புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 36 இரா.முருகன்


அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பத்தாறு இரா.முருகன்

ஆலங்கட்டி மழையோடு மாலை கவிந்தது.

புழுதி மண் மணக்க மணக்கத் தெருவே பண்டிகைக் கொண்டாட்டமாகக் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த இரைச்சல் ஜன்னல் வழியே கடந்து வந்து உள்ளே நிறைந்த போது, வைத்தாஸும் வாசலுக்கு வந்தான்.

இரண்டு கட்டிடம் தாண்டி மோட்டார் கார் ஒர்க்‌ஷாப் தரையில் சிதறிக் கிடந்த திருப்புளிகளும், சுத்தியலும், பழுது பார்க்கும் சர்தார் சாஹப்பின் நீலத் தலைப்பாகையும், தனக்குள் சிறிய வானவில் காட்டும் மசகெண்ணெய் தேங்கிய தரையும், எழுதப்பட்டு வரும் கவிதையின் வரிகள் போல் அழகாகத் தெரிந்தன.

டீக்கடை பெஞ்சில் விழுந்த ஆலங்கட்டிகளைக் கழுத்தில் இழைத்த கடைக்காரர் கூகூவென்று குழந்தை போல இரைச்சல் இட்டபடி வைத்தாஸைப் பார்த்துச் சிரித்தார். மனதில் இறுக்கம் தளர்ந்து எல்லோரும் குழந்தைகளாக வெளிப்பட்டதைப் பார்த்துக் கொண்டே நிற்கத் தோன்றியது வைத்தாஸுக்கு.

மொழிகளைக் கடந்த இந்தக் கவிதை முடியாமல் நீண்டு கொண்டே போகட்டும்.

சாப், வாங்க.

சாயாக் கடைப் பையன் விழுந்து கொண்டிருந்த பனிக்கட்டிகளைக் கையில் ஏந்தி ஓடி வந்தான். அதை வைத்தாஸின் கை நிறையத் திணித்து விட்டு அவனைப் பிடிவாதமாக வெளியே இழுத்தான்.

தெருவில் சிறு பையன்களும், முட்டாக்கை எடுத்து விட்டபடி ஒரு கிழவியும், நாலைந்து நடு வயசுப் பெண்களும் ஆட ஆரம்பித்திருந்தார்கள். பாடிக் கொண்டே ஆடுகிற அந்த மழை நாட்டியக்காரிகள் எல்லோரையும் வைத்தாஸ் அறிவான்.

சாப், ஓடி வாங்க.

வெறுங் காலோடா?

போனால் என்ன? ஓடி நடந்த அவனுடைய சொந்த மண்ணுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன வித்தியாசம்? ஆடிக் கொண்டிருக்கிற மனுஷர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களும் தான் அவனுக்கு வேற்றாளா என்ன?

சீராகக் கைதட்டு ஒலித்துக் கொண்டிருந்த தெரு நடுவில் வைத்தாஸும் ஆட ஆரம்பித்தான். மேலே படிந்து சிதறும் ஆலங்கட்டிகளை விலக்காமல் ஆடினான் அவன். அவற்றில் ஒன்றிரண்டை முகத்தில் அழுத்தி நிறுத்தியபடி ஆடினான்.

கனவில் அடிக்கடி தொடர்ந்து ஒலிக்கும் முரசுகள் தலைக்குள் தொம்தொம்மென்று அதிர்ந்து கால்களை இயக்கின. இருப்பை ஆட்டம் மூலமாக மட்டும் நிலை நிறுத்த அனுமதிக்கப்பட்டதாக அறிவித்த அந்தக் கணங்கள் வைத்தாஸை வேறொரு உலகத்துக்குக் கட்டி இழுத்துச் சென்றன.

அவன் ஆடுவதால் அவனாக இருக்கிறான். இந்த கணத்துக்காக தெய்வங்களுக்கும் அசுரர்களுக்கும் நன்றி.

கூடவே ஆடியவர்கள் அந்த வேகத்துக்கும் லயிப்புக்கும் ஈடு கொடுக்க முடியாமல் சந்தோஷமாகச் சிரித்தபடியே நிறுத்திக் கொண்டார்கள். ஒதுங்கி நின்று இன்னும் பலமாகக் கைதட்டிக் கொண்டே இருந்தார்கள் அவர்கள் எல்லாரும்.

தகரக் கூரைகளில் தெறித்துச் சிதறும் பனிக் கட்டிகள் உருளும் தரையில் அவன் கால்கள் சுழன்று ஆடிக் கொண்டிருந்தன. ஒரு பிறவியில் ஆட வேண்டியதை எல்லாம் ஒரே பொழுதில் ஆடி முடிக்க சந்நதம் வந்தவனாக அவன் குதித்தும் சாடியும் கூக்குரலிட்டும் ஆட, இரவு ஊர்ந்தது.

கண் திறந்து பார்க்க அவன் மட்டும் தான் இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறான். மழைச் சாரல் வலுத்துச் சத்தம் மிகுந்து பொழிந்து கொண்டிருக்கிறது.

மின்சாரம் காணாமல் போன தெருவில் மண்டிய இருள் அடர்த்தியாகக் கரும் பஞ்சுப் பொதியை வெளி முழுக்கவும் அழுத்திப் பரப்புகிறது. எங்கோ குரல்கள் தேய்ந்து ஒலிக்கின்றன.

நந்தினி.

மழையின் தாரைகள் ஊடே வைத்தாஸ் இலக்கின்றிக் கையளைந்தான்.

நந்தினியும் இங்கே தான் இருக்கிறாள். அவனோடு ஆடிக் கொண்டிருக்கிறாள். அழுத்தி மேலே படரும் இருட்டுப் பொதியை விலக்கி அவனை அழைக்கிறாள்.

அவள் கையில் மடக்கிப் பிடித்திருந்த ஆலங்கட்டிகள் கரைந்த துக்கத்தைக் கண்ணால் பகிர்ந்து கொள்கிறாள். அழுது முடித்த கண்களில் உயிர் மிச்சம் இருக்கிறது. மழை நின்ற வெளியில் ஆலங்கட்டிக்காகக் கைநீட்டி நிராசையோடு நிற்கிறாள். அந்தக் கண்கள் வைத்தாஸின் கால்களைத் தொடர்கின்றன.

நந்தினி.

சாயாக் கடையில் ஒற்றை பெட்ரோமாக்ஸ் விளக்கு எரிய ஆரம்பித்தது. வைத்தாஸ் தளர்ந்து நடந்து இருப்பிடத்தில் பிரவேசித்தான்.

நந்தினி. அவளைத் தேடிப் போக வேண்டும் என்று வெறியாக மனதில் எழுந்த நினைப்பு ஆவேசமாக மோதி அலையடித்தது.

நாளைக் காலை லண்டனுக்குப் பறக்க வேண்டும். அங்கே இருந்து அவனுடைய நாட்டுக்கு அண்டை நாடுகள் ஏதாவது ஒன்றுக்குப் பயணம் வைக்க வேண்டும். இறுதிக் கட்டமாக ஆடிக் கடகடக்கும் பழைய லாரியிலோ இருக்கைகள் சிதைந்த ஜீப்பிலோ, கண்ணி வெடிகள் விதைத்த தரிசுகளைக் கடந்து ஒரு நீண்ட பிரயாணம். முடிவில் நாடு. ஊர். தெரு. வீடு.

வீடு இருண்டு கிடக்கும். பூட்டி இருக்கும். தூசி அப்பி, நூலாம்படைகள் தொங்கும்

ஆள் அரவம் மறந்த வீட்டில் வைத்தாஸ் படி ஏற மாட்டான். அவனை நிச்சயம் யாராவது, எந்த சக்தியாவது நந்தினி இருக்குமிடத்திற்குக் கொண்டு செலுத்தும். அவன் எதிர்பார்த்து வாசலிலேயே காத்திருப்பான். ராணுவ வண்டிகள் இல்லாத தெரு அவனுக்கு முன் பரபரப்பு இன்றி விரிந்திருக்கும்.

போக வேண்டும். நாளைக்கு லண்டனுக்குப் போய்ச் சேர வேண்டும்.

முடியாத காரியம் அது. கையில் இருக்கும் பணம் போதாது. எட்டு மணி நேர இடைவெளியில் பயணம் வைக்க முடியாது. எந்த நாட்டு விசாவும் வைத்தாஸிடம் இல்லை.

தூதர் என்று பதவி கொடுத்து அமர்த்தியபின் நினைத்துக் கொண்ட மாதிரி எல்லாம் பறக்க முடியாது. நாளை அரசு திரும்பி வரும்போது அவன் இங்கே எதுவுமே இடைப்பட்ட காலத்தில் நடக்காத மாதிரித் தொடர்ந்து இயங்கியாக வேண்டும்.

நந்தினி காத்திருக்கட்டும். அவளுக்கு மேன்மையாகவே பொழுதுகள் கடந்து போய்க் கொண்டிருக்கும். அவன் சீக்கிரம் நந்தினியை மீட்பான். இப்போது சுற்றிச் சூழும் பௌதிகமான இந்த இருளில் இருந்து முதலில் விடுதலை வேண்டும்.

மேஜை டிராயரில் மெழுகுவர்த்தியைத் தேடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் திரும்பி வந்தது.

மங்கிய பல்ப் வெளிச்சத்தில் வெறுமை தீற்றி நின்றது அந்த வீடு. அதன் வலிந்து உருவாக்கப் பட்ட அலுவலக தோரணைகள் எளிய பல்ப் ஒளியில் கலைந்து போக, திருலோக்புரியின் மற்ற அடித்தட்டு வசிப்பிடங்களுக்கும் இந்த வீட்டுக்கும் பெரிய வேற்றுமை ஏதும் காட்சியில் இல்லை.

ஏன் இல்லை?

மற்றதெல்லாம் குடும்பம் நடத்தப்படும் வீடுகள். ஹமாரா மர்த் என்று இந்த ஊரில் பெண்கள் நாணமும் பெருமையுமாகச் சொல்லும் கணவன், மேரி அவ்ரத் என்று அந்தக் கணவன் அலட்சியமும் அன்புமாக முணுமுணுக்கும் மனைவி, ஒன்றும் இரண்டும் மூன்றுமாகக் குழந்தைகள் எல்லாம் உள்ள வசிப்பிடங்கள் அவை எல்லாம்.

இந்தக் கட்டிடம் மேஜையில் பாதிக்கு வடக்கே ஆபீஸ். சமன் லால் வெற்றிலை மென்று குனிந்து குப்பைத் தொட்டியில் துப்பி வைக்கும் அலுவலகம். விசா கேட்டு முதியவர்கள் வந்து நிற்கும் தூதரகம். வீடா இது?

லண்டன் ஐந்து நட்சத்திர ஓட்டல் குளிர்ச்சியிலும், அம்பலப்புழையில் கொட்டும் மழையில் குளிர்ந்த மர வீட்டில் சதா மணக்கும் ஈரத்திலும் கூட வந்தவளே, என் ப்ரியமான நந்தினி, இந்த இரண்டு அறை வீடும் அதுவே ஆபீஸுமான சிற்றிடத்தில், ஜன்னல் வழியே தூறல் திவலைகள் உள்ளே ஒரு காற்றில் சிதறி ஒழுங்கின்றி நனைத்துக் கொண்டிருக்கும் அரையிருட்டுப் பொழுதில் கூட இருப்பாயா?

எலக்ட்ரிசிட்டி இருக்கே அது போதும். சந்தோஷமாக இங்கே உன்னோடு எப்பவும் இருப்பேன். டாய்லெட்டில் பழைய ப்ளாஸ்டிக் வாளியை மட்டும் தூக்கிப் போட்டுட்டு புதுசாக ஒரு வாளியும், குவளையும் வாங்கு. புது ஸ்டவ் ஒன்றும்.

ஒவ்வொண்ணாத்தான் கவனிக்கணும். முதல்லே ஸ்டவ் வாங்கிடலாம். அடுத்த தெருவில் பஞ்சாபி தாபா சாப்பாட்டுக் கடையில் மிதமான காரத்தோடு காய்கறிக் கூட்டும், நெருப்பில் சுட்ட இரண்டு ரொட்டிகளுமாக ராத்திரி உணவும் முடித்து வர வேண்டியது தான்.

நந்தினி வந்து சேரும் போது வெண்ணெய் கலந்து பிசைந்த னான், ருமாலி ரொட்டி எல்லாம் அங்கே இருந்து சுத்தமாகச் செய்யச் சொல்லி வரவழைக்கலாம். நல்ல, கொழுப்பு குறைந்த, மசாலா பெயருக்குச் சேர்த்த காரமில்லாத கறியும் கூட.

பூட்டையும் சாவியையும் தேடி எடுத்துக் கொண்டு அவன் வெளியே போக யத்தனித்தபோது மறுபடியும் கரண்ட் போனது.

பழகிப் போன இருட்டு.

வாசலில் யாரோ நிற்கிறார்கள். அவன் பக்கத்தில் நெருங்க வியர்வையும் ஈரத் துணி வாடையும் பெண் வாடையும் கலந்த கந்தம்.

போதை ஏற்றுவது. சித்தம் கலங்கி அலைய வைப்பது. அலைய வைத்தது.

வீராவாலி.

அவள் தான். வைத்தாஸுக்குத் தெரியும். எப்படி, ஏன், எதற்காக என்ற கேள்விகள் எல்லாம் அனாவசியமானவை. அவனுக்குக் கேட்கவும், பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கவும் பொறுமை இல்லை.

அவள் வந்திருக்காவிட்டால் அவன் போயிருப்பான். எந்தக் கேள்வியுமே தேவைப்படாத போது எங்கே என்பதும் எதற்கு?

வீராவாலி.

அவள் பெயரை உயிர் பிறப்பிக்கும், உயிர் காக்கும், உயிருக்கு நீட்சி தரும் மந்திரமாக கவனமாக உச்சரித்தான் வைத்தாஸ். பிரிந்திருந்த அவள் உதடுகளில் தீற்றிய விரல்களில் தீ பறந்தது. விரல் அரணி கடைந்து வந்த அக்னி அது.

வாசலிலும் உள்ளிலுமாக நின்றபடி வீராவாலியை இழுத்து அணைத்துக் கொண்டான் அவன், வாசல் இருட்டில் தரையில் ஏதோ கிடக்கிறது தெரிந்தது. இருந்து விட்டுப் போகட்டும்.

வீராவாலியின் தோளைப் பற்றி உள்ளே இழுத்தான் அவன். மேஜையில் கால் இடித்துக் கொண்டது.

இது தூதரகமா வீடா? அவனுக்கு ஒரு கவலையுமில்லை.

கரண்ட் வந்தபோது பசியும் வந்து சேர்ந்தது. வயிற்றுப் பசி.

தரையில் இருந்து மெல்லத் தூக்கி அவளைக் கட்டிலில் விடும்போது ஒரு வினாடி அணைத்துச் சுமந்த படியே நின்றான்.

அந்தக் கணத்தில் உறைந்து விட வேண்டும் என்று எங்கெல்லாமோ பேசியதும் எழுதியதும் இந்தக் கணம் தான். அவனுக்குப் புரிந்தது. இதல்லாமல் வேறு எங்கும், யாரோடும் பங்கு போட இல்லை.

நந்தினி என்றது மனது. நான் தான் நந்தினி என்றாள் வீராவாலி.

அவளுடைய மொழி அவனுக்கு அர்த்தமாகவில்லை. தோளில் இன்னொரு முறை முகர்ந்தான். இந்த உடல் வாடைக்காக அவன் ஓடி நடந்து சுற்றித் தேடுவான்.

வீராவாலி.

மூர்க்கமாக மறுபடி அவளை அணைத்துக் கொள்ள அவள் அவன் காதில் அகவினாள். மயில் போல. குரல் பின்னப்பட்டு சிதையாமல். ஆண்மைச் சுவடின்றி, கலவி வேண்டிக் கரைந்து காத்திருக்கும் பெண் மயில்.

அவளை உள்ளே விட்டுக் கதவு சார்த்தி வரும்போது பெரிய நிதியைக் கவனக் குறைவாக இட்டது இட்டபடி விட்டு விட்டு, அற்பமான ராத்திரி உணவுக்காக அலைந்து தேடிப் போகிற அபத்தம் நினைவில் பட்டது.

இன்னிக்கு என்ன சாப் ஆலங்கட்டி மழை கிளப்பி விட்ட அகோரப் பசியா? தினம் இப்படியே ஆர்டர் பண்ணுங்க. நாங்களும் ஒரு கல் கட்டிடம் கட்டிட்டு செட்டில் ஆக வேணாமா?

பஞ்சாபி தாபா சாப்பாட்டுக் கடைக்காரர் அன்போடும் உரிமையோடும் சொன்னதோடு மட்டுமில்லாமல், ஒரு டிபன் காரியரில் ராய்தா, குல்சா, எலுமிச்சம் பழமும் இன்னும் எதுவுமோ பிழிந்து கிண்டிக் கலந்து காரத்தை இறக்கிய கொர்மா, பெஷாவரி னான் என்று பார்த்துப் பார்த்து எடுத்து வைத்து நீட்டவும் மறக்கவில்லை.

இதெல்லாம் உங்க நாட்டு மேலே அன்பு வச்சு செய்யறது. டீக் ஹை சாப்?

அமைச்சர் கூட இப்படி தோரணை கலக்காத நிஜப் பிரியத்தோடு பேச மாட்டார்.

கொண்டு வந்ததில் பாதிக்கும் குறைவாகவே பசி தீர்க்கப் போதுமானதாக இருந்தது. அடுத்த நிமிடம் உடல் பசி அக்னியாகப் படரத் தொடங்கியது.

ஆதியில் தோன்றிய பெயரில்லா மிருகங்கள் போல அவர்கள் கலந்தார்கள். இடைவிடாமல் காமமும் அவ்வப்போது அதையும் மீறிய காதலுமாக இணைந்தார்கள்.

மழை கிளப்பி விட்டிருந்த வெக்கையும் மனதில் தகிக்கும் ஆசையும் தாங்கி வியர்த்த உடல்கள் கட்டிலை நனைத்து தளம் கட்ட, அந்த வாடையே சகலமுமாகச் சூழ அவர்கள் பற்றிப் படர்ந்தார்கள்.

ஒருவர் மற்றவராகி, இருவரும் வேறு யார் யாரோவாக உரு மாறி இன்னும் இன்னும் என்று உணர்வின் வடிகால்களை உடல் கொண்டு கற்பித்து, யாரும் யாரையும் முந்தாத போகம் துய்த்தார்கள்.

பாதி ராத்திரிக்கு, மழை கும்மாளம் கொட்டிப் பெய்ய ஆரம்பித்தது.

குளிரில் உடலுக்குள் உடலாகக் கவிந்து லயிக்கும் முன் வீராவாலி வாசலுக்குப் போனாள். அங்கே வாசல் சுவரை ஒட்டித் தரையில் ஓரமாகப் பரத்தி வைத்திருந்த எதையோ தோளில் சுமந்து உள்ளே எடுத்து வந்தாள்.

அவள் நடந்து வருவதைப் படுத்தபடியே காமம் மீதூறப் பார்த்தான் வைத்தாஸ். மனம் கலவி என்றது. உடல் சற்றுப் பொறுத்து என்று தயங்கியது.

வீராவாலி கொண்டு வந்தது சிறிய, வர்ணமெலாம் உடம்போடு ஒட்டிய ஒரு மயில். இயற்கையைச் சிறியதாகக் குறுக்கி ஒரு கற்சிலையாக வடித்து மயிலை உருவாக்கியது போல அது கால் மடக்கிச் சுருண்டிருந்தது.

வீராவாலி.

அவள் பெயரை எத்தனையாவது முறையாகவோ உச்சரித்தபடி அவளில் தன்னைக் கரைத்து இன்னொரு முறை அமிழ, வீராவாலி மறுபடி அகவினாள்.

அந்த மயில் உயிர் பெற்றது. கட்டிலைச் சுற்றித் தாழப் பறந்தது. அகவியது.

(தொடரும்)

2 comments on “புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 36 இரா.முருகன்
  1. சரவணன் சொல்கிறார்:

    வைத்தாஸின் நாட்டுக்கு ஒரு பெயர் கொடுத்திருக்கலாம்…

  2. Era Murugan சொல்கிறார்:

    ரொம்ப யோசித்து, வேண்டாம் என்று வைத்தேன், சரவணன் 🙂

    கற்பனையாகத் தரலாம் ஆனால் மன நிறைவு வராது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன