இந்தப் புத்தகத்தை எழுதியவர் யார்?

நண்பர் பத்ரியின் இணையத் தளத்தில் ஒரு புது நூல் பற்றிய குறிப்பைப் படித்தேன் –

/
சங்கீத வித்துவான்கள் சரித்திரம்

சங்கீத வித்துவான்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை, பக். 112, விலை 80ரூ.
/

நேற்று கேட்டு வாங்கினேன். சற்று நேரம் முன் படித்து முடித்தேன்.

‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’.

’மைசூர் சமஸ்தானம் பிடாரம் கிருஷ்ணப்பா அவர்கள் பிறந்த ஆண்டு கி.ப்.1869. அவர் வயது 45 என்று இந்நூல் எழுதப்பட்ட போது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கி.பி.1914-ஆம் ஆண்டில் சங்கீத வித்வான்கள் சரித்திரம் எழுதப்பட்டிருப்பதாகக் கருதலாம்’ என்று முகவுரையில் உ.வே.சா நூலகக் காப்பாட்சியர் குறிப்பிடுகிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையான் காலகட்டத்தில் இருந்த 402 இசைக் கலைஞர்கள் பற்றிய சுவையான குறிப்புகளின் தொகுப்பு இது.

பாடும் போது கழுத்தில் 64 கத்திகளைக் கட்டிக் கொண்டு கனம் பாடிய பாடகர், பாடிக் கொண்டே மிருதங்கம் வாசித்தவர், வீணையில் ஒரு ராகத்தை இசைத்துக் கொண்டே வாய்ப் பாட்டாக இன்னொரு ராகத்தில் பாடியவர், பகல் வேஷம் போட்டதோடு பாடிக் கச்சேரி செய்தவர் என்று விதவிதமான வித்துவான்கள் அறிமுகமாகின்றனர்.

சொந்தப் பிள்ளை தன்னை விடச் சிறப்பாக வீணை வாசித்து அரசரிடம் வெகுமதி வாங்கியதால் அவனைப் பாராட்டுகிறது போல் கையைப் பிடித்து விரல்களை வெடுக்கென்று கடித்துத் துண்டித்த ராட்சச வித்வான்களும் இங்கே உண்டு.

வெங்கட்ரமணய்யர் என்ற 18-ஆம் நூற்றாண்டு வித்துவான் மரித்தபோது அவர் மனைவி உடன்கட்டை ஏறினாள் என்பது போல் பழைய கால சமூகநிலையைக் கோடிட்டுக் காட்டும் சில குறிப்புகளும் நூலில் உண்டு.

இனி சில சந்தேகங்கள் –

நூல் முழுவதும் தமிழும் வடமொழியும் விரவியதாக உரைநடை உள்ளது.

எடுத்துக்காட்டாக

/
திருவையாறு பிரம்மஸ்ரீ தியாகய்யர் ஸொண்டி ஸாம்பையர் சிஷ்யர். 18 வருஷம் குருகுல வாஸம் செய்து சங்கீதத்தில் அபார யோக்யதையை அடைந்து அகண்ட கல்பனையாய் 3-1/2 ஸ்தாயி ஸஞ்சாரத்துடன் திவ்ய சாரீரத்துடன் ஜகத்தில் எல்லாரும் உஜ்ஜீவிக்கும் பொருட்டு மறந்து போன அநேக ராகங்களை கீர்த்தனை ரூபமாய்ப் பாடி எல்லாருக்கும் நல்ல மார்க்கத்தை காண்பிவித்த மகான்
/

இந்த உரைநடை உ.வே.சா எழுதியதா?

1897-ல் அவர் வெளியிட்ட சிந்தாமணிப் பதிப்பு முகவுரை தொடங்கி, பின்னாட்களில் வந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம், கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும் போன்ற எந்த உ.வே.சா நூலிலும் காணாத மணிப்பிரவாள உரைநடை இது.

1943-ல் ‘என் சரித்திரம்’ வாழ்க்கை வரலாற்று நூலில் அவருடைய ஆற்றொழுக்கு போன்ற சரளமான மொழிநடை இது –

/
இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதான புரத்துக்கும்
‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும்
எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர் தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது;./
/

உ.வே.சா இந்த ஒரு நூலுக்காக மட்டும் இப்படி எழுதினார் என்று வைத்துக் கொண்டாலும், இது?
/
(சரப சாஸ்திரியார்) வியாகரண சாஸ்திரத்தில் பாண்டித்யம் உள்ளவர். அதே பாஷாக்யானத்துடன் லட்டரும் எழுதும் ஏகசந்தக்ராகி.
/

ல்ட்டர் எழுதுகிற தமிழ் உ.வே.சா எழுதியதா?

/
பிடில் முதன் முதல் இவரால் நோட்டு முதலான ஆங்கில ச்ங்கீதத்தில் ஒப்பற்றவராயும், வீணை முதலான வாத்தியம் வாசிப்பதிலும் மகா யோக்யதை உள்ளவராகவும் இருந்தார்
/
(வீணை வரசப்பையர் பற்றிய குறிப்பு)

பிழையான அமைப்பு உள்ள இது போன்ற சொற்றொடர்கள் நூல் முழுவதும் தென்படுகின்றன. உ.வே.சா எழுதியவை அவை எல்லாம் என்று நினைக்கக் கடினமாக இருக்கிறது.

நூலில் அட்டையைத் திரும்பக் கவனமாகப் பார்த்தேன். இது உ.வே.சா எழுதிய் நூல்’ என்று அச்சிட்டிருக்கவில்லை. முதல் பக்கத்திலும் அப்படியே தான்.

ஆனால் முகவுரை ‘உ.வே.சா தொகுத்த குறிப்புகள்’ என்று குறிப்பிடுகிறது.

உ.வே.சா தொகுத்திருக்கலாம்.

’சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ எழுதியவர் யார்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன