புது bio-fiction : தியூப்ளே வீதி – அத்தியாயம் 11

சனிக்கிழமை ஏகப்பட்ட சுவாரசியங்களைப் பற்றிய வாக்குறுதி கொடுத்தபடி விடிந்து கொண்டிருந்தது. நான் எழுந்ததும் முதலில் தினசரி காலண்டரைத்தான் பார்த்தேன். முழ நீளத்துக்கும் கூடுதலாக அந்த நாள்காட்டி நீளவாக்கில்தான் எப்போதும் நினைவு வரும். நீலமும் நீளமுமான அதன் அட்டை நெடுக
விவேகானந்தர் கம்பீரமாகக் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார். கீழே கையகலத்துக்கு ஒவ்வொரு தினத்துக்குமான தேதி, கிழமை, ராகுகாலம், எமகண்டம், எல்லா ராசிக்கும் ராசிபலன், பொன்மொழி இதெல்லாம்.

என் ராசிக்கு இந்தத் தினத்தில் என்ன பலன் என்று நோக்கினேன். வாகன யோகம். ராலே சைக்கிள் தகராறு செய்யாமல் ஓடுவதால் இந்தப் பலனை எனக்கு முழு வருடத்துக்குமே போட்டாலும் தப்பே இல்லை. தண்ணீரில் கண்டம் என்று போடாததே பெரிய நிம்மதி.

காரணம் உண்டு. இன்னும் ரெண்டு மணி நேரத்தில் நான் படகு ஓட்டிக் கொண்டு போவேன்.

நேற்று காப்பி ஹவுசில் இருந்து புறப்படும் போது வெள்ளைப் பட்டாம்பூச்சிக் கூட்டமாக ஜோசபின் மற்றும் அவளுடைய மூன்று நர்ஸ் தோழிகள் கலகலவென்று பேசியபடி நுழைந்தார்கள். மற்ற பட்டாம்பூச்சிகளும் கண்ணுக்கு நிறைவாகத் தோன்றினாலும் ஜோசபின் வெள்ளை வெளேரென்ற உத்தியோக உடுப்பில் வழக்கத்தை விடப் பேரழகியாக இருந்ததால் அவளை விட்டுக் கண்ணை எடுக்க முடியவில்லை.

‘ஒன்பது மணிக்கு ரூ தூமா வந்துடு. போட்டிங் போகலாம். வரும்போது ஒரு பாக்கெட் பிரட் எடுத்துக்கிட்டு வா’.

ஜோசபின் என்னிடம் கிசுகிசுப்பாகாச் சொன்னபோது, என்ன ஏது என்றெல்லாம் கேட்கத் தோன்றாமல் அவளையே செயல் மறந்து பார்த்தேன். மின்னல் வெட்டித் திரண்ட வனப்புக்கு வேறே எப்படி பாராட்டு சொல்வது என்று தெரியவில்லை. காப்பி ஹவுஸே சுற்றி நின்று என்னைப் பார்த்து சிரித்தாலும் கவலை இல்லை. இந்த அழகை இப்படித்தான் வணங்க முடியும்.

வயசில் மூத்தவள் தோரணையில், ‘நீ நல்ல பையன்’ என்கிறதாகத் தோளில் தட்டிவிட்டு கடைசி வரிசை மேஜைகளுக்குத் தோழிகளோடு போய் விட்டாள் ஜோசபின். அந்த நேரத்தில் அவள் என்னை விடப் பெரியவள் என்று நிலைநாட்டிக் கொள்ள என்ன அவசியம் என்று தெரியவில்லை.

இதோ, ஒன்பது மணி ஆக இன்னும் பத்தே நிமிடம். ஜோசபின் காத்திருப்பாள். சைக்கிள் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாகக் கீழே வந்தேன்.

‘இந்த ரூ துமா எங்கே இருக்கு?’

டியூட்டி முடிந்து மாட்டு வண்டி பூட்டிக் கொண்டிருந்த வின்செண்ட் நடராஜனிடம், குரலில் உணர்ச்சி, உற்சாகம் எதுவும் தட்டுப்படாமல் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு, விசாரித்தேன். அவர் கிழக்கே கையைக் காட்டியபடி குக்கிக்குக் கூளம் அள்ளிக் கொண்டு காம்பவுண்ட் ஓரமாகப் போனார்.

உத்தேசமாக சைக்கிள் மிதித்து வழியில் பட்டீஸெரி என்று பிரஞ்சில் எழுதிய ரொட்டிக் கடையில் பிரட் வாங்கிக் கொண்டு நோத்ரெ தாம் சர்ச் பக்கம் போய்க் கொண்டிருக்கும் போது பெயரைச் சொல்லிக் கூப்பிடும் குரல். சைக்கிளில் உட்கார்ந்தபடிக்கே சக நர்ஸ் தோழி கூவிக் கொண்டிருக்க, பக்கத்தில் ஜோசபின் கித்தான் பையில் எதையோ ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய சைக்கிள் அவளைப் போலவே ஒயிலாக ஓரமாக நின்றது.

‘போன் ஜூர்’ காலை வணக்கப் பரிமாறுதல் கிரமமாக முடிய ஜோசபின் என்னைக் கேட்டாள் –

‘எங்கே கிளம்பிட்டே’?

‘இதானே வேணாங்கறது. நீ தானே வரச் சொன்னே’

‘ஓ அப்படியா?’

நினைவுபடுத்திய மாதிரி சிரித்தாள். என்ன திமிர் இந்தப் பெண்ணுக்கு. தோழி மட்டும் இல்லாமல் இருந்தால். வேண்டாம். இன்ப ஊகங்கள் சனிக்கிழமை காலையில் மனசில் குமிழிட்டுக் கிளம்புகிறவை இல்லை.

‘எங்கே போகலாம் ஏஜ்சலின்?’

தோழியைக் கேட்டாள். ஏஞ்சலின் வசீகரமாகச் சிரித்தாள். ஏஞ்சலின் என்ற பெயர் வைத்த எல்லாப் பெண்களும் வசீகரமாகச் சிரிப்பார்கள் என்று திடமாக நம்பலானேன்.

‘தேங்காத்திட்டு?’ என்று கேட்டாள் ஏஞ்சலின்.

‘ஊஹும். படகு கிடையாது. பழைய ஹார்பர் தான் இருக்கு அங்கே. சும்மா பீச் பாக்கப் போறது வேஸ்ட். உனக்கு வேணும்னா இன்னொரு நாள் வச்சுக்கலாம் இவளே’.

ஜோசபின் கித்தான் பையைத் தன் சைக்கிள் கூடையில் வைத்தபடி சொன்னாள்.

‘அப்போ ஊசுட்டேரி’ என்றாள் அந்த இவளே.

சாப்பாட்டுப் பதார்த்தங்கள் மாதிரியான பெயர்கள் மனதில் பதிய, பிரட் பொட்டலத்தை ஏஞ்சலினிடம் நீட்டினேன்.

‘பான்’?

பான் என்றால் மற்ற பிரதேசத்தில் நிலவுகிற மாதிரி வெற்றிலை பாக்கு இல்லை போல. இங்கே பிரெஞ்சு வளநாட்டில் பான் என்றால் பிரட் என்று பாடம் கற்றுத்தரப் பட்டது.

அப்படியும் இப்படியும் பொட்டலத்தைத் திருப்பிப் பார்த்து விட்டு என்னைக் கடுமையாகப் பார்த்தாள் ஜோசபின்.

‘தேதி கவனிச்சு வாங்க மாட்டியா?’

அவள் பெரியவள், நான் ரொம்பவே சின்னவன் என்று தோழியிடம் உறுதிப் படுத்திக் கொள்கிற முனைப்பு குரலில் தெரிந்தது.

‘நாளைக்கு செத்துடும்’ என்று விளக்கினாள் ஜோசபின். போன வாரமே காகிதத்தில் பொதிந்து விற்பனைக்கு அனுப்பிய ரொட்டியாம். சாப்பிட இன்றே இறுதி நாளாம்.

‘ஜோசபின், டாக்டர் வர்றார் பாரு’.

ஏஞ்சலின் அவசரமாகச் சுட்டிக் காட்டிய திசையில், ஊரில் உள்ள சொற்பமான பஜாஜ் ஸ்கூட்டர்களில் ஒன்று. என்ன இருந்தாலும் லாம்பிரட்டா கம்பீரம் பஜாஜில் வராது.

வேகமாக வந்த ஸ்கூட்டர் எங்கள் பக்கத்தில் வந்து நின்றது. எனக்குத் தெரிந்த டாக்டர் தான். காலேஜில் என்சிசி சேர்ந்த போது இவர் தான் மெடிக்கல் செக் அப் செய்ய வந்திருந்தார். தினசரி காட்லீவர் ஆயில் காப்ஸ்யூலும் முட்டை அடித்துக் கலக்கிய பசும்பாலும் சாப்பிடச் சொல்லி விட்டுப் போனவர். பாட்டிலில் சுறா மீனோ திமிங்கிலமோ படமாக அச்சடித்து ஒட்டி வரும் அந்த மாத்திரையை இனி என்றும் சாப்பிட மாட்டேன். கழித்தால், நாள் முழுக்க ஏப்பம் விட்டுக் கொண்டு நீலமீன்கள் வயிற்றில் நீந்தும்.

‘ஏஞ்சலின், ஒன் மினிட்’.

நர்ஸ் தோழியைத் தனியே அழைத்துப் பேசும் முன் ஜோசபினிடம் மன்னிப்புக் கோர மறக்கவில்லை அவர். நான் இருப்பதைத் தான் முழுக்க உதாசீனம் செய்து விட்டார். அவர் பேசுவதை முழுக் கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்த ஏஞ்சலின் தன் சைக்கிளை லாகவமாக ஒடித்துத் திருப்பினாள்.

‘து அஷான்ஸ் எ ஒப்பிதால். த்ராய் பஷ்யொ நூவெல் மே அத்மி. ரோசாலி ஃபெய் மாலாட்’.

அவசரத்தில் பிரெஞ்சு தவிர வேறேதும் பேச்சாக வராமல் கையைக் காட்டி விட்டு ஏஞ்சலின் போக, நான் ஜோசபினைப் பார்த்தேன். மாலாடு எங்ஙனம் வந்தது பெண்ணே?

‘ஆஸ்பத்திரியிலே எமர்ஜென்சி கேஸ் மூணு நோயாளி அட்மிட் ஆகியிருக்காங்களாம். ரோசாலி தான் டியூட்டி நர்ஸ். சிக் லீவ் போட்டுட்டா அந்தக் கழுதை’.

கழுதைக்கு என்ன பிரெஞ்ச் என்று கேட்டேன். என் பெயரைச் சொல்லி விட்டுச் சிரித்தாள் ஜோசபின். எனக்கு சிரிப்பு வரவில்லை.

‘இப்போ வீட்டுக்குத் திரும்பப் போக வேண்டியது தானா’?

சுவாரசியம் எல்லாம் வடிந்து நான் ஜோசபினைக் கேட்க, அவள் ஒரு வினாடி யோசித்தாள்.

‘சொன்னபடி கேப்பியா’?

‘கேட்பேன்’ என்றேன்.

‘விஷமம் பண்ணாம கையைக் காலை வச்சுக்கிட்டு இருப்பியா’?

‘இருப்பேன்’.

‘என்னைத் தொடமாட்டேன்னு சொல்லு’.

‘உன்னைத் தொடவே மாட்டேன்’.

‘இடுப் இடுப் .. ’

அவள் அழகாகக் குழற ‘இடுப்பைப் பிடிச்சு இறுக்க மாட்டேன்’ என்றேன்.

‘உதட்டுலே வந்து அது அது.. ’.

‘உதட்டுலே முத்தம் கொடுக்க மாட்டேன்’.

‘மூஞ்சி, உன்னைப் பத்தி தெரியாதா என்ன’?

கண்டிப்பாக ஆரம்பித்துச் சிரிப்பில் முடித்தாள் ஜோசபின். ஏஞ்சலின் இல்லாததாலோ என்னமோ அவள் சட்டென்று வயது குறைத்து என் சக வயசுக்கு வந்திருந்தாள், டவுண்ஹால் முத்தம் அவள் நினைவிலும் நிலையாக உறைந்த ஒன்று என்று அவள் சிரிப்பில் கலந்த வெட்கம் சொன்னது.

பொண்ணுக்குக் கோபமில்லை, ரசிக்கிறாள்.

‘சமத்தா வரணும்’ என்றபடி ஜோசபின் சைக்கிளில் முன்னால் போக, கூடவே தொடர்ந்தேன்.

‘ஊசுட்டேரி இங்கே இருந்து ஆறு மைல். உன்னாலே சைக்கிள் ஓட்ட முடியுமா’?

ஜோசபின் விசாரிக்க ஆறு என்ன அறுபது மைல் கூட அவளோடு வரமுடியும் என்றேன்.

‘ரொம்ப டயலாக் விடாதே’

‘ஓகே, லே மேடமாய்சில்லி’.

‘கடவுளே, அது லெ மதாமொசெலி’.

‘உய் மதாமொசெலி, உசுட்டேரியிலே என்ன புரோகிராம்’?

‘சொன்னேனே, ஏரியிலே படகு விடப் போறோம்’ என்றாள் ஜோசபின். ‘எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?’ என்று தொடர்ந்தாள்

‘என் சி சியிலே கடல்படையாக்கும் நான். படகு ஓட்டியிருக்கேன். கடல்லே எல்லாம் நீச்சல் போட்டிருக்கேன்’.

அவள் அழகாக ஆச்சரியப்பட்டாள். என்சிசியில் லெப்ட் ரைட் போட்டு விட்டு பூரி, கிழங்கு சாப்பிட்டேன் என்று நிஜத்தைச் சொன்னால் அந்த அழகு புலப்பட்டிருக்காது.

‘நல்லா சாப்பிடுவியா?’

இதுக்கு என்ன பதில் சொல்வது என்று முழித்தபோது தெரிய வந்தது – மூன்று பேருக்கு என்று உத்தேசமாக சமைத்து அவள் எடுத்து வந்ததை எல்லாம்
ஏஞ்சலின் இல்லாததால் நாங்கள் ரெண்டு பேருமே தின்று முடித்து தோணிகள் ஓட்டி விளையாடி வர வேணும்.

‘வேறே யாருமே வர ரெடி இல்லே’ என்று குறைச்சல்பட்டாள் ஜோசபின்.

‘வீராஸ் கூடவா?’.

அவள் மௌனமாக ஒரு நிமிடம் சைக்கிள் மிதித்து வந்தாள். பாதையில் குறுக்கிட்ட ஒரு ஆட்டுக் கூட்டத்தை சைக்கிள் மணி அடித்து ஒதுக்கிப் போனோம் இருவரும்.

‘வீராஸோட இல்லே நான். யார் கூடவும் இல்லே. தனியாத் தான் இருக்கேன். அன்னிக்கு டவுன்ஹால் டான்ஸ் போது அந்தக் குடிகாரனுங்க கிட்டே வேணும்னு தான் வீராஸ் கூட இருக்கேன்னு சொன்னேன். அப்படி யாரும் கிடையாது நிஜத்திலே. சொல்ல ஒரு பெயர் இருந்தா தொல்லை இருக்காது. அதான்’

மூச்சை இழுத்து விட்டேன். என்னமோ இனம் புரியாத சந்தோஷம். ஜோசபின் வேறு யாருக்கும் சொந்தமானவள் இல்லை.

சட்டென்று அவள் சைக்கிளை நிறுத்திக் காலூன்றி நின்றாள். மோதாமல் காலைத் தேய்த்து நானும் நின்றேன். அவளுடைய வண்டியின் முகப்பில் இருந்த கூடையில் விரல் சுண்டினாள்.

‘விழுந்துடும் போல இருக்கு. நீ கொஞ்சம் எடுத்துக்கோ’ என்றவள் ஒரு காஸரோல் பாத்திரத்தை வெளியே எடுத்து என்னைப் பார்த்து, ‘விலொபன்யி?’ என்று விசாரித்தாள். அபிநயத்தில், கூடை எங்கே என்கிறாள்.

‘என் சைக்கிள்லே அந்த அலங்காரம் எல்லாம் கிடையாது. வேணுமென்றால் பையோடு கழுத்தில் மாட்டிக் கொண்டு வரேன்’.

‘போர்தெவேலு’? என்று சைக்கிளின் பின்னால் காட்டிக் கேட்டாள்

‘கதிர்வேலு எடுத்துப் போயிட்டார்’ என்றேன்.

அவள் தேடிய பக்கவாட்டுப் பெட்டி என் வண்டியில் இருந்தது. இப்போது இல்லை. சினிமா பார்க்கப் போனபோது காணாமல் போய் விட்டது. அது போன மாதம் நடந்த ஒன்று.

ஜோசபின் கொடுத்த ஒரு பையை அட்ஜெஸ்ட் செய்து ஹாண்டில் பாரிலேயே மாட்டிக் கொண்டு ஓட்டி வந்தேன். அதற்குள் ஊர்வன, நடப்பன, பறப்பன என்று இறந்த காலத்தில் சுவாசித்த எதுவோ, வெங்காயமும் பூண்டும் துணைக்கு வர, உறங்கிக் கொண்டிருந்தது.

சாம்பல் நிறத்தில், பஞ்சுப் பொதி குதித்து நகர்கிறது போல வாத்துக் கூட்டம் ஒன்று பாதை கடந்தது. ஜோசபின் உஷ் உஷ் என்று விசில் அடித்தபடி, விளிம்பில் நகர்ந்த வாத்துகளின் இறக்கையில் உரசுகிற மாதிரி பெடலை அழுத்த, நான் பின்னால் இருந்து அவள் சீட்டை இறுகிப் பிடித்தேன்.

வண்டி கோணலாக நகர்ந்து நிற்க டொப் என்று சின்னச் சத்தம். துள்ளிக் குதித்து ஓடின வாத்துகள். மேய்த்து வந்தவன், ‘பஞ்சராயிடுச்சு’ என அறிவித்தபடி கோலோடு போனான்.

கோபமாக என்னை வெறித்தாள் ஜோசபின். கையை நீள வீசி என் தலையில் நறுக்கென்று குட்டினாள். வு வு வு என்று பிரஞ்சில் ஆரம்பித்து யூ யூ யூ என்று மொழிமாற்றியபடி தொண்டைப் பக்கம் என் சட்டையைப் பிடித்து இழுக்க, நான் முன்னால் சாய்ந்தேன். விழுந்து விடாமல் அவள் இடுப்பை அணைத்துத் தோளைப் பற்றி இழுத்தேன்.

‘கெட்ட பையன்.’

உதட்டைத் துடைத்துக் கொண்டபடி விலகும்போது முணுமுணுத்தாள்.

‘உன் சத்தியத்தை தண்ணியிலே தான் எழுதணும்’ என்றாள். திசொலி என்று சாரி சொன்னேன். அவள் சொல்லிக் கொடுத்தது தான். ‘நரகத்துக்குப் போ’ என்றாள். ‘அதுக்கும் சரி’ என்றேன்.

சைக்கிளைத் தள்ளிக் கொண்டு பத்து நிமிடம் நடந்தோம். பாதை ஓரத்தில் யார் வீட்டிலோ வேலிப் படலைத் திறந்து உள்ளே போனாள் ஜோசபின். ஸ்கர்ட் தரித்த ஒரு கோஷ்டி பாட்டியம்மாக்கள் அவளோடு வெளியே வந்து ஒரு வினாடி பங்க்சரான அவள் சைக்கிளையும் தீர்க்கமாக நேரம் எடுத்து என்னையும் பார்வையால் பரிசோதித்தார்கள்.

நான் பாஸ் ஆனேனோ தெரியாது, சைக்கிளை வீட்டு முற்றத்தில் வைத்துப் பூட்டினாள் ஜோசபின். சாப்பாட்டுப் பையைத் தூக்கிக் கொண்டு பிரெஞ்சில் அவர்களிடம் சுருக்கமாகக் கதைத்து விட்டு வெளியே வந்தாள்.

‘பின்னால் உட்கார்ந்து தான் போகணும், ரெடியா?’ என்று கேட்டேன்.

‘வேறே வழி?’ என்றாள்.

‘தொடுவேன்னு சொல்லு’. பின்னால் திரும்பி அவளிடம் என் நிபந்தனையைச் சொன்னேன்.

‘தொடுவேன்’ என்றாள் தரையைப் பார்த்தபடி.

‘இடுப்பை இறுக்கப் பிடிச்சுப்பேன்னு சொல்லு’.

‘மாட்டேன்’.

‘முத்தம் கொடுப்பேன்னு சொல்லு’.

‘சீ போடா’.

முதுகில் அடித்தாள்.

பின்னால் அவள் உட்கார்ந்து வர அடுத்த முப்பது நிமிடம் போனதை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இந்த ஜென்மத்தில் வரப் போவதில்லை. வாழ்க்கையிலேயே இனிமையாகக் கழிந்த அந்தப் பொழுதை என்றாவது பெயர்த்தெழுதி விட்டுத்தான் மரிப்பேன்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அமைதியாகப் பரந்து சின்னச் சின்ன அலைகளை வீசிக் கொண்டு ஒரு ஏரி. கொக்கும் நாரையும் கூட்டம் கூட்டமாகத் தண்ணீர்ப் பரப்பில் படிந்து மீனோடு மேலெழும்பி அகல, இன்னொரு கூட்டம் பறவைகள் சூழ்கின்றன.

‘இறங்கு’.

அவள் குதித்து இறங்கினாள். கையில் ஜாக்கிரதையாகப் பிடித்த தீனிப் பை.

சைக்கிளைப் பூட்டி வைத்து விட்டு, படகுத் துறைக்குள் நுழைந்தோம். சாப்பாட்டுக் கூடையும் பொட்டலமும் எல்லாம் புல் தரையில் வைத்தாயிற்று.

‘என்னப்பா படகையே காணோம்?’ என்றாள் ஏரிப்பரப்பை நோக்கிய ஜோசபின் சலிப்போடு.

‘நான் ஒளிச்சு வைக்கலே பார்த்துக்கோ’.

கையைத் தூக்கினேன். முதுகுப் பக்கம் கையை வளைத்து இறுக்கினாள்.

‘வம்பு பண்ணினா ஏரி ஆழத்துலே கொண்டு போய் தள்ளிடுவேன்’.
‘எங்கே தள்ளு பார்க்கலாம்’ என்று பதிலுக்கு அவள் கையை நான் இறுகப் பற்றி முறுக்க, படகுத்துறைக் காவல்காரன் வந்து நின்றான்.

‘மூணு படகுமே ஏரியிலே போயிருக்குதே முசியே’.

நாங்கள் பதிலேதும் சொல்லவில்லை.

‘எட்டு மணிக்கு ஒரு ஆபீசர் வந்து படகு எடுத்தார். அதைத் தவிர இன்னும் ரெண்டு இங்கேயே தான் கிடந்தது. ஒரு மணி நேரம் முந்தித்தான் டூரிஸ்டு எடுத்துப் போனாங்க’.

‘இப்போ என்ன பண்ணலாம், ஏரிக்கரையிலே நின்னு வேடிக்கை பாத்துட்டு திரும்பிடலாமா’?

‘அதெல்லாம் வேணாம் தம்பி. சாப்பாடு இருந்தா முடிச்சுக்குங்க. அதுக்குள்ளே ஏதாவது படகு திரும்புதான்னு பார்க்கலாம்’.

பூப்போட்ட சீட்டித் துணியைப் பரப்பி விரித்து நடுவில் இருந்தோம். ஏகப்பட்ட காகங்களும், அணில்களும், ஏதோ மேற்கு தேசத்தில் இருந்து வந்த பெலிகன் பறவைகள் சிலவும் துணைக்கு இருக்க, சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தோம். நேர்த்தியாக எல்லாம் பார்த்துப் பார்த்துச் சமைத்து, நேர்த்தியாகப் பாத்திரங்களிலும், ஜாடிகளிலும், போத்தல்களிலும் நிறைத்து எடுத்து வந்திருந்தாள் ஜோசபின்.

பிரட்டும், சோறும், பட்டாணிக் கூட்டும், உருளைக்கிழங்கு ரோஸ்டும், பப்படமும், ரோஜா சர்பத்துமாக வரிசையாக எடுத்து விளம்பினாள் அவள். வறுத்த மீன் துண்டு ஒன்றை எடுத்துக் கடித்தபடி வேணுமா என்றாள். இது மட்டும் வேணாம் என்றேன்.

‘வேறே என்ன வேணும்?’

சாப்பிட்டபடி என்னைப் பார்த்துச் சிரித்தாள். மீனை வாயில் இருந்து பிடுங்கி எறிந்து விட்டு, எதுக்கு பிடுங்க, அது பாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டு அப்படியே அந்த உதட்டில்.

‘வேணாம், நீ என்ன நினைக்கறேன்னு தெரியுது’.

‘ஷெ தெய்மா’ என்றேன். பிரஞ்சில் ‘ஐ லவ் யூ’ சொல்ல வாழ்க்கையில் முதல் தடவையாகக் கிடைத்த சந்தர்ப்பம் அது.

‘தத் து நெசான்ஸ் சொல்லு. பிறந்த நாள், வருஷம்’ என்றாள் ஜோசபின்.

வருடம், மாதம், நட்சத்திரத்தோடு டேட் ஆஃப் பர்த் சொன்னேன்.

‘நீ எனக்கு அஞ்சு வருஷம் சின்னவன்’. அதிசயம் அறிந்த தொனியில் சொன்னாள் அவள்.

‘ஸோ வாட்’?

‘நீ படிச்சு நல்ல வேலைக்குப் போகணும். உங்க வகையிலே நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும். பிள்ளை குட்டி, பேரன் பேத்தின்னு வம்சம் வளரணும்’.

‘குடுகுடுப்பைக்காரியா வேறே இருக்கியா ஒழிஞ்ச நேரத்திலே’

அவள் முகவாயில் இடது கையால் வருடியபடி கேட்டேன். சும்மா சிரித்தாள்.

‘தெரியலே. என்னன்னு சொல்லத் தெரியலே. வயசு வித்தியாசம் ஒரு நிமிஷம் மனசுலே வருது. அடுத்த நிமிஷம் உன் கண்ணைப் பார்த்தா, காணாமப் போயிடுது. நீ பேசாட்டாலும் கூப்பிட்டு வம்பிழுத்துப் பேசணும்னு இருக்கு. வெறும் பேச்சு மட்டும்தான். ஆனா, நீ தொட்டா என்னன்னு புரியாதபடி வசமிழந்து போயிடறேன். தப்புதான். வயசு, தகுதி, பேக்ரவுண்ட் எல்லாமே உனக்கும் எனக்கும் எவ்வளவோ வித்யாசமா இருக்கு. தெரியுது.’

அவள் கண் நிறைந்து வந்தது. சின்னக் குருவியை வருடுகிறது போல் என் விரலால் அவள் இமைகளை நீவித் துடைத்தேன்.

‘வாய்க்கலேடா. உனக்கு அப்புறம் பிறந்து செமினார் ஸ்கூல், கல்வே ஹைஸ்கூல்னு படிச்சிருக்கணும். முடியாதா, டவுண்ஹால்லே அவசரமாக் கொடுத்தியே, அந்த முத்தத்தோட என் ஆயுசு முடிஞ்சிருக்கணும். இல்லியா, இப்போ இங்கே வரும்போது நிதானமாக் கொடுத்தியே அதோட நான் சந்தோஷமாப் போய்ச் சேர்ந்திருக்கணும். வெறும் அமிதி.. ப்ரண்ட்ஷிப் .. அதான் விதிச்சிருக்கு. அதுக்கு மேலே போக முடியாது. போகவும் கூடாது. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். ஏன்னா, ஷெ தெய்ம் தொ.. ஐ டூ லவ் யூ’.

என் பக்கத்தில் நகர்ந்து உட்கார்ந்தாள். அணைக்கத் தோன்றவில்லை. விலக்கவும் தான்.

‘எனக்கு ஜோசபின்னு பெயர் வைச்சது சரியாத்தான் இருக்கு’.

‘எப்படி’ என்று புரியாமல் கேட்டேன்.

‘அது பிரஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியான் பெண்டாட்டி பேரு’.

‘நெப்போலியன் போனபார்ட்’?

‘ஆமா, நெப்போலியான் போனபா. அவனுக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாத பொண்ணு அந்த ஜோசபின். அவனை விட ஆறு வயசு பெரியவ. ரெண்டு பேரும் உசிருக்கு உசிரா காதலிச்சுட்டு இருந்தாங்க.. ஆனாலும் சீக்கிரமே பிரிவு வந்துடுச்சு’.

ஜோசபின் குரல் உடையச் சொன்னாள்.

‘கவலைப்படாதே. நான் எந்தக் காலத்திலேயும் நெப்போலியான் போனபா, வந்தப்பா, சித்தப்பா, பெரியப்பா எல்லாம் ஆக முடியாது’ என்றேன்.

ஏரியில் பேச்சுக் குரல்கள் மிதந்து வந்தன.

‘போட் வருது, வா கிளம்பலாம்’.

ஜோசபின் கை கழுவியபடி எழுந்தாள், அடுத்த பத்தாவது நிமிடம் துணி சுருட்டி, எச்சில் இலை களைந்து, புல்லை சீராக்கி நானும் அவளும் நகர்ந்து ஏரியில் மிதக்கும் படகில். நிறுத்தி வைத்த மரச்சட்டத்தின் இடைவெளிகளில் துடுப்புகளைப் பொருத்தி வலிக்க ஜோசபின் கற்றுக் கொடுத்தாள்.

‘வாய்ப்பாடு சொல்ல மாட்டியே’.

படகுக்கு வெளியே கை அளாவி உள்ளங்கையில் அள்ளிய நீரை அவள் மீது தெளித்துச் சிரித்தபடி படகு வலித்தேன். வெள்ளிச் சதங்கை அணிந்த அவளுடைய காலில் பார்வை நிலைத்திருக்கத் துடுப்புகளை வேகமாக இயக்க, வாழ்க்கை முழுவதும் நதிக்கரையில் படகுக்காரனாக இருந்ததாகத் தோன்றியது. ஒரே ஒரு பயணியை மட்டும் இக்கரையிலிருந்து அக்கரைக்கும் அக்கரையில் இருந்து இக்கரைக்கும் ஏற்றியும் இறக்கியும் திரும்ப ஏற்றியும் போகிற படகுக்காரன்.

நிமிர்ந்து பார்க்க, நீல வானம் அடர்ந்து சூழ்ந்து கூடவே வந்தது. எவ்விப் பறந்து போகும் கறுப்புப் பறவைத் தொகுதிகளும், நீளமாகக் குரல் எடுத்துக் கரைந்து உயர்ந்து சிறு துளிகளாக நகரும் நீர்ப் பறவைக் கூட்டங்களும் தூய வெளியை நிறைத்தன. காற்று மெதுவாக வீசும் சூழலில் நீர் வாடை ததும்பி ஏரி என்னை ஆட்கொண்டது. எதிரே உட்கார்ந்து ஒரு வினாடி கண்மூடி, மறு வினாடி கண் திறந்து என்னைப் பார்த்து அழகாகச் சிரிக்கிறவள் எனக்கு எல்லாமும் ஆக, காலம் உறைந்து போயிருந்தது.

ஜோசபின் சின்ன உறக்கத்தில் தொடர, எனக்கும் கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம். படகு கொஞ்சம் ஆடியது. மண்ணும் மக்கிய இலையுமாகக் கரைசல் ஏதோ ஏரிப்பரப்பில் பரவ, சுருண்டு மடிந்து வரும் அலைகள் படகைச் சுற்றிப் படர்ந்து நீர் வட்டம் போட்டன. அடுத்த வினாடி படகு நிலைகுலைந்து இன்னும் பலமாக இப்படியும் அப்படியும் அசைய, ஏரிக்குள் சாடி விழுந்தேன்.

நான் ஓங்கிக் கத்தினேன். ஜோசபின் கண் திறந்து பார்த்து, அபாயம் முழுக்க அர்த்தமாக, உடனே துடுப்புகளைப் பற்றி வலித்தாள்.

‘நீந்தி வாடா. பதறாதே. ஓரமா போட்டோடு கூட வா’.

‘எனக்கு நீஞ்சத் தெரியாதே’.

அவள் அலற ஆரம்பிப்பதையும், கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருந்த இன்னொரு படகையும் பார்த்தபடி நான் நீர்ப் போக்கில் மிதந்தேன். இமைகள் பாரம் அழுத்தி அசதி கவியக் கண்ணை மூடிக் கொண்டேன்.

பாதி விழித்தபோது பறவைச் சத்தமும், மங்கி வரும் வெளிச்சமும் நினைவில் படிந்து விலகிப் போனது. மூக்குப் பொட்டு அணிந்த கருத்த தேவதையாக ஜோசபின் குனிந்தாள். என் உதடுகளில் அவள் உதடுகள் படிவதைப் பார்த்தபடி மறுபடி கண்ணயர்ந்தேன்.

மீண்டும் விழிக்க, தார்ச்சாலையில் மெல்ல நகரும் வேன். ஆலைக் கரும்பு அடுக்கிய பரப்பு போக மிச்ச இடத்தில் சைக்கிளை கிடத்தி விட்டு, நானும் ஜோசபினும்.

என் தப்புதான். நீந்தத் தெரியாது என்பதைப் படகில் ஏறியதுமே சொல்லியிருக்கலாம்.

எதிர்ப் படகில் வந்தவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். ஜோசபின் என்ற தோழியோடு ஜோசபின் என்ற நர்ஸும் என்னைப் பிழைக்க வைத்திருக்கிறாள்.

பாதி விழித்தபோது, நர்ஸ் ஜோசபின் எனக்குக் கொடுத்த முத்தத்தில் காதல் இல்லை, காமமும் இல்லை. சாவிலிருந்து என்னைக் காப்பாற்றிய கிஸ் ஆஃப் லைப் அது. உயிர் முத்தம்.

வேன் சத்தத்தைக் காதில் வாங்கியபடி கண்ணைச் சற்றே மூடினேன்.

‘திரும்பவுமா’ என்று பரபரப்பாக விசாரித்தாள் ஜோசபின்.

‘தலை கிறுகிறுன்னு வருது’

‘வரும் வரும்’.

போக்கிரிப் பையனை விசாரிக்கிற வாத்தியார் மாதிரி அவள் எட்டி என் கழுத்தைச் சுற்றிக் கையால் வளைத்துப் பிடித்தாள். நான் விரைவாகச் செயல்பட்டேன்.

அரை நிமிஷம் கழித்து உதட்டைத் துடைத்துக் கொண்டு சொன்னாள் –

‘உன்னை ஏரியிலேயே திரும்ப தள்ளி விட்டிருக்கலாம்’.

(தொடரும்)

# தினமணி இணைய தளத்தில் ஜங்ஷன் பகுதியில் இன்று வெளியானது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன