new bio-fiction தியூப்ளே வீதி – 21 இரா.முருகன்

தியூப்ளே வீதி உறங்கத் தொடங்கியிருந்தது. நேரு கஃபேயில் இந்த ராத்திரிக்குக் கடைசி கடைசியாகச் சாப்பிட்ட நாலு பேர், வாசலில் பாதி இறக்கி வைத்திருந்த ஷட்டருக்குக் கீழே குனிந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். மாதா பழச்சாறு நிலையத்தில் பயபத்திரமாக மிக்சியைக் கழுவி, பட்டுத் துணியால் துடைத்து ஈரம் போக்குவது கண்ணில் பட்டது. தெருமுனை குப்பைத் தொட்டியில் கதம்பமாக வாசனை வீசும் பழத் தோலை அம்பாரமாகக் கொட்டிய கடைப் பையன் என்னைப் பார்த்துச் சிரித்தான்

’வருகிறான் உலகம் சுற்றும் வாலிபன்’. சுவரில் ஒட்டியிருந்த ரசிகர் மன்ற நோட்டீஸைச் சத்தம் போட்டுப் படித்தான் அவன்.

நானா?

இன்னொரு பையனும் இவனும் ரகசியம் பகிர்கிற மாதிரி ஒரு வினாடி நமுட்டுச் சிரிப்போடு ஒருத்தரை ஒருத்தர் பார்த்தார்கள். ‘நீ இல்லேப்பா, எம்.ஜி.ஆர். புதுப் படம்’ என்றான் இவன். ராம் தியேட்டரில் ஆடப் போகிறதாம்.

தினம் ஒரு பெண்ணோடு ஊர் சுற்றும் பையன். இப்படி இவர்கள் மனதில் என்னைப் பற்றி நினைத்திருக்கலாம். கடையில் ஜோசபின், கயல், அமேலி, ருழே என்று வித்தியாசமில்லாமல் எல்லா சிநேகிதிகளோடும் ஐஸ் கட்டி உடைத்துப் போட்ட ஆரஞ்சு ஜூஸ் குடிக்க வந்திருப்பது தான் இவர்களுக்கு மனசில் நிற்கும். லச்சுவோடோ அந்துவானோடோ வைத்தேயோடோ அப்படி வந்ததை சௌகரியமாக மறந்து விடுவார்கள்.

போகட்டும். ஆரஞ்சு ஜூஸ் இல்லாத உலகத்தில் சிநேகிதிகளோடு நா வரண்டு அலைவதை விட, இப்படி ஒரு மெய்க்கீர்த்தியும் ஐஸ் மிதக்கும் பழச்சாறு சகிதம் அவர்களோடு இதமாகப் பேசிக்கொண்டு திரிவதும் சுகம்.

எங்கள் கட்டிடம் இருளடைந்து கிடந்தது. ஃப்யூஸ் போயிருக்கலாம். அதுதான் முதல் நினைப்பு. போயிருந்தால், வின்செண்ட் நடராஜன் கார்த்திகைப் பண்டிகை போல வரிசையாக வாசல் முழுக்க, உள்ளே எல்லாம் மெழுகு திரி ஏற்றி வைத்திருப்பாரே. கேரளக் கோவில் கர்ப்பகிரஹங்களுக்கே சொந்தமான அந்த மஞ்சள் வெளிச்சத்தில் பேங்கு கட்டிடத்தைப் பார்ப்பவர்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு சாமி சரணம் விளித்து அப்பால் போகும் விதத்தில் பக்தி மயமான சூழ்நிலை கவிந்திருக்கும். அதன் சுவடே தெரியவில்லை இப்போது.

இருட்டிலேயே படி ஏறி மாடிக்குப் போகும்போது கவனித்தேன், பேங்க் வாசல் கதவு பூட்டப்பட்டு குறுக்குத் தாழ்ப்பாள் போட்டு அங்கே ஸீரோ வாட் பல்ப் ஒப்புக்குச் சப்பாணியாக எரிந்து கொண்டிருந்தது. ஆகவே, கரண்ட் இருக்கிறது. வாட்ச்மேன் வின்செண்ட் நடராஜன் தான் பிரஞ்ச் லீவ் அடித்து விட்டார் போலிருக்கிறது.

மாடியிலும் வழக்கத்துக்கு மாறுதலாக விளக்கு அணைத்து வைத்திருந்தது. அப்பா இன்னும் வரலியா?

இருட்டுக்குள் இருமல் சத்தம். அவர் தான்.

தெருவில் ஹெட்லைட் பிரகாசமும் ராத்திரிக்குத் தேவையே இல்லாத ஹார்ன் சத்தமுமாகக் கடந்து போனது ஒரு டூரிஸ்ட் பஸ். சுவரில் சதுரம் கட்டிப் போன வெளிச்சத்தில் அப்பா தெரிந்தார். பால்கனியில் உட்கார்ந்து, படி ஏறி வரும் என்னையே பார்த்தபடி இருந்தார். பஸ் விலகி ஊர்ந்து அகல, அவர் திரும்பவும் இருட்டில்.

’தூங்கப் போகலியாப்பா’?

அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.

’உடம்பு சரியில்லையா அப்பா’?

பக்கத்தில் போய் நெற்றியில் கை வைத்தபோது சட்டென்று அழுத்தமாக என் கையைப் பிடித்துக் கொண்டார். அவர் கை நடுங்கிய மாதிரி இருந்தது.

’ஏண்டா இப்படி பண்றே? என்னைப் பிடிக்கலேன்னா வேண்டாம். அதுக்காக இப்படி..’

அவர் குரல் உடைந்து போயிற்று. என் கை மேல் சூடான ஒரு துளி கண்ணீர் விழுந்தது. அப்பா அழுவது அபூர்வம். சொல்லப் போனால், எனக்குத் தெரிந்து, ரெண்டாவது தடவை இது. இரண்டு வருஷம் முன்னால் அம்மா போய்ச் சேர்ந்தபோது வாய்விட்டு அழுது துக்கத்தை ஆற்ற முடியாமல் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிலைகுலைந்து விழுந்தார் அவர். அந்த இழப்பைத் தொடர்ந்து வந்த பொங்கல் பண்டிகை நாள் விடிந்த போது ஈசிசேரில் உட்கார்ந்து விதும்பிக் கொண்டிருக்கப் பார்த்தேன் அவரை. சுதாரித்துக் கொண்டு நாட்டரசன்கோட்டைக்கு எட்டு கிலோமீட்டர் நடந்தே அன்றைக்குக் கிளம்பிப் போய்விட்டார் அப்பா. கண்ணாத்தாள் கோவிலிலும், கம்பர் சமாதியிலும் அவரைப் பார்த்தாக யார்யாரோ சொல்ல, இப்போது நான் வந்திருப்பது போல் ராத்திரி வெகு நேரம் சென்று தான் திரும்பி வந்தார்.

’அப்பா நீங்க என்னை விட்டு விலகிப் போயிடுவீங்கன்னு பயமா இருக்கு’.

அப்போது சொல்லாமல் விட்டதை இப்போது சொன்னேன்.

அவர் மெல்ல எழுந்தார். என் கையைப் பற்றியபடியே உள்ளே நடந்தார். சுவர்க் கோழி சத்தம் பெருகிச் சரசரவென்று மங்கி ஓய்ந்து போன ராத்திரி.

’முதல்லே ஆகாரம் பண்ணு’.

விளக்கைப் போட்டு என்னை சாப்பாட்டு மேஜைக்கு முன் அமர்த்தினார்.

’நீங்க முடிச்சாச்சா அப்பா?

நேர் முன்னால் கம்பி அடைத்த வெளிக்கு மேலே நிலாக் காய்வதைப் பார்த்தபடி எனக்குப் பின்னால் நின்றிருந்தார். சாப்பிடு என்றார் திரும்ப.

ஒரு சப்பாத்தியும் காய்கறிக் கூட்டுமாக எடுத்து வைத்துச் சாப்பிட முயற்சி செய்தேன். அங்கே ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு தெருவில், நிராதரவாக ஜோசபின் வெறுந்தரையில் படுத்து, மனசெல்லாம் துன்பம் கவிந்து அழுத்த, அழுது கொண்டிருப்பது நினைவு வந்தது. கடித்து மெல்வதற்கு ஆரம்பித்த சப்பாத்தி தொண்டைக்குள் இறங்கவே இல்லை.

’கழிக்கு மோனே’.

அப்பா என் முதுகை வருடினார். பிறந்ததில் இருந்து, யார் கண்டது, அம்மா வயிற்றில் இருந்தபோதே என்னை இவர் நேசிக்க ஆரம்பித்திருப்பார், இந்த மகத்தான அன்பை மதிக்காமல், இங்கே வந்து பழகிப் புது சிநேகிதம் கொண்டவர்களுக்கு உயிரையும் கொடுக்க ஓடுகிறேனே அது தப்பில்லையா? ஜோசபின் கொண்ட நேசம் நிஜமில்லையா பின்னே? என்னுடைய சந்தோஷம் அவளைத் தொற்றுவதும், அவளுடைய துன்பம் என்னைப் பாதிப்பதும் மெய்யானதில்லையா? வீட்டுக்கு வெளியே சகலரிடமும் உபசார வார்த்தைகள் மட்டும் உதிர்த்து, அன்பும் நேசமும் எனக்குப் புரிந்த காதலும், மெல்லப் புரிந்து கொண்டிருக்கும் காமமும் விலக்கி வைத்து, யந்திரமாக ஓடி நடந்து கொண்டிருப்பதே செய்ய வேண்டியதா? யாருக்காக சுவாசிக்கணும்?

’நான் விலகலே.. நீதான் விட்டு விலகிப் போறே .. ’

அப்பா முன்னால் வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். நாற்காலிச் சாய்வில் மடித்துப் போட்டிருந்த கதர்த் துண்டால் முகம் துடைத்தபடி தொடர்ந்தார் –

‘எங்கே வேணும்னாலும் போ. யாரோட வேணும்னாலும் பழகு. எனக்குத் தெரியும். நீ முறை தவறிப் போக மாட்டே. நான் வளர்த்த விதமும் நீ வளர்ந்த விதமும் அப்படி.. ஆனா அது மட்டும் போதாது. , உன் ஸ்பேஸ்லே .. உன்னோட வெளியிலே புழங்க உனக்கு சுதந்திரம் உண்டு தான். அது அடுத்தவங்க ஸ்பேஸை ஆக்கிரமிக்காமலும் இருக்கணும். முக்கியமா பெண்களோடு பழகறது … ’.

அப்பா எங்கோ பார்த்தபடி இருந்தார். என்ன சொல்லப் போகிறார் என்று கையில் எடுத்த சப்பாத்தி விள்ளலோடு எதிர்பார்த்து இருந்தேன்.

‘அறுதப் பழசு உவமையா இருந்தாலும் எப்பவும் பொருந்தி வரும்.. பஞ்சும் நெருப்பும் தான் அந்த சிநேகம். உனக்குச் சொல்ல வேண்டியதில்லே.. சுதந்திரத்தோட கூட நியதிகளும் வரும் . .புரிஞ்சு செயல்படணும், சரியா’?

அப்பா இப்படி அந்நியப்படுத்திப் பேசிக் கேட்டதில்லை என்பதால் பயமாக இருந்தது. அவரை விட்டு நான் தான் விலகிப் போய்க் கொண்டிருக்கிறேன்.

இப்போது பேசாமல் இருப்பது என் முறை. இல்லை, நான் பேச வேண்டும்.

‘அப்பா, உங்க அத்தாழம் கழிஞ்சுதோ’?

’நாம ரெண்டு பேரும் சாதாரணமா ஒண்ணா இருந்து ராச்சாப்பாடு சாப்பிடற ராத்திரி ஒன்பது மணிக்கு இந்தக் கேள்வி உன் மனசிலே வந்துதா? அப்போ என்ன நினைச்சுட்டிருந்தே? சொல்லலாம்னா சொல்லு. இல்லே வேணாம்’.

தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன். என்னிடம் பதில் இல்லை.

’பரவாயில்லே.. ஆகாரம் கழிச்சு விளக்கை அணைச்சுட்டுப் போய்ப் படுத்துக்கோ. நேரா நேரத்துக்கு சாப்பிடாமல் வல்லாத்த ஷீணம் வந்துடும். இங்கே வந்ததுக்கு இப்போ ரொம்ப ஷீணிச்சுப் போயிருக்கே. சம்சயம்னா கண்ணாடியிலே பார்த்துக்கோ. கன்னம் ஒட்டிப் போய், எல்லு தெரியறது’.

அவர் போய் ரொம்ப நேரம் அவர் வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. சாப்பாடு பற்றி மட்டுமில்லை. சுதந்திரமும் ஸ்பேஸும் கூட.

சிநேகிதம் எல்லாம் களைந்து, வீட்டோடு இருந்து விடலாமா என்று திரும்ப தோன்றியது. அப்பா என்ற நல்ல ஆத்மாவின் மனதைப் புண்படுத்தியா சிநேகிதமும் பிரியமும் காதலும் பரிமாறிக் கொள்ள வேண்டும்?

நான் சாப்பிட்டுப் படுக்கப் போனபோது தூக்கம் வராமல் ராத்திரி முழுக்கப் புரண்டு கொண்டிருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், பத்தே நிமிடத்தில் ஆழ்ந்த, கனவே வராத உறக்கத்தில் ஆழ்ந்து போனேன்.

எழுந்த போது சூரிய வெளிச்சம் துலக்கமாகப் படிந்து, உறுத்தாத வெப்பம் மெல்ல மேலேறத் தொடக்கம் குறித்துக் கொண்டிருந்தது. மிஸ்யே விக்தொ ஃப்ரான்ஸ்வா பூமோவோடு நான் கடற்கரையில் ஓடும் விடிகாலைப் பொழுது கடந்து போய் இரண்டு மணி நேரமாவது ஆகியிருக்க வேண்டும்.

அவர் வந்து மணி அடித்திருக்கலாம். வின்செண்ட் நடராஜன் லீவில் போனதால் என் சிரத்தையில் படாமலேயே போயிருக்கலாம். அல்லது விக்தொ வராமலேயே இருந்திருக்கலாம். ஜோசபினுக்கு உடனே கல்யாணம் முடிக்க, யாரோடாவது பரபரப்பாக ஓடி அலைந்து கொண்டிருக்கக் கூடும்.

வெயில் ஏறுகிற நேரத்தில் பீச்சில் ஓட வேண்டாம் என்று மொட்டைமாடி வெட்டவெளி மைதானத்தில் சுற்றிச் சுற்றி ஓட ஆரம்பித்தேன். பத்து தடவை சுற்றி வந்த பிறகு அங்கே ஓடக் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு கால்வசமானது, சுவரிலும், கீழே வெளிச்சம் வரக் கண்ணாடிச் சில் பதித்து சிமெண்ட் கட்டம் கட்டிய தரையிலும் காலை இடித்துக் கொள்ளாமல் விலகி ஓட வேண்டி நான் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட நியதிகள். எல்லா வெளிகளும் நியதிகளோடு தான் கிடைக்கின்றன.

பதினாலாவது சுற்றில் பின்னறைப் பக்கம் கூடுதலாக நகர்ந்த போது கதவு மட்ட மல்லாக்கத் திறந்து கிடந்தது புத்தியில் உறைத்தது.

வாசலுக்கும் உள்ளுக்குமாக ஒரு பழைய பச்சை நிற ஃபைல் அல்லாடிக் கொண்டு அங்கே கிடந்தது. அதைக் கடைத்தேற்றி பத்திரமாகப் பாதுகாக்காவிட்டால், சாயந்திரம் அடிக்கும் கடல் காற்றில் சமுத்திரத்துக்குள் பக்கம் பக்கமாக அந்த ஃபைல் பறந்து போய்க் குடியேறி விடலாம்.

ஓட்டத்தை நிறுத்தி ஃபைலைக் கையில் எடுத்தேன்.

எந்த ஃபைலை அப்புறம் சாவதானமாகப் பார்க்கலாம் என்று பத்திரமாக ஒரு ஓரத்தில் எடுத்து வைத்திருந்தேனோ அதேதான். விக்தோ விவகாரம். இருபத்தைந்து வருஷத்துக்கு முந்திய கட் அண்ட் ரைட்டான இங்கிலீஷும் அதேபடி இருக்கக் கூடும் என்று யூகிக்க வைக்கிற பிரஞ்சுமாக டைப் அடித்தும் கையால் இடது பக்கம் சாய்த்துச் சாய்த்து எழுதியும் தொகுத்த பழைய காகிதங்கள். மொத்தமாகப் பார்க்க அது ஒரு வாழ்க்கைச் சாசனம்.

என்னதான் இதெல்லாம் என்று தெரிந்து கொள்ள ஆவல். கீரைக் கட்டாகப் பொலபொலவென்று உதிரும் காகிதங்களும், கழுவேறினாலும் இன்னும் பறக்கத் தயாராக இருக்கும் மொடமொடப்பு விடைபெற்ற பழைய பழுப்புப் பேப்பருமாக அள்ளிக் கொண்டு வந்து வெளியே சுவர் ஓரமாக உட்கார்ந்து புரட்டினேன். பேங்க் குமாஸ்தாவான விக்தொ ஃப்ரான்ஸ்வா பூமோ என்ற மாதச் சம்பளக்கார இளைஞர் கொஞ்சம் கொஞ்சமாக மனதில் உருவாகத் தொடங்க, 1950-களுக்கு அவரோடு போனேன். கதைச் சுருக்கம் இது தான் –

விக்தொ ஃப்ரான்ஸ்வா பூமோ காதலில் விழுந்த வருடம் இந்த ஊருக்கு விடுதலை கிடைத்த அதே ஆண்டு. பிரஞ்சுக் காரர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்க ஊருக்குப் பொருத்தமான தோதில் போராட்டம், மறியல், வேலை நிறுத்தம் எல்லாம் நடந்திருக்கிறது.

போராட்டத் தியாகி ஒருவரின் மகள் தவுலத் உன்னிசா பேகம். அடுத்த வீட்டில் இருந்த விக்தொ, பேகத்தைக் காதலித்தபோது இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு. பேகத்தின் தகப்பனார் பகதூர் சாயிபு திருச்சியில் தலைமறைவாக இருந்தபோது விக்தொ, பேகத்தைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் வைத்து விட்டார். இதில் இருவீட்டாருக்கும் மனஸ்தாபம்.

ஒரே பிள்ளையான விக்தொ வயதான காலத்தில் தங்களைக் காப்பாற்றாமல் காதல் வசப்பட்டு ஓடியதால் தாங்கள் பட்டினி கிடந்து இறக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் பட்டதாக விக்தொ சீனியரும், மனைவி திரேசாளும் பேங்க் மேனேஜருக்கும், மேனேஜிங் டைரக்டருக்கும் மனுச் செய்திருக்கிறார்கள், தன் மகன் சம்பளத்தில் மாதம் ஐம்பது ரூபாய் பிடித்துத் தனக்கு அனுப்ப வேண்டும் என்று சுவாரசியமான கோரிக்கையையும் சீனியர் விக்தொ வைத்திருக்கிறார்.

இது போதாதென்று, பேங்க் ஏஜெண்டாக அப்போது இருந்த துளசிங்க ராயர் இப்படி குமாஸ்தாக்கள் காதல் வசப்பட்டு பக்கத்து வீட்டுப் பெண்டுகளை இழுத்துக் கொண்டு போய்க் கல்யாணம் செய்தால், பேங்கு பற்றிய நம்பிக்கை ஜனங்கள் இடையே ஒரேயடியாகக் குறையும் என்று பயம் தெரிவித்து மதராஸ் தலைமைக் காரியாலயத்துக்கு எழுதியதோடு அல்லாமல் விக்தொவுக்கு ஒழுங்கு நடவடிக்கையாக மெமோ வேறு கொடுத்திருக்கிறார்,

’பொறுப்பான பேங்க் உத்தியோகஸ்தரான நீங்கள் பேங்கின் பெயரை உங்கள் நடத்தை மூலம் கெடுப்பதாகவும் உங்கள் உத்தியோகத்தை அகௌரவப் படுத்துவதாகவும் பரவலான புகார்கள் வந்துள்ளன. எனவே, ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தன்னிலை விளக்கம் கோருகிறேன். வரும் எட்டாம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் உங்கள் திருப்திகரமான பதில் வந்து சேராவிட்டால், மேற்படி நடத்தை காரணமாக, உங்கள் அடுத்த சம்பள உயர்வான பதினெட்டு ரூபாய் உங்களுக்குக் கிடைக்காமல் உடனடியாகத் தள்ளி வைக்கப்படும். மற்றும் உங்கள் உத்தியோகம் தொடர்வதும் மறு பரிசீலனை செய்யப்படும். ராயர் இப்படி மெமோவில் ரென் அண்ட் மார்ட்டின் இலக்கணப் புத்தக இங்கிலீஷில் விக்தொவை மிரட்டி இருக்கிறார்.

இன்க்ரிமெண்ட் தொகையான கேவலம் பதினெட்டு ரூபாயைக் காதலுக்கு விலையாகக் கற்பித்து, ஏன் காதலித்தீர்கள், ஓடிப் போய்க் கல்யாணம் செய்து கொண்டீர்கள் என விளக்காவிட்டால் அந்த இன்க்ரிமெண்ட் தரமாட்டோம் என்று உலகின் பல நாடுகளில் இயங்கும் ஒரு பேங்க் தங்கள் கடைநிலை குமாஸ்தாவை மிரட்டிய ஒரே சம்பவம் அதுவாகத்தான் இருக்கும்.

இனி வருவது விக்தொவின் பதில். மனுஷன் பின்னிட்டார். அவர் எழுதினாரோ, இங்கிலீஷ் வாத்தியார், ப்ரஞ்ச் மதாம், தமிழாசிரியர் என்று கமிட்டி போட்டுக் காசு கொடுத்து எழுதி வாங்கினாரோ, பழைய சினிமா டயலாக் மாதிரி சரம்சரமாக கவிதை, உரைநடை, வசனம் என்று மூன்று மொழியிலும் காதலில் மகிமை, விரும்பியவள் மேல் நேசம் செலுத்தத் தனக்கு உள்ள தனிமனித உரிமை, பெற்றோருக்கும், ஊழியம் செய்யும் பேங்குக்கும் தான் செய்ய வேண்டிய கடமை குறித்து தனக்குள்ள பிரக்ஞை என்று அந்த பத்துப் பக்கக் கடிதத்தில் எழுதித் தள்ளியிருக்கிறார் விக்தொ.

மாதம் ஐம்பது ரூபாய் மட்டும் எதற்காகத் தன் சம்பளத்தில் பிடித்து அப்பா விக்தொ சீனியருக்கு பேங்க் அனுப்ப வேண்டும் என்றும் கேள்வி வைக்கிறார் அவர். என்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு என் முழுச் சம்பளத்தையும் அனுப்பி வைக்கக் கோருகிறேன். அவர்கள் மனம் உவந்து தரும் காசில் நானும் என் அன்பு மனைவி உன்னிஸா பேகமும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவோம். தனிக் குடித்தனம் போனது இரண்டு வீடு தள்ளித்தான். பேகமும் விக்தொ சீனியர் தம்பதிகளும் சீக்கிரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதும் எல்லோரும் ஒரே வீட்டில் குடியிருக்கத் திட்டம் என்று சொல்லி, இறைவன் சேர்த்து வைத்ததை மனிதனும் பேங்கும் பிரிக்காதிருக்கட்டும் என்று பைபிள் வரியைக் கடன் வாங்கிக் கொஞ்சம் தட்டிக் கொட்டிக் கம்பீரமாக முடித்திருக்கிறார் விக்தொ. இந்த நூற்றாண்டின் சிறந்த கடித இலக்கியம் என்று பாடம் இருந்தால் கட்டாயம் விக்தொ கடிதத்தைப் பரிந்துரை செய்வேன்.

ஃபைலை மூடிப் பத்திரமாக வைத்துவிட்டுக் கீழே வந்தேன். எனக்குத் தெரியாத, ஆனால் நான் இன்னும் அதிகமாகப் புரிந்து கொண்ட விக்தொ என்ற ஒரு நண்பரைப் பற்றி நினைத்தபடி கீழே வந்தேன்.

குளித்து விட்டுக் கிளம்பும்போது அப்பா சகஜமாகி இருந்தார்.

’ஈரத் தலையைத் துவட்டாம அப்படி அப்படியே வாரிச் சீவிண்டு கிளம்பித்தான் எப்பவும் ஜலதோஷம், சைனஸ், வாடா, துவட்டி விடறேன்’.

எத்தனை வயது அப்பா தலை துவட்டி விட்டாலும் டவலுக்குத் தலையசைத்து இருக்கும் பிள்ளை நாலு வயசுக் குழந்தைதான். நானும்.

சின்ன மார்க்கெட் கடியாரம் எட்டு அடித்தது. ஜோசபினைப் பார்க்க வேணும்.

’ஃப்ரேக்பாஸ்ட் முடிச்சுப் போயேண்டா. பிரட் டோஸ்ட் பண்ணித் தரேன்’.

’இல்லேப்பா. அப்புறம் வந்து கழிக்கறேன்’.

சைக்கிள் சாவியை எடுக்கும்போது போன் அடித்தது. அப்பா எடுத்து ஹலோ சொல்லி விட்டு உடனே ‘வணக்கம் பல’ சொன்னார். ’இருங்கள், கூப்பிடுகிறேன்’ என்றார். சொல்லைச் சிதைக்காமல் முழுக்கச் சொன்னதில் இருந்து அந்தப் பக்கம் பார்வேந்தனார் உரையாடுகிறார் என்று நிச்சயமாயிற்று.

’உன்னைத் தாண்டா கூப்பிடறார் புலவர்’

அட கடவுளே … பீரோ பின்னாடி கிஸ் அடிக்கறதெல்லாம் வேணாம். பூச்சி பொட்டு கிடக்கும்’ – தேன்மொழி அக்கா போட்டுக் கொடுத்துட்டாங்களா? இல்லை கயல் பயத்தில் சொல்லி விட்டாளா? மண்டகப்படிதான் இன்னிக்கு.

அப்பா ஃபோனைக் கொடுத்து விட்டு சர்க்கஸ் வீரன் போல் தொளதொளப்பான சில்க் பேண்டைக் கணுக்காலில் உலோக வளையம் போட்டு இறுக்கிக் கொண்டு படி இறங்கிப் போய்விட்டார். ஆபீஸ் ஜீப்பில், சைக்கிளில் போக வேண்டி இருந்தால் இப்படி ஒரு ஆயத்தம் அவருக்குக் கட்டாயம் தேவை. சக்கரத்தில் கால்சராய் மாட்டாமல் இருக்கவாம். இப்படி வளையத்தை மாட்டி அவஸ்தைப் படாமல், கால் பக்கம் கொஞ்சம் இறுக்கமாகத் தைத்திருக்கலாமே என்று யோசனை சொன்னால் பதிலே வராது.

’தம்பி காலைச் சிற்றுண்டி அருந்தினீர்களா’?

பார்வேந்தனார் பலமாக முஸ்தீபு போட்டார். இலக்கிய இலக்கணப் புத்தகங்களின் பின்னணியில் கயல்விழிக்குக் கொடுத்த முத்தம் அடுத்து வரலாம். ஃபோன் சுடும் அளவு உருட்டித் தீவிழித்துத் திட்டி வடமொழி கலக்காமல் சாபம் கொடுப்பார். வீட்டுப் படி ஏறாதே இனிமேல்.

’அவசியம் வீட்டுக்கு வாங்க தம்பி. உங்களை எதிர்பார்த்து ஒருத்தி காத்திருக்கிறாள்’.

எக்கி ஜன்னலில் பார்த்தேன். மழை மேகங்கள் எதுவும் திரண்டிருக்கவில்லை.

ஃபோனில் ஏதாவது பிசகு இருந்து பேசினது ஒன்று கேட்பது ஒன்றாக இருக்கக் கூடும். சார் புரியலை என்றேன்.

’ஒன்பது புனித இரவுகளுக்காகக் கலைமகள், பொன்மகள், மலைமகள் துதியாகச் சில விருத்தப் பாக்கள் எழுதியிருக்கிறேன்’.

கொஞ்சம் முழித்து, ’நவராத்திரிக்குப் பாட்டு எழுதியிருக்கீங்களா சார், நல்லது’ என்றேன். ஏண்டா இவன் கிட்டே சொன்னோம் என்று நொந்து போயிருப்பார்.

’அந்தப் பாடல்களை செவ்வியல் பண்ணமைத்துத் தர நீங்கள் தான் வரணும்’.

மியூசிக் போட நான் தான் வரணுமா?

’என் மனைவி மிக விரும்புகிறாள். அவள் அவற்றைப் பாடி மகிழவும் மகிழ்விக்கவும் ஆவலாக இருக்கிறாள்’..

கயலுக்கு வாழ்க்கைப் பட்டால் கரப்பான் பூச்சி பிடித்தால் மட்டும் போதாது போல. அவள் அம்மாவுக்குப் பாட்டுச் சொல்லித் தர வேண்டும். என் அரைகுறை சங்கீத ஞானத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?

’பத்து மணிக்கு மேல் வர முடியுமா? நீங்கள் அங்கே வர முடியாதென்றால் நான் மதிமுகத்தாளையும் கயல்விழியையும் உங்கள் இல்லத்துக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்றார் பார்வேந்தனார். சரித்திரக் கதையில் இருந்து பிய்த்தெடுத்த இரண்டு கதா பாத்திரங்கள் கச்சையணிந்து என் வீட்டில் நுழைந்து இன்னலுற வேணாம். கயல் மட்டுமானால் பரவாயில்லை.

’பகலில் வருகிறேன்’ என்று சொல்லி வண்டியை மிதித்துக் கிளம்பினேன்.

போகும் வழியில் ஜோசபினுக்குக் காலை ஆகாரம் வாங்கிக் கொள்ள நாதன் ஓட்டலில் வண்டி நின்றது..

ஜோசபினுக்கு என்ன பிடிக்கும்? கல்லாவில் நின்று யோசிக்க ஒரு தடயமும் சிக்கவில்லை.

’என்ன வேணும் தம்பி, பூரி கிழங்கு சுடச் சுடப் போட்டிருக்கு. சாப்பிடறீங்களா’? கல்லாவில் இருந்த பெரியவர் அன்போடு கேட்க, ஒரு செட் பார்சல் கொடுங்க என்று வெளிவராந்தா மேசைக்கு முன்னால் உட்கார்ந்தேன்.

’ரெண்டு செட். ஒண்ணு பார்சல், இன்னொன்னு இங்கே’. சற்றே மாற்றினேன்.
சாப்பாட்டு வாசனை வந்ததும் வயிறு புகார் சொல்ல ஆரம்பித்து விட்டது.

வீட்டில் ரோஸாலி இருப்பாளே. ’சாரி, மூணு செட் பூரி’.

’தம்பி ஒரு முடிவுக்கு வந்து அப்புறம் சொல்லுங்க. வேணும்னா வீட்டுக்குப் போய் பெரிவங்களைக் கலந்துக்கிட்டு ஒரு காகிதத்துலே எழுதிட்டு வாங்க’

கல்லா பெரியவர் திரும்பி அவருக்குப் பின்னால் சுவரில் பூமாலையோடு இருந்த வள்ளலார் படத்தை சிரத்தையாக வணங்கியபடி சொன்னார்.

விசாலி டியூட்டி முடிந்து வந்திருக்கலாம். நாலு செட் பூரி கிழங்கு. நானும் அங்கே போய்ச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

’நாலு செட் பூரி. எல்லாம் பார்சல்’.

விட்டால் இந்தப் பகாசுரன் சுட்டு அடுக்கிய பூரியை எல்லாம் கவர்ந்து போய்விடுவான் என்று நினைத்தோ என்னவோ கடகடவென்று பார்சல் கட்டிக் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார்கள்.

ஜோசபின் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்த முடியாமல் வரிசையாக எருமை மாடு கட்டிப் பால் கறந்து கொண்டிருக்கிற காட்சி. கறந்து முடித்து குவளை நிரம்பப் பால் எடுத்துப் போன மத்திய வயசுப் பெண் என்ன வேணும் என்று கொஞ்சம் மிரட்டலாகக் கேட்டாள்.

‘சைக்கிள் விடணும்’.

‘தெருவிலே விடு’.

‘லாரி வந்தா’?

‘ஓரமாப் விட்டுக்கிட்டுப் போ.. இல்லேன்னா எப்படிப் பழகறது’?

அவள் சட்டென்று சிரித்தாள். ஆக பகடி செய்திருக்கிறாள்..

எல்லாப் பெண்களும் என்னை ஏதோ ஒரு விதத்தில் சீண்டிப் பார்க்க ஆசை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நினைவு வந்ததும் ஏதோ சாதித்த தெம்பில் வண்டியை சாதுவாகத் தெரிந்த எருமை மாட்டுக்குப் பக்கம் நிறுத்தி விட்டு பூரி கிழங்கோடு உள்ளே போனேன்.

ரோஸாலி என்னப்பா என்றாள் என் கையில் இருந்த காகித மூட்டையைப் பார்த்து. விவரம் சொன்னேன். கண்கள் ஜோசபினைத் தேடின.

’தெருவுக்கே சப்ளை பண்ணப் போறியா?’ என்று சிரித்தாள் ரோஸாலி. நாதன்ஸ் பூரியை விட ஆர்யாஸ் பூரி மொறுமொறுப்பா இருக்கும் என்றாள். ’அதிலே சோடா போட்டிருக்கும்’ என்றபடி சுற்றி வரப் பார்த்தபடி நின்றேன்..

’ஆமா, நீ ரொம்ப கண்டே’ என்று ரோஸாலி சமையலறைக்குப் போனாள். ஜோசபின் எங்கே? குரல் உயர்த்தி ரோஸாலியைக் கேட்க உத்தேசித்த நொடியில் .பாத்ரூம் கதவு திறந்து உள்ளே இருந்து என் தேவதை வந்தாள்.

முகத்தில் களைப்பும் தீனமும் போன இடம் தெரியவில்லை. குளிரக் குளிரக் குளித்து, குளிர்ந்து இருந்தாள் ஜோசபின். அந்தச் சிரிப்பு வழக்கம் போல் அவளைச் சூழ்ந்த வெளியை ஒளியாக்கியது. தலை குளித்து வெள்ளைத் துண்டை வேடு கட்டி, கூடவே என் மனதையும் சேர்த்து அள்ளி முடிந்திருந்தாள். மேலே அலங்காரமாகத் தோளை முடிந்தவரை தழுவி ஒரு குற்றாலத் துண்டு. பிடிவாதமாகப் பார்வையைத் தாழ்த்தினேன். இதென்ன, சேலை உடுக்காமல் காலடிகளைப் பகுதி தழைத்து மூடிச் சந்தன நிறத்தில்.;..

’ஐயோ, நீ வந்திருக்கியா’?

அவள் சட்டென்று அடுத்த அறைக்குள் மறைய சந்தன நிற உள்பாவாடையின் லேஸ் ஒரு வினாடி பளிச்சிட்டு ஓடியது. சிரிப்பு வந்தது. பெருமையும் கூட.

‘சாரிடி இவன் வரான்னு நான் சொல்லியிருக்கணும் விட்டுப் போச்சு’

ரோஸாலி, குழைவாகச் சொன்னது மட்டுமில்லை, அறைக்கு உள்ளே இருந்து கேட்ட சின்னச் சிரிப்பும் மனதுக்கு இதமாக இருந்தது. நான் பார்த்ததை ஜோசபின் தப்பாக நினைக்கவில்லை. ஒரு வினாடி குறுகுறுவென்று இருந்து, ரோஸாலி தோளில் தட்ட சமநிலைக்கு வந்தேன்.

’கொடு, நான் சாப்பிட்டு டியூட்டிக்குப் போகணும்’. ரோஸாலி சிற்றுண்டிப் பையை என் கையில் இருந்து வாங்கி கொண்டாள்.

’நானும் தான் ட்யூட்டிக்குப் போகணும்’. உள்ளே இருந்து ஜோசபின் குரல்

நான் ரோஸாலியைப் பார்த்தேன். உள்ளே போகலாமா? விரல் நீட்டினேன்.

’ஜோஸி, உன் தோழன் வரலாமாங்கறான்’.

’உம்’.

அந்த உம் கொடுத்த பலத்தில் அடுத்த வினாடி உள்ளே இருந்தேன்.

’ஜோஸ்ஸ்ஸி ஜோஸ்ஸ்ஸி..’

என்னடா? தலையைக் குலுக்க ஈரமுடி என் கன்னத்தில் இதமாகப் படிந்தது. அவள் தோள்களைப் பற்றியபடி கண்ணுக்குள் நோக்கினேன். இந்த வினாடி என் இறுதி மூச்சு வரை மனதில் சிறைப் பிடிக்கப்பட்டு உயிர்த்து இருக்கும்.

ஜோசபின் என் தலையில் மென்மையாக முத்தமிட்டாள். அப்பா தலை துவட்டுகிற வாத்சல்யம் போல ஆனால் அடிப்படையில் ஒரு ஆண் பெண்ணுக்கு ஆட்படும் மாயாஜாலமாக நான் அதில் ஆழ்ந்தேன். ஏதோ தவறைச் சரி செய்கிற பாவத்தில் ஜோசபினை இறுகத் தழுவி அவள் இதழ்களில் தீர்க்கமாக இதழ் பதிக்க அருகே நகர்ந்தேன்.

’வேண்டாம்டா’, அவள் அவசரமாக விலகினாள், தலையில் வேடு கட்டியிருந்த துணி கழன்று விழக் கையில் எடுத்து அவள் தலையை மெல்லத் துவட்டி விட்டேன். இந்தப் பெண் என்னுடையவள். உடமை இல்லை. என்னின் இன்னொரு வடிவம். உறவு தெரியாமல் உறவு தேடி உறவு யாசித்து உறவு சொல்லி உறவு கொண்டு உறவு பெற்று உற்றோம் ஆனோம்.

அவள் கண்கள் மூடியிருந்தன. விலகிப் போயிருந்த களைப்பு திரும்பக் கவிந்ததாகத் தோன்றியது. குழைந்து விழப் போனவளைத் தாங்கிக் கொண்டேன். அப்படியே அணைத்தாற்போல் ஹாலுக்கு கூட்டி வந்தேன். ரோஸாலி ஓடி வந்து அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டாள்.

’இப்போ நீ டியூட்டி வரவேணாம் ஜோஸி. இன்னிக்கும் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வா. நான் சொல்லிக்கறேன் சீஃப் கிட்டே’ என்றாள் ரோஸாலி.

ரோஸாலியும் நானும் ஜோசபினை கைத்தாங்கலாக அந்த வீட்டில் இருந்த ஒரே கட்டிலில் படுக்க வைத்தோம். எண்ணெய்க் கறை அப்பிய இரண்டு தலையணைகளை ரோஸாலி பரிசோதித்து, உறை அகற்றி, சலவை செய்த ஒரு பருத்திப் புடவையை மேலே விரித்துச் சுத்தமாக ஜோசபின் தலைக்கு அணையாக வைத்தாள்.

’நீ கொஞ்ச நேரம் இரு. விசாலி வந்துடுவா’.

எனக்கு சொல்லி விட்டு ரோஸாலி போனபிறகு கதவைச் சார்த்தப் போனேன்.

தெரு ஓரம் கண் தற்செயலாக நகர்ந்தது. சைக்கிள்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஊர்ந்து போக, மணியடித்துப் போகிற பள்ளிப் பிள்ளைகள். தெருவைப் பெரிய வாரியல்கள் கொண்டு இரண்டு பெண்கள் வேகவேகமாகப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். தெரு ஓரம் ஈரம் சுவடு விட்ட மண்ணில் பசுக்கள் படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தன. நிறைய நகை அணிந்து, ஸ்கர்ட் தரித்த உயரமான ஒரு பெண் சைக்கிள் ரிக்ஷாவில் வந்து தெருமுனையில் இறங்குவதைப் பார்த்தேன். எங்கேயோ அவளைப் பார்த்த ஞாபகம். இவ்வளவு தாட்டியான, உசரமான பெண்பிள்ளை எங்கே என் பாதையில் குறுக்கிட்டிருப்பாள்? ஏதாவது இங்கிலீஷ் படத்தில் வந்திருக்கலாம்.

உள்ளே ஜோசபின் தலையணை சரியில்லாமல் புரண்டபடி இருந்தாள். நான் முந்திய தினம் போல என் மடியில் அவள் தலையை அணைவாக வைத்துப் பிடித்தபடி இருந்தேன். வாங்கி வந்த சிற்றுண்டி ஆறிப் போய்க் கொண்டிருந்தது. மூன்று பூவரசு இலைப் பொட்டலங்கள் முக்காலி மேல் சணல் கயிறு சுற்றிக் கிடந்தன. சுற்றி வரும் ஈக்கள் மேலே அமராமல் இருக்க நான் கையசைத்து விலக்கியது மேலே பட, ஜோசபின் கண் விழித்தாள். முதுகில் கை வைத்து அமர்த்தித் திரும்பப் படுக்க வைத்தேன்.

குளித்து வரும்போது இருந்த உற்சாகமும் சந்தோஷமும் ஜோசபின் முகத்தில் இப்போது இல்லை. பயந்திருக்கிறாள். வகைதொகை இன்றிப் பயந்திருக்கிறாள். உடலில் உடல் திசுவில் எல்லாம் களிம்பாகப் படிந்து அவள் சுமந்து நடக்கும் களிப்பையும் சிரிப்பையும் அரித்து விழுங்கிய பயம் அது.

அக்னியாக வயிற்றில் பசி எழுந்தது. பூவரசு இலைப் பொட்டலங்களை எடுத்து வந்தேன். ஜோசபின் எழுந்து உட்கார்ந்தாள்.

‘வா ரெண்டு பேரும் சாப்பிடலாம். ஊசுட்டேரி போனோமே அது மாதிரி’.

அடுத்த நிமிஷம் எங்கள் சிரிப்பால் அந்த அறை நிறைந்தது. சைக்கிள் பங்க்சர் ஆனது முதல் ப்ரேம் ப்ரேமாக அந்தக் காட்சி ரெண்டு பேரின் மனதிலும் பேச்சிலும் விரிந்து கொண்டு போனது.

’டேய், நீ இந்த ஆல்பம் பாத்திருக்கியா’?

ஜோசபின் துள்ளி எழுந்து அறைக்கு வெளியே ஓடுகிற அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.

’ஆமா, நீ எதோ தினம் வாவான்னு ஆரத்தி கரைச்சு வைச்சுக் கூப்பிட்ட மாதிரி..விசாலி என்மேல் பிரியம் வச்சு வரச் சொல்லி அட்ரஸ் கொடுத்துதோ பிழைச்சேனோ..விசாலியைப் பார்க்க வந்த இடத்திலே உன்னையும் பார்த்து’.

தொப்பென்று தலையில் ஒரு போட்டோ ஆல்பம் விழுந்தது. கூடவே முதுகில் சுளீரென்று வலிக்க வலிக்க மனசுக்கு இதமான ஓர் அடியும்.

அவள் ஆல்பத்தை மடியில் வைத்துக்கொண்டு நெருங்கி உட்கார, பூரியும் கிழங்கும் ஊட்டி விட்டபடி, எடுத்து உண்டபடி நான் பார்க்க ஆரம்பித்தேன்.

’இந்த முதல் படத்தை மட்டும் பாத்துடாதே’.

ஜோசபின் அவசரமாகப் பக்கத்தைத் திருப்ப, அவள் கையைத் தட்டி விட்டு ஆல்பத்தைப் பறித்தேன். ஜோசபின் குனிந்து ஆல்பத்தின் மேல் கிட்டத்தட்ட படுத்து மறைத்தாள். நான் எக்கி, ஊன்றியிருந்த அவள் வலது கையைப் பற்றி மேலே இழுக்க, அவள் திரும்ப என் மடி மேல் சரிந்தாள்.

‘டேய் வேணாம் வேறே எங்கேயாவது போயிடும்’.

விலகி உட்கார்ந்தாள். அதற்குள் அந்த முதல் பக்கப் படத்தைப் பார்த்தாகி விட்டது. தலை முடியைல் பின்னால் தள்ளித் தலை சீவி இருந்த டூவீட் கோட்டும் தொளதொளப்பான கால்சராயும் தரித்த ஒரு கனவான் தோரணை மனிதரின் கையைப் பிடித்தபடி சின்ன ஃப்ராக் போட்ட பெண் குழந்தை.

‘நீதானே’?

அவள் வெட்கத்தோடு தலை குனிந்து என் கையைக் கிள்ளினாள்.

‘சின்னப் பாப்பா தானே, அதான் ஃப்ராக் வெளியே ஜட் ஜட்.. ஜட்டி.’.

அவள் குழறியபடி முகத்தைப் பொத்திக் கொள்ள புகைப்படத்தில் குழந்தை ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்றது ரெண்டு பேரையும் பார்த்து.

’சைக்கிளில் பள்ளிக்கூடம் போகிற ஜோசபின். அழகா இல்லே’?

‘இப்போ இவ்வளவு அழகா ஏது லேடீஸ் சைக்கிள்’?

கடுப்படித்தேன். அவள் காதைத் திருகினாள்.

இதுக்கு சுங்கச்சாவடி வாசல்லே கொடுத்த அதே தண்டனை தான். அவள் கன்னத்தைத் திருப்பிக் கொள்வதற்குள் நிறைவேற்றியானது.

’மடியிலே சுரீர்னு அடிச்சா விட்டுடுவோமா’? நான் கேட்டபடி இன்னொரு விள்ளலை அவளுக்கு ஊட்டினேன். குழந்தை மாதிரி சாப்பிட்டாள்.

அப்பாவோடு சர்ச் படி ஏறும் ஜோசபின். அவர் பார்த்து நிற்க தழையத் தழைய வெள்ளை பாவாடை அணிந்து தலையில் சந்திரப் பிரபை போல் ஸ்லைடு சூடி, பிறந்த நாள் கேக் வெட்டும் அழகான பதினைந்து வயது பெண்

‘பதினாலு வயசு’

ஜோசபின் திருத்தினாள். நான் ரெட்டைத் தெருவில் தீபாவளி பட்டாசு விற்பனையாளனாக பத்து வயசில் தீபாவளி கொண்டாடியபோது இங்கே ஒரு ரோஜாச்செடி பூத்து வந்திருக்கிறது.

‘படம் இவ்வளவு அழகா இருக்கே, போட்டோ கிராபர் யார்’?

‘அப்பாதான். ஊர்லே போட்டோ ஸ்டூடியோ வச்சிருந்தார்’.

‘உங்க அம்மா’?

நான் கேட்டு முடிக்கும் முன் கல்லறையில் ஜோசபின் ,மலர் வைக்கிற படம்.

‘அம்மாடா’ என்று கண் கலங்கியவளைத் தோளோடு அணைத்துக் கொண்டேன். பூரி கிழங்கு வாடையும் தூக்கலான வெங்காய வாடையும் சந்திரிகா சோப்பு வாடையும் எங்களுக்குப் பொதுவானது. அவளுடைய துக்கமும், சந்தோஷமும் கூட.

அப்பாவும் கல்யாண உடுப்பில் நடுவயதைத் தொடும் ஒரு பெண்ணுமாக நிறம் மங்கிய படம் ஒன்று. சித்தியாம். அம்மாவும், சித்தியும் ஏன் ஜோசபினுடைய பாட்டி கூட நர்ஸ் தானாம். நமக்குப் பிள்ளை பிறந்தா டாக்டருக்குப் படிக்க வைக்கணும் என்றேன்.

டேய் என்று உரக்க விளித்து என் தலையில் தலைகாணியால் மொத்தி ஜோசபின் மனம் நிறையச் சிரிக்க, நான் புன்சிரிப்போடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சித்தியும் அப்பாவும் அப்பா மடியில் அடுத்த பெண் குழந்தையுமாக இன்னொரு படம்.

ஹைஸ்கூல் முடித்து இந்த ஊரில் தான் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள் பதினெட்டு வயசு ஜோசபின். இருப்பதிலேயே மிக அழகான படம் அது.

‘நல்ல வேளை, எங்க மம்மி இறக்கும்போது என் பேர்லே பேங்குலே பணம் போட்டு வச்சு சர்ச் பாதர் கிட்டே பேங்க் டிபாசிட் ரசீது கொடுத்து வச்சிருந்தாங்க. அதான் யார் கையையும் எதிர்பார்க்காம நர்சிங் காலேஜ் சேர முடிஞ்சது’.

நாலைந்து பக்கங்களில் படம் பிய்த்து எடுக்கப்பட்டு வெறுமையாக சதுரங்கள் காட்சி அளித்தன.

அப்பா இறந்தபோது சித்தி கேட்டுச்சுன்னு கொடுத்தேன். அங்கங்கே இருந்த அவர் படம் மட்டுமில்லே, வீடு, அப்பா சேர்த்து வைச்ச பணம் எல்லாம் எடுத்துக்கிட்டாங்க. இந்த ஆல்பத்தை திரும்ப வாங்க நான் பட்ட பாடு..’.

பக்கத்தைத் திருப்ப, அழகான வெள்ளை உடுப்பில் என் செல்ல சிநேகிதி நிற்கும் படம்.

‘நல்ல வேலை எனக்கு படிச்சு முடிச்சதும் இங்கே ஜேசு கிருபையிலே நர்ஸ் வேலை கிடைச்சுது. நாலு வருஷம் முந்தி அது. ஆஸ்பிடல் ஆண்டுவிழா நேரத்தில் பெஸ்ட் சர்வீஸ் அவார்ட் கிடைச்ச போது’.

அடுத்த படத்தில் மாலையும் கழுத்துமாக ஜோசபின். பக்கத்தில் தீர்க்கமான மூக்கும் மீசை மழித்த மொழுக்கென்ற வடக்கிந்திய சாயலுமாக யாரோ.

’ஜோஸ், இதுவும் ஆஸ்பத்திரி ஆண்டு விழா.. டிராமாவா இருக்கும். சரியா’?

’டிராமா தான். ரெண்டே வருஷம். டைவர்ஸ் ஆயிடுச்சு..’ ஜோசபின் என்னைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள். என் கையில் பொத்திப் பிடித்திருந்த அவள் கை நடுங்கியபடி இருந்தது.

வாசல் கதவை அவசரமாகத் தட்டும் சத்தம்.

விசாலி வேகமாக உள்ளே நுழைந்தாள்.

’டெய்ஸி மனோ சந்திரான்னு உனக்கு உறவு யாராவது உண்டா ஜோசபின்’?

இல்லையென்று தலையசைத்தாள் ஜோசபின். அவள் கண்ணில் பயம்.

’உனக்கு அத்தை வழி உறவுன்னாங்க அந்தப் பொண்ணு.. அதுக்குள்ளே அடுத்த வீட்டு அம்மா வந்து நீ திரும்ப ஊருக்குப் போயிட்டேன்னு சொல்லி அனுப்பிடுச்சு..ரோஸாலி அதுங்கிட்டே சொல்லி வைச்சிருக்கா போல..’.

அவள் ஜன்னல் வழியாக ஓரமாக நின்று பார்க்க, நானும் எக்கிப் பார்த்தேன். சைக்கிள் ரிக்ஷாவில் தாட்டியான பெண் போகிறாள்.

’இவங்க தான்’.

விசாலி சொல்லாமலேயே எனக்குத் தெரிந்தது.

திரும்பிப் பார்த்தேன். ஜோசபின்?

ஐந்து நிமிடத்தில் கதவு திறந்து அவள் வந்தாள். சலவை செய்த நர்ஸ் உடுப்பு. பளபளப்பாக பாலீஷ் ஏற்றிய ஷூக்கள்.

’ரெஸ்ட் எடுத்துக்கலியா ஜோசபின்’?

’இல்லை விசாலி. இங்கேயே உக்காந்திருந்தா தேவையில்லாத பயம்தான் வருது. வேலையில் போய் இருக்கேன். மனசும் நிம்மதி. நம்ம ராஜ்ஜியம் அது. யாரும் அத்து மீறி நுழைய முடியாது’.

’அது சரி ஜோசபின், ஆனா… உன் ..சைக்கிள் .. பங்க்சர் இன்னும் ஒட்டலியே.. இப்போ போட்டு வரட்டா..’ விசாலி தயக்கத்தோடு சொன்னாள்.

’பரவாயில்லே. நீ வாடா. என்னைக் கொண்டு விட்டுட்டுப் போ.’

ஜோசபின் கூட வர, நான் பெருமிதத்தோடு சைக்கிளை நோக்கி நகர்ந்தேன்.
(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன