சராய் போக முடியாத இடங்களிலும் மடித்துக் கட்டிய வேட்டி நுழையும்.

டாக்சிக்காரரைக் கொஞ்சம் இருக்கச் சொல்லியும் அவருக்கு ஒரு சாயா உண்டாக்கித் தரும்படியும் வைத்தாஸ் ஆங்கில பாணியில் சொன்ன மலையாள வார்த்தைகளுக்காக ஹோட்டல் நிர்வாகத்தாலும் தொலைபேசி இயக்கும் பெண்ணாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டான் வைத்தாஸ். அவன் சொற்கள் உடனே நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.

நன்றி சொல்லித் தனக்குக் காலை உணவாக ஆம்லெட் உண்டாக்கித் தர முடியுமா என்று வினயமாக விசாரித்தான் அவன்.

சார் க்‌ஷமிக்கணும். ப்ராதல் இன்னு வைகும்.

ஏன் தாமதமாகும் என்று விசாரிக்க, டெம்போ வேன் ஸ்ட்ரைக் என்று தெரிந்தது. அதனால்? கோழி முட்டை வராது. பக்கத்தில் யாரும் கோழி வளர்க்கிறார்களா? வளர்க்கிறார்கள், அவர்களிடம் வாங்கி ஆம்லெட் உண்டாக்கலாமே? இல்லை, அவர்கள் நூறு கிலோமீட்டர் தூரம் உள்ள நகரத்தில் தான் லாரியில் கொண்டு போய் அவற்றை விற்க வேண்டும். பஸ் கட்டணம் கொடுத்து ஆளனுப்பி, அங்கே போய் வாங்கி வர வேண்டும். டெம்போ ஸ்ட்ரைக்.

கோழிக்குப் பறக்க முடிந்தால் நூறு கிலோமீட்டர் தாண்டிப் பறந்து போய் முட்டை போட்டிருக்கும் என்று அவன் சொல்ல அவர்களில் யாரும் சிரிக்காமல் அனுதாபத்தோடு பார்த்தார்கள்.

வைத்தாஸ் சிரிப்பை அடக்கிக் கொண்டு டாக்சியில் ஏறினான்.

ஒரு நிமிஷம் என்று ஒற்றை விரல் காட்டி அடுத்திருந்த சாயாக் கடையில் நின்றிருந்த டாக்சி டிரைவரிடம் ஒப்புதலாகத் தலையசைத்துக் காத்திருந்தான் வைத்தாஸ். அவன் ஓடி வந்ததும் பரபரப்பாக வண்டியை கிளப்பியதும் வைத்தாஸின் மனதுக்கு இஷ்டமாக இருந்தது. இந்த மாநிலத்தில் இப்படியான மரியாதை அபூர்வம் என்று தோன்றியது.

பக்கத்தில், இட்லியும் காப்பியும் கிடைக்கும் கடை ஏதாவது உண்டா என்று டிரைவரைக் கேட்க, சந்தனம் மணக்க இருந்த அந்த தாடிக்காரன், கல்யாணம், பிள்ளை பிறப்பு போன்ற அபூர்வமான சந்தர்ப்பங்களுக்காகச் சேமித்து வைத்திருந்த தன் சிரிப்பில் இருந்து ஒரு கண்ணி கிள்ளியெடுத்து வைத்தாஸுக்குக் கொடுத்தான்.

அசல் குட்டநாடன் சாப்பாட்டுக் கடை உண்டு. போகலாம் சாரே.

ஆலப்புழை போகிற வழியில் அவன் நிறுத்திய இடத்தில் நாலு பெஞ்சுகளையும் மர ஸ்டூல்களையும் பரத்திப் போட்டு ஒரு விடுதி. ஓரமாகத் தூங்கிய நாய்களையும், வாசலில் கட்டி வைத்த செம்மறி ஆட்டையும், பீடி புகைத்தபடி ஓட்டல் வாசல் படிகளில் உட்கார்ந்திருந்த கைலி அணிந்த பெரியவர்களையும் எல்லா ஓட்டல்களிலும் தான் பார்க்க முடியும். ஆனால் வாசலில் நட்ட நடுவே கால் பரப்பி மண் தரையில் அமர்ந்து இருக்கும் ஸ்தூல சரீரப் பெண்மணி?

ஓ, அவளா, வழக்கு முத்தச்சி. டாக்சி டிரைவர் சொன்னான்.

என்றால்? வைத்தாஸ் குழப்பமாகப் பார்த்தபடி காரை விட்டு இறங்க, அந்தப் பெண் இரைய ஆரம்பித்தாள். அவள் சொல்லுகிறதெல்லாம் ஆண்கள் கூடப் பேச யோசிக்கும் தெறிகள், என்றால் வசவுகள் என்று சொன்னான் டாக்சி டிரைவர் சிரித்தபடி.

யாரையாவது வாய்ச் சொல்லால் துன்பப் படுத்த வேணும் என்றால், அவர்கள் எங்கே இருந்தாலும் சரிதான், முத்தச்சிக்குக் காசு கொடுத்தால் இங்கே இருந்தே சரமாரியாக வசவு வீசி அவர்களை முட்டுக் குத்தச் செய்து விடுவாள் இவள்.

இங்கிருந்து திட்டினால் வேற்றூரில் எப்படி அது போய்ச் சேரும்?

அது என்னவென்று தெரியாது. ஆனால் இங்கே திட்டியதும் அங்கே போய் சேர்ந்த உடனே சம்பந்தப் பட்டவர்களுக்குப் பேதியாவதும், நாக்குழறி, வியர்த்துப் போய் சுருண்டு விழுவதும் கிரமமாக நடக்கிறதே.

டாக்சி டிரைவர் சொன்னபடி எட்டணா நாணயத்தை அந்தக் கிழவிக்கு முன்னால் போட்டு விவரம் சொன்னான் – மகம்மை பஞ்சாயத்து தெக்கே பரம்பில் சங்குண்யார். என்னு பறஞ்சால் காணாதுண்ணி சங்கு.

அவன் விலாசம் விவரம் சொல்லும்போதே புன்னகைக்க, வைத்தாஸ் என்ன விஷயம் என்று கேட்டபடித் தானும் சிரித்து வைத்தான்.

என் மாமனார் தான். யாரும் பார்க்காமல் ஒளிந்திருந்து சாப்பிடுகிறவன் என்று பட்டப் பெயர். எனக்கும் காசு தரமாட்டேன் என்கிறான் வயசன்.

அவன் பின்னும் வெகு சத்தமாகச் சிரிக்க, கிழவி வைய ஆரம்பித்தாள். காற்றும் அபானவாயுவாக நாறிப் போனதாக யாரோ சொல்லி அந்தக் கிழவியின் அண்டையில் நின்று இன்னும் ஒருமுறை வசவைத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள்.

கடல் சிலந்தி புணரட்டும் என்கிறாள் கிழவி. ஆக்டோபஸ் பற்றி எங்கே தெரிந்து கொண்டாள்? வியப்போடு வேறே யாரோ சொன்னார்கள். அந்தப் பெண்பிள்ளை இந்த வயதிலும் புதுசு புதுசாக அறிந்து வைத்துக் கொள்வது வெகுவாகப் பாராட்டப் பட்டது.

காணாதுண்ணிக்கு அரையில் புழுப் புழுத்து வீங்கி குறி அறுந்து விழச் சொல்லித் திட்டு என்று சொல்லியபடி டிரைவர் படியேற அதுக்குத் தனியாகத் தரணும் என்றாள் கிழவி.

துரெ, ஒரு ரூபாய் காசோ நோட்டொ இருந்தா தள்ளைக்குக் கொடு. பின்னாலே அட்ஜெஸ்ட் ஆக்கித் தரும்.

யாருக்கோ குறி புழு வைத்து அழுகி அறுந்து விழத் தானும் ஒத்தாசை செய்கிற குற்ற போதத்தோடு உள்ளே நுழைந்தான் வைத்தாஸ்.

வாசலை ஒட்டிப் போட்டிருந்த பெஞ்சில் இருந்து கிழவி சத்தத்தை மீறிய பெருங் கூச்சலாக யாரோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். மூக்குக் கண்ணாடி அணிந்த, முழங்கையில் மடித்து விட்ட சந்தன நிறச் சட்டை போட்ட கட்டை மீசை நடு வயதுக்காரன் அவன். கேட்டவர்களும் சந்தன நிற டெரிலின் சட்டைதான் போட்டிருந்தார்கள். மீசை வைக்காதவர்கள் அவர்கள்.

டாக்சி டிரைவரிடம் என்ன விஷயம் என்று விசாரித்தான் வைத்தாஸ். அவன் சுமாராக மொழிபெயர்த்தான் –

தோத்திரப் பாட்டுகளும் இலக்கியம் தான். எல்லாத் தெய்வங்களுக்கும் அவை உருவாக்கப் பட்டு விட்டன. ஆனாலும் தாழ்வில்லை. சகல விநோதங்களோடும் புதியவர்களை உருவாக்குவோம். புதிய இலக்கியங்களைப் பிறப்பிப்போம். இது இலக்கியம் இல்லை என்று சொல்கிறவர்களுக்கும் குறி அறுந்து விழப் புது வசவுகளை உருவாக்குவோம்.

டெரிலின் சட்டைகளைப் பார்க்க வைத்தாஸுக்கு வாத்சல்யமாகப் போனது. இவர்களும் இங்கிலீஷில் எழுதுகிறவர்களாக இருக்க முடியாது என்று தோன்றியது. இந்த உரையாடலை இனி வரும் அவனுடைய எந்தப் புத்தகத்திலும் புகுத்தி விட முடியும். மேடைப் பேச்சிலும் குறிப்பிடலாம்.

வைத்தாஸ் திருமேனி என்று யாரோ விளிக்கிற சத்தம். குடைக்கார சாமு.

ஒரு மழைக் காலத்தில் வைத்தாஸ் ஊருக்கு முதலில் வந்தது முதல் தனக்கு சிநேகிதமான சரித்திரத்தை வாய் நிறைய புட்டையும் கடலையும் அடைத்து மென்றபடி சாமு சொன்னபோது சுவரில் சார்த்தி வைத்திருந்த அவனுடைய குடையும் சுவாரசியமாகக் கேட்டது.

வைத்தாஸ் அடுத்த பெஞ்சில் உட்கார்ந்து பொதுவாகப் பார்த்துச் சிரித்தான்.

வைத்தாஸ் தொரே, இந்தச் செக்கன் நம்ம வெடிக் குறூப் போல மயில்பீலி தூக்க ஆப்பிஸிலே ஜோலி நோக்கறவன் தான்.

கெச்சலாக, உயரமாக, கருப்பாக, சோகத்தை முகத்தில் அப்பும் தாடி வளர்த்த ஒரு இளைஞனும் அவனோடு கூட ஆறடி உயரமும் பெண் டார்ஜான் போல ஆகிருதியுமாக ஒரு ஐரோப்பிய இளம் பெண்ணும் அங்கே இருந்தார்கள்.

அவன் திலீப் மோரே என்று பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு கை அலம்ப எழுந்தான். வைத்தாஸுக்கு முன் வானத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்த அந்த ஐரோப்பியப் பெண் தன் பெயராகச் சொன்னது கேட்க முடியாமல் வாசலில் கிழவி வேறு யாருக்கோ வசவு உதிர்க்க ஆரம்பித்தாள்.

நடாஷா வாசிலிவ்ஸ்கி.

வசவு மழை ஓயும் வரை எச்சில் கை உலர நின்ற அவள் வைத்தாஸிடம் திரும்பப் பெயர் சொல்ல, அவள் எடுத்துக் கொண்ட சிரமத்துக்குப் பரிகாரமாகவோ என்னவோ எழுந்து நின்று வணங்கினான் வைத்தாஸ்.

வைத்தாஸ் இக்வனொ ரெட்டி.

உங்கள் நாவல்களைப் படித்திருக்கிறேன்.

அந்தப் பெண் தேவதூதனைச் சந்தித்த பிரமிப்போடு சொல்லி நகர, வைத்தாஸூக்கு இது நல்ல படியாக விடிந்த ஒரு தினம் என்று தோன்றியது.

புட்டு, கடலை. புழுக்கின பழம். ஆகாரத்தைக் கொண்டு வந்தவன் வைத்து விட்டு அப்பால் போனான். பான் அப்பித்தி. மனசில் நந்தினி குரல் ஒலித்தது.

நாளைக்கு மாநாட்டில் நிகழ்கலைகள் பற்றி இப்படிப் பேசுவான் வைத்தாஸ் –

தெய்வத்தின் உற்றாரும் உறவினரும், மயில்களும், மயில் பீலி அணிந்த, கஷ்கத்தில் வியர்வை வடியும் ஆண்களும் சந்திக்கும் இடம் ஆட்டக் களம். புதியதாக உருவாக்கி, தோத்திரப் பாடல்களைக் கோர்த்து மாலை அணிவித்திருந்தாலும், ஆடத் தெரியாத கடவுளுக்கு அங்கே இடம் இல்லை.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன