புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாய 35 இரா.முருகன்


அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பத்தைந்து இரா.முருகன்

உங்கள் நாட்டில் போய் வேலை பார்க்க நான் தயார். எனக்கு அனுமதி விசா கொடுக்க முடியுமா?

எதிரே உட்கார்ந்து, செயற்கைக் காலின் இருப்பைக் கால் சராய்க்குள் கைவிட்டுச் சோதித்தபடி கேட்ட வயோதிகரைக் கூர்ந்து பார்த்தான் வைத்தாஸ்.

இவர் சாயலில் யாரையோ பார்த்திருக்கேன். யார்?

வைத்தாஸ் மனதில் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டிருந்ததற்கு விடை கிடைத்த வினாடியில் தான் வந்தவர் விசா கோரியது.

அவர், கட்டைக்கால் வைத்த அந்த மதராஸி, வைத்தாஸின் சாயலில் இருக்கிறார்.

வைத்தாஸை விட குறைந்தது பத்து வயதாவது பெரியவராக இருப்பார். நிறையப் படித்திருக்கிறார் என்று அவர் பேச்சிலிருந்தே தெரிந்தது.

ஆனாலும் ஜன சமுத்திரத்தில் மெல்லக் கரைந்து நகரும் அன்றாட வாழ்க்கைக்கு அனுசரணையாக, எந்த நாட்டில் என்றாலும் சரி, அங்கே அவரால் இருக்க முடியது. உணர்வு பூர்வமான எல்லா விசாரங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, கடை வீதியில் ஒரு தேங்காய் பன் வாங்கி வரவோ, தெருமுனை சாயாக்கடையில் இஞ்சி போட்டு சூடாக சாயா தரச் சொல்லிக் கேட்டு விட்டு, வரும் வரைக்கும் இயல்பாக மர பெஞ்சில் மற்றவர்களோடு காத்திருக்கவோ இவரால் முடியாது.

மின்சார ரயிலில் நெரிசல் மிகுந்த நேரத்தில் ஏறவோ இறங்கவோ இவருக்கு ஏற்பட்ட சிரமம் தான் காலையே இழக்க வைத்திருக்கிறது. வீட்டுக்குள் முடக்கிப் போட்டிருக்கிறது.

ஏதோ ஒரு வேகத்தில் தில்லி வந்தவருக்கு அதன் நீட்சியாக இந்த நிலையிலும், வயதிலும் வெளிநாடு போய்ச் சம்பாதிக்க வேண்டும் என்று ஆவேசம். அது எந்த நிலையில் இருக்கும் நாடு, எந்த திசையில் இருக்கிறது, இங்கே இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதெல்லாம் பற்றி இந்த நிமிடத்தில் தெரியாவிட்டாலும், சிரமம் எதுவும் இல்லையாம் அவருக்கு. தானே தெரிய வருமாம் அதெல்லாம் காலம் கனிந்து வரும்போது.

இடதுசாரி அரசியலும். அதே சார்ந்த பத்திரிகை உத்தியோகமும் சராசரிக்கு மாறுபட்டு தன்னை யோசிக்க வைத்ததாகச் சொன்னார் பரமேஸ்வரன் நீலகண்டன்.

என் சொந்த வாழ்க்கை பற்றிச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை. வேலை தேடும் மகன். லாவணிக் கலைஞராக இருந்து மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி. அவள் பென்ஷன் பற்றி விசாரிக்கத்தான் தில்லி வந்தேன். விசா அளிக்க இந்த விவரம் விரிவாகத் தேவையென்றால் சொல்கிறேன். சொல்லலாமா?

நீலகண்டன் கோரிக்கை வைக்கும் குரலில் சொன்னாலும் கம்பீரமாக அறைக் கோடியில் பார்வை பதித்து பார்க்க முற்பட்டார். எந்தத் தகவலும் வேண்டாம் என்று அவசரமாகக் கையசைத்தான் வைத்தாஸ்.

என் சகோதரன் அமைச்சராக இருக்கான். அவனிடம் கடிதம் வாங்கி வந்து விசா கேட்கலாமா என்று யோசித்து இதோ வேண்டாம் என்று வைத்து விட்டேன்.

அவர் சலுகை காட்டிய பாவனையில் சிரித்தார். கொண்டு வந்திருந்த ரெக்சின் பை மேஜையில் இருந்து நழுவி விழ, சிரமப்பட்டுக் குனிந்து அதைத் திரும்ப எடுக்க முயற்சி செய்தார். வைத்தாஸ் சற்றே நாற்காலியைச் சாய்த்து பையை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

தூதரையே வேலை வாங்குகிறேனே. நான் நரகத்துக்குப் போவேனோ?

அவர் சூழ்நிலையைச் சுமுகமாக்கும் விதமாகச் சொன்னார். வைத்தாஸ் சுருக்கமாகச் சிரித்து வைத்தான். தூதர்களின் கடமைகளில் முக்கியமானது, வந்தவர்கள் மனம் நோகாமல் பேச்சு வார்த்தை நடத்துவது. வெறுங்கையோடு திரும்ப வைத்தாலும் மன நிறைவோடு அவர்களைப் போகும்படி செய்வதும் கடமையில் அடக்கம் என்பதில் அவனுக்குச் சந்தேகம் எதுவுமில்லை.

அவருக்கு விசா கொடுப்பதைப் பற்றி அப்புறம் பேசலாம். இப்போது ஆதரவாக ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றியது வைத்தாஸுக்கு.

கதவு தட்டப்படும் சத்தம். தெருக்கோடி கடையில் இருந்து சாயா கொண்டு வரும் மதராஸி சோக்ராதான். அழைப்பு மணி அடிப்பது அவனுக்கு அபாயகரமானது. இரண்டு முறை இதே தெருவில் சாயா தூக்கி வந்தபடிக்கு மணி அடிக்க, எலக்ட்ரிக் ஷாக் ஏற்பட்டுக் கோப்பைகளோடு தூக்கி எறியப்பட்டதாகச் சொல்லி இருக்கிறான்.

எனக்கு மட்டும் விசா போதும். தனியாகவே போவேன். கூட வர்றது தைரியம் தான்.

வந்தவர் இந்தியில் சொல்ல, பையன் முழுக்கக் கேட்டது போல் ஆதரவாகச் சிரித்தான்.

தைரியமெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு நிமிடத்தில் கவனத்தை ஈர்த்து ஏதாவது மாறுபட்டுச் செய்யத் தூண்டும் மனோபாவம்.

வைத்தாஸுக்குத் தெரியும். இந்த நாட்டில் அங்கங்கே, முக்கியமாக மலையாள பூமியில் இப்படியான வீரதீரர்களை நிறையச் சந்தித்திருக்கிறான் அவன்.

அம்பலப்புழை ஓட்டலில் சோறு சரியாக வேகவில்லை என்பதற்காக ஓட்டல் முதலாளியை இழுத்துப் பிடித்துக் கூட்டி வந்து உட்கார வைத்து எச்சில் தட்டில் மிச்சச் சோறைத் தின்னச் சொன்னவன் இந்த மாதிரித்தான்.

அவன் முகத்தில் அலாதியான சந்தோஷம் இருந்தது. அவன் கூட நின்றவர்கள் சர்வதேச அளவில் மாற்றம் வந்தாக வேண்டும் என்று கோஷம் போட்டதாக சாமு சொன்னான். புளிப்பும் காரமும் சரிவர அமையாத சாப்பாட்டை சர்வதேச ரீதியில் எப்படி மாற்றம் கொண்டு வந்து சரிப்படுத்துவது என்று வைத்தாஸுக்குப் புரியவில்லை தான் அப்போது.

தொடர்ந்து, ஓட்டல் உடமையாளர் சங்கம் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு கூட்டம் வந்து அவர்களும் பதிலுக்கு முழங்க, இரண்டு தீவிரமும் தணிந்து, சாயா குடித்துப் பிரிந்து போனார்கள் அன்று. தேநீர் சர்வதேச மாற்றத்தைக் கொண்டு வர உதவி செய்யக் கூடும்.

இன்னொரு சாயா வை.

வைத்தாஸ் ஒரு கிளாஸ் தேநீரை வாங்கிக் கொண்டு, வந்தவர் பக்கம் கை காட்டினான்.

இங்கே வரும்போது, ஒரு கிளாஸ் தேநீர் கூடவே எப்போதும் எடுத்து வருகிறவன் பையன். உபசரித்து தேநீர் கொடுக்க இங்கே யாரும் வந்து சேராவிட்டால் வைத்தாஸ் குடிப்பதற்கு இன்னொரு கோப்பை கிட்டும்.

நீ ராத்திரிப் பள்ளிக்கூடம் போறியோ?

வைத்தாஸ் பையனைக் கேட்டான். அவனுக்கு அது கவனத்தை எப்போதும் கவரும் விஷயமில்லை தான். ஆனாலும், படிக்கிற வயதுப் பையன் அழுக்கு டிரவுசரும், இரும்புத் தூக்கில் டீ கிளாஸுகளுமாக, பள்ளிக்கூடம் போகாமல் சாயாக் கடை வேலை பார்ப்பது அவனுக்கு ஒவ்வாதது.

அதுவும் வைத்தாசுக்குப் பழக்கமான அம்பலப்புழையை விட்டு தில்லி திரிலோக்புரிக்கு சாயா கடையில் வேலை பார்க்க இந்தப் பையனைப் போல் எத்தனை பேர் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பார்கள்?

பையன் ஒவ்வொரு தடவை சாயாவோடு வந்து நிற்கும் போதும் வைத்தாஸ் இனம் புரியாத குற்ற உணர்ச்சியால் குமைந்து போகிறான். கோப்பை காலியாவது வரை இந்த உணர்ச்சி நீடிக்கிறது. அவனுடைய இரவுப் பள்ளிப் படிப்பைப் பற்றி விசாரிப்பது மூலம் அந்த உணர்ச்சியை வெகுவாகக் குறைத்துக் கொள்ள மெனக்கெடுகிறான் வைத்தாஸ்.

அந்தப் பள்ளிக்கூடம் நன்றாகவே நடக்கட்டும். ஆனாலும் தில்லியில் எதையும், யாராலும், இப்படித்தான் போகும் என்று முன் கூட்டியே தீர்மானிக்க முடிவதில்லை.

நைட் ஸ்கூல் கரண்ட் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்க சார்

யாருப்பா?

தேசு. கரண்ட் ஆபீஸ்.

வழக்கம்போல் கம்பத்தில் இருந்து வயர் இழுத்து கனெக்‌ஷன் கொடுத்திருக்கிறார்கள். தெருவில் தூதரகத்தைத் தவிர வேறு கட்டிடங்கள் எல்லாமே அப்படி மின்சாரம் திருடித்தான் வெளிச்சத்தில் இருக்கின்றன.

பள்ளிக்கூடம் இல்லாத ஊரைக் கொளுத்தணும். வெளிச்சம் தராத ஊரையும் தான்.

வந்தவர் சொற்பொழிவு செய்கிற தோரணையில் தலையை இட வலமாகத் திருப்பி முக்கியமான உரையாடலில் இருப்பது போல், வலது புறம் சமன் லால் கண்ணைப் பார்த்துக் கொண்டு சொன்னார்.

சமன் லால் நினைத்துக் கொண்டது போல் ஜர்தா பான் போட வாசலுக்கு எழுந்து போனார். சாயா குடித்தபடி வைத்தாஸ் சின்னதாகப் புன்னகை செய்தான்.

இது, கல்வி இல்லாத ஊரைக் கொளுத்தச் சொல்றது, எங்க மொழியிலே முக்கியமான ஒரு கவிஞர், தேசியக் கவிஞரும் கூட, அவர் எழுதினது.

வந்தவர் சொல்ல, வைத்தாஸ் சட்டென்று சாயா கோப்பையை மேஜையில் வைத்தான். தேசியக் கவிஞரின் வரிகளை சாயா குடித்தபடி கேட்டு வெறும் புன்னகை புரிவது வெறுக்கத் தக்கது. அநாகரீகமான செயலும் ஆகும் அது.

அதுவும் ஒரு நட்பு நாட்டின் தூதராக வந்துவிட்டு அப்படி அவமரியாதை செய்யலாகாது. நாளையே வைத்தாஸ் நாட்டில் அவன் தேசிய எழுத்தாளராக அறிவிக்கப் படலாம்.

வைத்தாஸ் வந்தவரிடம் நட்பும் மரியாதையும் கலந்த குரலில் சொன்னான் –

அப்படியா? அந்தக் கவிஞருக்கு என் வாழ்த்தும் வணக்கமும். மிகக் கூர்மையான, அறச் சீற்றத்தை உரக்கச் சொல்லும் வார்த்தைகள் இவை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அவர் தலையை மெல்ல ஆட்டி அங்கீகரித்து ஒரு வினாடி மௌனமாக இருந்தார்.

மெட்ராஸ்லே இருந்து தைரியமா கிளம்பிட்டேன்.

சாயா கிளாளைப் பிடித்தபடி சொற்பொழிவுத் தொனி மாறாமலேயே அறிவித்தார். அவர் இன்னும் பேசி முடிக்கவில்லை என்று நினைவூட்டுவதாக இருந்தது அது.

இன்று முழுக்க அவரைப் பேச விட்டுக் கேட்க வைத்தாஸுக்கு ஆர்வம் உண்டு. ஆனால் அது மட்டுமாக இந்த நாள் கரைந்து போக வேணுமா என்ன?

உள் நாட்டில் ஒரு நகரத்தில் இருந்து மற்றதற்குப் போய்க் குடியேறுவதற்கும் கொஞ்சம் கூடப் பரிச்சயமில்லாத இன்னொரு நாட்டில் போய்க் குடியேறுவதற்கும் இருக்கும் வித்தியாசங்களை வைத்தாஸ் வந்தவரிடம் பட்டியலிட வேண்டியதில்லை. ஐம்பது வயதில், துரதிர்ஷ்ட வசமாக விபத்து அவரைச் சற்றே முடக்கிய பிறகு எதிர்பார்த்த, எதிர்பார்க்காத பல விதத்திலும் அபாயம் சூழக் கூடிய அவர் நிலையில் வைத்தாஸ் இருந்தால் அப்படி வெளிநாடு போக முற்பட்டிருக்க மாட்டான்.

இதெல்லாம் வைத்தாஸ் பரமேஸ்வரன் நீலகண்டன் என்ற வந்தவரிடம் மென்மையாகச் சொன்னது.

சொல்லாதது, அவனுக்கு விசா அளிக்க அதிகாரம் இன்றைக்கு இல்லை. இந்திய ஜனாதிபதியே கேட்டுக் கொண்டாலும் அப்படித்தான்.

என்றாலும், மிஸ்டர் மிஸ்டர் மிஸ்டர்.

வைத்தாஸ் என்று பெயரை எடுத்துக் கொடுத்தான். தேசிய எழுத்தாளர்களின் பெயர்கள் மெல்லவே உலகு முழுதும் அறியப்படும். ஒன்றும் அவசரமில்லை.

உங்களுக்குத் தெரியுமோ வைத்தாஸ், என் அப்பாவை அவரோட ப்ரண்ட்ஸ் எல்லாம் வைத்தாஸ்ன்னு தான் கூப்பிடுவாங்க. தென்னிந்திய பிராமணப் பெயர்களிலே சாதாரணமாகப் புழங்கறது அது. அவரோட முழுப் பெயர் வைத்தியநாதன்.

வைத்தாஸ் மென்மையாகச் சிரித்தான். தலைமுறை கடந்த, வைத்தாஸ் பெயர் ஒற்றுமை விசாவை வரவழைக்காது.

என் இளைய தகப்பனார் தன் அப்பாவை செல்லமாக அப்படித்தான் கூப்பிடுவாராம். வீட்டில் ரெண்டாம் தறுதலை நானென்றால் முதல் அசல் தறுதலை அவர் தான்.

அவர் வேடிக்கை விநோதமாக ஏதோ பகிர்ந்து கொண்டது போல் சிரித்தார்.

மரியாதை நிமித்தம் இன்னும் ஐந்து நிமிடம் இதை எல்லாம் கேட்கப் போகிறான் வைத்தாஸ். அதற்கு அப்புறம் அந்த மரியாதை சற்றும் விலகாமலேயே பரமேஸ்வரன் நீலகண்டனை வெளியே அனுப்புவான்.

மெட்றாஸ் வெங்கடேச அக்ரஹாரத்தில் இருந்து கழுகு தரிசனத்துக்குப் போகும்போது ஒரு ரெட்டிய கன்யகையை பலாத்காரம் செய்திருக்கார் அவர். அவள் தற்கொலை செய்துக்கிட்டா. மகாலிங்க அய்யர் தூக்கு தண்டனை வரைக்கும் போய் ரட்சைப் பட்டு வெளியே வந்தா. பெண்டாட்டியைக் காணோம்.

வைத்தாஸ் நிமிர்ந்து உட்கார்ந்தான். தலைக்குள் ரத்தம் திரண்டு வெள்ளமாகப் பாயந்தது போல் உணர்ச்சி. அவன் துரும்பாக அடித்துப் போகப் படுகிறான்.

அவனுக்குத் தெரிந்தவன் இல்லையோ இந்த மகாலிங்க அய்யன். அப்பன் சொன்ன கதையில் அடையாளம் இல்லாமல் நடமாடுகிறவன்.

வெங்கா டேச க்ராம்? என்ன அது?

மனதில் தோன்றியதை வாய் விட்டுக் கேட்டான்.

அது அவர் வீடு கட்டி இருந்த இடம். வெங்கடேச அக்ரஹாரம். நீங்க மெட்ராஸ் போயிருக்கீங்களா?

இல்லையென்று தலையசைத்தான் வைத்தாஸ், இது ஒரு வித்தியாசமான தினமாகக் கடந்து போக விதிக்கப் பட்டிருக்கிறது.

கலுகுனு?

அவன் தெரிந்த விஷயத்தை உறுதி செய்து கொள்வதாக இன்னொரு முறை கேள்வி எழுப்ப, பரமேஸ்வரன் சற்று திகைத்தார்.

கம் அகெய்ன். கலு?

ஆமா, கலு குன்னம். தினம் உச்சி வேளைக்கு ரெண்டு கழுகு வருமாமே.

ஓ கழுக்குன்றம். அங்கே தான் கழுகு தரிசனமாகும். குடும்பத்தின் முதல் தறுதலை போனது அங்கே தான். பரவாயில்லயே, இந்தியா பற்றி அதுவும் மதராஸ் மாகாணம் பத்தி தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே.

சமன் லால் டைப் அடித்து முடித்த கடிதங்களை எடுத்துக் கொண்டு வந்து வைத்தாஸிடம் கொடுத்தார்.

இங்கே வையுங்கள். நான் பார்க்கிறேன்.

சமன் லால் தனக்கு ஜனக்புரியில் ஒரு மணி நேர அவசர சொந்த அலுவல் இருப்பதாகவும், போய் வர அனுமதி உண்டா என்றும் வைத்தாஸை கேட்டார்.

வயதான மதராஸிகள் வாய் சாலகமாகப் பேசுவதைக் கேட்டபடி வேலை செய்வது பெருங் கஷ்டமாக இருக்கிறது. தெருவை ஒட்டி, படி ஏறக் கூடத் தேவையின்றிப் பக்கத்திலேயே இருப்பதால், எல்லோரும் அழைப்பு மணி ஒலித்து நுழைந்து விடுகிறார்கள். அவர்களுக்குப் பொழுது போக, சாரமில்லாத உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். அரசாங்க தூதருக்குத் தான் அதையெல்லாம் பொறுமையாகக் கேட்க வேண்டிய கடமை உள்ளது. சமன் லாலுக்கு என்ன போச்சு?

சமன் லால் புறப்பட்டுப் போனதும், நீலகண்டன் கேட்டார்-

இந்தப் பெரியவரும் உங்கள் நாட்டில் இருந்து வந்தவரா?

உள்ளூர் தான். ஆமா, உங்க பக்கத்தில் வரதராஜ ரெட்டி என்று பெயர் உண்டா?

நீலகண்டன் கொஞ்சம் யோசித்தார்.

இதற்குச் சொல்கிற பதில் அவருக்கு எதோ ஒரு விதத்தில் உதவியாக இருக்க வேண்டும்.

அது பெருவாரியாகத் தெலுங்கு பேசுகிறவர்கள் வைத்துக் கொள்ளும் பெயர். தமிழ் பேசுகிற வீடுகளிலும் அதைப் பார்த்திருக்கேன்.

நன்றி. நான் எழுதும் நாவலில் ஒரு பாத்திரத்தின் பெயர் அது. மதராஸில் இருந்து கடல் கடந்து வந்து கங்காணி வேலை பார்க்கிற கதாபாத்திரம். என் அப்பா போல.

சொல்ல உத்தேசித்ததை வேண்டாம் என்று வைத்து வைத்தாஸ் எழுந்தான்.

பிறகு சந்திப்போம்.

வந்தவரோடு கை குலுக்கியபடி சொன்னான்.

பரமேஸ்வரன் நீலகண்டன் சகஜமாகச் சிரித்தபடி எழுந்தார்.

அடுத்த முறை சந்திக்கும்போது வரதராஜ ரெட்டி பற்றி சொல்வீர்களா? விசா கொடுக்கா விட்டாலும் சரிதான்.

அவர் சொல்லியபடி மெல்ல வாசலுக்குக் கட்டைக் கால் ஒலியெழுப்ப நடந்தார்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன