அரிசிக் கடவுள்

 

‘கையிலே இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு ஏர்ப்போர்ட்டுக்கு ஓடு’.

விஷமமாகச் சிரித்தபடி நந்திதா நீட்டிய அறிவிப்பு அட்டையைப் படித்தான் சங்கரன் ராதாகிருஷ்ணன். ‘ரிச்சர்ட் டெமூரா ஃப்ரம் டெக்ஸஸ், யு.எஸ்.எ’

ரிச்சர்ட் என்ற பெயரை டிக் என்று செல்லமாகக் கூப்பிடுவது அமெரிக்க வழக்கம். சங்கரன் அறிவான். நந்திதாவுக்கு அதைக் கடந்தும் அந்தப் பெயரின் உபயோகம் தெரியும். அவள் வேலை நிலைக்கிற வரைக்கும் அவள் சிரிப்பு மிச்சம் இருக்கும்.

வேலை நிலைப்பது தான் கம்பெனியில் இப்போதைய தலைபோகிற செய்தி. எல்லாக் கம்ப்யூட்டர் கம்பெனியிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

‘சங்கரா, பார்த்துக்கோ. உன் பிராஜக்ட் அடுத்த மாதக் கடைசியிலே முடியும். இப்போ பிலிப்பைன்ஸ் ரெண்டு வாரம் போய்ட்டு வந்துட்டா, அடுத்த ப்ராஜக்ட் கிடைக்க 50-50 சான்ஸ். இல்லியோ நேரா பெஞ்ச் தான். சங்கப் பலகை’.காலையில் ஆபீசில் நுழைந்ததுமே ப்ராஜக்ட் மேனேஜர் ரவீந்திரன் கேபினுக்குக் கூப்பிட்டுச் சொன்னது சங்கரனுக்கு நினைவு வந்தது. ரவீந்திரன் சிரிக்கவில்லை. இந்த ப்ராஜக்ட் முடிந்தால் அவனுடைய எதிர்காலமும் கேள்விக்குறிதான்.

அடுத்த ப்ராஜக்ட் அதுவாக வந்து சேராது. ஒரு வருடம் முன்னால் வேறு கதை. உலகின் எந்த மூலையில் இருந்தாவது சாப்ட்வேர் உருவாக்கித்தர, பராமரிக்க ப்ராஜ்க்ட்களைக் கெல்லியெடுத்து சாக்கில் கொண்டு வந்து கொண்டினார்கள் மார்க்கெட்டிங் ராட்சசர்கள். உலகப் பண நெருக்கடியில் முதல் களப்பலி அவர்கள்தான்.

தொழில்நுட்ப ஊழியர்களுக்கு கொஞ்சம் மாறுபட்ட ட்ரீட்மெண்ட். கையில் இருக்கும் ப்ராஜக்ட் வேலை முடிந்தால் ‘பெஞ்ச்’ என்ற கவுரவப் பெயர் கொண்ட ‘சும்மா இருக்கும்’ உத்தியோகத்துக்கு தள்ளப்படுவார்கள். சம்பளமும் முப்பது பெர்சண்ட் கம்மியாகி விடும். இரண்டு மாசம் பெஞ்சில் இருக்கலாம். அதற்குள் ஏற்கனவே நடக்கிற ப்ராஜக்ட், அத்தி பூத்தாற்போல் புதிதாக வருகிற அல்பமான சின்ன ஆர்டர்கள் என்று முட்டி மோதி எதிலாவது சேர்ந்து விட்டால் அடுத்த ஆறு மாதம் தற்காலிக நிம்மதியாக வேலை நீடிப்பு. முழு சம்பளம். அப்புறம் இதே கதை.

எல்லா தேவதைகளும் போன வருடம் தொடக்கம் வரை ஆசீர்வாதம் செய்து வளர்த்திய கம்ப்யூட்டர் தொழிலை ஒரு காலை நேரத்தில் சகல பிசாசுகளும் சபித்து பெஞ்சில் உட்கார்த்தி விட்டன. ‘சங்கரா நீயும் வந்து உட்கார்’. அமெரிக்க உச்சரிப்பில் தேவதையோ பிசாசோ கூப்பிடுகிறது. சங்கப்பலகை நீண்டு கம்பெனி முழுக்க வியாபித்திருக்கும் கெட்ட நேரம் இது.

‘வெட்டியாத்தானே உட்கார்ந்திருக்கே. கோர் பேங்கிங் ப்ராஜக்ட் கஸ்டமர் டிக் வரானாம். நீ ஏர்போர்ட் போய் கூட்டி வந்துடு. ஆட்டோவிலே போயிடு. டிக்கைக் கூட்டிட்டு திரும்பும்போது சாதா கால் டாக்சி போதும்’- ரவீந்திரன் சொன்னான்.

இந்த மாதிரியான வேலைக்கெல்லாம் தழையத் தழையக் காஞ்சிவரம் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டு ஷாம்பு குளியல் எடுத்து தலையை நெகிழ வாரி முடித்த அழகான அப்சரஸ் பெண்கள் போன வருடம் வரை இருந்தார்கள். கஸ்டமர்களை ஏர்போட்டில் வரவேற்று வணக்கம் சொல்வார்கள் அவர்கள். பேசிச் சிரித்தபடி, அலுங்காமல் குலுங்காமல் ஏசி காரில் ஆபிசுக்குக் கூட்டி வருவார்கள். வாசலில் ரங்கோலிக்கு நடுவே ஏற்றி வைத்த குத்துவிளகை ஏற்றச் சொல்லி கல்யாணம் செய்து கொள்கிற மாதிரி ரோஜாப்பூ மாலையை கழுத்தில் அணிவிப்பார்கள். நெற்றியில் பெரிய பொட்டும் வைப்பார்கள். வந்த வெள்ளைக்காரன் புளகாங்கிதமடைந்து கழுத்தில் போட்ட மாலையைக் கழற்றாமலேயே சாயந்திரம் வரை பூ இதழை உதிர்த்தபடி உள்ளே சுற்றுவான்.

வாரம் நாலு தடவையாவது இப்படி நடக்கிற மாப்பிள்ளை அழைப்பு கோலாகலங்கள் கிட்டத்தட்ட முடிந்து போனபோது, நித்தியகல்யாணி அப்சரஸ்களும் அழுது சிவந்த கண்களோடு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். குத்து விளக்கு எம்.டி வீட்டில் இருப்பதாக சங்கரனுக்கு யாரோ சொன்னார்கள்.

அபூர்வமாக இன்று ஒரு கஸ்டமர் விசிட். வருகிற டிக்கை இதுவரை யாரும் இங்கே பார்த்தது கூடக் கிடையாது. டெலிகான்பரன்சிங்கில் குரலை மட்டும் கேட்டிருக்கலாம். கொழகொழவென்று வெண்டைக்காய் இங்கிலீஷ் பேசும் சராசரி அமெரிக்கன். பத்து கம்பெனிகளோடு உயிரைக் கொடுத்து போட்டியிட்டு அடிமாட்டு செய்கூலிக்குப் படிந்த டேட்டா மைக்ரேஷன் ப்ராஜக்ட். கம்பெனியும் தொழிலும் செயலாக இருந்த நாட்களில் இந்த மாதிரி அற்ப சமாசாரங்களை இடது கையால் கூடத் தொடமாட்டார்கள். சின்ன கம்பெனிகள் செயல்படும் உலகம் அது. அதெல்லாம் அடைத்துப் பூட்டியாக டிக் நேரே இங்கே வருகிறான்.

‘மொபைல் எடுத்துப் போ சங்கரா. டிக் ப்ளைட் வந்ததும் மிஸ்கால் கொடு. உள்ளே லைட் போட்டு சின்னதா பூச்செண்டு வாங்கி வைக்க நான் ஓடணும்’. ரிசப்ஷன் மேஜைக்குக் கீழே இருந்து ஒரு பச்சை பிளாஸ்டிக் குடத்தை எடுத்து மேஜை மேல் வைத்தபடி நந்திதா சொன்னாள். மிச்சம் இருக்கப்பட்ட ஒரே அப்சரஸ். குத்து விளக்கு ஏற்றி மாலை போட்ட இடத்தில் வெறும் பூச்செண்டு கொடுக்க இவளாவது இருக்காளே. எம்.பி.ஏ படித்து, வாசலில் காவல் காத்துக்கொண்டு.

நாலு செக்யூரட்டி சர்வீஸ் கிங்கரன்களும் கிங்கரிகளும் கம்பெனிக்குள் கடந்து வருகிற ஒவ்வொரு ஊழியரையும், மற்றவர்களையும் மெடல் டிடக்டரால் வருடி தீர செக் செய்து, கேமரா மொபைல் போன், லாப் டாப் சமாசாரங்களை பத்திரமாக பிடுங்கி வைத்து உள்ளே அனுப்புவது பழைய வாடிக்கை. செக்யூரிட்டிக்கு தண்டமாக ஃபீஸ் அழாமல் அதை நிறுத்தி, தற்போது ப்ளாஸ்டிக் குட சர்வீஸ். குடத்தில் நிறைத்த பிளாஸ்டிக் பந்தில் ஒன்றை வந்தவர்கள் கண்மூடி எடுக்க வேணும். சிவப்பு பந்து கிடைத்தால் நந்திதா வருடி உள்ளே அனுப்புவாள். சங்கரனுக்கு இதுவரை ஏனோ சிவப்பு பந்து கிடைக்க அதிர்ஷ்டம் இல்லை.

ஆட்டோவில் ஏர்போர்ட் போகும்போது சட்டைப்பையில் மொபைல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். நாற்பத்து நாலில் ஆரம்பிக்கும் லேண்ட் லைன் நம்பர். சும்மாவே இருந்துவிடலாமா? சட்டென்று ஞாபகம் வந்தது. கோமதி?

மனைவி. அவளும் கம்ப்யூட்டர் இஞ்சினியர் தான். போன மாதம் தான் வேலை போனது. வீட்டில் சும்மா இருக்கும்போது மொபைல் போன் செலவு என்னத்துக்கு என்று நிறுத்தியாகி விட்டது. செலவு மிச்சம் பிடிக்க கீழ் வீட்டில் போய் ஏதாவது ஆத்திரம் அவசரம் என்றால் அவர்கள் லேண்ட் லைனை உபயோகிக்கிற ஏற்பாடு. இது அந்த நம்பரும் இல்லை. எதுக்கும் எடுத்துப் பார்த்து விடலாம்.

கோமதியே தான். ஆட்டோ இரைச்சலுக்கு இடையே தேசலாக அவள் குரல். பொதுத் தொலைபேசியில் இருந்து கூப்பிடுகிறாள்.

‘அப்பா வந்திருக்கார். புவனா கல்யாணம் அடுத்த மாசம் வச்சிருக்காம். நாம ரெண்டு பேரும் மாசம் புறந்ததுமே புறப்பட்டு வந்து எல்லாம் கவனிச்சுக்கணும்னு’.

‘நான் அடுத்த மாசம் பிலிப்பைன்ஸ் போறேன்’ அவளை இடைமறித்து சங்கரன் கத்தினான். ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்த்துவிட்டு வண்டியை ஒடித்தான். ‘அப்புறம் வேலை போயிடும். அப்போ கையிலே காசு இருந்தா சாவகாசமா உன் தங்கை கல்யாணத்துக்கு ஊருக்குப் போகலாம்’. ஜாக்கிரதையான ஆங்கிலத்தில் சொன்னபடி மொபைலை அணைத்து பாக்கெட்டில் திரும்ப வைத்தான் சங்கரன்.

‘நியூயார்க் விமானம் பதினைந்து நிமிடம் தாமதமாக வந்து சேரும்’. ஏர்போர்ட்டில் நுழைந்ததுமே ஒளி, ஒலி ரூபத்தில் அறிவிப்பு கிடைத்தது. அடித்துப் பிடித்து ஆட்டோவில் வராமல் பஸ் பிடித்தே வந்திருக்கலாம். ஆட்டோவுக்கு செலவான அறுபது ரூபாயை கம்பெனியிடம் வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

கம்பெனியும் அங்கே வேலை பார்க்கும் அவனும் மற்றவர்களும் அஷ்ட தரித்ரமாக சகலமானதற்கும் பைசா பைசாவாகப் பார்த்து செலவு செய்ய ஆரம்பித்தது போன வருடம் முதல். அமெரிக்காவில் வீடு கட்டக் கடன் கொடுக்கிற வங்கித் தொழில் ஏடாகூடமாகிப் போனதற்கு அப்புறம். அங்கே ஆரம்பித்த சனிதசை உலகத்தில் ஒரு நாட்டையும் மிச்சம் வைக்காமல் பிடித்து ஆட்டுகிறது. சங்கரன் ஆபீசில் இலவச காப்பி டீயும், கழிப்பறையில் துடைத்துப் போட வைக்கும் காகிதச் சுருளும் காணமல் போனதற்கு ‘சாம் மாமா’ என்ற பட்டப்பெயர் கொண்ட அமெரிக்கா தான் காரணம். டிக் அங்கே இருந்துதான் வந்து கொண்டிருக்கிறான்.

பசிக்க ஆரம்பித்தது. எல்லா ஏர்போர்ட் கடைகளிலுமே வெளியே வாங்குவதை விட ரெட்டை விலை. முன்னால் எத்தனையோ தடவை வெளிநாடு போகவும், யாரையாவது வரவேற்கவும் கம்பெனியின் சொகுசு காரில் வந்து இறங்கும்போது அது கவனத்தில் பட்டதே இல்லை. கையில் தாராளமாக இருந்த காசு புழக்கத்தை சாம் மாமாவின் கடன் மோசடிக் களவாணிகள் தட்டிப் பறித்து விட்டார்கள்.

ஏர்போர்ட்டை ஒரு சுற்று சுற்றி ஓரமாக இலவச குடிநீர் ரெண்டு டம்ளர் பிடித்து குடித்தான் சங்கரன். வயிறு நிறைந்த பிரமை. அப்படியே விமான வருகை திரையைப் பார்த்தபடி வரிசை நாற்காலிகளின் கடைசியில் உட்கார்ந்தபோது திரும்ப சட்டைப்பையில் மொபைல் ஒலி. கோமதிதான். இது கீழ்வீட்டு நம்பர்.

‘இப்போ என்ன பிலிப்பைன்ஸ்லே? வேறே கம்பெனி உத்யோகமா? நானும் வரலாமா?’ அவள் ஆர்வமாகக் கேட்டாள். வேறே நாட்டில் போனாலாவது தனக்கும் திரும்ப வேலை கிடைக்குமோ என்ற நப்பாசை குரலில் தெரிந்தது. ரெண்டு பேர் சம்பாதித்து, செலவு செய்து, ஞாயிற்றிக்கிழமை ஓட்டலில் சாப்பிட்டு, சேமித்து, வீடு கட்டி, கார் வாங்க முடிவு செய்து..எல்லாமே தொடர வேண்டியவை. எப்போது?

‘வேறே கம்பெனி இல்லேம்மா. எங்க ப்ராஜக்டை பிலிப்பைன்ஸ் கம்பெனி இன்னும் குறைஞ்ச செலவிலே முடிச்சுத் தரதா சொல்லி எடுத்துக்கிட்டாங்க. அங்கே போய் அவங்களுக்கு நாலெட்ஜ் டிரான்ஸ்பர் ரெண்டு வாரம் நடத்தணும். எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துட்டு வந்ததும் எனக்கும் சீட்டு இங்கே கிழிஞ்சிடும். மோட்டார் சைக்கிளை இப்பவே வித்துடலாமான்னு பார்க்கறேன். பெட்ரோல் செலவு மிச்சம். வேறே என்ன செலவை சுருக்கலாம்?’

‘ஏங்க ரொம்ப சோர்வா இருக்கீங்களா? ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் சாவகாசமா எல்லாம் பேசிக்கலாம். ராத்திரி சப்பாத்தி பண்ணி வைக்கறேன்’.

‘நோ ஆயில். விலை ஜாஸ்தி. தொட்டுக்க ரோஸ்ட் வேணாம். சும்மா வேக வைச்ச கிழங்கு போதும்’. போன மாதம் வரை சங்கரனுக்கு மளிகை விலைவாசி தெரியாது.

‘நியூயார்க் விமானம் வந்து விட்டது’. அறிவிப்பு திரையில் எழுத்துக்களாக ஓட, சங்கரன் பரபரப்பாக எழுந்தான். பெயர் எழுதிய அட்டையை உயர்த்திப் பிடித்தபடி திட்டி வாசலுக்கு முன்னால் நின்ற கூட்டத்தில் கலந்தான். முன்வரிசைக்கு முண்டியடித்துப் போய் இடத்தைப் பிடித்து சுற்றிலும் பார்க்க, திருவானைக்காவல் ஆண்டாள் என்று எழுதிய அட்டை கவனத்தைக் கவர்ந்தது. அமெரிக்க ரிட்டர்ன் ஆண்டாளுக்கு என்ன வயசு இருக்கும்?

கஸ்டம்ஸ் பரிசோதனை முடிந்து ட்ராலிகளையும் சூட்கேஸ்களையும் உருட்டியபடி ஒவ்வொருத்தராக வெளியே வர, சங்கரன் கவனமாகத் தேடினான். நிராகரிக்கப்பட வேண்டிய இந்தியக் முகங்கள். நாலு ஜப்பானியர்கள். கொரிய நாட்டுக்காரரா கம்போடியா, வியத்னாம் காரரா என்று சட்டென்று முடிவு செய்ய முடியாத கண் இடுங்கிய வயோதிகர் ஒருத்தர், பின்னால் ஜீன்ஸும் மொட்டைத் தலையுமாக ஒரு வெள்ளைக்காரர். ரிக் டெமூராவாக இருக்குமோ? மொட்டையன் மொபைல் போனில் உற்சாகமாகப் பேசியபடி வெளியே வந்து கொண்டிருந்தான்.

அவன் கண்ணில் படும்படி நாலைந்து பேர் அட்டைகளை உயர்த்த சங்கரனும் முன்னால் குனிந்தான். கூட்டமாக யாசகம் கேட்கிற மாதிரி இருந்தது அவனுக்கு.

மொட்டையன் ரிக் டெமோராவோ, மைக் பிஷரோ, ஆலன் கார்ட்டரோ, ராபர்ட் மெக்வ்யெனோ அங்கே இருந்த மற்ற அட்டைப் பெயர் வெள்ளைக்காரனோ இல்லை. ‘திமித்ரி சசாங்கோவ்’ அவனே கத்தினான். ரஷ்யன். யாரோ ஓடி வந்து மன்னிப்பு கேட்டு அழைத்துப் போனார்கள். அவனுக்குப் பின்னால் சேர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டு வருகிற வேறு ஏழெட்டு வெள்ளைக்காரர்கள். ஒவ்வொருத்தராக வாசலில் ஒரு வினாடி தயங்கி நின்று பெயர் எழுதிய அட்டைகளை நோட்டம் விட்டு பத்திரமாக சேருமிடம் சேர்ந்து விட்டார்கள். சங்கரன் மட்டும் அட்டையோடு இன்னும் நிற்கிறான். வந்த விருந்தாளி எங்கே தொலைந்தான்?

தொற்று நோய்ப் பிரதேசத்தில் காலடி வைக்கிறதுபோல், முகத்தில் முக்கால்வாசி துணி மூடிய வெள்ளைக்காரியை அணைத்துப் பிடித்துக் கூட்டி வருகிறவனா? இவனுக்கு அப்புறம் வேறே யாரும் பயணிகள் இருக்கிற மாதிரி தெரியவில்லையே.

அவன் பக்கத்தில் வந்தபோது சங்கரன் குனிந்து ‘டிக்?’ என்று விசாரித்தான்.

‘இருக்கு. தாங்க்ஸ்’. வெள்ளைக்காரன் வெடிச்சிரிப்போடு நகர்ந்தபோது அவன் சிநேகிதியிடம் சொல்லிக் கொண்டு போனது சங்கரனுக்குக் கேட்டது. ‘இங்கே கிட்னி தான் விற்பாங்கன்னு தெரியும். மற்றதுமா? ஷ்யூர் யு வில் எஞ்ஜாய் தி ஓரியண்டல் டீப் டச்’. வெள்ளைக்காரி முகமூடியை வழித்துவிட்டுச் சிரித்தாள்.

எதுக்கென்று இனம் புரியாத ஆத்திரத்தோடு கையிலிருந்த அட்டையை அவன் போன திசையில் சங்கரன் எறிய, யாரோ வந்து தோளைத் தொட்டார்கள்.

‘மேட், உன் அட்டையிலே என்ன பெயர் எழுதி வச்சிருக்கே?’ குரலை மட்டும் காதில் வாங்கிக் கொண்டு முன்னால் நடக்கும் வெள்ளைக்காரனையே முறைத்தபடி ‘ரிக் டெமேரா’ என்றான் சங்கரன்.

‘நான் தான் அந்த கேடுகெட்ட ரிக். தி சில்லி டிக்’.

நிமிர்ந்து பார்த்தான் சங்கரன். சராசரியான ஐந்தரை அடி உயரத்தில் டீஷர்டும் ட்வீட் பேண்டுமாக படு காஷுவலாக ஒரு கறுப்பன். கறுப்பர்.

‘சாரி சார். நான்.. நான்.. ரிக் டெமோராங்கிறது’.

‘சாம் மாமா தேசம்னா முழுக்க வெள்ளையன். அப்படித்தானே? நாங்களும் உண்டு. அட்டைக் கருப்பு ஆசாமிகள். மறந்துடாதீங்கப்பா. கருப்பனுக்கு கருப்பன் சகா.

ரிக் என்ற டிக் சிநேகிதமாகச் சிரித்தபடி சொன்னான்.

மனசார அன்போடு அவன் கையைக் குலுக்கி, டாக்சியை கூப்பிட்டு நிறுத்தினான் சங்கரன். ஏசி டாக்சி. ப்ராஜக்ட் மேனேஜரிடம் சொல்லி பில் கட்டி விடலாம்.

டிக் படு சந்தோஷமாக, குழந்தை போல் கார் ஜன்னலுக்கு வெளியே விரியும் சென்னையை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு வந்தான்.

மொபைல் போன் சத்தம். டிக் வைத்திருந்ததுதான்.

‘சாரி, ஹோப் யூ டோண்ட் மைண்ட்.’. சங்கரனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவன் கொஞ்சம் உரக்கப் பேச ஆரம்பித்தான். ‘தவழ்ந்து போய் மைக்ரோ ஓவனில் காபி சூடு படுத்து. உள்ளாடையை கழட்டு. கதவை திறந்து வைத்துக் கொண்டு பாத்ரூம் போ. படுக்கைக்குப் பக்கமாக வந்து அப்படியே குப்புற உருண்டு படு. ரிமோட்டை இயக்கி வாசல் கதவை பத்திரமாக அடைத்துப் பூட்டு. டான்ஸ் ஆடற கடவுள் சிலையா? மலிவாக் கெடச்சா வாங்கிட்டு வரேன். தூங்கு. குட்நைட்’.

சின்னக் குழந்தை போல் ஊரில் யாருக்கோ என்ன செய்யணும் என்று சொல்லிக் கொடுக்கிறான். பாத்ரூம் போக ஜட்டியைக் கழற்றுவது முதற்கொண்டா பாடம்?

பணக்கார அமெரிக்கன். கறுப்பனோ வெள்ளைக்காரனோ, பணம் இருந்தால் சுபிட்சத்துக்கு எந்தக் குறைவும் இல்லை. கண்டம் கடந்து டெலிபோனில் வெட்டி அரட்டை அடித்து காசைக் கரியாக்கவும் அது தேவை. ரிக் டெமோராவின் கம்பெனி எல்லாச் செலவையும் ரசீது தேவைப்படாமல் உடனே கொடுத்து விடும்.

‘என் மனைவி. ஒரு விபத்தில் ரெண்டு காலும் இழந்து சக்கர நாற்காலியில் கிடக்கா. அவளை தினசரி நான் தான் சுமந்து கொண்டு போய்ப் படுக்கையில் விட்டுத் தூங்க வைப்பேன். இப்போ தனியா இருக்கறதால் இன்ஸ்ட்ரக்ஷன் டைம்’.

டிக் திரும்ப வெடிச்சிரிப்பு சிரிக்க, சங்கரன் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

‘ஐ யாம் சாரி டு ஹியர் தட். பாவம் அவங்களை ஏன் தனியா விட்டுட்டு இங்கே வந்தீங்க? வேறே யாரும் கம்பெனியில் இல்லையா?’

கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் சங்கரன். அமெரிக்கர்கள் பெர்சனல் கேள்விகளை விரும்ப மாட்டார்கள். அவர்களாகவே தகவல் சொன்னாலும் மேலே தூண்டித் துருவக் கூடாது. கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை செய்ய நுழைந்ததுமே கற்றுத்தரும் பாலபாடம் இது.

‘சாரி அகெய்ன்.’ அவன் மன்னிப்பு கேட்க டிக் கையமர்த்தினான்.

‘வேண்டாம்னு தான் பார்த்தேன். ஆனா, வேலையை விட்டுத் துரத்தற முந்தி வெளிநாடு, அதுவும் இந்தியா. விட மனசு வரல்லே’.

என்ன, இவனுக்கும் வேலை போகுமா? சங்கரன் பதில் பேசாமல் பார்த்தான்.

‘ஆமா, உங்க கம்பெனியில் நாலைஞ்சு பேருக்கு நான் செய்யற வேலையைச் சொல்லிக் கொடுத்துட்டுக் கிளம்ப வேண்டியதுதான். என் சம்பளத்தை விட குறைஞ்ச காசுக்கு நீங்க செய்வீங்க. உங்களை விட வேறே யாராவது கம்மி ரேட்டிலே வேலை செய்யறேன்னு வந்தா உங்க கிட்டே பிடுங்கி அவங்க கிட்டே கொடுக்கப்படும். அப்புறம் அவனை விட சீப் ரேட்டிலே இன்னொரு இடம்..’.

கையால் அலை அலையாகப் பரத்திக் கொண்டு திரும்பச் சிரித்தான் டிக். அவனுக்கு கோபமோ சோகமோ கொஞ்சம் கூட முகத்திலோ குரலிலோ இல்லை.

‘வேலை போனா, குடும்பத்தை நடத்தறது.. அதுவும் நோயாளியா ஒய்ப்?’. பெர்சனல் கேள்விதான். ஆனால் சங்கரனுக்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

டிக் தன் தலைமுடியைத் தொட்டான். ‘மயிரே போச்சு. எனக்கு தச்சு வேலை தெரியும். போதாதா என்ன? நானே இழைச்சு நாற்காலியும் சோபாவும் செய்து ஒரு தச்சுப் பட்டறை திறக்கறதா இருக்கேன். கூடவே பெஞ்ச் செய்து சாப்ட்வேர் கம்பெனிகளுக்குத் தரலாம். வேலை இல்லேன்னு பாதி சம்பளத்திலே உட்கார வைக்க சவுகரியமா இருக்கும். உங்க கம்பெனியிலே பெஞ்ச் உண்டுதானே?’

டிக் சிரிப்புக்கு இடையே சொல்ல, சும்மா சிரித்து வைத்தான் சங்கரன்.

டிக் அவன் மொபைல் போனை சங்கரனுக்குக் காட்டினான். டிஜிட்டல் புகைப்படங்கள் வரிசையாக நகர்ந்து போய்க் கொண்டிருந்தன அதில்.

‘இது சிரிக்கும் புத்தர். நான் தைவான் போனபோது வாங்கினது. முந்தின கம்பெனியில் வேலையை விடறதுக்கு முந்தி தைவான் போய் கிளாஸ் எடுத்துட்டு புத்தரோடு வந்தேன். இது வெள்ளை யானை. தாய்லாந்தில் இன்னொரு கம்பெனிக்கு அவுட்சோர்ஸ் பண்ண போனபோது வாங்கினது. இது அரிசிக் கடவுள். பிலிப்பைன்ஸ் கம்பெனிக்கு தொழில் சொல்லிக் கொடுக்கப் போனபோது வாங்கி வந்தது இந்த ரைஸ் காட். இதெல்லாமே அதிர்ஷ்டம் தருமாம். அதிர்ஷ்டம் அடிச்சு அடிச்சு மொத்தம் பனிரெண்டு கம்பெனி மாறிட்டேன். இனிமேலும் கம்ப்யூட்டர் தொழில்லே குப்பை கொட்ட முடியும்னு தோணலை. அதான் இழைப்புளியை எடுத்துடப் போறேன். இங்கே கிடைச்சா ஒண்ணு வாங்கிட்டு போகணும். ஆடற கடவுள் வேணாம். இழைப்புளி போதும். என்ன சொல்றே?’

சங்கரன் ‘நிச்சயமாக’ என்ற போது மனதில் இனம் புரியாத நம்பிக்கை. அவனுக்கு தச்சுவேலை தெரியாது. வேறு எதுவும் கூட. ஸோ வாட்? மோதிப் பார்ப்பான். அடுத்த ப்ராஜக்ட் கிடைக்கலாம். இல்லை பெட்டிக்கடை நடத்தலாம்.

சங்கரனின் மொபைல் அடித்தது.

‘பிலிப்பைன்ஸ்லே தங்கமா? அரிசிக் கடவுள் வாங்கி வரேன். சுபிட்சம் தருமாம்’.

ஆபீஸ் வந்து விட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன