புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 22 இரா.முருகன்


அச்சுதம் கேசவம் – அத்தியாயம் இருபத்திரெண்டு இரா.முருகன்

வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து
—————————–

கரண்ட் போச்சு. கரண்ட் போச்சு.

எல்லா விதமான குரல்களும் சேர்ந்து ஒலிக்க, பம்மிப் பாய்ந்து கொண்டு இருள் வந்தது.

ராத்திரியின் அடையாளத்தை தீர்க்கமாக்கிக் கொண்டு விளக்குகள் அணைந்து போயிருந்த தெரு.

வைத்தாஸ் மேலே அடியெடுத்து வைக்க மாட்டாமல் நின்றான்.

ஹவேலி.

வைத்தாஸுக்குச் சட்டென்று நினைவு வந்தது. இவ்வளவு பெரிய வசிப்பிடத்தை வெறுமனே வீடு என்று சொல்வது மரியாதைக் குறைச்சல். ஹவேலி கம்பீரமான பெயர். நேற்று அமைச்சரைப் போய்ப் பார்த்தபோது அவர் நாலைந்து தடவை பேச்சுக்கு நடுவே சொன்னார்.

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. ஹவேலிகள் கோதுமையும், மோட்டார் உதிரி பாகங்களும் சேர்த்து வைக்கும் கிட்டங்கிகள் ஆகிக் கொண்டிருக்கின்றன.

சமூக உறவுகள் பற்றி அமைச்சர் பேச வேண்டிய ஒரு கருத்தருங்கில் அவர் நிகழ்த்த வேண்டிய உரையில் இதெல்லாம் வரும். அமைச்சரகத்தில் பத்துப் பேர், மதராசிகளாகச் சேர்ந்து இருந்து ராத்திரி கண்விழித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் கரண்ட் போயிருக்கலாம்.

வீராவாலி.

மெதுவான குரலில் வைத்தாஸ் அழைத்தான். அவள் அங்கே இல்லை.

உள்ளே வரும்போது பார்த்தானே?

இருட்டில் ஓரமாக மறைந்து நிற்கலாம்.

என்னத்துக்கு மறையணும்?

வீராவாலி.

மூங்கில் கழை பற்றிப் புழுதி புரண்ட உடலோடு தில்லியின் சந்து பொந்துகளில் கழைக்கூத்து ஆடுகிற பெண். ஆடி முடித்துக் கண்ணால் அவனைக் கூப்பிட்டு இங்கே தான் அழைத்து வந்தாள்.

படபடத்து அழைக்கும் இமைகள். நீ வராமல் எங்கே போக என்று அலட்சியம் காட்டும் விழிகள்.

அந்தக் கண்களை வைத்தாஸ் அறிவான். புழுதி புரண்ட அந்த உடம்பையும்.

வீராவாலி.

அடியே உன்னை உன் வியர்வையின் வாசனை கொண்டு அறிவேன். கண்ணில் கண்மை கலங்கிக் கரி வாடையும், தலையில் வைத்த பூ வாடிப் பிறப்பித்த கந்தமும் உடல் வாடையும் வியர்வையும் எல்லாம் என்னில் நெகிழ்ந்து இறங்க உன்னைக் கலப்பேன். உன்னில் கரைவேன்.

காதுக்குள் இதயத் துடிப்பு ஒலி ஓங்கி ஒலிக்க, இரண்டு கைகளையும் தண்ணீரில் நீந்துகிறவன் நீரைத் தள்ளுவது போல் அசைத்து இருளைத் தள்ளியபடி அவன் முன்னால் போனான்.

வீராவாலி.

நீ வேணும். வேறேதும் வேணாம்.

ஒரு வாரத்தில் இப்படி ஒரு ஈர்ப்பு வந்து உடலையும், மனதையும் இறுகிப் பிடித்துப் படர்ந்து ஒட்டிக் கொள்ளுமா? இது என்ன காமம்? நடு வயதில் பிசாசு போல துரத்தி வந்து ஏறிக் கொள்ளுமா என்ன? உடம்பு சுகம் கண்டு கண்டு அனுபவித்து காமம் ஒழித்திருக்க வேண்டாமோ?

உடம்பு விழித்துக் கொண்டதும் தேடிப் போன, தேடி வந்த பெண்கள் எத்தனை பேர். அப்பன் வரதராஜ ரெட்டி, பெண்சுகம் காண்பதில் மட்டும் வைத்தாஸுக்குள் முழுமையாக வந்திறங்கி இருக்கிறான்.

வெளியே நின்றபோது இருந்த குளிர் எல்லாம் போய் வியர்க்க ஆரம்பித்திருக்கிறது. இணை தேடும், சுகித்திருக்க உடல் தேடும் நாயாக இரைத்து இளைத்து உமிழ்நீர் வடியக் குறி விரைத்து அதுவே அவனாக அதுவே மனதாக அதுவே புத்தியாக வியாபித்திருக்க, அவளைத் துரத்தி வந்து கலக்கத் துடித்து நிற்கும்போதே நகக்கண்களிலும் வியர்வை மேலெழுந்து வருகிறது.

ஒழுங்கா ஒரு பொண்ணு. அதான் உனக்கு வேணும். சும்மா போய் வந்துட்டிருந்தா தேவனுக்குப் பிரியமானதில்லே அது. சாத்தான் களிச்சு நடனம் ஆடுற களமாயிடும் உடம்பு. வேணாம். கல்யாணம் செஞ்சுக்க. ஆப்பிரிக்கக் கருப்பி, இந்தியக் களிமண் கலர் சிறுக்கி, உடம்பு அபாரமா விளைஞ்ச வெள்ளைக்காரி. யார் வேணும்னாலும் உன்னோட கூட ஜோடியாகட்டும். மறக்காம கல்யாணம் பண்ணிக்க. உன்னை விட ஒண்ணு ரெண்டு வயசு பெரியவள்னாலும் பரவாயில்லை. உங்கப்பன், அந்தக் கேடு கெட்ட வரதா ரெட்டியை விட நான் நாலு வயசு மூத்தவ. அவனை மோதிரம் மாத்திச் சேர்த்து, அடக்கி ஒடுக்கி உன்னைப் பெத்துக்கலியா? சரி என்ன பண்ணனும்க்றே? ஆமா, ஓடிட்டான் களவாணி. போய் ஒழியட்டும். எங்கே கிடக்கானோ இல்லே போய்ச் சேர்ந்துட்டானோ. நரகத்துக்குப் போயிருப்பான். இன்னும் ஜீவிச்சிருந்தா அதைவிட மோசமான இடத்திலே பன்றிகளோடு கட்டிப் பிடித்து நரகல் குழியில் கிடப்பான் அவன்.

வைத்தாஸின் அம்மா நிறுத்தாமல் பேசினாள். அவன் காதுக்குள் இன்னும் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருக்கிறாள்.

அவன் படிக்கப் போய் நிரந்தரமாகக் குடியேறி அவனுக்குப் படிப்பும், தூதர் பதவியும் கொடுத்த நாட்டுக்குப் புறப்பட்ட போது சொன்னது இதெல்லாம்.

அவள் அப்போது இன்னொரு தடவை கல்யாணம் செய்து கொண்டு அறுபது வயதில் அடியெடுத்து வைத்திருந்தாள். வைத்தாஸை விட ஐந்து வயதே மூத்த மணவாளன் அவளுக்கு வாய்த்திருந்தான்.

சுகப்படட்டும். வைத்தாஸும் சுகப்பட இருக்கிறான்.

வீராவாலி.

இருட்டு கொடுத்த துணிச்சலில் சத்தமாகக் கூவினான் வைத்தாஸ்.

இங்கே தான் எங்கேயோ இருக்கிறாள்.

பெட்ரோமாக்ஸ் விளக்கை யாரோ எடுத்துப் போகிறார்கள். சதுரம் சதுரமாக ஜன்னலில் கட்டமிட்டுப் போகிற வெளிச்சம் இருட்டோடும் நீண்டு சுவரில் படிந்து மடியும் நிழலோடும் ஒளிந்து பிடித்து விளையாடுகிறது. வெளிச்சத்தையோ தொடர்ந்து இருளையோ எதிர்பார்த்திருக்கும் குரல்கள் ஆசுவாசம் வேண்டி அவசரமும் அலுப்பும் மாறி வர இலக்கின்றிச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.

வீராவாலி சிரிக்கும் சத்தம்.

சாப்ஜி, நான் இங்கே இருக்கேன். இதோ இங்கே.

அவள் இந்தியில் பேசுகிறாள். அவனுக்குப் புரிகிறது.

இல்லை, கழைக்கூத்தாடிகள் நாடோடி மொழியில் பேசுவார்கள் என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார். நேற்று சந்தித்தபோது அவன் வீராவாலியைப் பற்றிச் சொல்ல உத்தேசித்து வேண்டாமென்று வைத்து அந்த நிமிடத்தில் மனதில் வந்த கவிதையைச் சொன்னான்.

கழைக்கூத்தாடிப் பெண் புழுதியும் வியர்வையும் உடம்பில் தண்ணீர் பட்டுப் பலகாலம் ஆகியிருக்கக் கிளம்பும் உடல் நெடியும் மூர்க்கமாகச் சூழ அவளை அணைத்துக் கொண்டவனைப் பற்றிய கவிதை. கவிதை சொல்கிறவன் நினைவும் கனவும் இடை கலந்த ஒரு நொடியில் அவனாகி நேரமும் இடமும் குழம்பி நிற்பது பற்றிய இறுதி வரிகள்.

சோப்பு வாங்கித் தரணும். டெட்டாலும், பல்பொடியும் கூடவே கொடுக்கணும். தலை குளிச்சு முடிச்சு வந்தா கழைக்கூத்தாடியும் சரிதான்.

அமைச்சர் கவிதையைக் கேட்டு விட்டு அபிப்ராயம் சொன்னார் அப்போது. கழையை இறுகப் பற்றியபடி கயிற்றில் நடக்கும் கழைக்கூத்தாடியின் படிமம் அவருக்குள் ஒரே பிம்பத்தைத்தான் அழுத்தமாகச் சித்தரித்துக் கொண்டிருந்தது.

எவ்வளவு நேரம் மேலே ஆட முடியும்?

இதுவும் வைத்தாஸுக்குத் தெரியாது என்பதை அவரிடம் சொன்னான்.

மணிக்கணக்கில் இருக்கும் என்றார் எல்லாம் தெரிந்த அமைச்சர் அவன் தோளை விளையாட்டாகத் தட்டி.

சாப்ஜி, மாடிப் படிக்கு வாங்க. எவ்வளவு நேரம் முடியும்னு சேர்ந்தே பார்ப்போம்.

வீராவாலி ஒரு அரிக்கேன் விளக்கை மாடி வளைந்து மேலேறுகிற படிக்கட்டுகள் சமனமாகி இருக்கும் சிறு தளத்தில் வைத்தபடி சிரிக்கிறாள். விழித்துப் பார்த்தபடி இரண்டு மயில்களின் உடல்கள் தரையில் கிடக்கின்றன. ஈக்களும் சிறு பூச்சிகளும் அவற்றின் தோகையிலிருந்து உதிர்ந்த படி இருக்கின்றன. இறந்து போன இன்னொரு மயிலைக் கழுத்தில் அணைத்துச் சுமந்து நிற்கிறாள் அவள்.

பறவைச் சடலத்தோடு அவளோடு கிடக்க எப்படி இருக்கும் என மனம் தறிகெட்டு ஓடுகிறது.

போகமூட்டும் நெடியடா அது மகனே, அரையிலும் மயிலெண்ணெய் தடவிப் படுத்தால் எழுந்திருக்கவே மனசு வராது என்கிறான் மேல்படியில் நின்று கொண்டு வைத்தாஸின் அப்பன். தோளில் நூலெல்லாம் போட்டிருக்கிறான் அவன்.

உரக்கப் பேசியபடி புகையிலைச் சிப்பங்களைச் சுமந்து நாலு பேர் வைத்தாஸ் நின்றிருந்த அறைக்குள் வருகிறார்கள். ஒருவன் கையில் பெரிய டார்ச் விளக்கு வைத்திருக்கிறான். விளக்கை அடித்துச் சுழற்றிப் பார்க்கும்போது வைத்தாஸ் கண்ணில் வெளிச்சம் பரவ அவன் கலவரமாக நிற்கிறான்.

விளக்குக்காரன் வைத்தாஸைக் கோபித்துக் கொள்வான். பெரிய உத்தியோகத்தில், கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு, சகல வசதியோடும் இருக்கப்பட்டவன், அந்நிய நாட்டில், இங்கே இந்தப் பழைய கட்டிடத்தில் என்ன செய்கிறாய் என்று அதட்டிக் கேட்பான். மயில்களின் செத்த உடல்களைப் பக்கத்தில் இருந்து பார்க்க வந்தேன் என்று வைத்தாஸ் பம்மிப் பம்மிப் பொய் சொல்லும்போது அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தபடி வீராவாலி அவனை மாடிப்படிகளில் ஏறிக் கடந்து வரச் சொல்வாள்.

இந்தப் பெண்பிள்ளை குளிக்கவில்லை. கட்டிய துணியும் உலர்ந்த ரத்த நெடி அடிக்கிறது. இவளைக் கூட வேணுமானால் வெளியே போய் தெருவில் புரளு. மற்ற நாய்களெல்லாம் துணைக்கு நிற்கும். இங்கே வேணாம்.

விளக்குக்காரன் சொல்வான்.

வீராவாலி மாடி இறங்கிப் பக்கத்தில் நெருங்கி நிற்கிறாள். சாப்ஜி என்று மெதுவாகக் கூப்பிடுகிறாள். அவள் வாய் நாற்றமும் வைத்தாஸைக் கிறங்க வைக்கிறது. எல்லா நெடியோடும் அவள் எச்சிலைச் சுவைக்க அவன் மனம் பரபரத்து உடலை முன் செலுத்துகிறது.

விளக்குக்காரன் ஒன்றும் சொல்லவில்லை. அறை ஓரமாகப் புகையிலைச் சிப்பங்களைச் சார்த்தி வைக்கும் மற்றவர்களும் அவனை லட்சியமே செய்யவில்லை. சிப்பங்களின் புழுத்த நெடி அறை முழுதும் சூழ, வீராவாலி கையிலிருந்த மயிலின் சடலத்தை அந்தச் சிப்பங்களோடு சேர்ந்து சுவரில் சார்த்தி வைக்கிறாள்.

சாப்ஜி என்று அகவி, மார்பு நிமிர்த்தி சுவரில் சாய்ந்து உட்கார்கிறாள் அவள். வைத்தாஸ் அந்த மார்பகங்களில் அடக்கமாகிறான்.

மேலே போகலாம் என்கிறாள் அவள் முணுமுணுப்பாக.

மேலே கிடக்க இடம் இருக்கும். புகையிலைச் சிப்பத்தோடு யாரும் வரமாட்டார்கள்.

செருப்புகளின் ஒலி ஓங்கி உயர்கிறது. வீராவாலியின் தோளைப் பிடித்தபடி வைத்தாஸ் பார்க்க, வார்ச் செருப்பு சப்திக்க மாடிப்படிகளில் ஏறி வருகிறான் ஒரு வயோதிகன். வற்றிய இடுப்பு தெரிய சீலை உடுத்தியவன் அவன். பாதி வழுக்கை விழுந்த தலையைப் பின்னிப் பூ வைத்த அவனுடைய நாசி விடைத்துத் தெரிகிறது.

வீராவாலி வைத்த அரிகேன் விளக்கைக் கையில் எடுத்துக் கொள்கிறான் வார்ச் செருப்போடு வந்தவன். நானும் மேலே தான் போறேன் என்று வைத்தாஸிடம் சொல்கிறான்.

அவனைப் போகச் சொல்லு.

வைத்தாஸ் காதில் என்கிறாள் வீராவாலி.

கேட்டது கிடைத்தால் போவானாம். எவ்வளவு கொடுக்க?

வைத்தாஸ் கேட்க, என்னோடு வா, இல்லை நூறு ரூபாய் கொடு என்கிறான் வார்ச் செருப்புக்காரன்.

வைத்தாஸ் சட்டைப் பையில் பணத்தைத் தேடும்போது இழைப்புளிகள் எட்டிப் பார்க்கும் பைகளைத் தோளில் மாட்டிய சில தச்சர்கள் ஆளுக்கொரு காடா விளக்கைப் பிடித்துக் கொண்டு மேலே போகிறார்கள். பழைய இந்தி சினிமாப் படம் ஒன்றில் வந்த சோகமான பாடலைக் கூட்டமாக அவர்கள் பாடியபடி நகர, மேலே பழைய கதவைக் கழற்றி வீழ்த்தும் ஒலி.

கதவு இல்லாத அறை என்றாலும் சரிதான். பார்க்கிறவர்கள் பார்க்கட்டும். மரத் துண்டுகளும் மரச்சீவலும் கிடக்கும் தரையில் படிய அசௌகரியம் இல்லை.

அவன் தச்சர்களுக்கு நடுவே புகுந்து மேல் படிக்கட்டில் நடந்து போய்க் கொண்டிருந்த வீராவாலியின் தோளைப் பற்றுகிறான். அவள் அவன் மேல் சாய்ந்து அப்படியே நிற்க, தச்சர்கள் பாட்டை நிறுத்தாமல் முன்னால் போகிறார்கள்.

வா கிடக்கலாம் என்கிறாள் வீராவாலி. தரையில் பரத்தி இருந்த மயில்களை மிதிக்காமல் திரும்பி அவனை இறுக அணைத்துக் கொள்கிறாள். அரிகேன் விளக்கு அணைந்த நெடி இதமாகச் சூழ்கிறது.

முன்னா, ரொட்டி சாப்பிட்டு தெருவுக்குப் போ என்று கூவியபடி ஸ்தூல சரீர முதுபெண் ஒருத்தி கையில் பிடித்த பெரிய மெழுகுவர்த்தியோடு படி இறங்கி வர, தாவிக் குதித்து முப்பது வயது மதிக்கத் தக்க அவள் மகன் தாடியும் கலைந்த தலையுமாக மாடிப்படிக் கைப்பிடி மரச் சட்டகத்தில் வழுக்கியபடி வருகிறான்.

அடுத்த மாடியில் ஒரு அறை படுக்கை விரித்து இருப்பதாக அவன் வைத்தாஸிடம் சொல்கிறான். அது மற்றவர்கள் தூங்க என்கிறாள் முதுபெண் ஆட்சேபம் தொனிக்க. நான் தெருவுக்குப் போகிறேன். நீங்கள் சிரம பரிகாரம் செய்து கொண்டு போங்கள் என்று முன்னா படிகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிப் புகையிலைச் சிப்பங்களிலும் மயில்களின் உடல் மேலும் மோதிக் கொள்கிறான்.

அங்கேயே இரு, ரொட்டி எடுத்து வரேன் என்று முதுபெண் மேலே போகிறாள்.

பசிக்கிறதா என்கிறாள் கிசுகிசுப்பான குரலில் கழைக்கூத்தாடிப் பெண்.

ரொட்டிக் கடைக்காரன் கொடுத்த கொஞ்சம் பழைய ரொட்டிப் பொட்டலம் அவளுடைய துணிப் பையில் வைத்திருக்கிறாளாம். மேலே எதோ ஒரு மாடியில் நிறைய நாற்காலிகள் வரிசையாகப் போட்ட அறையில் அந்தப் பை கடைசி வரிசை நாற்காலிக்கு அடியில் உண்டு. பேசி முடித்ததும் சாப்பிடலாம் என்கிறாள் அவள்.

அவள் இமைகள் துடிப்பதை மென்மையாகக் கண்களில் முத்தமிட்டு உணர்கிறான் அவன். அப்படியே அவள் தலைமுடியில் முகம் புதைக்கிறான்,

இனியும் நடக்க முடியாது. உடல் கிட கிட என்று பரபரக்கிறது. வீராவாலியை நெட்டித் தள்ளி முன்னால் செலுத்துகிறான்.

மேலே இருந்து தீனமாக அழுகைக் குரல். ஒரு குரல் தொடங்க, இன்னும் சில விம்மி விதிர்த்து நீள்கின்றன. ஒரு வினாடி அமைதி. அழுகை சத்தமாக மறுபடி உயர்கிறது. படி ஏறி ஓடிய யாரோ விழுந்து அரற்றும் ஒலி.

பார்த்துப் போ, பறவை கிடக்கு என்று மெழுகு வர்த்தியோடு திரும்பப் படியேறிப் போய்க் கொண்டிருக்கும் முதுபெண் சொல்கிறாள்.

காது கேட்காத போலோநாத் பாபு இறந்து போனார்.

விழுந்தவன் சுவரைப் பிடித்தபடி எழுந்துகொண்டு சொல்கிறான்.

எப்படி உயிர் போனது?

கீழே இருந்து முன்னா கூச்சலிட்டு விசாரிக்கிறான்.

இருட்டில் தெரியலை. காது வழியாக இருக்கும் என்கிறான் விழுந்து எழுந்தவன்.

எனக்கு எப்படிப் போகும் என்று வீராவாலியைக் கேட்கிறான் வைத்தாஸ். அவள் தொட்டுக் காட்டிச் சிரிக்கிறாள்.

வைத்தாஸ் இருட்டோடு நுழையும் அறை விசாலமாக இருக்கிறது. நாற்காலிகளில் வரிசையாக ஆணும் பெண்ணுமாக அமர்ந்திருக்கிறார்கள்.

வரிசையாக வைத்த மெழுகுவர்த்திகள் உருகித் தரையில் வழிந்திருக்கும் வழியில் நாற்காலி வரிசை ஊடாக மெதுவாக நடக்கிறார்கள் வைத்தாஸும் கழைக்கூத்தாடிப் பெண்ணும்.

உள்ளறைக் கதவு திறக்கிறது. மென்மையான மெத்தை பரத்திய கட்டில். மட்டமான நெடியோடு ஊதுபத்தி புகைந்து கொண்டிருக்கிறது. தலையணைகள் சீராக அடுக்கி வைத்த கட்டில் பரப்பில் வீராவாலியைக் கிடத்துகிறான் வைத்தாஸ். அவள் இழுத்து அணைக்க, நேரம் உறைய, மேலே கவிகிறான் அவன்.

வைத்தாஸ் எழுந்த போது விளக்கு வந்திருந்தது. வீராவாலி போயிருந்தாள்.

கட்டிலின் அந்த ஓரமாக உறங்கிக் கொண்டிருந்தவர் போலாநாத் பாபுவாக இருக்கலாம் என்று அவன் ஊகித்தான்.

வைத்தாஸ் ஹோட்டலுக்கு வந்தபோது, வாசலில் தூதரக அதிகாரி காத்திருந்தார்.

கூ தெதா.

அவன் நாட்டில் ராணுவப் புரட்சி நடந்த சுபச் செய்தியை அறிவித்தார் அவர். தலைநகர் முழுக்க ராணுவம் ஆக்கிரமித்தது என்றார்.

நந்தினி?

வைத்தாஸ் உரக்கக் கேட்டான்.

மின்சாரம் மறுபடி நின்று போனது. தில்லியில் இது ஒரு பெரிய கஷ்டம்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன