new bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 20 இரா.முருகன்

நொளினிகாந்த் சட்டர்ஜி மோஷாய் உள்ளே இருந்து காகிதமும் பென்சிலுமாகத் திரும்பி வந்தார்.

’உனக்கு செஞ்சு வச்ச பொம்மை இன்னும் வர்ணம் காயலே. அடுப்பு பக்கம் வச்சிருக்கேன். கொஞ்சம் பொறு’.

கயலை நோக்கிச் சொல்லி விட்டு, என்னை எழுந்திருக்கச் சொன்னார்.

பவழமல்லி மரத்தடியில் கயலோடு தப்புக் காரியம் செய்து விட்டதாக சந்தேகப் படுகிறாரோ. ஆமா, செய்தேன். அதற்குத் தண்டிக்க இந்த சுருட்டு சுந்தரம் பிள்ளை யார்?

’இப்படி வந்து இந்த பூக்கூடை பக்கமா நில்லு’.

வாட ஆரம்பித்த பூக்கள் நிறைந்த அந்தப் பூக்குடலைக்கு அருகே நின்றேன். உள்ளே இருந்து கொசுக்கள் கிளம்பி முகத்தில் மோதிப் பறந்தன.

’சிரிச்சுக்கிட்டே பாரு’ என்றார். சோகம் காக்கச் சொல்லியிருந்தால் தான் எனக்குக் கஷ்டம்.

‘அங்கிள், நானும் போஸ் கொடுக்கட்டா?’ என்றாள் கயல்.

’ஓ, அடுத்த படத்துக்கு’ என்றார். நான் நகர்ந்தேன்.

‘நீயுந்தான்’ என்றார் மோஷாய்,

பத்து நிமிடம் அவர் காகிதத்தில் பார்த்து வரைய, சிலைகள் போல் நானும் கயலும் அருகருகே நின்றோம். மோஷாய், இந்தப் பெண்ணின் துடுத்த உதடுகளைக் கவனமாக வரைந்து சிலை செய்யுங்கள். என் உயிர் இவற்றின் இடையில் தான் உறங்குகிறது.

அன்னப் பறவை போல் வளைந்து மூக்கு வைத்த மண் கூஜாவில் இருந்து ஏலமும் வெட்டிவேரும் மணக்கும் நன்னாரி சர்பத் எங்களுக்கு மண் குவளைகளில் குடிக்கக் கொடுத்தார் மோஷாய். மானாமதுரை மண் பாண்டம் என்றார். எங்க ஊருக்குப் பக்கம் தான் என்று பெருமையோடு கயலைப் பார்த்தேன்.

சட்டர்ஜி மோஷாய் மேஜையில் இருந்து எடுத்த சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டு உள்ளே போக, நான் கயலைக் கேட்டேன் – எப்படி சமிதிக்காரராக இருந்துக்கிட்டு குட்ஸ் ரயில் எஞ்சின் மாதிரி புகை விட்டுட்டிருக்கார்?

’இந்த சுருட்டாலே தான் அவரை சமிதியை விட்டுத் தள்ளி வச்சாங்களாம். அப்பா சொன்னார். பெரிய் ஆர்ட்டிஸ்டாம்’.

உள்ளிருந்து சட்டர்ஜி கூப்பிட்டார். சிறிய மண் அடுப்புகள் வரிசையாக இருக்க, அவற்றின் உள்ளே சுடப்பட்டுக் கொண்டிருந்த சிறு பொம்மைகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்தார் அவர்.

எல்லாம் சேர்த்து மேஜையில் வைத்ததும் விரிந்த அற்புதமான காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது. கல்கத்தா மாநகரின் முக்கியமான தெருவாகிய ராஷ்பிகாரி அவன்யூ அது. ப்ரியா சினிமா தியேட்டர், தேசப்ரியா பூங்கா, கரியகட் மார்க்கெட் போன்ற அந்தச் சாலையின் முக்கியமான அடையாளங்கள் கச்சிதமாக வடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு பளீரிட்டன. தெரு வியாபாரிகள், நகரும் டிராம், கை ரிக்ஷா, சைக்கிள்கள், கையில் மீனும் ப்ரீப் கேசுமாகப் போகிற ஆபீஸ் அதிகாரி, இனிப்பு சாப்பிடும் முதியவர்கள் என்று ராஷ்பிகாரி அவென்யூ சின்னச் சின்ன பொம்மைகளாக அற்புதமாக விரிந்திருந்தது.

என் சந்தோஷத்தை அடக்க முடியாமல் கயலிடம் சொன்னேன்.

‘நான் கல்கத்தா பார்த்ததில்லேடா, கூட்டிப் போறியா’? ஏக்கத்தோடு கேட்டாள் அவள்.

’நிச்சயமா, ஆனா அங்கே போய் நான் உன்னைத் தான் பார்த்துட்டிருப்பேன், நீ என்னைப் பார்த்துட்டிருப்பே. சரியா?’.

அவள் சிரிக்க, விஷயம் புரியாமலேயே மோஷாயும் சிரிப்பில் கலந்து கொண்டார். தம்பூரா மீட்டிப் பாடும் மீரா, கிளியைத் தூது விடும் ஆண்டாள், யோசித்தபடி சத்யஜித் ராய் என்று இன்னும் சில நேர்த்தியான பொம்மைகளையும் அலமாரியில் இருந்து எடுத்து கயலிடம் கொடுத்தார். எனக்கு ஏனோ பொறாமையாக இருந்தது.

கயல் சின்ன பர்ஸில் குழந்தை மாதிரி சுருட்டி காய்ந்த ரோஜா இதழ்களோடு வைத்திருந்த நூறு ரூபாயை ஜாக்கிரதையாகக் கொடுக்க, அந்த அற்புதமான கலைஞர் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். மீதி பொம்மைகளுக்கு நாளைக்கு வாங்க ரெண்டு பேரும் என்று என்னையும் கணக்காக்கிச் சொன்ன அவர் மேல் என் அபிமானம் கூடியது.

’அப்பாவும் ப்ரண்ட்ஸும் இவர் கிட்டே போன வருஷமும் கேட்டிருந்தாங்கடா. எல்லா வீட்டு கொலுவிலும் இவர் பொம்மை தவறாம இருக்கும், அருமையா தங்கந்தங்கமா இருக்கு இல்லே’

கயல் ஒவ்வொரு பொம்மையாக எடுத்துப் பார்த்து என்னோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள்.

ரெட்டைத் தெரு கொலு ஓய்ந்து அங்கே வீடு பூட்டி வைத்திருக்கிறது. என் கொண்டாட்டம் அம்மாவோடு போனது. இனி இதெல்லாம் கயல் மூலம் தான் என்று விதிக்கப்பட்டது போல..

’என்னடா சைலண்ட் ஆயிட்டே’

வெளியே வரும்போது கயல் கேட்டாள்.

சணல் பைகளில் பத்திரமாக வைத்துத் தூக்கி வந்த பொம்மை உலகத்தைப் பவழ மல்லி மரத்தடியில் வைத்தோம்.

இந்த சந்தோஷம் எல்லாம் அம்மா இருந்தபோது, ரெட்டைத் தெருவிலே எனக்கும் கிடைச்சது கயல் என்றேன் அந்தப் பைகளைப் பார்த்தபடி.

அம்மா நினைவு மேலெழுந்து வர, கண் கலங்கி பவழமல்லி மரத்தடியில் நின்றேன்.

’அழாதே.. என் செல்லம் இல்லே ..நான் இருக்கேன் உனக்கு’.

சந்தன டால்கம் பவுடர் மணக்கும் கைக்குட்டையால் கயல் என் கண்ணைத் துடைத்தாள்.

’தேன்மொழி அக்கா நேத்து பிரான்ஸிலே இருந்து போன் பண்ணிச்சு. உன்னை ரொம்ப கேட்டுது’.

அவள் பேச்சை மாற்றுகிறாள் என்று தெரிந்தாலும் அது வேண்டித்தான் இருந்தது.

சின்னத் தூறலாக வானம் கண் திறந்திருந்தது. பூச் செரியும் திவலைகள் மேலே சிதற இரண்டு குழந்தைகளாக நின்றிருந்தோம்.

’அக்கா என்ன சொல்லிச்சு தெரியுமா’?

’என்ன சொல்றாங்க’?

’பையன் ராஜா மாதிரி இருக்கான். உனக்கு சரியான ஜோடி தான். இவர் மாதிரி ஒல்லி. . மீனும் முட்டையும் ஊட்டினா சதை பிடிச்சுடுவான்..’

நான் முஷ்டி மடக்கிப் புஜபலம் காட்டினேன். உன்னை விட நான் பலசாலி என்று கை மடக்கி என் கையோடு ஒட்டி நிறுத்திக் காட்டினாள் பதிலுக்கு.

’தேன்மொழி அக்கா வேறே என்ன சொல்லிச்சு’?

‘அவசரப்பட்டுடாதீங்க. நல்லா படிச்சு, போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சு வேலையும் கிடைக்கட்டும் அப்புறமா கல்யாணம்.. முக்கியமா ஒண்ணு’

’என்னவாம்?’

’அது வந்து,.. பீரோ பின்னாடி கிஸ் அடிக்கறதெல்லாம் வேணாம். பூச்சி பொட்டு கிடக்கும்’.

நான் வாய் விட்டுச் சிரித்தேன்.

கயல் முகம் நாணத்தில் சிவந்தது. உதட்டை அழுத்தக் கடித்தபடி தலையைக் குனிந்து கொண்டாள். இவளோடு தான் இனி வாழ்க்கையா?

இனித்தது. அது வேறே மாதிரி வாழ்க்கையாக இருக்கும். இனிப்பு மட்டும் அனுபவப்படாது. பசியும் காதலும் காமமும் தவிரவும் சேர்ந்து இருந்து அனுபவிக்க, பிணங்கிப் பிரிந்து மீண்டும் இறுக அணைத்து இணைய, கண்ணீர் விட, சேர்ந்து ஆட, குரல் எடுத்துப் பாட, கவிதை சொல்லி ரசிக்க, குழந்தை சுமக்க, ஆஸ்பத்திரிக்கு ப்ளாஸ்கில் காப்பி எடுத்துப் போக, வீடு சுத்தம் செய்ய, துவைத்த துணி உலர்த்த, ரேடியோ கேட்க, ஞாபகமாக ஒரு சாஃப்டும் ஒரு மீடியமும் என்று பல்துலக்க ரெண்டு பிரஷ் வாங்கி வர, அறுந்த செருப்பைத் தைத்து வந்து தர, புடவைக்கு ஃபால்ஸ் அடிக்க எடுத்துப் போக, இன்னும்தான்.

ஜோசபின் மீது என் ஈர்ப்பு என்ன ஆகும்? அது நட்பு மட்டும் என்று என்னை நானும் தன்னை ஜோசபினும் ஏமாற்றிக் கொண்டாக வேண்டுமா? அவளுக்கு நானும் எனக்கு அவளும் யார்?

மேகலா?

கல்யாணத்துக்கு வந்து பால் குக்கர் பரிசு கொடுத்து விட்டு, விருந்து கொறித்து, புகைப்படத்தில் தலை காட்டிப் போகும் சிநேகிதர்களா ஜோசபினும், மேகலாவும்?

ஒன்றும் புலப்படவில்லை. வழக்கம் போல் மேகலா தான் உதவிக்கு வந்தாள்.

’அதெல்லாம் நடக்கறபோது பார்த்துக்கலாம். Cross the bridge when you come to it.. இப்போ கயலை பத்திரமா வீட்டுக்கு அனுப்பிட்டு நீயும் போய்ச் சேரு’.

வாரக் கடைசியில் மேகலாவைப் பார்க்க பொள்ளாச்சி போனால் என்ன?

‘நேரம் ஆயிட்டிருக்கு’.

கயல் சொன்னாள். பொறுப்புள்ள எதிர்காலக் கணவனாக அவளுக்காக எல்லா துணிப் பைகளையும் கையில் எடுத்துக் கொண்டேன். ராஷ்பிஹாரி அவென்யுவும் சத்யஜித் ராயும் கனமாகப் புறப்பட்டார்கள்..

’போகலாம், தூறல் நின்னுடுச்சு’, என்றேன் என் ராணியிடம்.

வந்து நின்ற சைக்கிள் ரிக்ஷாவில் அவள் ஏறி உட்கார்ந்தாள்.

நானும் வரணுமா என்றேன்.

‘இல்லேடா, நானும் அம்மாவும் எடுத்து வச்சிடறோம். நாளைக்கு அந்தப் பக்கம் வருவியா’?

ரிக்ஷாக்காரர் பார்த்துக் கொண்டிருந்தார். இல்லாவிட்டால், வருவேன் என்று ஒற்றை வார்த்தை பதிலோடு மட்டும் அவளை அனுப்பி இருக்க மாட்டேன்.

சுஃப்ரன் தெரு வழியே நடந்து வரும்போது பின்னால் இருந்து சைக்கிள் மணி சத்தம். ஜோசபின். உடம்பு சிலிர்க்கத் திரும்பினேன். அது விசாலி.

ஜோசபின்.

ரெண்டு பேரும் அந்த வார்த்தையைத் தான் சொன்னோம்.

விசாலி பக்கத்தில் சைக்கிளில் நின்றபடியே என்னிடம் ரகசியம் பேசும் குரலில் சொன்னாள் –

’மதியம் ஊர்லே இருந்து திரும்பி வந்தா. எங்க குவாட்டர்ஸ்லே தான் இருக்கா. நீ வந்து பார்க்கறது நல்லதுன்னு நினைக்கறேன்’.

சொல்லி விட்டுச் சிட்டாகப் பறந்து விட்டாள் விசாலி. போன மாதம் தான் விசாலியோடும் இரண்டு பெண் ஹவுஸ் சர்ஜன்களோடும், எல்லையம்மன் கோவில் தெருவில் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தாள் ஜோசபின். தெருவைச் சொன்னவள் எங்கே வரப் போகிறேன் என்றோ என்னவோ.வீட்டு முகவரியைச் சொல்லவில்லை.

‘விசாலி .. விசாலி’.

அவள் முன்னால் போய்க் கொண்டிருந்தாள். இதற்கு மேல் அவள் பெயரைச் சத்தமாகக் கூப்பிட மனம் வரவில்லை. சைக்கிள் பின்னால் கொஞ்ச தூரம் ஓடினேன். ஏதோ குறுக்குத் தெருவில் அவள் புகுந்து போக, பின்னால் வந்த லாரிகள் போன தடத்தை அழித்தன.

நினைப்பு எல்லாம் ஜோசபின் ஜோசபின் என்று முழுவதுமாக நிறைந்து அலையடித்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குப் போய் சைக்கிளை எடுத்துப் போகலாமா என்று யோசித்தேன். போக மனம் வரவில்லை.

ஜோசபினைப் பார்த்த பிறகு தான் மற்ற எல்லாம். ஓட்டமும் நடையுமாக தெற்கு புல்வார்ட் வழியாக எல்லையம்மன் கோவில் தெருவுக்கு நடந்து போகவே அரை மணி நேரமானது. வாசல் பலகைகளை திரும்ப அடைத்துக் கடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. தெரு விளக்குகள் ஒரு கம்பம் விட்டு மறு கம்பம் என்று ஏற்பாடு செய்த மாதிரி எரிந்தன. தெரு நாய்கள் அதட்டியபடி கூட வர, குரலை நீள வீசியபடி ஒரு ராப்பிச்சைக்காரன் எனக்கு முன்னே நடந்து போய்க் கொண்டிருந்தான். ஒரு வீட்டு வாசலில் கட்டிய ஆடு, அறுத்துக் கறி வைக்கும் காலம் வருவதை உணர்ந்தோ என்னமோ நேரம் காலம் இல்லாமல் கத்திக் கொண்டிருந்தது. வீட்டு வாசல் திண்ணைகளில் சைக்கிள்கள் நின்றன. அழைக்காதே என்று யாரோ திரும்பத் திரும்ப புல்புல்தாராவில் வாசித்துப் பழகிக் கொண்டிருந்தது கேட்டது. யாரும் வாங்காமல் சோன்பப்டிக் காரன் கடந்து போக, அழுகிற குழந்தைகள் நிறைந்த தெரு.

ஜோசபின் வீட்டை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது?

வீட்டு வாசல் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்து டிரான்சிஸ்டரில் அகில பாரத நாடகம் கேட்டுக் கொண்டிருந்த கிழவரைக் கடந்து போனேன். இரண்டு வீடு தள்ளி, திண்ணையில் பாடம் படித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் எட்டி எட்டி உள்ளே பார்த்து புத்தகத்தை மூடி வைத்தார்கள். ஒரு வீட்டு வாசலில் நாலைந்து பெண்கள் கூடி நின்று சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ராத்திரி ஒன்பது மணிக்கு, வீட்டுக் காரியம் முடித்துப் பேசிக் கொண்டிருக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

சுற்றும் பார்த்தேன். தகவல் தரக் கூடியவர்களாக வேறு யாருமே தெரியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று அந்தப் பெண்கள் பக்கம் நடந்தேன்.

பகலில் சரியாகச் சாப்பிடாமல் இருந்து, ஏற்கனவே நீள நடந்து அலைந்து விட்டு, நடந்தே இங்கே வந்து சேர்ந்தது அசதியாகக் கண்ணிலும் நடையிலும் தெரிய, அசதியைத் தள்ளி ஒதுக்கினேன். ஜோசபின் தான் என்னைக் கொண்டு செலுத்திக் கொண்டிருந்தாள்.

இந்தப் பெண்கள் அம்மாவா அக்காவா? அக்கா தான் சரிப்படும். வயது அதிகம் என்றாலும் பரவாயில்லை. சந்தோஷமாக உணர வைக்கும்.

’அக்கா, ஹாஸ்பிடல் லேடி ஹவுஸ் சர்ஜன் , நர்ஸ் இங்கே குடி வந்திருக்கற வீடு எது’?

’நீ யாரு’?

ஒக்கலில் குழந்தை வைத்திருந்த பெண் கேட்டாள். நேரடியாகப் பார்த்துக் கேட்கப் பட்ட கேள்வி. நிலை குலைந்து தான் போனேன்.

’காரைக்கால்லே இருந்து… நர்ஸ் .. என்னோட..’

வார்த்தையில் பாதி வாய்க்குள்ளேயே நின்றது.

’எதிர்த்த வீடு தான் தம்பி. வாசல்லே பெல் இருக்கு. அடிக்கலேன்னா, கதவுத் தாழ்ப்பாளை நாலு தடவை தட்டு.’.

காலிங்பெல் அடித்தது. திறந்தவள் விசாலி.

’உள்ளே போங்க, ரூம்லே இருக்கா. நல்ல வேளை நீங்க வந்துட்டீங்க’.

உள்ளே கை காட்டினாள்.

‘ட்யூட்டி டைம். கிளம்பறேன். ரோஸாலி ட்யூட்டி. பத்து ம்ணி முடிஞ்சு வருவா.. சொல்றேன். வந்ததும் போங்க, சரியா?. எனக்காக. ப்ளீஸ்’

அவள் தந்தி மொழியில் கூறியபடி வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள். நைட் டியூட்டியாம்.

சாப்பிட்டீங்களா? போகிற அவசரத்தில் நின்று கேட்டாள். ஆச்சு என்று பொய் சொன்னேன். ஜோசபினா, நிஜமா என்று சோதித்துப் பார்க்க?

’கதவைச் சாத்திக்குங்க’.

விசாலி புறப்பட்டுப் போக கதவை சாத்தி விட்டு, இருண்டு கிடந்த அறை வாசலில் நின்றேன். மெல்ல உள்ளே போனேன். இருட்டு பழக ஆரம்பிக்க, ஜோசபின் என்று மெதுவாகக் கூப்பிட்டேன்.

சத்தம் கூட்டாமல் விசும்பி அழும் ஒலி. தட்டுத் தடுமாறி சுவிட்சைப் போட, நாற்பது வாட்ஸ் பல்பின் மங்கிய வெளிச்சத்தில் ஜோசபின்

வெறும் தரை. பழைய தலையணை தலையை ஒட்டி நனைந்து கிடக்கிறது. கணுக்காலுக்கு வரும் நைட்டி தொளதொளவென்று மேலே பொருத்தமே இல்லாமல் வழிகிறது. ஃபேன் இல்லாத அறையில் புழுக்கம் அதிகமாகத் தெரிகிறது. வெள்ளைப் பட்டுத் துணியைக் கட்டாந்தரையில் அலங்கோலமாகப் பரத்திய மாதிரி என் ஜோசபின் நிலைகுலைந்து கிடக்கிறாள்.

ஜோசபின்.

அவள் என் காலடிகளில் கை வைத்துப் பற்றியபடி என்னையே பார்த்தாள்

நான் எந்த சிந்தனையும் இன்றிக் கீழே உட்கார்ந்து அவள் தலையை என் மடியில் தாங்கி வைத்துக் கொள்கிறேன். கை வளைத்து, முடிந்த வரை அந்தச் சித்திர வீணையைத் தழுவிக் கொண்டு அழாதேடா நான் வந்துட்டேண்டா என்று பித்துப் பிடித்தவனாகத் தேம்புகிறேன். ஜோசபினுடைய கண்ணீர் மடி நனைக்க, குனிந்து அந்த இமைகளில் தீர்க்கமாக முத்தமிடுகிறேன். கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா என்றதல்லாமல் மற்றது ஏதும் எனக்கு நாவில் புரண்டு வரவில்லை.

ஐந்து நிமிடம் போயிருக்கும். அதற்கு மேலும் கடந்திருக்கும்.

’சாப்பிட்டியா’?

ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து அதுதான் கேட்கிறோம். எழ முயற்சி செய்தவளைத் திரும்பத் தழுவி அப்படியே அமர்ந்து இருக்கிறேன். எல்லாம் சரியாகிப் போகும் என்கிறது மனம்.

ஜோசபின் மெல்ல விலகிச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். அளவு சரியில்லாத அங்கிக்குக் கீழே அவளுடைய கணுக்கால்களை, கணுக்காலில் பூட்டியிருந்த வெள்ளிச் சதங்கையை எந்த மனக் கிளர்ச்சியும் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மென்மையான பாதங்கள் சற்றே வீங்கியிருந்ததாகத் தோன்றியது.

ஜோசபின் குனிந்து நைட்டியை இழுத்து விட முயன்று, முடியாமல் போக அப்படியே விட்டுவிட்டு, ’ரோஸாலியோடது மூட்டுக்குத் தான் வருது’ என்றாள்.

’என்ன ஆச்சுப்பா’? நான் மெல்லக் கேட்டேன்.

தோளில் தலை சாய்த்து ஒண்ணுமில்லேடா என்றாள்.

அடுத்த அழுகைக்குக் கண்கள் தளம் கட்ட, பிடிவாதமாக உதடுகளை இறுக அடைத்துக் கொண்டதைப் பார்த்தேன்.

அவற்றை நெருங்க, அவசரமாகத் தலை திருப்பினாள்.

‘வேணாம்டா, அவசரத்திலே பல்பொடி கூட இல்லே பல்லு விளக்கலே. கெட்ட வாடையா இருக்கும்’ என்றாள்.

’அதனாலே’?

’குளிக்கவும் இல்லேடா. கசகசன்னு கழுத்தெல்லாம் முதுகெல்லாம் வியர்வை. தலைமுடி சிக்கு பிடிச்சு கிடக்கு’.

சொன்னபடி இன்னும் விலகினாள். தலையை முடிந்து கொண்டு எழுந்தாள். இரு வந்துட்டேன் என்று சொல்லி உள்ளே போனாள்.

போர்முனையில் இருந்து தன் அன்பு மனைவி ஜோசபினுக்குக் கடிதம் எழுதிய பிரஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் நினைவு வந்தான் –

அன்பே நான் திரும்ப வந்து கொண்டிருக்கிறேன். குளிக்காதே, பல் துலக்காதே. உன் உடலின் இயற்கையான வாடையோடு உன்னைத் தழுவ நான் வந்து கொண்டிருக்கிறேன்.

நெப்போலியன் சொன்னதா இப்போ முக்கியம்?

அடுத்த நிமிடம் கையில் இரண்டு பூவரச இலைப் பொட்டலங்களோடு திரும்பினாள் ஜோசபின்.

இட்லிடா.

ரெண்டு பொட்டலம் எப்படி?

’நீ வருவேன்னு தெரியும். விசாலி அதான் ரெண்டா வாங்கி வந்திருக்கா’

‘நீ ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கே?’

‘சாப்பிடப் பிடிக்காம எடுத்து வச்சுட்டேன்டா. நீ சாப்பிடு..’ பூவரசு இலைப் பொட்டலத்தைப் பிரித்து என் கையில் கொடுத்தாள்.

’சட்னி உரைக்கும்னா ஷுகர் தொட்டுச் சாப்பிடறியா’?

உன்னைத் தொட்டுச் சாப்பிடறேன் என்றேன்.

அந்தப் புன்னகை ஒரு வினாடி ஒளிர்ந்து உடனே அணைந்து போனது.

‘ரொம்ப டயர்டா இருக்கே பாக்கறதுக்கு’. அவளுடைய கலைந்த தலைமுடியை கை கொண்டு ஒதுக்கினேன். முடி அழுக்குடா என்று கையைத் தட்டி விட்டாள். அதுனாலே? திரும்பக் கையளைந்தேன்.

‘எத்தனை நாளா பட்டினி ஜோஸ்ஸி?’

’நேத்து காலையிலே ரெண்டு இட்லி, அப்புறம் உன் கையாலே தான்’.

நான் ஊட்டி விட மென்றபடி சொன்னாள். சமையல்கட்டுக்குப் போய் சக்கரை போத்தலை எடுத்து வரவேண்டும் என்று தோன்றியது. ஜோசபின் எழுந்து விடுவாள் என்று பட போகாமல் இருந்தேன்.

’கல்யாணம் நாலு நாள் முன்பே முடிஞ்சுடுத்தில்லே’?

நான் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கேட்டேன். அவள் தலையில் தத்தி ஏறி உட்கார்ந்த சின்ன வெட்டுக் கிளியை அவளுக்கு நோவாமல் எடுத்து ஜன்னலை நோக்கி வீசிப் போட்டேன். அதை அடிக்க மனம் வரவில்லை. அவளுக்குப் பிடிக்காது.

விலகி, உடலின் எல்லா வாடைகளோடும் அடுத்திருந்த அவளை எப்போதையும் விட நேசத்துக்கும் பிரியத்துக்கும் உரிய சிநேகிதியாக உணர்ந்தேன். யூதிகோலன் நறுமணம் மட்டுமில்லை ஜோசபின்.

’கல்யாணம் ஆரம்பிக்க முந்தியே எனக்கு கஷ்டம் ஆரம்பிச்சுடுச்சுடா. அத்தை வராங்கன்னு சொன்னேனே. ராஷல் அத்தை .. அவங்க தனியா வரல்லே. கல்யாணப் பையனுக்கு.. பையன் என்ன.. உன்னைப் போல ரெண்டு மடங்கு வயசு.. அந்தாளோடு கூட பெஸ்ட் மேன்.. அதாண்டா உங்க கல்யாணத்திலே தோழன்னு சொல்வீங்களே.. மாப்பிள்ளைத் தோழன்.. அந்த பெஸ்ட் மேன் தடியனும் மார்செயில்ஸ்லே இருந்து ராஷல் அத்தை கூடவே வந்துட்டான். அத்தைக்கு என்னைக் கண்டதும் ஒரே பிடிவாதம். அவனை நான் கட்டிக்கணுமாம். நாம அன்னிக்கு வேடிக்கையாப் பேசினோமே அதே மேடையிலே அதே பூமாலை போட்டு அதே பாதர் அதே சிஸ்டர் அதே பிரதர்னு.. அப்படியே ஆகிடும்போல பயம இருந்துச்சுடா.. அத்தை அந்த ஹென்ரியை அதான் பெஸ்ட் மேன் எல்லா ஏற்பாடும் செஞ்சு உடனே நான் கட்டிக்கணும்னு ஒத்தக் கால்லே நிக்குறாங்க. அந்த ஆள் பிரான்ஸ் போய் எனக்கு விசா அனுப்புவானாம். புறப்பட்டுப் போய் ஆயுசு பூரா அங்கே தானாம். எங்கப்பாவுக்கு ஒண்ணும் செய்ய முடியாட்டாலும் எனக்குச் செஞ்சே ஆகணுமாம். அத்தை நெருக்கறாங்க. இந்த விக்தொ அங்கிள் அவங்களுக்கு சப்போர்ட். எனக்கு எது நல்லதுன்னு எனக்குத் தெரியாதாம். சும்மா வேறே மத விடலைப் பசங்களோடு திரிஞ்சிட்டிருக்கறது நல்லது இல்லையாம். அத்தை சொல்லுறாங்க மலையாள்த்து சூனியம் வச்சுடுவியாம். வச்சுடுவாங்களாம். ஜேசப்பா’..

அவள் ஒரு வினாடி சும்மா இருந்து என்னைப் பார்த்து அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள். எதுக்கு சிரிக்கறே ஜோஸ் என்று கேட்டேன். கையிலே எலுமிச்சம்பழம், சேவல் எல்லாம் வச்சுக்கிட்டு நீ என்னை வசியம் பண்ணற மாதிரி நினைக்கவே தமாஷா இருக்கு’.

என்னை வசியம் பண்ண அதெல்லாம் எதுக்கு? நீ பார்த்தா போதாதா?.

என் கைகளை மெதுவாகப் பற்றி முத்தமிட்டு முகம் புதைத்துக் கொண்டாள். மறுபடி அழத் தொடங்கினாள்.

கல்யாணம் ஒரு பக்கம் நடக்க, இவள் மேல் பிரியம் கொண்டவர்களே இவளுக்கு நல்லது செய்கிறதாக நினைத்துக் கட்டாயப்படுத்த, தொடர்ந்து மறுத்திருக்கிறாள் ஜோசபின்.

நயமாச் சொன்னா கேக்க மாட்டே, உன் நல்லதுக்குத்தானே, பயமாச் சொல்றேன் என்று அவளை அறையில் பூட்டி வைக்கவும் அத்தை முயற்சி செய்தாளாம். பால்ய கால சிநேகிதி உதவி செய்ய விடிகாலையில் தப்பித்து எதிர்த் திசையில் பஸ்ஸில் போய் இருபது கிலோமீட்டர் வந்ததும் இறங்கி வேறு வழியில் வந்து சேர்ந்திருக்கிறாளாம். இன்னும் இங்கேயும் தொந்தரவு தொடரும் என்று நினைப்பதால் டியூட்டிக்குப் போகக் கூடப் பயமாக இருக்கிறதாம். வந்தது முதல் படுத்தபடி அழுது கொண்டிருக்கிறாளாம்.

’ரெண்டே ரெண்டு நிமிஷம் தோள் கொடுடா. என் சுகத்துக்கும் துக்கத்துக்கும் நீதான் உயிர்த் தோழன்’.

நெகிழ்ந்து போனேன். இந்த உறவு எனக்குப் புரிகிறது. ஜோசபினுக்குப் புரிகிறது. வேறே யாருக்கும் புரிந்தென்ன, புரியாமல் போனால் என்ன?

முழுக்கச் சாப்பிடாமல் என் தோளில் முகம் புதைத்தாள் ஜோசபின். உறங்கியும் போனாள். அவள் பின்தலையில் கைவைத்து ஆதரவாகக் குழந்தை போல பிடித்திருந்தேன். களைப்பு தீர்க்கமாக எழுதிய முகம். கடைவாயில் வழியும் உமிழ்நீரில் என் தோள் நனைய அந்த நிமிடம் நிம்மதி கிடைத்த என் சிநேகிதியோடு மௌனமாக எத்தனை நேரம் இருந்தேனோ.

வாசலில் தாழ்ப்பாள் படபடக்கும் சத்தம். நாற்காலியில் போட்டிருந்த டர்க்கி டவலை விரித்து ஜோசபினை பூப்போல அங்கே தாழ இட்டுப் படுக்க வைத்தேன். வாசலுக்கு விரைவாக நடந்து ஒருக்களித்துக் கதவைத் திறந்தேன்.

’நான் தான். பய்ந்துட்டியா’? ரோஸாலி உள்ளே வந்தாள்.

அவளைத் தள்ளிக்கொண்டு நுழைந்த உயரமும் கனமும் கூடியவன் நான் கயல்விழியோடு பவழமல்லி மரச் சுவட்டில் இருக்கும் போது பார்த்தவன்.

’ஒன் மினிட். நோ டைம். ஜோசபின் ஜெசிந்தா லூர்த. ராஷல் அத்தை’.

வந்தவன் ரோஸாலியைப் பார்த்துத் தணிந்த குரலில் சொன்னான். அப்புறமும் ஏதோ சொன்னான். அவன் பேசினது பிரஞ்சு மாதிரியும் இருந்தது. இல்லாமலும் இருந்தது. அது க்ரியோலாக இருக்கலாம்..

ரோஸாலி அவனை நிற்கச் சொல்லிக் கை காட்டினாள்.

’பொண்ணுங்க இருக்கற இடம். நீ அத்து மீறி இங்கே வந்திருக்கே. இனியும் இருந்தா சத்தம் போட்டு அக்கம் பக்கத்திலே இருக்கறவங்களைக் கூப்பிடுவேன். அப்புறம் என்ன ஆகும்னு சொல்ல முடியாது’.

ஒரு வருடம் படித்த பலனாக, அவளுடைய பிரஞ்ச் எனக்குப் புரிந்தது.

.நான் கயானாவிலே இருந்து வந்துருக்கேன்’. அவனும் பிரஞ்சுக்கு மாறினான்.

’சந்திரன்லே இருந்து வந்தாலும் சரிதான். வெளியே போ’..

அவன் தயங்கினான். என்னைப் பார்த்து, எய்தெ மா ஃபெரெ என்றான். எனக்கு அவன் மொழி புரியாது என்று பட, அதை மொழிபெயர்க்கவும் முற்பட்டான். வேண்டாம் என்று நிறுத்தினாள் ரோஸாலி. அவனைக் கவனித்துப் பார்த்தேன். என்ன உதவி கேட்கிறான் இந்தத் தம்பியிடம்?

பார்வையில் தெரிந்த முரட்டுத் தனத்துக்கு மீசை இல்லாத முகத்தில் கொத்தாக எழுந்து நின்ற அடர்ந்த புருவங்களும் காரணம். அந்த உயரத்தை அவமதிக்கிற மாதிரி அவன் போட்டிருந்த பத்திக் வேலைப்பாடு கொண்ட சட்டையில் பெரிசு பெரிசாகத் தாமரைப் பூக்கள் பூத்திருந்தன. இப்படிக் கலம் அழுக்கோடு ஒரு காக்கி கார்டுராய் கால் சராய் என்னிடம் இருந்தால் அதை நெருப்பு வைத்துக் கொளுத்தி விட்டு டர்க்கி டவலைச் சுற்றிக் கொண்டு நிற்பேன்.

’தம்பி’ என்னைத் திரும்ப அழைத்தான்.

’அவன் என் தம்பி, எனக்கு ஒத்தாசையா இருக்கத்தான் வந்திருக்கான். நீ அவன் உதவிக்கு வருவான்னு காத்திருந்து பிரயோஜனமில்லே. போயிடு’.

ரோஸாலி என்னை ஆதரவாகப் பிடித்து முன்னால் நிறுத்திக் கொண்டு உறுதியாகச் சொல்ல, அவன் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டு வெளியே போனான்.

ராத்திரி பத்து மணி என்று மார்க்கெட் மணிக் கூண்டு சத்தம் முதல் முறையாகத் தெரு ஒலிகள் தேய்த்து அழிக்காமல் தெளிவாகக் கேட்டது.

’ஜோசபின்’?

ரோஸாலி என்னைப் பார்த்தாள்.

’அக்கா, அவ உறங்கிட்டு இருக்கா. கொஞ்சம் போல சாப்பிட்டா’.

’கை நனைச்சாளே, அதுவே போதும். பகல்லே ஒண்ணும் வேண்டாம்னுட்டாளாம்.. விசாலி சொன்னா… பாவம் அறியாப் பொண்ணு. ஜேசு தான் விரசா அந்தப் பிள்ளை துன்பத்தை தீர்க்கணும். யாருக்கும், பூச்சி பொட்டுக்குக் கூட கெடுதல் நெனக்கத் தெரியாதவ’.

நான் ஒன்றும் பேசாமல் ரோஸாலியைப் பார்த்தேன். எனக்கு அக்கா இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாள். முகவாய்க் கட்டையைப் பிடித்து தலை வாரி விட்டுக் கொண்டு, வாசலில் மாக்கோலம் போட்டுக் கொண்டு, கால் நகம் பிய்ந்து நான் அழுதால், வலிக்காமல் மருந்து போட்டுக் கொண்டு. ரெட்டைத் தெருவிலேயே கற்பனை செய்து வைத்திருந்தேன் ரோஸாலியை.

’கதவைச் சாத்திட்டு வா… சாப்பிட்டியாப்பா’?

ரோஸாலி உள்ளே போகத் திரும்பினாள்.

’ஆச்சு. நான் போறேன் அக்கா. காலையிலே வர்றேன்’..

’சொன்னாக் கேளு. பத்து நிமிஷம் கழிச்சுப் போகலாம். நான் வேணும்னா கொண்டு போய் விடறேன்’

’இல்லே அக்கா, நான் போய்க்கறேன்.. பத்திரமா இருங்க’.

ஆள் இல்லாத தெருவில் நடக்கும்போது அவனை எதிர்பார்த்தேன். விட்டு விட்டுச் சிதறிய தூறல் தான் வீடு வரை கூட வந்தது.
(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன