புது Bio-Fiction தியூப்ளே வீதி அத்தியாயம் 10 இரா.முருகன்


‘எலிசபெத் லாட்ஜ் சரியா இருக்கும். என்ன நினைக்கறே’.

நான் சுவாரசியமாகக் காப்பி குடித்துக் கொண்டிருந்தேன். உலகத்திலேயே வேறே எந்த சர்க்காரும் எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் ஜனங்களுக்காகக் காப்பிக் கடை நடத்துவதாகத் தெரியவில்லை. அதுவும், இன்றைக்கு முழுக்க உட்கார்ந்து ஒரே ஒரு கப் காப்பியை மில்லிமீட்டர் செண்டிமீட்டராக, பீங்கான் கோப்பையே கரையும் அளவுக்கு எச்சில் பண்ணிக் குடிக்கிற நாகரீகம், குடிக்கிறவர்களை நேரமாச்சு என்று எழுப்பி விடாத பண்பாடு இதெல்லாம் இங்கே போல எந்த நாட்டிலும் இருக்காது.

இந்த ஊரில் பெரும் குடிக்கு மதுக்கடைகள் எவ்வளவு சேவை செய்கிறதோ அதைவிட இம்மியளவு அதிகம் சிறு குடியாகக் காப்பி தழைக்க காப்பி ஹவுஸ் பாடுபடுகிறதாக நம்பிக்கை. கல்லூரி போகாவிட்டாலும் பரவாயில்லை, காப்பி ஹவுஸில் அட்டென்டன்ஸ் இருந்தாலே பல விதத்தில் கல்லூரி மாணவன் என்ற அடையாளம் கிட்டும்.

‘நான் மொத்தமா காசு கொடுக்கறேன். நீங்க யாரும் தர வேண்டாம்’.

உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றி ஓங்கி அடிக்கிற ரேஞ்சில் உணர்ச்சி வசப்பட்டு எங்களைச் சத்தியப் பிரமாணத்தில் கட்டுப்படுத்திக் காப்பி குடிக்கக் கூட்டி வந்திருக்கிறான் லெச்சு.

‘காப்பி மட்டும் தான்’பா. கையில் காசு அதுக்குத்தான் இருக்கு. பிஸ்கட் வேணும்னா அவங்க அவங்க வாங்கிக்கலாம். எனக்கும் ஒண்ணு கொடுத்திடணும்’.

சரி தான். ஆனால் அவன் கணக்கில் அந்த ஓசிக் காப்பியையும் குடிக்க விடாமல் எலிசபெத் லாட்ஜை எதற்கு இப்போது இழுக்கிறான்?

எங்கே இருக்கு அது?

நான் அவசரமாகக் கேட்க, இப்படியும் ஒரு பித்துக்குளியா என்ற ஏளனத்தோடு லெச்சு என்னைக் கண்ணைச் சிறுத்துப் பார்த்தான்.

‘நீ எத்தனை காலமா இந்த ஊர்லே இருக்கே’?

’ரெண்டு மாசம்’.

‘தூ முவா? தூ ஷூர் அசி. நம்ம கொம்யூன் ஹிஸ்த்வொ, யோஹபி, பொட்டனிக் அல்லாம் செய் த்து ச வெ வூ’?

ரொழெப் பொண்ணு பிரெஞ்சில் பொழிந்தாள். கூட வந்த அமீலி சிரிக்க, ரொழெ என் காதைத் திருகினாள். எலிசபெத் லாட்ஜோடு இவளுடைய பிரெஞ்சுக்கும் கோனார் நோட்ஸ் வேண்டியிருக்கிறது. காதைத் திருகினதுக்கு அவளிடம் தனியாக சிறப்புப் பொருள் விசாரித்துக் கொள்ளலாம். அல்லது அமீலியிடம் அவள் சார்பில் சொல்லச் சொல்லலாம். சிரித்தால் குழி விழும் அமீலியின் பளிங்குக் கன்னமும் பெரிய விழிகளும் மேலே படர்ந்த பட்டாம்பூச்சி போல அழகுக் கண்ணாடியும் எனக்குப் பிரியமானது.

அமீலி ரொழே சொன்னதை மொழிபெயர்க்க ஆரம்பித்து என்னைப் பார்த்து ஏனோ குழறத் தொடங்கினாள். எதுக்கு வெட்கப் படுகிறாய் பெண்ணே?

‘ரெண்டு மாசமா? ரெண்டே நாள் போதும். இந்த டவுணோட ஹிஸ்டரி, ஜாக்ரபி, பாட்டனி, மேத்தமெடிக்ஸ், காமர்ஸ், எகனாமிக்ஸ்லாம் தெரிஞ்ச எக்ஸ்பர்ட் ஆகிடலாம். தெரியுமாடா கேணப் பயபுள்ளே’?

சட்டென்று ஆண் குரலில் ரொழே ஒலிபரப்பானாள். சிரிச்ச பேசன் என்று நாங்கள் செல்லமாகக் கூப்பிடும் சிற்சபேசன் வேண்டுமென்றே சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு ரொழே சொன்னதை விட அதிகமாகவே மொழி பெயர்த்தான்.

இருக்கட்டும், அந்த எலிசபெத் லாட்ஜ்?

‘ஈஸ்வரன் தருமராஜா கோவில் தெருவும் மிஷன் ஸ்ட்ரீட்டும் வெட்டிக்கற இடத்துலே இருக்கு. மூணு மாடி. குளிக்க வென்னீர் எப்பவும் ரெடியாக் குழாய்லே கொட்டும்’.

லெச்சு விளக்கினான்.

அங்கே போய் ஏன் குளிக்கணும்?

‘உங்களை வச்சுக்கிட்டு ஒரு காரியம் முடிவு செய்ய முடியாது’

லெச்சு காப்பி ஹவுஸின் இரைச்சலை மீறிக் கத்த, வெயிட்டர் சவரிராயன் வந்து நின்று எங்களுக்கு மட்டும் கேட்கக் கூடிய குரலில் சொன்னார் –

‘இன்னொரு தடவை சத்தம் போட்டா, வெளியே அனுப்பிடுவேன்’.

இங்கிலீஷ் உதவி புரபசர் வல்லூரிக்கு அண்ணன் மாதிரி இவர். வல்லூரி வகுப்பில் இருந்து வெளியே அனுப்பினால் காப்பி ஹவுஸ் வரலாம். ஆனால் காப்பி ஹவுஸில் இருந்து துரத்தப்பட்டால் காலேஜ் போக முடியாது.

இந்த அருமையான தத்துவத்தை ஒரு தடவைக்கு ரெண்டு தடவையாகச் சொல்லி எங்களைப் பிரமிப்படைய வைத்தபடி லெச்சு மறுபடி சப்ஜெக்ட்டுக்கு வந்தான்.

‘கமலஹாசன் வரும்போது தங்க வைக்க எலிசபெத் லாட்ஜ் தான் சரிவரும்’.

வெற்றிப் பிரகடனம் செய்கிற பெருமையோடு பக்கத்து டேபிள் பிரெஞ்சுக்கார டூரிஸ்டுகள், ரெண்டு மேஜை தள்ளி மஞ்சக்குப்பம் மாட்டுத் தரகர்கள், ஓரமாக முழுக்கை சட்டை போட்ட கவர்மெண்ட் ஊழியர்கள் என்று இருந்த முழுக் கூட்டத்தையும் மெல்லப் பார்த்தபடி பார்வையை நகர்த்தி லெச்சு சொன்னான்.

‘கமல்ஹாசன் யார்’?

ரொழெப் பெண்ணின் கேள்வியை ஒதுக்கித் தள்ளினோம். அவளுக்குத் தெரியாத சமாசாரம் தமிழ் சினிமா.

எலிசபெத் லாட்ஜில் எப்படி, எதற்காக கமலஹாசன்?

‘நம்ம கல்லூரிப் பேரவை தொடக்க விழா. அடுத்த மாசம் பத்தாம் தேதி நாள் குறிச்சிருக்கு. சீஃப் கெஸ்ட் கமலஹாசன் தான்’.

திட்டவட்டமாக அறிவிக்கிறான் லெச்சு என்ற அரியாங்குப்பம் குப்புசாமி லெட்சுமணன். பேரவைச் செயலாளர். தினசரி மெஜந்தா தியேட்டரில் விசிலடிச்சான் குஞ்சுகளா பாட்டு பார்த்தே கமலஹாசனோடு நட்பு வளர்த்துக் கொண்டு அவரைப் பேரவையைத் திறக்கக் கூட்டி வருகிறான். லெச்சு மாதிரி பெரிய மனுஷர்களோடு சிநேகிதமானது எனக்குப் பெருமை.

‘லெச்சு கவுன்சில் பூட்டும். கமல் ஓபன் பண்ணும். சரியா?’

அப்படித்தான் என்று ரொழேயிடம் அடித்துச் சொன்னேன். அடிக்காதே, வலிக்குது என்று விலகி எதிர்ப் பக்கம் உட்கார்ந்தாள் அவள். ரொழெயோடு வந்திருந்த

அமீலி என் பக்கம் நகர்ந்து உட்கார்ந்தாள். இதைத் தானே எதிர்பார்த்தேன்.

‘மெட்ராஸ் எப்போ போனே’?

வைத்தே லெச்சுவைக் கேட்டான். அவன் பேசும்போது எப்போதும் வெளியிலேயே கண் இருக்கும். அவனுடைய அப்பாவின் மோட்டார் சைக்கிளை எடுத்து வந்திருப்பதால் அந்த ஜாக்கிரதை. ரெட் ரெய்டிங் ஹுட் என்று பெயர் எழுதி, நாலு பேர் சௌகரியமாக உட்கார்ந்து போகிற அளவு பெரிய மோட்டார் சைக்கிள் அது. மேலே ஒரு கூரை மட்டும் இருந்தால் அம்பாசிடர் காருக்கு ஒன்று விட்ட தம்பி ஆகியிருக்கும்.

லெச்சு சென்னை போகவில்லையாம். சொல்லப் போனால் இங்கே வெகு அருகில் இருக்கிற எல்லைப் பிரதேசமான கடலூர் கடந்து கூட அந்தப் பக்கம் போகவில்லை.

அப்புறம் கமலஹாசன் எப்படி இங்கே வந்து கல்லூரிப் பேரவையைத் தொடங்கி வைக்க சம்மதித்தார்?

‘நாம கேட்டா மாட்டேன்னு சொல்ல மாட்டார். நம்பிக்கை வேணும். அதான் அடிப்படை’.

லெச்சு எதோ சினிமாவில் அல்லது எல்லா சினிமாவிலும் முத்துராமன் கண்ணை அகலமாக்கிக் கொண்டு பேசுகிறது போல பேசினான்.

இந்த அடிப்படை விஷயம் எப்படி யோசித்தாலும் உதைக்கிறது. என்றாலும் அவன் தான் செயலாளர். நானும் மற்றவர்களும் அவனுக்கு ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த பேரவை சாதா உறுப்பினர்கள். மற்றும் நண்பர்கள். அவனுக்கு ஆதரவாக எப்பவும் இருக்கத்தான் இங்கே அனைவருக்கும் காப்பி உபச்சாரம்.

கையில் வைத்திருந்த ரஃப் நோட்டைத் திறந்து காட்டினான் லெச்சு. அது அவன் எங்கே போனாலும் கூடவே வரும். எந்த வகுப்புப் பாடமும் அதில் இருக்காது. வகுப்பு நேரத்தில் அவ்வப்போது வரையப்படும் புரபசர்களின் முகம், முதல் வரிசை தேவதைகள் ராட்சசி கெட் அப்பில், என்னவளே என்று ஆரம்பித்து அந்தரத்தில் நிற்கும் புதுக் கவிதை, குமரன் தியேட்டரில் சவாலே சமாளி முதல் நாள் எல்லா காட்சிகளுக்குமான வசூல் விவரம் இப்படிச் செறிவான தகவல் பலதும் உள்ள முக்கியமான ஆவணப் பெட்டகம் அது.

லெச்சு ரஃப் நோட்டில் பிரித்துக் காட்டிய பக்கத்தில், ‘சிந்திக்கிறேன், அதனால் உயிர்க்கிறேன்’ என்று எழுதிக் கையெழுத்து. சாட்சாத் கமலஹாசன் போட்டுக் கொடுத்தது.

‘கமல் நடிக்கற மலையாளப் படம் ஷூட்டிங் பத்து நாள் முந்தி நம்ம பீச்சுலே நடந்துது. அடிச்சுப் பிடிச்சுப் போய் ரஃப் நோட்டை நீட்டினேன். ஸ்கூல் போகலியான்னாரு. ஸ்கூல் எல்லாம் ரெண்டு வருஷமா விட்டாச்சு. இப்போ காலேஜ் தான் போகலேன்னேன். சிரித்தார். ஆட்டோகிராஃப் போடச் சொன்னேன். போட்டுட்டார். மெட்றாஸ் வந்தா பாக்கலாமானு கேட்டேன். வாங்களேன்னு சொல்லியிருக்கார்’.

அந்த நல்லுறவைப் பேணிக் கமலஹாசனைப் பேரவை விழாவுக்கு அழைக்கிறான் லெச்சு.

‘இன்னும் ஒரு மாசத்துக்கு மேலே இருக்கு. நாம, முதல்லே கமலஹாசனுக்கு ஒரு லெட்டர் போடுவோம். வந்தே ஆகணும்னு கண்டிப்பா சொல்லிடலாம். எலிசபெத் லாட்ஜ் விஷயம் வந்தபிறகு பாத்துக்கலாம்’.

கட்டாயம் வரச் சொல்லிக் கமலஹாசனுக்கு தமிழில் எழுதுவதா இங்கிலீஷிலா என்று தெரியாமல் இரண்டு மொழியிலும் எழுதி உடனே அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அது என்ன மாதிரி அழைப்பு என்று சொல்லிவிட்டால் உத்தேசமாக பிரெஞ்சிலும் மொழி பெயர்த்துத் தர ரொழே முன் வந்தாள். அது மட்டுமில்லை, அன்றைய காப்பிச் செலவு, கெத்து டிபான்ஸ் என்ற பிஸ்கட் செலவு எல்லாம் அவள் தருவதாகச் சொல்லி விட்டாள். லெச்சுவுக்கு நண்பன் ஆனதில் கிடைத்த கூடுதல் நன்மை, ரொழே இப்படி அடிக்கடி இலவசங்களின் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து குளிக்க விடுவதுதான்.

‘கமலஹாசன் மட்டும் போதாது. இன்னொருத்தர் ரெண்டு பேர் இருந்தாத்தான் அவை நிறைஞ்சு இருக்கும்’.

வைத்தே சொன்னான். அப்படித்தான் என்று எல்லோருக்குமே பட்டது. லெச்சு தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.

அவன் ஒப்பித்த பட்டியலில் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரி, பிரெஞ்சு ஜனாதிபதி பாம்பிடு, இங்கிலாந்து எலிசபெத் ராணி தவிர வேறே பிரமுகர்கள் எல்லோரும் இருந்தார்கள். இத்தனை பேரும் ஒத்துக் கொண்டு புறப்பட்டு வந்து சேர்ந்தால், சவுகரியமாகத் தங்க வைக்க, எலிசபெத் லாட்ஜ் என்ன, இந்த ஊரே காணாது.
வைத்தேயின் அப்பா அவ்வப்போது கட்டுரை எழுதி சென்னை பத்திரிகைகளில் வருமாம். கம்பராமாயணத்தில் காய்கறிகள், திருக்குறளில் பூக்கள் என்று தலைப்பிட்ட அதையெல்லாம் பிரசுரிக்கவும் தமிழில் பத்திரிகைகள் உண்டாம். அந்த பத்திரிகை எடிட்டர்களில் யாரையாவது அப்பா கூப்பிட்டால் அவர் வந்துவிடுவார் என்றான் வைத்தே.

இதில் இன்னொரு கொசுறு நன்மையும் உண்டு. அப்படி வரும் பட்சத்தில் அந்த விருந்தாளி. வைத்தே வீட்டில் தங்கிக் கொண்டு அங்கேயே மூணு வேளை சாப்பாடு, குளியலும் வைத்துக் கொள்ளலாம். ஆகவே, பத்திரிகை ஆசிரியர் ரெண்டாம் புள்ளியாக அழைக்கப்படுவார். இப்போதைக்கு எக்ஸ் என்று அவருக்குப் பெயரிட்டு அது அங்கீகரிக்கப்பட்டது.

‘மூணாவது ஒரு லோக்கல் ஆசாமி இருந்தால் நல்லா இருக்கும்’.

அந்துவான் சொல்ல ஆமோதித்தோம். அதிசயமாக, தடங்கலே இல்லாமல் சொன்னான்.

‘மூணாவதாக ஒரு உள்ளூர்ப் பேச்சாளர் வேணும்னா, அது கயல்விழியோட அப்பா பார்வேந்தனார். கறிகாய் வாங்க மார்க்கெட் போனாலும் இலக்கணமாத்தான் பேசுவார்’.

சொல்லி நிறுத்தி என்னைப் பார்த்தான் லெச்சு.

‘நீயே போய்க் கூட்டி வந்துடு. மாப்பிள்ளை தானே’.

அபாண்டம். கயல் சாக்லெட் சாப்பிட ஒத்தாசை செய்ததால் பார்வேந்தனார்க்கு மாப்பிள்ளையாகி விட முடியுமா என்ன? கூழாக சாக்லெட் தீற்றிய கயல்விழியின் இதழை விரலால் ஒற்றிச் சுவைத்ததும், அவள் நெற்றியில் புரளும் முடிக் கற்றையை ஒதுக்கி விட்டதும் கூடக் கணக்கில் வரலாம். ஆனால், இந்த ரகசியம் எல்லாம் லெச்சுவுக்கு எப்படித் தெரியும்?

‘சும்மா உன்னைக் கிண்டல் பண்ணச் சொன்னேண்டா’.

நான் பலமாக மறுக்கும் முன், லெச்சு அவசரமான சமாதான உடன்படிக்கைக்கு முன்வந்தான். அதானே. அவனுக்கு சேவை செய்யவே பிறப்பெடுத்த நல்ல நண்பனை பேரவைத் தொடக்க விழா நேரத்தில் இழக்க அவன் தயாராக இல்லை என்று நிச்சயமானது.

‘நீ அந்தப் பொண்ணோட மல்லாக்கொட்டை போடறதை கவனிச்சிருக்கேன். அதான் நூல் விட்டுப் பார்த்தேன். அந்துவான், நீ என்ன சொல்றே’?

அந்துவான் இவனுக்கு இவனுக்கு என்று சொல்ல ஆரம்பித்து அபிப்பிராயத்தைத் தெளிவாக வெளியிட்ட திருப்தியில் என்னைப் பார்த்து விரல் சுண்டிச் சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன். அவன் சர்வரைத் தலையை ஆட்டிக் கூப்பிட்டு, இன்னொரு காப்பிக்கு ஜாடை காட்டினான். ரொழே செலவுதானே, பிஸ்கட்டும் சேர்த்து எல்லோருக்கும் காப்பி பரிமாறப் பட்டது.

சூடான அந்தக் கோப்பை காப்பியில், அந்துவான் தொண்டையில் சிக்கிய வார்த்தை வெளியே வந்து விட்டது.

‘இவனுக்கு இவனுக்கு எத்தனை கேர்ள் பிரண்டு தெரியுமா? ஒபிதால் நர்ஸ் ஜோசபின், சீனியர் வைஷாலி, கயல்விழி, ஊர்லே ஒரு பொண்ணு அதும் பேர் நினைவு வரல்லே’.

அந்துவான் போட்டு உடைக்க நான் சும்மா இருந்தேன். எதை மறுக்க, எதற்காக மறுக்க? அந்துவானுக்கு கொஞ்சம் போல நன்றி வேண்டுமானால் சொல்லலாம்.

ஜோசபின் நர்ஸாக வேலை பார்க்கிற விஷயம் எனக்கே இப்போது தான் தெரியும்.

காசனோவா என்றாள் ரொழே, மேஜைக்குக் குறுக்கே என்னோடு கை குலுக்கி. டான் ஜுவான் என்றான் வைத்தே வாசலைப் பார்த்துக் கொண்டு. மதன காமராஜன் என்றான் சிரிச்ச பேசன். இவர்கள் எல்லாரும் யாரென்று தெரியாவிட்டாலும் சிரித்து வைத்தேன்.

பக்கத்தில் இருந்த அமீலி என்னைத் திரும்பிப் பார்த்த பார்வையில், பெண் பித்தா, காமுகா என்று அஞ்சலிதேவி டூரிங் டாக்கிஸ் சினிமாவில் ரீல் அறுந்து போகப் போக ஒட்டி ரங்காராவைத் திட்டி சாபம் கொடுப்பது நினைவு வந்தது. மேஜைக்குக் கீழே அமீலியின் மெத்தென்ற காலடி என் கால் மேல் இதமாகப் படிய ஒரு வினாடி மெய்மறந்து கண் மூடினேன். ஓங்கி உயிர் போகிற மாதிரி மிதித்து விட்டு அவள் எங்கோ பார்த்துக் கொண்டு விஷமமாகச் சிரிக்க, அமீலி அப்பா பிரஞ்சு ராணுவத்தில் இருப்பது அடுத்து நினைவு வந்தது.

நான் விடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் எழுந்து விக்டரோடு ஜாகிங்காக இல்லாமல் தனியாக கடற்கரைக்குப் போனேன். சுங்கச் சாவடி அருகே உள்ளொடுங்கி அலை அவ்வப்போது சிதறும் பாறைச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கடகடவென்று கடிதம் எழுதி முடித்தேன். கமலஹாசனுக்கு அழைப்புக் கடிதம் அது.

பரமக்குடியில் பிறந்தவரே, களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவரே என்று போகிற மெய்க்கீர்த்தி தேவரின் மாணவன் படத்தில் திரும்பியவரே என்று அழைத்து நிறைவு பெற, பேரவைத் தொடக்க விழாவுக்குத் தலைமை வகிக்க அழைப்பு ஆரம்பம்.

‘நல்லாத்தான் வந்திருக்குடா. கமலஹாசன் பேசினா மட்டும் போதாது. பேசி முடித்து, விசிலடிச்சான் குஞ்சுகளா நடனமும் ஆட வேண்டும்னு சேர்த்துடுடா. ரெக்கார்ட் போட்டுடலாம். நாம, ரொழெ, அமீலி, கயல் எல்லாரும் கூடவே ஆடலாம்’.

கடிதத்தைத் திருத்திய வடிவத்தில் லெச்சுவிடம் கொடுத்தேன்.

‘அட்ரஸ்’?

‘கமலஹாசன், மெட்றாஸ்னு போடு’.

அப்புறம் என்னவோ நினைவு வர, போன மாத பொம்மை சினிமாப் பத்திரிகையைப் புரட்டிப் பார்த்து விட்டு, ஆழ்வார்ப் பேட்டை, மெட்றாஸ் என்று விலாசத்தை விரிவாக எழுத வைத்தேன்.

கடிதம் தபாலில் சேர்த்து நான்கே நாளில் பதில் வந்து விட்டது. கமல் தான் எழுதியிருந்தார்.

‘உங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி. எனக்கு அங்கு வந்து உங்கள் எல்லோருடனும் சினிமாவும் இலக்கியமும் பேச ஆசை. எனில், மலையாளப் படத்துக்காக எர்ணாகுளத்திலும் வேம்பநாட்டுக் காயலிலும் தொடர்ந்த படப்பிடிப்பு அடுத்த மாத இறுதி வரை இருப்பதால் நான் நாளை கேரளம் போகிறேன். உங்கள் கல்லூரிப் பேரவை விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.’

ஜெண்டில்மேன் என்று காப்பி ஹவுசில் எங்கள் கோஷ்டி மட்டுமில்லாமல் நாங்கள் வலியப் போய்க் கடிதத்தைக் காட்டிய சுற்றமும் நட்பும் பரிச்சயமுமான எல்லாரும் ஒரு மனதாகக் கருத்துத் தெரிவித்தார்கள். காப்பி ஹவுசில் பில்டர் காப்பி வாசனையோடு அவர் புகழும் நீக்கமற நிறைந்திருந்தது கமலஹாசனுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை வந்திருப்பாரோ என்னமோ.

லெச்சு கையில் கமல் கடிதத்தோடு இன்னொரு கடிதமும், இன்லண்ட் லெட்டர் வடிவத்தில் இருந்தது.

இது யார் எழுதியது என்று விசாரிக்க, லெச்சு கடிதத்தை என் கையில் கொடுத்தான்.

‘உங்கிட்டே சொல்ல விட்டுப் போச்சுடா. வைத்தேயோட அப்பா பத்திரிகை ஆசிரியர் ப்ரண்டை சம்மதிக்க வச்சிட்டார். அவருக்கும் லெட்டர் போடச் சொன்னார்’.

‘சரி, போட்டாச்சு தானே’.

‘போட்டேன். அதான் பிரச்சனையே’.

அவசரத்துக்கு, நான் கமலஹாசனுக்கு எழுதிய அழைப்புக் கடிதத்தையே ஒரு வார்த்தை விடாமல் காப்பி அடித்துப் பத்திரிகை ஆசிரியருக்குத் தட்டி விட்டிருந்தான் லெச்சு.

இண்லெண்ட் லெட்டரை பிரித்தேன்.

‘உங்கள் அழைப்புக்கு நன்றி. நான் பரமக்குடியில் பிறந்தவன் இல்லை. செட்டிநாட்டுக் காரன். நாளது தேதி வரை எந்த சினிமாவிலும் நடித்ததில்லை. உங்கள் பேரவைத் தொடக்க விழாவில் பேச மட்டும் முடியும். நடனம் ஆட முடியாது. எழுபது வயதாகிறது’.

ஒரு பாட்டம் சிரித்துத் தீர்த்தேன். அமீலி கடிதத்தைப் பிடுங்க என் பக்கமாகச் சாய, தரமாட்டேன் என்று கையை வீம்புக்கு உயர்த்தினேன். அவள் முகவாய் என் தோளில் வந்து அழுத்த, நெருக்கமாக சூயிங்கம் வாசனை. அனுபவித்துக் கொண்டு, ஆட முடியாத அந்தப் பத்திரிகையாசிரியருக்கு மானசீகமாக நன்றி சொன்னேன்.

கயல்விழியின் அப்பாவை அழைக்க நான் தான் போயிருந்தேன். பேச வருவதாக உடனே ஒப்புக் கொண்டார். பிரின்சிபால் ஏற்கனவே பேசி விட்டாரம்.

இருந்தும் நான் வந்து கூப்பிட்டது உள்ளபடிக்கே அவருக்கு உவகை அளிக்கும் ஒன்றாம். மூத்தோரைப் போற்றுதல் நம் குமுகாய ஒழுக்கம் என்றார் அவர்.

குமுகாயம்?

‘சமுதாயம் என்று வடமொழியில் சொல்கிறீர்களே. அதுதான்’.

‘சென்னையில் இருந்து திரைப்பட இசைப் பல்லியம் ஒன்றும் விழாவிற்கு வர இருக்கிறது. பூம்புகார் பேரங்காடி உரிமையாளருடைய படத்துறை நண்பர் மூலம் ஏற்பாடு ஆனது’.

பல்லியம் என்ன என்று புரியாமல் கயல்விழியைப் பார்த்தேன். இல்லாவிட்டாலும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘பல்லியம்னா சிம்ஃபொனி ஆர்கெஸ்ட்ரா. சங்கர் கணேஷ், டி.எம்.எஸ், சுசீலா எல்லாரும் வராங்க’.

விசிலடித்தான் குஞ்சுகளா குஞ்சுகளா.

கயல்விழியோடு ஆடுகிற கற்பனையில் மனம் றெக்கை கட்டிப் பறந்தது.

‘தம்பி, ஓர் ஐயம்’.

பார்வேந்தனார் என்னிடம் குழைவாகச் சொன்னார். அல்லது எனக்கு அப்படிப் பட்டது.

‘என்ன சார் ஐயம், வியங்கோள் வினைமுற்றா’?

‘இல்லையப்பா, கல்லூரியிலே நம்ம கயலுக்கு’.

சாக்லெட் ஊட்டியது இங்கும் சிறப்புச் செய்தியாக அரங்கேறியிருக்கிறதா? துறைமுகத்தில் புயல் அபாயக் கொடி எண் ஐந்து ஏற்ற வேண்டிய சூழ்நிலையில் மாட்டிக் கொண்டேனோ.

‘கல்லூரியில் பெண்கள் தனியாக அமர்ந்து பகல் உணவருந்த இடம் இல்லையாமே’?

ஆமாம். எனில், நான் எப்படி உதவி செய்ய இயலும்? கயலுக்குக் கை வலிக்காமல் சாப்பாடும் ஊட்டத் தயார் தான்.

சரி, உங்கள் முதல்வரிடம் இதைப் பேசுகிறேன் என்று கயல்விழி கையால் சுமாரான சுவைக் குழம்பி கொடுத்து அனுப்பி விட்டார். கிளம்பும்போது கயல் காதில் கிசுகிசுத்தாள்.

‘மஞ்சள் தாவணி எப்படி இருக்கு’?

டக்கர் என்றேன்.

‘உனக்காகத் தான் போட்டேன்’.

அவள் ஓரக்கண்ணால் பார்த்தாள்.

‘எனக்காக எடுத்துடேன்’.

‘சீய்ய்’.

என் மகிழ்ச்சியை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு சைக்கிள் பறந்தது.

வீட்டில் அப்பா முன்னறையில் உட்கார்ந்து மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தார். பக்கத்தில் பாரதியார் கவிதைகள், பார்வேந்தனார் எழுதிய தமிழர் மாண்பு, ஊர் வரலாறு, ஆனந்தரங்கம்பிள்ளை டயரிக் குறிப்பு எல்லாம் திறந்து கிடந்தன.

‘உங்க காலேஜ்லே எத்தனை ஸ்டூடண்ட்ஸ்’?

‘ஏன் கேக்கறீங்கப்பா? ஒரு ஐநூறு, அறுநூறு’.

‘உங்க காலேஜ் பேரவை தொடக்க விழா, நான் தான் தலைமை வகிக்கறேன். பிரின்சிபால் கேட்டுண்டார்’.

கையிலே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்காக அலைந்ததை மேகலா நினைவு படுத்திப் பழிக்க, மஞ்சள் தாவணியில் இன்னொரு அழகியும் உண்டு என்றேன் அவளிடம்.

‘உருப்பட மாட்டே. உருப்படவே மாட்டே’.

மேகலா குரல். மேகலா மட்டுமில்லை. பல்லியமாக அவளோடு கூட ஜோசபின், கயல்விழி, அமீலி. இன்னும் யார் யாரோ அழகான பெண்கள்.

‘யுன் ஃபை தொ ப்ள ஸில்வொ ப்லெ’.

ரொழெ ‘ஒன்ஸ் மோர் ப்ளீஸ்’ கேட்க, நான் ஓடினேன்.

(தொடரும்)

16.7.2015 தினமணி இணையத் தளத்தில் வெளியானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன