புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 49 இரா.முருகன்


கேரளம் திலீப் நினைத்தது போல் இல்லை.

பம்பாய் மாடுங்கா சங்கர மட வைதீகர்களும், ஓணத்துக்கு வாழைக் குலை வாங்க குடும்பத்தோடு கும்பலில் புகுந்து நடக்கும் செண்ட்ரல் ரயில்வே டிவிஷன் கிளார்க் நாயர்களும், ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதம் இருமுடி கட்டி விட செண்டை மேளத்தோடு வந்து சேரும் மாரார்களுமாக அவன் மனதில் எழுப்பியிருந்த உலகம் வேறு விதமாக இருந்தது.

அந்த நிலப் பிரதேசத்தில் விடிய ரெண்டு மணி நேரம் முன்னால் நம்பூதிரிகள் ஆறு, குளம் என்று பார்த்து முழுக்குப் போட்டு விட்டு முன்குடுமி முடிவார்கள். வாசல் திண்ணைகளிலும் கோயில் பிரகாரங்களிலும் உட்கார்ந்து இடைவிடாமல் மயேமயே என்று எல்லா வேதமும் நீட்டி முழக்கி ஓதுவார்கள். அகண்ட ஜபமாகக் கூடி உட்காந்து ஜபித்துக் கொண்டிருப்பார்கள்.

வெள்ளைப் புடவையும் சந்தனப் பொட்டுமாக, லட்சணமான் ஸ்தூல சரீர சுந்தரிகள் கால்களை அகட்டி வைத்து ஆடுவார்கள். கை கோர்த்து வட்ட வட்டமாக சுற்றி வந்து பாடுவார்கள். சதா கும்மியடித்துக் கொண்டிருப்பார்கள்.

உச்ச ஸ்தாயியில் செண்டையும் பெரிய சைஸ் தாளங்களுமாக பெருஞ் சத்தமாக வாசித்துக் கொண்டு மாரார் வகை ஆசாமிகள் சுற்றிச் சுற்றி வருவார்கள. அவர்களோடு, பட்டப்பகல் என்றாலும் கோல் விளக்கு ஏற்றிப் பிடித்துக் கொண்டு கோவில் ஊழியர்கள் அவசரமாக நட்நது போவார்கள்.

இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எல்லாரும் சட்டம் போட்டுக் கட்டாயமாக்கியது போல் தாடி வளர்த்து, சதா கண்ணில் அப்பிய சோகத்தோடு அலைவார்கள். மேலே லேசாகத் தொட்டால் ராக்கிளிகளும் படகுத் துறையில் தனித்து நிற்கும் பெண்களும் யாத்ரிகர்களும் கடந்து வரும் கீதங்களை ஊர் முழுக்க ஒலிக்கும் ஒரே குரலில் பாடத் தொடங்குவார்கள்.

பலாப்பழமும், நேந்திரம்பழ வறுவலும், தேங்காய் துருவியதுமாக எல்லாப் பொழுதும் சாப்பிடக் கிடைக்கிற நிலம் அது. பிரகாரத்தில் வரிசையாக இலை போட்டு கோயில்களுக்கு வருகிறவர்களைக் கட்டாயப்படுத்தி சாப்பிடச் சொல்வார்கள். சோற்றை அள்ளி வீசி, மடி ஆசாரத்தோடு பரிமாறுவார்கள்
நடந்தது என்னமோ இதுதான்.

திலீப் உட்கார்ந்திருக்கும் பழைய கட்டடத்தின் முன்னறையில் குடிக்கத் தண்ணீர் பிடித்து வைத்த வயசன் திலீபைப் பார்த்துச் சொல்லிச் சிரிக்கிறான்.

சுவரில் சாய்ந்து நிற்கிற வயசன் அவன். ஆப்பீசு திறக்கறீங்க எடுபிடி காரியம் செய்ய ஆள்கார் வேணாமா என்று கேட்டு முதலில் படி ஏறி வந்தவன் அவன்.

இருந்துட்டுப் போகட்டும்., காப்பி வாங்கிண்டு வரவும் த்ண்ணி பிடிச்சு வைக்கவும் வேண்டி இருக்கு.

பிஸ்கட் சாஸ்திரி நியமித்த முதல் ஊழியன் அவன். வய்சு எழுபதுக்கு மேல் என்றாலும் நூறு ரூபாய் மாத சம்பளத்துக்கு மலிவாகக் கிட்டிய ஊழியம் இது என்பதை இங்கிலீஷில் குழுக்குறியாக எடுத்துச் சொல்லி திலீபின் சிரிப்பை யாசித்தார் சாஸ்திரி.

நீங்க சொன்னா அதுதான் சட்டம் என்று மினிஸ்டர் பெண்டாட்டி சியாமளா பெரியம்மா சாஸ்திரியை சிம்மாசனத்தில் வைத்தாள் அப்போது.

வந்தது முதற்கொண்டு சதா பேசியபடி இருக்கிறான் வயசன். இந்த வயசில் அவனுக்கு ஒருத்தர் வேலை போட்டுக் கொடுத்த பூரிப்போ சந்தோஷமோ வார்த்தையாய் வந்து விழுந்த மணியமாக இருக்கிறது.

எப்போதோ கண்ணூர் போன கதையை வயசன் திலீபுக்கு இது வரை ரெண்டு முறை சொல்லி விட்டான். அவன் சின்ன வயதில் பொண்ணு தோற்றுப் போகிற வனப்பில் இருப்பானாம். கையும் காலும் முகமும் வழுவழுவென்று மினுங்கிய பையன். கண்ணூர் ஓட்டலில் ராத்தங்கிய போது பரிசாரகன் கடித்து விட்டானாம். அது எங்கே என்று அவன் விஸ்தாரமாகச் சொல்ல, திலீபுக்கு அன்னத் திரேஷமாக இருந்தது. வடுப்பட்டு விட்டதாம், அவன் உடம்பே அவனுக்கு வித்தியாசமாகிப் போனதாம். திலீப் ந்ம்பவில்லை என்றால், அதுக்கென்ன, அவிழ்த்துக் காட்டவும் தயாராக இருந்தான் வயசன்..

அகல்யா, வயசன்மாரோட ப்ரத்யேக சமாசாரங்களைப் பார்வையிடவா நான் கேரளத்துக்கு வந்தேன்?

இங்கே இல்லாத அகல்யாவிடம் புலம்ப, திலீபுக்கு பசி மூண்டெழுந்து வ்ந்தது.

முந்தாநாள் ஆலப்புழையில் பஸ் ஏறுகிற வரை திலீபுக்கும் மற்றவர்களுக்கும் கேரளம் தெய்வங்களின் சொந்த நாடாகவே இருந்தது. மலையாளக் கரை பற்றிய் மாதுங்கா மதிப்பீடுகளை அவற்றின் உச்சபட்ச மேன்மையான கற்பிதங்களோடு நம்பத் தயாராக வந்திருந்தார்கள் சியாமளா பெரியம்மாவும் சாஸ்திரி தம்பதிகளும்.

அவர்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் பூமி கதகளியும், சோபான சங்கீதமும், மயில் தோகையை இடுப்பில் செருகிக் கொண்டு ஆண்பிள்ளைகள் ராத்திரி முழுக்க ஆடும் அர்ஜுன நிருத்தமுமாக இருந்தது.

முக்கியமாக அர்ஜுன நிருத்தம். அதைத் தேடித்தான் மினிஸ்டர் மனைவியான சியாமளா பெரியம்மா இங்கே வந்தது.

பரத நாட்டியமும் கூடியாட்டமும் ஒடிசியும் கதக்கும் அர்ஜுன நிருத்ததில் இருந்து அபிநயங்களைக் கடன் வாங்கியவை என்று பெரியம்மாவின் ஆய்வுக் கட்டுரை சொல்லப் போகிறது. எல்லா நடனமும் யுத்தத்தோடு தொடர்புடையவை என்றும் அது பேசும்.

களரியில் இருந்து அர்ஜுன நிருத்தம், அங்கே இருந்து பரதம் என்று போர் எல்லோரையும் எல்லாவற்றையும் எல்லாக் காலங்களிலும் கவ்விச் சூழ்கிறது என்று பிஸ்கட் சாஸ்திரி வழிகாட்டலில் பெரியம்மா செய்கிற ஆராய்ச்சியால் அர்ஜுன நிருத்தம் மேம்படுமோ என்னமோ அவளுக்கு டாக்டரேட் கட்டாயம் அடுத்த வருஷம் இந்த நாளில் கிட்டும்.

ஆராய்ச்சிக் கட்டுரையைப் பெரியம்மா நின்றும் இருந்தும் நகர்ந்தும் வாய்விட்டு டிக்டேட் செய்யச் செய்ய அதைக் கவனமாக எழுதி டைப் அடித்துத் திருத்தித் திருத்தி, திலீபுக்கும் அர்ஜுன நிருத்தம் பற்றித் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. சாஸ்திரி தம்பதிகளில் அம்மையாருக்குத் தெரிந்ததை விட அது பத்து மடங்கு அதிகம்; சாஸ்திரியை விடவும் தான்.

இன்னும் சிரத்தையாக இதுவே வாழ்க்கை என்று திலீப் உட்கார்ந்தால், சியாமளா பெரியம்மாவுக்கும் சாஸ்திரிக்கும் அவன் அர்ஜுன் நிருத்தமும், களரியின் போர்க் கலாசார அடவுகளும் பற்றிப் பாடம் எடுப்பான்.

இந்த பிஸ்கட் கோஷ்டிக்கு எதற்காக செய்யணும்? வவுச்சரில் ரெவின்யூ ஸ்டம்ப் ஒட்டி கையெழுத்துப் போடச் சொல்லி நூற்று முப்பது ரூபாய் மூக்கால் அழும் கும்பல் இது… அவர்களின் ரெவின்யூ ஸ்டாம்ப்களை அவர்களே அவர்களின் பின்னஞ் சந்தில் இறுக்க ஒட்டிக் கொள்ளட்டும். திலீப் வெள்ளைக்காரனுக்கு லண்டனில் பாடம் எடுப்பான். அகல்யாவைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த வெள்ளைக்காரப் பட்டணத்திலோ வேறே எங்கேயோ குடிபெயர்ந்து விடுவான்.

பெரியம்மாவும் பிஸ்கட்களும் இன்றி இப்படி ஒரு குமாஸ்தா உத்தியோகமும் இதுவரை பார்த்தே இருக்காத ஆலப்புழை, அம்பலப்புழைக்குப் பயணமும் கிடைத்திருக்குமா? அகல்யா மனசில் விசாரிக்க, அதானே என்றான் திலீப்.

ஃபீல்ட் ஸ்டடி, சந்திப்பு, பாட்டு ஒலிப்பதிவு, கோவில் கோவிலாகப் போவது, அசாதரணமாக மயில் இறகிலிருந்து உடுப்பு சேர்த்துத் தருகிற தையல்காரர்களின் தொழில் ரகசியம் அறிவது என்று வேலை எல்லாம் ஒரு இடத்தில் இருந்து பார்க்க இடம் தேவைப்பட்டது. பெரியப்பா தில்லியில் இருந்து டெலிபோன் செய்து இங்கே யாரோ மந்திரி உதவி செய்ய இந்தப் பழைய கட்டிடம் கிடைத்தது. கல்யாண சமையல்காரர்களின் வீடாக இருந்து கிறிஸ்துவ இல்லமாகி அதுவும் கழிந்து சர்க்கார் ஆபீசாக இருபது வருஷம் இருந்து பூட்டி வைத்திருந்த ஒண்ணாம் தரம் கல்லுக் கட்டிடம்.

பெரியம்மாவோ சாஸ்திரி தமபதிகளில் ஒருத்தரோ வந்தாலே ஒழிய இந்த இடத்தை விட்டு இப்போது வெளியே போக முடியாது. ஏகப்பட்ட வேலை ஒரே நேரத்தில் ஆரம்பித்திருக்கிறது இங்கே. டைப்ரைட்டர், வெள்ளைக் காகிதம், டேப் ரிக்கார்டர், ஒலிப்பதிவு நாடா என்று எங்கும் நிரம்பி வழிகிறது.

வரலாமா? கேட்டபடி யாரோ படி ஏறி உள்ளே வந்தார்கள். நேற்று பகலில் இருந்து திலீப் இப்படி உள்ளே கடந்து வருகிறவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

தூக்கத்துக்கு ஆள் எடுக்கற ஏஜென்சி தானே?

வந்தவன் கேட்க, மர ஸ்டூலில் உட்கார்ந்திருந்த வயசன் சிரிக்க ஆரம்பித்தான். திலீபுக்கும் சிரிப்பு வந்தது. வந்தவர்கள் இப்படித்தான் விசாரிக்கிறார்கள். பத்திரிகையில் விளம்பரம் பார்த்து விட்டு வருகிறவர்கள்.

அர்ஜுன நிருத்தம் ஆடக்கூடிய கலைஞர்கள் தேவை. இதுதான் மலையாளப் பத்திரிகைகளில் சிறு வரி விளம்பரமாக வெளிவரக் கொடுத்திருந்தது. இன்னும் நான்கு நாள் தொடர்ந்து வெளியாகும். பத்திரிகைப் பிரதிகள் இங்கே அனுப்பப் படுகின்றன.

அர்ஜுனன் களிக்கு தான் ஆள்கார் வேணும்னு கேட்டது. தூங்கி மரிக்க இல்லே கேட்டோ சாமு மாஸ்டரே.

வந்தவன் இருந்தவன் தோளில் கையில் சுருட்டிப் பிடித்திருந்த தினசரிப் பத்திரிகையால் அடித்தான். அவன் தோளில் ஒரு குடை ஆடியபடி இருந்தது.

காசு கொடுத்தா துங்கி மரிக்கவும் செய்யலாம்.

வந்தவன் விட்டத்தைப் பார்க்க, திலீப் உட்காரச் சொன்னான்.

ஆடணுமா அதோ பாடணுமோ?

அவன் விசாரிக்க, நல்லா சாயா உண்டாக்குவாராக்கும் சாமு மாஸ்டர் என்று நேரங்கெட்ட நேரத்தில் அவனுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தான் வயசன்.

இந்த வெடிக்காரனை என்னத்துக்கு கூட்டு சேர்த்திருக்கீங்க? வெளிநாட்டில் இருந்து யாராவது வந்தா சாமு எங்கேன்னு தான் கேட்பாங்க. வைத்தாஸ் கேட்டிருக்கீங்களா? ஆப்பிரிக்க நாட்டு பிரதமரோ யாரோ.. இங்கே வந்து பரிசல் விட்டு இறங்கினதும் சாமு எங்கேன்னு தான் தேடுவார். நோட்டபுள்ளி.

அது என்ன வெடிக்காரன்? வயிறு சரியில்லாத மனுஷரா நீங்க?

திலீப் வயசனை விசாரிக்க, குடையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு விவரித்தான் சாமு..

மூன்று தலைமுறையாக வயசன் குடும்பம் அம்பல வெடிவழிபாட்டு சேவை நடத்திக் கொண்டிருப்பது. அம்பலம் தொழ வந்து காசு கொடுக்கிறவர்களுக்காக கந்தகத்தில் உருட்டிய வெடி வெடித்து கடவுள் காதில் கேட்க வைக்கிற காரியம் அது.

இந்த வயசனின் மூத்தச்சன் மேல் நக்னனான ஒரு வயோதிகன் பறந்து வந்து விழுந்து வெடித்த வெடியால் மூத்தச்சன் கால் விரல் போனது தொடங்கி சாங்கோபாங்கமாக எடுத்துச் சொன்னான் சாமு. ஊரிலே வௌவால் கூட்டமாக வந்ததும், வயசனின் கண்ணூர்ப் பயணமும், குறி கடியுண்டதும் அதே ஆர்வத்தோடு சொல்லப்பட, மெய்க்கீர்த்தி பாடிக் கேட்ட அரசன் மாதிரி மகிழ்ந்து பொக்கைவாய்ச் சிரிப்போடு உட்கார்ந்திருந்தான் வயசன்.

ஒரே தூசி துப்பட்டையா இருக்கே. பெருக்கலியா திலீப்?

சாஸ்திரி மாமி நாலு தடவை அடுக்கு தீபாரதனை மாதிரி தும்மல் போட்டு புகார்ப் படலத்தைத் தொடங்கி வைத்தபடி உள்ளே வந்தாள்.

ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கு. வந்துடுவாங்க. ஜாடு வாங்கி ரெடியா வச்சாச்சு

திலீப் கவர்மெண்ட் உத்தியோகஸ்தன் மாதிரி சொன்னது சாஸ்திரி மாமிக்குப் பிடிக்கவில்லையோ அல்லது தன்னை வேலைக்கு அஞ்ச மாட்டாள் என்று காட்டிக் கொள்ளவோ அவள் நேரே அறைக் கோடிக்குப் போய் அங்கே சார்த்தியிருந்த துடைப்பம் கொண்டு சரசரவென்று பெருக்க ஆரம்பித்தாள்.

திலீப் பதறி அவள் கையில் இருந்து சூலத்தைப் பிடுங்கி விதிர்விதிர்த்து இனிமேல் இப்படி ஆகாமல் கவனித்துக் கொள்வேன் என்று வாக்குத்தத்தம் செய்து, அவனே பெருக்க ஆரம்பிப்பான் என்று எதிர்பார்த்தாள் போலும்.

எழவெடுத்தவன் உலக்கையை முழுங்கிச் சுக்குக் கஷாயம் சாப்பிட்டவனாக உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தான். அது மட்டுமில்லாமல் அவள் பெருக்க வாகாகக் காலைத் தூக்கி மேஜை மேலும் வைத்துக் கொண்டான் கிராதகன்.

நல்ல வேளையாக வயசன் அவளிடமிருந்து துடைப்பத்தை வாங்கி குடைக்கார சாமு மாஸ்டரிடம் ஒப்படைத்தான். அவனும் குடையை நாற்காலியில் வைத்து விட்டு மாப்பிள்ள்ளா பாட்டு ஒன்றை உரக்க முணுமுணுத்தபடி பெருக்க ஆரம்பித்தான்.

யாரெல்லாம் உத்தியோக பார்க்க வந்தது?

கேட்ட படிக்கு சியாமளா பெரியம்மா உள்ளே நுழைய தன்னை அறியாமல் எழுந்து நின்றான் திலீப்.

எல்லோரையும் ஒன்பது மணிக்கு வரச் சொல்லி இருக்கேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துலே இங்கே இருப்பாங்க.

நான் கூட அதுக்குத் தான் வந்தேன். துடைப்பத்தை உயர்த்திப் பிடித்தபடி முன்னால் வந்த சாமுவைப் பார்த்த பெரியம்மா கொஞ்சம் பின்வாங்கினாள். இவனுக்கும் அர்ஜுன் நிருத்தத்துக்க்கும் என்ன தொடர்பு?

அர்ஜுனன், சகாதேவன் எல்லாம் அப்புறமா வந்தது. இங்கே இதை மயில்பீலி தூக்கம்னு தான் சொல்றது. பகவதி கோவில் உற்சவத்திலே நான் ஆடுவேன்.

குடைக்கார சாமு சொன்னான். எங்கே ஆடு பார்க்கலாம் என்றார் சாஸ்திரி ஏப்பம் விட்டுக் கொண்டு..

திலீப், நீ போய்ப் பசியாறிட்டு வா.

பெரியம்மா அனுப்பி வைத்தாள்.

‘இந்தா நூறு ரூபாயாத் தான் இருக்கு. சாப்பிட்டுட்டு பத்திரமா மீதி கொண்டு வந்துடு’

பாக்கெட்டில் இருந்து நிஜாம் பாக்கு வாசனையோடு பணம் எடுத்து நீட்டிய பிஸ்கட் சாஸ்திரியை ஒரு நாள் திலீப் பிஸ்கட் தின்ன வைப்பான். திலீப் கழிந்ததில் தோய்த்து எடுத்து ரசித்துத் தின்பான். அந்தப் புடுங்கி.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன