திரேசன் செட்டியார்

 

(ஏதோ ஒரு பக்கம் பத்தி)

Hype சம்பந்தப்பட்ட ரெண்டு விஷயங்களை முற்றாகத் தவிர்த்து விடுவது சகலமான விதத்திலும் சால நன்மை பயக்கும். சொல்றேனே தவிர, பல சமயம் ஹைப்பில் ஏமாறி கைக்காசும் கால நேரமும் வீணாகிப் போய் நொந்த சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆனாலும் தமிழ்ப் புத்தகம் அதுவும் இலக்கியம் பற்றி ஹைப் எதுவுமே இதுவரைக்கும் கிடையாது என்று நினைத்து இறுமாந்திருந்த போது, இப்படி வகையாக ஏமாறுவேன் என்று சத்தியமா நினைக்கலேடா சாமி.புத்தகக் கண்காட்சியில் ஒரு பிரபல பதிப்பகத்தின் ஸ்டாலில் ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ புத்தகத்தை முழுக்கப் பாதுகாப்பாக செல்லஃபோன் காகிதம் பொதிந்து காட்சிக்கு வைத்திருந்ததைப் பார்த்தபோதே நாக்கில் எச்சில் ஊறியது. அறுதப் பழசு காலத் தலைப்பு. கூடவே ‘ஒரு துப்பறியும் நவீனம்’ என்று துணைத் தலைப்பு. அப்புறம் இன்ப ஊகங்களுக்கு இடமளிக்கும் செல்லபோன் உறை.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய கருங்குன்றத்துக் கொலை போன்ற சுவாரசியமான புத்தகமா அல்லது திரிகூட சுந்தரம் பிள்ளை அக்கறையாகப் பதிப்பித்த கொக்கோக விளக்கம் மாதிரி உரைநடைத் தமிழில் அமைந்த ஆதிகால எரோடிக் எழுத்தா?

வல்லிக்கண்ணன் ‘சம்பங்கிபுரத்துப் பொம்பிளைகள்’ எழுதி தஞ்சை பிரகாஷுக்கு மட்டும் படிக்கக் கொடுத்து விட்டுக் கிழித்துப் போட்டு விட்டாராம். பிரகாஷே என்னிடம் பெருமை அடித்துக் கொண்டார் படு குஷியாக.. அது தஞ்சை கோவில் கும்பாபிஷேகம் பற்றி கட்டுரை எழுத என்னை கல்கி பத்திரிகை அனுப்பி வைத்த போது. நல்ல ஆளா வேறே யாரும் கோவில், குடமுழுக்கு இதையெல்லாம் கவர் செய்ய கிடைக்கலியா என்றார் பிரகாஷ். உற்ற தோஸ்தாக இருந்தாலும் நான் பிரகாஷை கொலைப் பார்வை பார்த்தது சம்பங்கி புரத்தை அவர் தனக்கு மட்டுமான அந்தரங்க சஞ்சிகை ஆக்கியதுக்காக மட்டும்.

வடுவூர் துரைசாமி ஐயங்கார்? வடகலை ஐயங்கார்களுக்கும் எகிப்திய pharoh-க்க:ளுக்கும் தாயாதி பங்காளி உறவு என்று நிலைநாட்டி இங்கிலீஷில் அவர் ஒரு புத்தகம் எழுதி, ஆயுசு முழுக்கத் துப்பறியும் கதை எழுதிச் சம்பாதித்ததை எல்லாம் பைசா மிச்சமில்லாமல் கோட்டை விட்டாராமே? அந்தப் புத்தகமாவது கிடைத்ததா? ஊஹும். தென்கலை அய்யங்கார்கள் சப்ஜாடாக வாங்கி எரித்திருப்பார்கள்.

மேற்படி வடுவூர் ஐயங்கார் கிளியோபாட்ராவோடு மேற்படிந்து செல்லஃபோன் அட்டை போட்ட கொக்கோகத்தை உறை கிழித்துப் பிரித்து வைத்து, ஐயோடெக்ஸுக்கு வேலையில்லாமல் விதவிதமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கட்டும். மேலே போய்ச் சேர்ந்த பிரகாஷும் வல்லிக்கண்ணனும் சம்பங்கிபுரத்துப் பொம்பிளைகளோடு இன்பமாக இருந்து தொலையட்டும். எனக்கு எழவெடுத்த ‘கதிரேசன் செட்டியார் காதல்’ போதும்.

முடிவு செய்தபடி புத்தகத்தை எடுத்தபோது யாரோ தோளில் தட்டி குசலம் விசாரிக்க, பேச்சு எங்கேயோ போய் முடிந்து கடைசியில் புத்தகக் கண்காட்சியில் வாங்காமல் போன பட்டியலில் சேர்ந்தார் கதிரேசன் செட்டியார்.

இன்றைக்கு எழுந்ததுமே முடிவு செய்து குளிர்ந்த தண்ணீரில் நீராடி, சாத்வீகமான காலை உணவை உண்டு, நல்ல சிந்தனைகள் மனதில் நிறைந்திருக்க புக்லேண்ட் போய் நண்பர் கிரேசிக்குக் கொடுக்க நடேச சாஸ்திரியின் ‘தலையணை மந்திரோபதேசம்’ தேடினேன். என் பிரதியை ஸ்ரீனிவாச ராமானுஜத்துக்குக் கொடுத்து அவர் இன்னும் படித்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.

நடேச சாஸ்திரியோடு சட்டென்று கதிரேசன் செட்டியாரும் நினைவுக்கு வர அந்தப் புத்தகத்தை வாங்கிப் பணம் அடைக்க நின்ற இளைஞரும் காரணம்.

அவர் நான் ஊழியம் பார்க்கிற டைடல் பார்க் முழுக்க ரொம்பியிருக்கும் பலசரக்கு சாஃப்ட்வேர் கடையொன்றில் பொட்டி தட்டுகிற இளந்தாரிதான். நான் ஆறாவது மாடி என்றால் அவர் ஒரு மாடி கீழே.

ஏன் சார் உங்க சொந்த வெப் போர்ட்டல்லே இங்கிலீஷ்லே மட்டும் வருது என்று புகார் மனு சமர்ப்பித்தவரை சமாதானப் படுத்தி கையிலிருந்த கதிரேசன் செட்டியார் காதலைப் பிடுங்கிப் பார்த்தேன். ஊஹும். பிரிய மாட்டேன் என்று மேலே படர்ந்து இருந்த செல்லஃபோன் உறை உசுப்பேற்றிவிட்டது. பேசாமல் கதிரேசன் செட்டியாரின் காதல் காண்டம் என்று தலைப்பு வைத்திருக்கலாம்.

எனக்கும் ஒரு காப்பி வேணுமே? புக்லேண்ட் நண்பரை நச்சரிக்க அவர் உடனே உள்ளே பாய்ந்து ஓடி சகலமானதுக்கும் நடுவே தேடிப் பார்த்து, இதான் சார் கட்டக் கடேசி காப்பி என்று ஏற்கனவே சக பெட்டிக்காரர் வைத்திருப்பதைக் காட்டிக் கையை விரித்தார்.

டைடல் இளைஞர் ‘பரவாயில்லே நீங்களே வாங்கிக்குங்க’ என்று அன்போடு புத்தகத்தை நீட்ட ஆயிரம் தடவை நன்றி சொல்லி விட்டு வாங்கி வந்தேன்.

கடந்த இரண்டு மணி நேரம் அந்த அதியற்புதப் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு இதை எழுதும் போது ஆத்திரம் தான் மேலோங்கி நிற்கிறது.

இப்படியா ஒரு திராபையான புத்தகத்துக்கு ஹைப்பை கிளப்பி விட்டு அப்பாவிகளை ஏமாற்றுவார்கள்.

எழுதிய மா.கிருஷ்ணன் பெரிய இடத்துப் பிள்ளையார். தமிழ் உரைநடைப் பிதாமகர்களில் ஒருவரான (அங்கே எங்கே பாலியாண்ட்ரி என்று கேட்கக் கூடாது) அ.மாதவையாவின் புத்திரர். வனவிலங்குகளைப் பற்றி ஆராய்ந்து புத்தகம் எழுதிய இன்னொரு ஜிம் கார்பெட். ஜிம் துப்பாக்கியால் சுட்டார். கிருஷ்ணன் காமிராவால். ரெண்டு பேரும் எழுதிய இந்தியக் காடுகள், விலங்குகள் பற்றிய எழுத்துக்கள் மிக முக்கியமானவை. கிருஷ்ணன் பத்மஸ்ரீ கூட வாங்கியிருக்கிறாராம். 1996-ல் காலமான போது அவர் வயது 84.

போகட்டும். ஆனால் அவர் துப்பறியும் கதை எழுத ஆரம்பித்தது 83-ம் வயதில். அதுக்கு அவரே படமும் மாங்கு மாங்கென்று வரைந்து தள்ளி இருக்கிறார். பிரபலமானவர் எழுதிய கதை என்பதால் அப்போதே யாரோ அதை அச்சுப் போட்டிருக்கிறார்கள். போன வருடம் மீண்டும் அந்தப் புத்தகத்தை எல்லாவிதமான சிறப்போடும் இன்னொரு தடவை அச்சுப்போட்டு செலபோன் பேப்பரில் சுற்றி வெளியிட்டு கனவான்களின் சிபாரிசோடு விலையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சுக்கும் இல்லாத புத்தகம் இது.

1985-ல் நடக்கிற துப்பறியும் கதையாம். காடாறு மாதம் நாடாறு மாதம் என்று காமிராவோடு காட்டுக்குப் போன கிருஷ்ணன் யானையையும் புலியையும் பார்த்ததை விட நகர வாழ்க்கையில் தெருவில் எதிர்ப்படும் மனிதர்களைப் பார்த்ததும் பழகியதும் சொற்பம் என்று புரிகிறது. அல்லது அவர் மனம் அவரளவில் 1940-ல் கடியாரம் சாவி தீர்ந்த மாதிரி நின்று போயிருக்கிறது.

சுஜாதா தொடங்கி, தமிழ்வாணன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், இந்திரா சௌந்தர்ராஜன் என்று பலரும் தமிழில் துப்பறியும் கதையை வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் காலத்தில் இருந்து இந்தக் காலத்துக்கு எடுத்து வந்து வெகு நாளாகி விட்டதை கிருஷ்ணன் பாவம் அறியவில்லை. காட்ச் -22வைக் கூட துப்பறியும் கதைத் தலைப்பாக்கி பிடி-22 என்று வைத்து விட்டார் நம்ம கல்கண்டு தமிழ்வாணன்! கிருஷ்ணன் படித்திருக்க மாட்டார் பாவம்.

கிருஷ்ணனின் கதிரேசன் செட்டியாரும் இன்ன பிற பாத்திரங்களும் 1986-ம் வருடம் 1940-களின் time warp-ல் அகப்பட்டது போல மூச்சு விடுகிறார்கள். காதலிக்கின்றனர். கொலை செய்கிறார்கள். கண்டு பிடிக்கிறார்கள். பருப்பு உசிலியும், கீரை மசியலும் சாப்பிடுகிற சப்பின்ஸ்பெக்டர்கள் ஒரு பக்கம் பாக்கி இல்லாமல் தவறாமல் டாணாவுக்குப் போகிறார்கள். கிருஷ்ணனுக்கு திடீர் திடீரென்று புணர்ச்சி விதி நினைவுக்கு வர அங்கங்கே இரண்டு வார்த்தைகளைக் கலந்து சப்பின்ஸ்பெக்டர், அப்படியிந்த, வேறொண்ணுங்கடயாது என்று எழுதுகிறது ஒரு மாதிரியான சுவாரசியம்.

துரைசாமி, பெருமாள்பிள்ளை, முகைதீன், முத்து, கண்ணம்மா, கதிரேசன் செட்டியார் என்று எல்லா பாத்திரங்களும் வந்துண்டு போயிண்டு சாப்பிட்டுண்டு பார்த்துண்டு, கொன்னுண்டு இருக்கா. ‘இந்தக் கீரவடெயெ ஒங்க வீட்டுலே இருந்து அனுப்பினேளாமே. ரொம்பப் பிடிச்சுருந்தது. ரொம்ப ருசியா இருந்தது. என்ன கீரைன்னு தெரியலை’. ‘இது எம்பொண்டாட்டியோட ஸ்பெஷல்’ ரக இயல்பான உரையாடல்கள் அங்கங்கே.

படங்கள் வேறே. 1989-ல் தமிழ்நாட்டு போலீஸ்காரர்கள் அரை டிராயர் போட்டுக் கொண்டு காட்சி அளிக்கிறது காலம் போன காலத்தில் கதிரேசன் செட்டியார் காதலை விடக் கொடுமை.

கிருஷ்ணனை நினைவு வைத்துக் கொள்ள அவருடைய வனவிலங்கு புத்தகங்களே போதும். அதைவிட முக்கியம் அவர் மாதவையா மைந்தர். இந்த மாதிரி எல்லாம் அவர் நினைவை ‘சிறப்புக் கவுரவப்படுத்த’ வேண்டாம். ஏரோப்ளேனின் பறக்கிறவர்களை அப்படியே விட்டுவிடலாம். எதுக்கு ஏணி வைக்கணும்?

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன